ஐரோப்பாவில் புலிகளை முழுமையாக தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்!
விடுதலைப்புலிகளை ஐரோப்பிய நாடுகளில் முழுமையாக தடைசெய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. புலிகளை முழுமையாக தடை செய்வது தொடர்பாகவும், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் ஐரோப்பிய ஒன்றியம் விரிவாக ஆராய்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இருந்து வெளியேறிய ஐரோப்பிய நாட்டு கண்காணிப்புக்குழு பிரதிநிதிகளுடன் விரிவாக கலந்துரையாடிய பின்னரே புலிகளை முழுமையாக தடைசெய்வது தொடர்பாக தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தடை உத்தரவு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றியம் நாடுகளில் செயற்படும், வன்னிப்புலி உறுப்பினர்களையும், அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவோரையும் நாடு கடத்தவும், அவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
இதுதவிர புலிகளால் வலுக்கட்டாயமாக சேகரிக்கப்படும் நிதி, உள்ளிட்ட விபரங்களை திரட்டவும், புலிகளுக்கு நிதி திரட்டுபவர்கள் மட்டுமல்ல புலிகளுக்கு நிதி வழங்குபவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்துள்ளது.
இதேவேளை இலங்கை விவகாரம் சம்பந்தமாக கடந்த வியாழக்கிழமை ஜரோப்பிய பாராளுமன்ற அமர்வின்போது இலங்கை தொடர்பான கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதுடன். இலங்கையில் நடைபெறும் அரசியல் கொலைகளையும் தற்கொலை தாக்குதல்களையும் நிறுத்தி. சமாதான முயற்சிகளை முன்நகர்த்தி காலதாமதமின்றி உடனடியாக பேச்சுக்களை நடாத்தவேண்டும். புலிகளுடன் மாத்திரமல்ல கருணா தரப்புடனும் பேச்சுக்களில் ஈடுபட்டு உடனடி அமைதி தீர்வினை முன்வைப்பதற்கு இலங்கை அரசு முன்வரவேண்டும் என்றும் அவ் தீர்மானத்தின் 11வது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.