By 28 November 2017 0 Comments

தமிழர்களால் உதாசீனம் செய்ய முடியாத உபதேசம்..!! (கட்டுரை)

தமிழ் மக்கள், குழந்தைகளை அதிகளவில் பெற்றுக் கொள்வதில் அக்கறை காட்டாது விட்டால், விரைவில் இலங்கைத் தீவில் சிறுபான்மையிலும் சிறுபான்மை இனமாக, தமிழ் இனம் மாற வேண்டிய அவலநிலை ஏற்படும்” என வடக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமாகிய பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கோண்டாவில் றோமன் கத்தோலிக்க பாடசாலையின் பரிசளிப்பு விழா, அண்மையில் நடைபெற்றபோது, அதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

விடுதலைக்கான ஆயுதப் போராட்டமும் அதன் அந்திம முடிவுகளும் பல்வேறு வகைகளிலும் பல்வேறு அழிவுகளைத் தமிழ் மக்களுக்கு அள்ளி வழங்கி இருந்தன. தமிழ் மக்களின் இனிமையான, அமைதியான வாழ்வுக்கு, கொள்ளி வைத்து விட்டுச் சென்று விட்டன.

போரில் தொலைந்த பெரும் சந்ததி

அதன் வரிசையில், தமிழர் தேசம், தனது விலை மதிக்க முடியாத பெரும் சொத்தான பல உயிர்களைக் காவு கொடுத்து விட்டது.

1958ஆம் ஆண்டு, தெற்கில் தமிழ் மக்களுக்கு எதிராக, நன்கு திட்டமிட்ட முறையில் தொடங்கிய இனக் கலவரம், 2009இல் வடக்கே, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் உலகம் போற்றிய ஆயுதப் போராட்டம், அளவிட முடியாத அழிவுகளுடன் முடிந்தது.

இந்த நீண்டதும், பல தசாப்தங்களும் கொண்ட காலப் பகுதியில், கட்டம் கட்டமாகவும் மொத்தமாகவும் என எண்ணிலடங்காத உன்னத உயிர்களை யுத்தம் துவம்சம் செய்து விட்டது; பல அயிரம் பேரைக் காணாமல் ஆக்கி விட்டது; பலரை மாற்றுத் திறனாளிகள் என முத்திரை குத்தி விட்டது; இன்னும் இளைய சந்ததியை வருடக்கணக்கில் சிறைகளில் தள்ளி விட்டுள்ளது.

அத்துடன் 1980 களிலிருந்து 2009 மே வரையான காலப்பகுதியில் படையினருக்கு எதிரான, ஆயுதப் போரில் ஈடுபட்ட புலிகள் மற்றும் ஏனைய தமிழ்ப் போராட்ட அமைப்புகளைச் சார்ந்த பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தம் உயிர்களைத் துச்சமென வழங்கி விட்டுச் சென்று விட்டார்கள்.

இவ்வாறாக வீரியம் மிக்க சந்ததியை உருவாக்கக் கூடிய இளம் சந்ததியை, போர் மொத்தமாக விழுங்கி, ஏப்பம் விட்டு விட்டது.

நாட்டை விட்டு புலம் பெயர்ந்தோர்

பல இலட்சம் தமிழ் மக்கள், தாய் நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்தோர் என்ற பட்டியலில் நிரந்தரமாக இணைந்து விட்டனர். 1983ஆம் ஆண்டு காலப் பகுதியில் தொடங்கிய அகதி (அவதி) பயணம் இன்று வரை தொடர்கின்றது.

1983 க்குப் பின்னர், உயிர் அச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியது தமிழ் சமூகம். ஆனால், இன்று பெரும்பாலனவர்கள் பொருளாதார மேம்பாடு, உயர்கல்வி, உறவினர்களோடு இணைதல் போன்ற நோக்கங்களோடும் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

அத்துடன், பிறநாடுகளில் ஏதோ ஒரு விதத்தில் நிரந்தரமாகக் குடியேறிய ஒருவருக்கு (மணமகனுக்கு) திருமணத்தின் பொருட்டு வடக்கு கிழக்கிலிருந்து மணமகள் செல்கின்ற நிலை நீள்கின்றது. திருமணத்தின் பின் இவர்களது இல்லற வாழ்வின் பிள்ளையார் சுழி பிற தேசத்திலேயே இடப்படப்போகின்றது.

எதிர்காலத்தில் பிள்ளைகளுடன் குடும்பமாக அங்கேயே நிரந்தர வாசிகளாகி விடுவர். அவர்களும் புலம்பெயர்ந்தோர் ஆகிவிடுவர். இவ்வாறாக, வருடாந்தம் கணிசமான அளவில் தமிழ்ச் சமூகம் நாட்டை விட்டு நடை கட்டுகின்றது.

அத்துடன், கல்வியில் சிறந்து, பல பட்டங்களைப் பெற்ற சமூகமும் பிற தேசங்களுக்கு குடி பெயரும் நிலை காணப்படுகின்றது. இதையே மூளைசாலிகளின் வெளியேற்றம் என அழைக்கின்றோம்.

இதனால், போருக்குப் பின்னரான இக்காலப்பகுதிகளில் தமிழர் பகுதிகளில் நடைபெற்று வருகின்ற புனர்நிர்மாணப் பணிகளில் கூட, இவர்களது அளப்பரிய பங்களிப்பு அருகிச் செல்லும் நிலை காணப்படுகின்றது.

இதைவிட யுத்தம் நடந்த காலப் பகுதிகளில், ஆபத்து நிறைந்த கடல் மார்க்கத்தின் ஊடாகப் பல்வேறு காலகட்டங்களிலும் இலட்சம் தாண்டிய தமிழ் மக்கள் தமிழகம் சென்றிருந்தனர்.

அவர்கள் அங்கு முகாம்களிலும் உறவினர் மற்றும் நன்பர்கள் வீடுகளிலும் சிரமங்களோடு வாழ்ந்து வருகின்றனர்; தற்போது சிலர் தாயகம் திரும்பி வருகின்றனர். பலர் பல காரணங்களின் பொருட்டு, மீளச் சொந்த மண் திரும்ப விருப்பமற்ற நிலையும் காணப்படுகின்றது.

சுருங்கக்கூறின் ஆயுதப் போர் முற்றுப் பெற்ற போதும், அதே ஆயுதப் போர் ஆரம்பித்து வைத்த புலம்பெயர்வு எனும் அவல வாழ்வு முற்றுப் பெறவில்லை. இன்னும் தொடரத்தான் போகின்றது.

நாம் இருவர் நமக்கு இருவர்

தற்போதைய காலத்தில், பொதுவாக தாயகத்தில் வாழும் மக்கள் கூட, இரண்டுக்கு மேல் பிள்ளைகளைப் பெற விரும்பாத (முடியாத) சூழ்நிலையே காணப்படுகின்றது.

பெற்றோர்கள் இருவருமே பணிக்கு செல்லல், பொருளாதார சுமை, குழந்தைகளைச் சிறப்பாக பராமரிப்பதில் காணப்படுகின்ற கடினமான நிலை போன்ற, பல்வேறு காரணங்கள் தடையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான நிலை நகர்ப்புறம், கிராமப்புறம் என வேறுபாடின்றி நிலவுகின்றது.

கிராமங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்ற பல கல்விக்கூடங்கள் இன்று 30, 40 மாணவர்களுடன் இயங்குகின்றன. மாணவர்களின் எண்ணிக்கை குறைவான பாடசாலைகளை, மூடி விடலாமா என்ற ஆபத்தான கருத்துகள் கூட முன் வைக்கப்படுகின்றன.

விவாகரத்துகள் மற்றும் குடும்பப் பிரிவுகள்

போர் மற்றும் அதன் பின்னரான குழப்பமான சூழல் வழங்கிய ஆறுதல் பரிசாக விவாகரத்துகள், குடும்பப் பிரிவுகள், பலதார திருமணங்கள் காணப்படுகின்றன.

நேர்த்தியான நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்புக்குள் சீரான ஒழுக்கத்துடன், சிறப்பாக ஒழுகிய பண்பட்ட சமூகத்தை யுத்தம் புண்படுத்தியது. மான்புகளுடன் கூடிய, உயர்வான கலாசாரம் இவ்வாறு தாழ்வாகத் தரம் இறங்க, யாரது கண் பட்டதோ தெரியவில்லை.

தற்போது, தமிழர் பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களில் (கணவன் அல்லது மனைவியால்) விவாகரத்து கோரும் மற்றும் கணவனால் தாபரிப்புப் பணம் வழங்கும் வழக்குகள் நிரம்பி வழிகின்றன.

திருமணமாகி சில வருடங்களிலேயே, வாழ் நாள் முழுதும் துணையாக வரவேண்டிய வாழ்க்கைத் துணையை “என் வாழ்வில் இனி வேண்டாம்” என, நீதிமன்றப்படி ஏறும் பரிதாபமான, குழப்பமான நிலையில் பல தம்பதிகள் உள்ளன.

இவ்வாறாக கணவன் – மனைவி வாழ்கின்ற சூழலில், அவர்களுக்கு தற்போது இருக்கும் குழந்தைகளுக்கு அடுத்ததாகக் குழந்தைச் செல்வம் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகின்றன. இதனால், அங்கு ஓர் இனம் பெரு விருட்சமாகும் வாய்ப்புகள் மறைமுகமாக இல்லாமல்ப் போகின்றது.

படையினருக்கான சிறப்பு சலுகை

இலங்கை முப்படையினர் மற்றும் பொலீஸ் துறையில் சேவையாற்றும் பணியாளர்களுக்கு மூன்றாவது பிள்ளையைப் பெற்றால், அவர்களுக்குச் சிறப்பான சலுகைகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. பிறக்கும் மூன்றாவது பிள்ளையின் பெயரில் ஓர் இலட்சம் ரூபாய் வைப்பில் இடப்படுகின்றது.

இது மறைமுகமாக குழந்தைகளைப் பெறுவதற்கான ஒருவித ஊக்குவிப்பே ஆகும். சிங்கள இனம் பெருகுவதற்கான ஏற்பாடுகள் இதனூடாகச் செய்யப்பட்டுள்ளன.

ஆகவே, இந்தத் திட்டத்தினால் நன்மை அடைவது ஒரு குறிப்பிட்ட இன மக்கள் மட்டுமே எனலாம். ஏனெனில், படையில் அவர்களே ஏறத்தாள 95 சதவீதத்துக்கும் அண்மித்த எண்ணிக்கையில் உள்ளனர்.

இன்னொரு விதத்தில், அனைத்து அரசாங்கப் பணியாளர்களும் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்தால் கணிசமான அளவில் உள்ள தமிழ் உத்தியோகத்தர்கள் ஊடாக, தமிழ் இனம் நன்மைகளை பெற்றிருக்கும். ஆனால், இலங்கை நாட்டின் அரசாங்கம் அப்படி செய்யவில்லை.

ஆகவே, இவ்வாறான பல்வேறு காரணங்களால் தமிழ்த் தேசத்தில் தமிழ் இனத்தின் விருத்தி, அபிவிருத்தி அடைவது குறைகின்றது.

ஈழத்துத் தமிழ் மக்களுக்கும், தாங்கள் பிறந்து, சீராக வளர்ந்து, சீரும் சிறப்புமாக வாழ்ந்து மடியப்போகும் தமது பூர்வீக மண்ணில், மற்றவர்களின் தலையீடு இன்றி, சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே நீண்ட காலக் கனவு ஆகும். அதற்காக, இதுவரையான காலத்திலும் அவர்கள் கொடுத்த விலையும் அளப்பரியது.

அந்த வகையில், இன்றைய வேகமாக மாறிவரும் உலக ஒழுங்கில் எண்ணிக்கையே பல விடயங்களைத் தீர்மானிக்கும் வல்லமை பொருந்திய பிரதான ஒரு சக்தியாக உள்ளது.

உண்மையானதா அல்லது பொய்யானதா, ஏற்றுக் கொள்ளக் கூடியதா அல்லது ஏற்க முடியாததா, நீதியானதா அல்லது அநீதியானதா என்பதெல்லாம் இரண்டாம் பட்சமான விடயங்கள் ஆகிவிட்டன.

பெரும்பான்மை பலம் மட்டும் இருந்து விட்டால், சரியானதா பிழையானதா எனப் பொருட்படுத்தாமல் அல்லது ஆராயாமல் பெருவெற்றி கண்டுவிடும் களநிலை காணப்படுகின்றது.

ஆகவே, தற்போதைய காலகட்டத்தில் ஈழத் தமிழினம், தனது தாயக மண்ணில், தனது தொடர்ச்சியான இருப்பை தொடர்ந்து பேணும் பொருட்டு, ஆழமாகச் சிந்திக்க வேண்டிய அறிவார்ந்த ஒரு விடயத்தையே கௌரவ மாகாண சபை உறுப்பினர் தொட்டுக் காட்டி இருக்கின்றார்.

ஆகவே, சமகாலத்தில் நிலவும் ஆயிரம் பிரச்சினைகளுக்கு அப்பால் இதனை இன்றைய தமிழ் சமூகம் எவ்வாறு வெற்றிகரமாக வென்று முடித்து பயணிக்கும் என்பதே எம் முன் உள்ள மிகப் பெரிய வினா.Post a Comment

Protected by WP Anti Spam