மாவீரர் நாள்: கற்க வேண்டிய பாடங்கள்..!! (கட்டுரை)

Read Time:14 Minute, 15 Second

மாவீரர் நாள் முடிந்து விட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக விசாரணை மிரட்டல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. மாவீரர் நாளுக்கு முன்னதாக அரச தரப்பில் இருந்து அதற்கு எதிரான கருத்துகள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை.

மாவீரர் நாளை அனுஷ்டித்தால், புலிகளை நினைவு கூர்ந்தால், சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னரே எச்சரிக்கைகள் எதுவும் அரச தரப்பிலோ பொலிஸ் தரப்பிலோ வெளியிடப்படவில்லை.

ஆனாலும், நிகழ்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர், புலிகளை நினைவு கூர்ந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியிருக்கிறார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன.

தீவிரவாத அமைப்பு ஒன்றையோ அதன் தலைவர்கள், உறுப்பினர்களையோ ஆராதிப்பதை அனுமதிக்க முடியாது என்கிறார் அவர்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவோ, புலிகளை நினைவு கூர்ந்தவர்களே 30 வருடப் போரில் ஏற்பட்ட இழப்புகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

புலிகள் இயக்கம் உருவானதற்குப் பொறுப்புக் கூறவேண்டிய நிலையில் சிங்கள பௌத்த பேரினவாதம்தான் உள்ளது என்பதை அவர் மறந்து விடுகிறார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் போராட்டம் சரியானது; அவர் போராடிய வழிமுறைதான் தவறானது என்று, பொது பலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் ஒப்புக்கொண்டுள்ள அளவுக்கு, சிங்கள அரசியல் தலைவர்கள் யாருமே, ஆயுதப் போராட்டம் தோன்றியமைக்குத் தாமே காரணம் என்று ஒப்புக் கொண்டதில்லை.

அதனால்தான் போலும், சிங்கள அரசியல்வாதிகளை விட, பிரபாகரன் நேர்மையானவர் என்று ஞானசார தேரர் கூறியிருக்கிறார்.

இவ்வாறாக மாவீரர் தின எழுச்சிக்குப் பின்னர், தெற்கில் சலசலப்புகள் எழுந்திருக்கின்றன. நிகழ்வுகளை ஒருங்கிணைத்தவர்கள் யார் என்று கண்டுபிடிக்கும் விசாரணைகள் தொடங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், மாவீரர் நாள் ஒழுங்கமைப்புகள் மற்றும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்ற மக்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துகள் தொடர்பாக அதிருப்திகளும் வெளிப்பட்டுள்ளன.

இம்முறை மாவீரர் நாள் அரசியல்வாதிகளின் நிகழ்வாக அல்லாமல், முற்றிலும் மாவீரர்களின் நிகழ்வாக, அவர்களின் குடும்பத்தினரை ஆற்றுப்படுத்தும் ஒரு நிகழ்வாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றிருந்தது.

மாவீரர் நாள் துயிலுமில்லங்களில் மீண்டும் அனுஷ்டிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டதற்கும், இம்முறை இந்தளவுக்கு மக்களின் பங்கேற்பு மற்றும் எழுச்சியுடன் இடம்பெறுவதற்கும், அரசியல்வாதிகள் சிலரின் தற்துணிவே காரணமாக இருந்தது.

அவர்கள் துணித்து துயிலுமில்லங்களைத் துப்பரவு செய்து, தாமே முன் வந்து சுடரேற்றியமைதான், மக்கள் அவர்களுக்குப் பின்னால் சென்று, சுடர்களை ஏற்றும் அளவுக்குத் துணிச்சல் வந்தது என்பதை மறுக்க முடியாது.

இது மக்களுக்குத் தானாகவே வந்த துணிச்சல் என்று எவரும் கூற முடியாது. அவ்வாறாயின் 2016இற்கு முன்னர், இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தபோது, ஏன் அந்தத் துணிச்சல் வந்திருக்கவில்லை என்ற கேள்வி எழும்.

ஆனால், அரசியல்வாதிகள் அதைத் தமது தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்த முனைந்ததும், தம்மைப் பிரபாகரனின் நிலைக்கு உயர்த்திப் பார்க்க முனைந்ததும்தான், மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

அதுவே, மாவீரர் நாள் நிகழ்வுகளில், அரசியல்வாதிகள் ஒதுங்கியிருக்க வேண்டும், மாவீரர் குடும்பத்தினரே பொதுச்சுடர்களை ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெறக் காரணமாகியது.

மாவீரர் நாள் ஒழுங்கமைப்புப் பணிகளை மேற்கொள்ள, அரசியல்வாதிகள் அல்லாதோரைக் கொண்ட ஏற்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை, அமைக்கப்பட்ட முறைகளில் ஏராளம் குழறுபடிகளும் இருந்தன.

துயிலுமில்லங்களில் ஆதிக்கம் செலுத்த முனைந்த தரப்புகள் பலவும், அதற்குள் நுழைந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்பாட்டுக் குழுக்களில் அரசியல் பின்னணி இருக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்ட போதும், பல இடங்களில் ஏற்பாட்டாளர்கள் அரசியல்வாதிகளாகவோ, அரசியல் கட்சிகளின் பிரமுகர்களாகவோதான் இருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, ஜனநாயகத் தமிழரசுக் கட்சி என்று பல்வேறு அரசியல் கட்சிகள் குழுக்களைச் சார்ந்தவர்கள்தான், ஏற்பாட்டுக் குழுக்களுக்குப் பின்னால் இயங்கினார்கள்.

பல அரசியல்வாதிகள் தம்மைப் பொது அமைப்புகள், அரசசார்பற்ற அமைப்புகளின் தலைவர்களாகவோ, பிரதிநிதிகளாகவோ முகமூடி போட்டு மூடிக் கொண்டார்கள்.

தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியுற்றவர், ஒரு கட்சியின் இளைஞரணித் தலைவராக இருந்தவர், அந்தக் கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டவர், இப்போது மாற்று அணி அமைக்கும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர், அரசியல்வாதிகள் மாவீரர் நாள் நிகழ்வுகளில் பங்கேற்கக் கூடாது என்று செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கிறார்.

அந்த ஏற்பாட்டுக் குழுவில் இருந்த தானும், ஓர் அரசியல்வாதி என்பது அவருக்கு நினைவில்லாமல் போனது. இப்படிப் பலர் செயற்பட்டனர்.

சிலர் தாமும் மாவீரர் குடும்பத்தினர்தான் என்ற கோதாவில் களம் இறங்கினார்கள். இன்னும் சிலர், பொது அமைப்புகள் என்ற கோதாவில் களம் இறங்கினார்கள்.

அரசியல்வாதிகள், மாவீரர் நாள் ஏற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்று கூறும் அருகதை யாருக்கும் இல்லை. ஏனென்றால், அவர்களும் இதே சமூகத்துக்குள் இருந்து வந்தவர்கள்தான்.

பதவிகளில் உள்ளவர்கள்தான் அரசியல்வாதிகள்; ஏனையவர்கள் அவ்வாறில்லை என்றும் கூற முடியாது. பதவிகளுக்காக போட்டியிட்டவர்கள் அனைவரும் அவ்வாறானவர்கள் தான். அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கும் அனைவரும் அரசியல்வாதிகள் தான்.

அதற்காக அவர்களைத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்க முனையக் கூடாது. அவர்களுக்கான இடம் வழங்கப்பட வேண்டும். அது அரசியல் நலன்களுக்கானதாக இருக்கக் கூடாது என்பதே முக்கியமானது.

தனிப்பட்ட அரசியல் நலன்களைத் தேடாத வகையில், அவர்களின் பங்களிப்பு அவசியமானது.

அடுத்து, மாவீரர் நாள் என்பது, சுடர் ஏற்றப்படுகின்ற நேரமான, மாலை 6.07 மணிக்குத் தான் உச்சம் பெறும். அந்த நேரம் பல இடங்களில் தவற விட்டுள்ளதையும் காண முடிந்தது, சில இடங்களில் 6.05 மணிக்கே சுடர்கள் ஏற்றப்பட்டன.

மாலை 6.07 மணிக்கே மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்துவது மரபு. ஆனால் யாழ்ப்பாணத்தில் அன்று பகல் நேரத்தில் சில அரசியல்வாதிகள் ஓடி ஓடி துயிலுமில்ல வாசல்களிலும், நினைவிடங்களிலும் சுடர்களை ஏற்றித் தமது படங்களை ஊடகங்களில் வெளிவரச் செய்திருந்தார்கள்.

மாவீரர்களுக்குச் சுடர்கள் ஏற்றுவதற்காக ஒரு நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்த போது, தாம் விரும்பிய நேரத்தில் சுடர்களை ஏற்றிக் கொண்டு திரிந்ததில் அப்பட்டமான அரசியல் நலன்களே மேலோங்கியிருந்தன.

அச்சுறுத்தல் மிக்க நேரத்திலும் சுடர்களை ஏற்றிய சில அரசியல்வாதிகள், இம்முறை தமக்குச் சரியான இடம் கிடைக்காததால் தான், இவ்வாறு நடந்து கொண்டனரோ தெரியவில்லை.

அத்துடன், மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுக்களில் இடம்பெற்றிருந்த பலரும், அதன் புனிதத்தன்மையைச் சரியாகக் கடைப்பிடித்தனரா என்ற விமர்சனங்களும் உள்ளன.
உதாரணத்துக்கு, ஒரு துயிலுமில்லம் முன்பாக நடந்த நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவர்களில் ஒருவர், பட்டுவேட்டி சட்டையுடன் பளபளப்பாகக் காட்சியளித்தார்.

இதுபோன்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் பட்டுவேட்டி சட்டை அணிவது மரபல்ல; கோலாகல நிகழ்வுகளுக்கே அது பொருத்தமான உடை. ஏற்பாட்டாளர்கள் சிலர் இதைக் கொண்டாட்டமாகக் கருதிவிட்டனரோ தெரியவில்லை.

மாவீரர் நாளைத் தமது நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளப் பலரும் முனைந்தனராயினும், மாவீரர்களை நினைவு கூரும் வாய்ப்பு அவர்களின் குடும்பத்தினருக்கும் மக்களுக்கும் கிடைத்தமை முக்கியமான தொன்று.
இந்த மாவீரர் நாளில் மக்கள் எழுச்சியுடன் துயிலுமில்லங்களை நோக்கிச் சென்றிருந்தனர். அது மாவீரர்களை நினைவு கூருவதற்கேயாகும்.

மாவீரர்களை நினைவுகூரும், வழக்கம் தமிழ் மக்களிடம் ஊறிவிட்ட ஒன்று என்பதை அறியாதவர்கள்தான், இதை அரசியலுடன் முடிச்சுப் போட முனைந்திருக்கிறார்கள்.

தலைவர்கள் விலைபோய் விடுவார்களோ, அரைகுறைத் தீர்வை திணித்து விடுவார்களோ என்று அஞ்சி, வீடுதலை வீரர்களின் நினைவுகளில் மக்கள் மனநிறைவு காண முனைந்திருக்கிறார்கள் என்று தமது கருத்தைப் பதிவு செய்திருந்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

இதுவரை மாவீரர் நாள் நிகழ்வுகள் எதிலும் பங்கேற்றிராத முதலமைச்சருக்கு, இதுபோன்ற உணர்வு ஏற்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை.

மாவீரர்களை நினைவு கூருதல் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அரசியலுக்கு அப்பால் கடைப்பிடிக்கின்ற ஒன்று. தம்முடன் பிணைத்திருக்கின்ற உணர்வாகவே அவர்கள் அதனைக் கருதி வந்திருக்கிறார்கள்.

ஒரு வரலாற்றுக் கடமையாகவும் அதனை நிறைவேற்றி வந்திருக்கின்றனர்.
அரசியல் ஏமாற்றங்களில் இருந்து விடுபடுவதற்கான ஆற்றுதலைத் தரும் இடமாகத் துயிலுமில்லங்கள் அமையவில்லை. அது மாவீரர்களைப் போற்றுகின்ற இடமாகவே இருந்தது- இன்னமும் இருக்கிறது- இருக்கவும் போகிறது. அதனை அரசியல் நலன்களுக்கான வடிகாலாகப் பயன்படுத்துவது எந்தளவுக்கு முறையற்றதோ, அவ்வாறு சித்திரிக்க முனைவதும், முறையற்றது தான்.

முதலமைச்சரின் அறிக்கைக்குப் பின்னாலும் ஓர் அரசியல் இருப்பதை அனுமானிக்க முடிகிறது. மாவீரர் நாள் ஒன்றில் பங்கேற்கும் துணிச்சல் அவருக்குள் இன்னமும் பிறக்கவில்லை. அந்தத் துணிச்சல் அவருக்குள் வந்தால், மக்கள் ஏன் துயலுமில்லங்களுக்குப் படையெடுத்தார்கள் என்ற உண்மை அவருக்கும் தெரியவரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post `விஸ்வாசம்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறித்து மனம்திறந்த சிவா..!!
Next post படப்பிடிப்புக்கு தயாராகும் விஜய், அஜித், விக்ரம் படங்கள்..!!