மீண்டும் பிறப்பாய் ‘தல பூட்டுவா’..!! (கட்டுரை)

Read Time:17 Minute, 35 Second

தர்ம போதனையில், தண்டனை எனும் அதிகாரத்தில் இவ்வாறுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான போதனைகளும் நற்சிந்தனைகளும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் போயா தினங்களிலும், மிகவும் அழுத்தமாகப் போதிக்கப்படுகின்றன. பௌத்த விகாரைகளில் மட்டுமன்றி, மத வழிபாட்டுத் தலங்களிலும் ஏனைய ஸ்தானங்களிலும் தர்மம் போதிக்கப்பட்டாலும், நாட்டில் இடம்பெறுகின்ற சம்பவங்களைப் பார்க்கின்றபோது, அந்தப் போதனைகளின்படி மக்கள் நடக்கிறார்களா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இலங்கை, பல்வேறு துறைகளுக்குப் பெயர்பெற்றது. இயற்கையான சூழல் கவர்ந்திழுப்பதனால், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், இலங்கைக்குப் படையெடுக்கின்றனர். இந்தத் தீவு பெயர்பெற்றிருப்பதில், யானைகளும் முக்கிய பங்கை வகிக்கின்றன.

நம்பிக்கை என்பதுதான் வாழ்க்கை. அதனை இழந்துவிடக் கூடாது. அதிலும், “தும்பிக்கை”யுடன் வாழும் இந்த யானைகளின் வாழ்வே வித்தியாசம்தான். சுளகுக் காதுகளை ஆட்டி, ஆட்டி; தும்பிக்கையை வீசி, வீசி; அசைந்து, அசைந்து வருவது, தனியே ஓர் அழகுதான். யானைகளின் வாழ்விடங்கள் இலங்கையில் அழிக்கப்படுவதன் காரணமாக, மனித – யானை முரண்பாடு என்பது ஏற்பட்டிருந்தாலும், யானைகளுக்கென இலங்கையில் தனியானதொரு விருப்பும் பரிவும் இருப்பதை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது. அதனால் தான், யானைகள் துன்புறுத்தப்படுகின்றன என்ற செய்தி அறிக்கைகள் வெளியாகும் போதெல்லாம், அச்செயற்பாடுகளுக்கெதிராக இலங்கையில் எதிர்ப்புகள் ஏற்படுகின்றன.

அந்தளவுக்கு யானையின் மீது, பரிவும் பாவமும் காட்டுகின்ற இத்தீவில், யானைகளுக்கு எதிரான செயற்பாடுகளும் இடம்பெறாமல் இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் கூட இந்த யானை விவகாரத்தில் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர். அனுமதிப்பத்திரமின்றி யானைக்குட்டிக​ளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், தேரர்கள் உள்ளிட்ட சிலருக்கு எதிராக, நீதிமன்றங்களில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன.

இலங்கைத்தீவில் மனிதர்கள், யானைகளை இறைச்சியாக்கி உண்ணமாட்டார்கள். எனினும், யானைகளைக் கொன்றுவிடுகின்றனர். தங்களுடைய தேவைகளுக்காக, பாவமான உயிரைப் பலியெடுத்துவிடுகின்றனர்.

அவ்வாறுதான் “தல பூட்டுவா” என்றழைக்கப்படும் யானையும், தந்தங்களுக்காகவும் கஜமுத்துகளுக்காகவும் கொல்லப்பட்டுள்ளமை அண்மையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாறு பெயர்பெற்ற யானையொன்று, இலங்கையில் கொல்லப்பட்டமை இது முதல் தடவையல்ல. சட்டங்கள் கடுமையாகக் கடைப்பிடிக்காவிடின் இது இறுதித் தடவையாகவும் இருக்கமுடியாது.

இதற்கு முன்னர், “பானம தல பூட்டுவ”, “வெல்லவாய ஆனா பல்லம தல பூட்டுவ”, “கல்தோட்ட யான வலல ரஜா” ஆகிய பெயர்பெற்ற யானைகளும் கொல்லப்பட்டுள்ளன.

இலங்கையில், 2010ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம், 5,800 யானைகள் இருக்கின்றன. அதில், 30 யானைகள் பாரிய தந்தங்களுடனும், 10 யானைகள் இனிது எனும் தந்தங்களுடனும் இருக்கின்றன என, வனஜீவராசிகள் திணைக்களத்தின் புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்” என்று சொல்வார்கள். அதாவது, யானைகள் உயிருடன் இருக்கும் போது, பல வழிகளில் மனிதர்களுக்கு உதவுகின்றன. அவை, இறந்த பிற்பாடும் அவற்றின் உடற்பாகங்கள் அனைத்தும் நல்ல விலைக்கு விற்கப்படக் கூடியன.

யானைகள், தமது குட்டியை சுமார் 22 மாதங்கள் வயிற்றில் சுமக்கின்றன. பாலூட்டிகளில் மிக நீண்ட காலத்துக்குக் கருவைச் சுமக்கின்றனவாக யானைகளே இருக்கின்றன. பெரும்பாலும் இவை, ஒரேயொரு குட்டினையே ஈனுகின்றன. இரட்டைகள் பிறப்பது மிக அரிது. ஒவ்வொரு யானையும் வளர்ந்து இனம்பெருக்குவதற்குப் பல ஆண்டுகள் ஆகின்றன.

அப்படிப்பட்ட யானைகள் இயற்கையாக மரணிப்பதை விடுத்து, பணத்துக்காகக் கொடூரமாகக் கொல்லப்படுவது, ஜீரணிக்கப்பட முடியாதது.

யானைகளுக்கு முக்கிய அச்சுறுத்தல்களாக வேட்டையாடுதலும் அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்படுதலும் காணப்படுகின்றன. சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும். எனினும், யானைகள் மனிதனால் கொல்லப்படுவதைத் தவிர, பிற விலங்குகளால் உணவுக்காகக் கொல்லப்படுவது மிக மிக அரிது.

யானைகளின் தந்தங்களைப் பெறுவதற்காகவே மனிதர்களால் பெரும்பாலும் அவை வேட்டையாடப்படுகின்றன. இது சட்டத்துக்கு அமைவாகவும் எதிராகவும் மேற்கொள்ளப்படுகின்றன.

கொல்லப்படும் யானைகளிலிருந்து பெறப்படும் தந்தங்கள், வியாபாரத்துக்காகப் பயன்படுகின்றன. பல நாடுகளிலும் சமூகங்களிலும், யானைகளின் தந்தங்கள் மூலமாக அதிர்ஷ்டம் கிடைக்குமென்ற மூட நம்பிக்கை காணப்படுகிறது. இவ்வாறான மூட நம்பிக்கை தான், யானைகளுக்கு ஆபத்தாக வந்து சேர்கின்றது.

ஆபிரிக்க யானைகளில் ஆண் – பெண் இரண்டும், தந்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால், ஆசிய பெண் யானைகளில், தந்தம் அரிதாகவே காணப்படுகிறது.

ஆபிரிக்காவில் தந்தங்களுக்காக வேட்டையாடுபவர்கள், பெரிய தந்தங்களுள்ள யானைகளை வேட்டையாடுவதால், எஞ்சியிருக்கும் யானைகள் சிறிய தந்தங்கள் உள்ளவையாக அல்லது தந்தங்கள் இல்லாதவையாக இருக்கின்றன. எனவே, புதிதாகப் பிறக்கும் குட்டிகளும், இவற்றின் மூலமாகவே பிறப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இதனால், புதிய தலைமுறைகளில் தந்தமில்லாத் தன்மையை உருவாக்கும் மரபணுக்கள் கூடுதலாகிப் பெருகி, தந்தமில்லாத யானைகள் பிறப்பதற்கு வழியேற்படுவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1930இல் 1 சதவீதமாக இருந்த இந்நிலைமை, தப்போது 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதெனவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும், எதிர்காலத்தில் தந்தமில்லாத் தன்மை என்பது, ஓர் அரிதான இயல்புப் பிறழ்வாக இருந்த நிலை மாறி, பொதுவான மரபுவழி இயல்பாக மாறும் எனவும் ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இதற்கு இலங்கையும் எடுக்துக்காட்டாக உள்ளது. காரணம், “தல பூட்டுவா”வின் இழப்பையடுத்து, இரு கொம்பன் யானைகள் மாத்திரமே இங்கு எஞ்சியிருக்கின்றன என, அரச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

யானைகள் வாழ்வதற்கு பெரிய அளவிலான காட்டுப்பகுதிகள் தேவைப்படுகின்றன. ஏனெனில், யானைகள் கூட்டமாக ஒரு பகுதிக்குள் புகுந்து மரங்களையும் செடி கொடிகளையும் பெருமளவில் அழித்து உண்கின்றன. வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. இதற்காக இவை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன.

காடழிப்பு, யானைகளின் வாழிடத்தையும் குறைக்கின்றது. ஆசிய யானைகளின் அழிவுக்கான முதன்மைக் காரணம் வாழிடங்கள் இழக்கப்படுவதே என்று கூறப்படுகிறது. இது மனிதர்களின் நலனுக்கும் யானைகளின் நலன்களுக்குமிடையே முரண்பாடுகளை உருவாக்குகின்றது. இவ்வாறான முரண்பாடுகளால், இலங்கையில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 150 யானைகளும் 100 மனிதர்களும் இறக்கின்றனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

“தல பூட்டுவா”வுக்கு ஏற்பட்ட நிலையும் இதுவே. யால வனாந்தரத்தில் வசித்த 51 வயதுடைய கொம்பன் யானையே, “தல பூட்டுவா” ஆகும். “திலக்” என்ற பெயரைக் கொண்ட அந்த யானையின் தந்தங்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதால், சிங்கள மொழிப் பதத்தின் அடிப்படையியே, “தல பூட்டுவா” என்ற பெயரில் செல்லமாக அழைக்கப்பட்டு வந்தது.

கஹல்ல – பல்லேகெல சரணாலயத்தின் காட்டுப் பகுதியில் உள்ள “ஹெரொவி” வாவிக்கு அண்மையில் யானையொன்றின் உடலம், கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி புதன்கிழமையன்று, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலம் மிகவும் உருக்குலைந்திருந்த நிலையிலேயே காணப்பட்டது. இதனால் அந்த யானை, சுமார் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று, அதிகாரிகள் சந்தேகித்தனர். அதன்பின்னர் குறித்த இடத்துக்குப் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், மறுநாள் 30ஆம் திகதி பிரேத பரிசோதனையும் நடத்தப்பட்டது.

அப்போதுதான், வனாந்தரத்தில் மிகவும் கம்பீரமாகவும் சுதந்திரமாகவும் அலைந்து திரிந்த “தல பூட்டுவா” யானையே, அவ்வாறு உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட விடயம் வெளிச்சத்துக்கு வந்தது. கண்டுபிடிக்கப்பட்ட யானையின் உடலம், “தல பூட்டுவா” எனச் செல்லமாக அழைக்கப்பட்ட யானையினது என்பதை சாட்சியங்களுடன், வனஜீவராசி திணைக்களத்தின் வனவிலங்கு வைத்தியப் பணிப்பாளர் தாரக பிரசாத் உறுதிப்படுத்தினார். பல நாட்களாக “தல பூட்டுவா” யானையின் நடமாட்டத்தைக் காணவில்லை என்பது தொடர்பில் சூழலியலாளர்கள் விழித்துக்கொண்டதை அடுத்தே, இந்தக் கொடூரச் செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதற்கு முன்னதாக நவம்பர் மாதம் 22ஆம் திகதி, அதி சொகுசு வாகனத்தில் வந்த இருவர், ஒரு ஜோடி தந்தத்தையும் ஆறு கஜமுத்துகளையும் 20 இலட்சம் ரூபாய்க்கு விற்க முற்பட்ட வேளை, வலான மோசடி தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்கள் வந்திருந்த அதி சொகுசு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த இலக்கம் போலியானது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொல்பெதிகம பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் கிராம சேவகர் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலிஸ் அதிகாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றது.

இவ்விருவரிடமுமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு ஜோடி தந்தமும் கஜமுத்துகளும், காணாமல்போயிருந்த “தல பூட்டுவா”வினுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம், சூழலியலாளர்களிடையே எழுந்தது. காரணம், இலங்கையில் இவ்வாறான அரிய வகை கொம்பன் யானைகள் மூன்று மாத்திரமே காணப்படுவதாக அரச புள்ளிவிவரத் தகவல்கள் குறிப்பிட்டிருந்தன.

கொல்லப்பட்ட யானையின் பல இடங்களில் குறிப்பாக நெஞ்சு, வயிறு, இடது பக்க பின் கால் பகுதிகளில் சுட்டதால் யானை மரணித்துள்ளதென, பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன. இதன் பின்னணியில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், 10 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையைப் பொறுத்தவரையில் குறிப்பாக பெரும்பான்மையினத்தவர்கள் மத்தியில் யானை வளர்ப்பு என்பது சமூகத்தில் ஓர் அந்தஸ்து அல்லது கௌரவமாக அடையாளப்படுத்தப்படுகின்றது. தவிர, வழிபாட்டுக்குரியதாகவும் இரு நாடுகளுக்கிடையே கௌரவமாகப் பரிமாறப்படும் அன்பளிப்புகளாகவும் பெரஹராக்களின் போது முக்கிய விடயதானமாகவும் கொள்ளப்படுகின்றன. மேலும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விடயமாகவும் உள்ளது. பின்னவல யானைகள் சரணாலயம், இதற்குச் சான்றாக உள்ளது. எனவே, யானைகளைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு.

இலங்கை வனாந்திரத்தில் வாழ்ந்த மிகவும் பலம்வாய்ந்த யானையாக “தல பூட்டுவா” யானை இருந்துள்ளது. இந்த யானை மீது, இதற்கு முன்னரும் பல தடவைகள் துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. 1970ஆம் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு கண் பார்வையையும் அது இழந்திருந்தது.

எத்தனை பலம்வாய்ந்திருப்பினும், மனிதர்களின் பணம் என்ற அற்ப ஆசைக்காக துப்பாக்கிகளின் சன்னங்கள் பதம் பார்த்திருக்க, தந்தங்கள், இயந்திர வாளால் அறுத்து எடுக்கப்பட்டிருக்கும் நிலைமை மிகக் மிகக் கொடியது.

தினமும் பல ஆயிரக்கணக்கான மிருகங்கள் கொல்லப்பட்டு, மனிதர்களின் வயிறுகளுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.

மனிதமே மரணித்த இம்மண்ணில் மாணிக்கமாய் வந்து பிறந்ததுவே, “நீ” செய்த கர்ம வினையாக உள்ளது. மனிதநேயத்துக்கு எப்போது மரணம் இல்லாமல் போகிறதே அப்போதே மீண்டும், உன் வனாந்தரத்தில் கொம்பனாய் வந்து பிறப்பாய் “தல பூட்டுவா”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டுவிட்டரை கலக்கிய மெர்சல், பாகுபலி-2..!!
Next post இந்நாளில் கண்ணீர் வடிக்காத கண்கள் உண்டா?.. ஜெயலலிதா முதலாம் ஆண்டு நினைவு தினம்..!! (வீடியோ)