‘கருவை’ அழிக்கும் ‘சின்ன’ அம்மா..!! (கட்டுரை)

Read Time:16 Minute, 24 Second

தன்னுடைய மூக்கை ஒருவர் நோண்டிக்கொண்டிருந்தால் அல்லது காதுக்குள் காயங்களை ஏற்படுத்தும் ஏதாவது உபகரணங்களை செலுத்தி குடைந்துகொண்டிருந்தால் இல்லையேல், உடலுறுப்புகளுக்குச் ​சேதங்களை விளைவிக்கின்ற செயல்களில் ஈடுபடும்வேளைகளில், யாராது தட்டிக் கேட்டால், “இது என் மூக்குத்தானே!, இது என் காதுதானே!, இது என்னுடையதுதானே! உனக்கென்ன வலிக்கிறது” என்று பலரும் கேட்பதை கேள்விப்பட்டிருக்கின்றோம்.

தன்னுடலில் இருக்கின்ற உறுப்புகளை எதுவேண்டுமானாலும் செய்யலாம் எனப் பலரும் கூறுவதுண்டு. ஆயினும் அது தவறானதாகுமெனச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
ஏனைய உறுப்புகளை விடவும், கருப்பையில் கையை வைப்பதற்கு எதிரான சட்டங்கள், கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கின்றன. ஆனால், அமுல்படுத்தும்போது நடைமுறைச் சிக்கல்களைப் பலரும் எதிர்கொள்கின்றனர்.

கருப்பை பெண்ணுக்குச் சொந்தமான உறுப்புதானே, அந்தக் கருப்பையிலேயே கரு உண்டாகிறது. ஆகவே, அவர் தனது உறுப்பை எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்று பலரும் கூறுவதுண்டு. ஆயினும், அது தவறாகுமெனச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது,
கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணின் உயிரைக் காக்கும் நோக்கில், நல்லெண்ணத்துடன் கருக்கலைக்கப்பட்டாமல், வேறு வகையில் கருக்கலைப்புச் செய்யப்பட்டிருக்குமானால் அது குற்றமாகும்.

குழந்தை, வயிற்றுக்குள் உருளாமல் இருக்கும் போதெல்லாம் அல்லது உருளும் நிலையில் கருக்கலைக்கப்பட்டிருந்தால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும்; அபராதமும் விதிக்கப்படுமென சட்டத்தில் கூறப்படுள்ளது.

பெண் ஒருவர், தானே தனது கருவைக் கலைத்தால் அவளுக்கும் தண்டனை விதிக்கப்படும்.

பெண்ணின் ஒப்புதல் இல்லாமல் கருக்கலைத்தல் மற்றும் அந்தப் பெண்ணின் மரணத்தை விளைவிக்கின்ற செய்கை எதையும் செய்கின்ற ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்​ தண்டனையும் விதிக்கப்பட்டு, அபராதமும் உண்டு என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டம் எதுவாக இருந்தாலும், சமூகத்தில் இடம்பெறுகின்ற சம்பவங்கள், மெய் சிலிர்க்கச் செய்கின்றன.

முதலாவது சம்பவம்: ஒவ்வொரு நாளும் ஏற்பட்ட இரத்தக் கசிவால், 13 வயதான சிறுமியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அச்சிறுமியைப் பரிசோதனைக்கு உட்படுத்திய வேளையில், அவர் கர்ப்பிணியாக இருப்பது கண்டறியப்பட்டது.

இரண்டாவது சம்பவம்: வயிற்றுவலி காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, பிரபல்யமான பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த 16 வயதான மாணவியை, பரிசோதனைக்கு உட்படுத்திய வேளையில், அந்த மாணவியும் தாய்மையடைந்திருந்தமை தெரியவந்தது.

இவ்வாறான சம்பவங்கள், நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளில் பதியப்படுகின்றன. இதைப் ‘பதின்மபருவத்தினரின் கர்ப்பம்’ என்பர்.

இவ்வாறு, பதின்மபருவ கர்ப்பம் தொடர்பில், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சிறுவர்கள், சிறுமியர் மற்றும் சமூக நலன்சார்ந்தோர் கவனம்செலுத்துவது அத்தியாவசியமானதாகும்.

13 வயதுக்கு மேலே, பூப்படைவது இயற்கையின் மானிட நியதியாகும். எனினும், 16 வயது வரையிலும் சிறுமியர் என்றே அழைக்கப்படுவது வழக்கமாகும்.

அவ்வாறான நிலையில் 13 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட, ‘டீன்ஏச்’ எனப்படும் பதின்ம வயதுகளில் கர்ப்பம் தரிப்பது ‘பதின்மபருவத்தினரின் கர்ப்பம்’ என்றே கருதப்படும்.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலேயே இவ்வாறு கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் கூடுதலாக இடம்பெறுகின்றன. ‘பதின்மபருவத்தினரின் கர்ப்பம்’ சமுதாய ஒழுக்கநெறிகளுக்கு மட்டுமன்றி, சுகாதாரத் துறைக்கும் பெரும் சவாலாகவே விளங்குகின்றது.

ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் வளரும் கருவை, கலைக்கக்கூடாது என்ற சட்டம், வைத்தியர்களின் கைகளைக் கட்டிவிடுவதனால், பதின்மபருவதில் கர்ப்பிணியாகும் சிறுமிகளில் பலர், மரணத்தைத் தழுவவேண்டிய நிலையில் உள்ளனர்.

குறைந்த வயதில் திருமணம் அல்லது சிறுவயதில் கர்ப்பம் தரித்ததன் பின்னரான திருமணம், துஷ்பிரயோகத்தின் ஊடாகக் கர்ப்பமடைதல் ஆகியன ஏனைய நாடுகளை விடவும், வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் அதிகரித்துள்ளன.

உலகளாவிய ரீதியில் பிறக்கின்ற 13 மில்லியன் குழந்தைகள் 20 வயதுக்கும் குறைந்த பெண்களுக்கே பிறக்கின்றன. அதிலும், 90 சதவீதத்துக்கு மேற்பட்ட பிறப்புச் சம்பவங்கள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே இடம்பெறுகின்றன.

குறைந்த வயதில், குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக, சமூகப் பிரச்சினைகள் மட்டுமன்றி, உடலாரோக்கிய ரீதியில் ஏனைய பக்கவிளைவுகளுக்கும் அவர்கள் முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.

குறைந்த வயதில் கர்ப்பம் தரிப்பதற்கான, காரணங்களைக் கண்டறிவதன் ஊடாக, பக்க விளைவுகளை ஓரளவுக்குக் குறைத்துக்கொள்ளலாம் என்று சுகாதாரத் துறையைச் சார்ந்தோர் தெரிவிக்கின்றனர்.

இலங்கை போன்ற நாடுகளில், சிறுவயதில் கர்ப்பம் தரித்தல், ​பாரிய சமூகப் பிரச்சினையாகும். வைத்திய சிகிச்சைகளிலும் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆகையால்தான், சிறுவயதில் கர்ப்பம் அடைந்தவுடன், உடனடியாகத் திருமணம் முடித்துவைத்துவிடுகின்றனர். அல்லது திருமணம் செய்வதற்குத் தூண்டப்படுகின்றனர்.

எனினும், ​ஐரோப்பிய நாடுகளில் அவ்வாறான நிலைமையொன்று இல்லை. சிறுவதில் கர்ப்பமடைந்தல் ஓரளவுக்கு அதிகரித்திருந்தாலும் திருமணம் முடித்தல் அல்லது திருமணம் செய்துவைத்தல் மிகமிகக் குறைவாகவே இருக்கின்றது.

கல்விவளர்ச்சி குறைந்த சமூகத்தில், பாலியல் தொடர்பான விழிப்புணர்வு இல்லாத நிலையில், ஆணுறை, பெண்ணுறை போன்ற கர்ப்பத்தைத் தவிர்க்கும் உபகரணங்களைப் பயன்படுத்தி​கொள்வதில் போதிய அறிவின்மை காரணமாக, இவ்வாறான நிலைமையொன்றுக்கு முகம் கொடுக்கவேண்டிய இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாலியல் ரீதியான தூண்டல்கள், பருவயது மாற்றங்கள் மற்றும் கோளாறுகள் தொடர்பில் போதியளவில் விழிப்புணர்வு இல்லாமை, இறுதியில் கர்ப்பத்தில் கொண்டுவந்து நிறுத்திவிடும்.

அதுமட்டுமன்றி, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதன் ஊடாக, கர்ப்பிணிகளாகும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. அதில், வன்புணர்வு அல்லது கூட்டுவன்புணர்வு என்பனவும் உள்ளடங்குகின்றன.

இதில் ஆதரவற்றோராக இருக்கும் சிறுமிகளை எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்ற வன்சிந்தனையே மேலோங்கியுள்ளது.

இவற்றான சம்பவமொன்று, கொஹுவளையில் அமைந்துள்ள ‘தாருன் நுஸ்ரா’ என்ற ஆதரவற்றோர் இல்லத்தில், இடம்பெற்றுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. அங்கு, 18 சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

மேற்படி குற்றச்சாட்டுத் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குறித்த ஆதரவற்றோர் இல்லத்தில் சாரதியாகப் பணிபுரிந்த நபர், கொஹுவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர், விளக்கமறியலில் வைக்கப்பட்டு, அந்த விளக்கமறியல் நீடிக்கப்பட்ட நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு, நாளை 7ஆம் திகதி வியாழக்கிழமையன்று, கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில், நான்காவது தடவையாகவும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதிகோரி அன்றையதினம் காலை 9 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்வதற்குப் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதிகோரி, அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவற்றை முன்னெடுப்பதில் தவறில்லை. எனினும், நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனங்காணப்படும் நபருக்கு, அதியுட்ச தண்டனையை வழங்குவது, குற்றத்தை செய்பவருக்கும் அதனை தூண்டுபவருக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும்.

இதேவேளை, ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கின்றவர்களுக்கு, இவ்வாறான விடயங்களில் ஆகக்கூடுதலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவேண்டியது. பொறுப்புமிக்கவர்களின் கடப்பாடாகும்.

இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், ஆண்களும் பெண்களும் பாலியல் உறவுக்கு விரும்புகின்றனர். ​

போதைப்பொருள், மதுபானம் ஆகிய​வற்றைப் பயன்படுத்துவோருக்கு பாலியல் உறவின் மீதான ஆசை மென்மேலும் அதிகரிக்கிறது அல்லது தூண்டப்படுகின்றது.

போதைப்பொருட்களிலும் உள்ளூர் போதைப்பொருட்களைப் பயன்படுத்துகின்ற வேளையில், பாலியல் ஆசையை மிதமிஞ்சிய வகையில் தூண்டிவிடுகின்றதெனவும் அந்த ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது பாரியளவில் கைப்பற்றப்படுகின்ற போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றவர்களிடத்தில், இவ்வாறான உணர்வு குறைந்தளவிலேயே காணப்படுகின்றதென அறியமுடிகின்றது.

இலங்கையைப் ​பொறுத்தவரையில், பாலியல் கல்வி, பரந்துபட்ட நிலையில் இருக்கும் ஒரு தொனி​​பொருளாக இல்லை. அதுமட்டுமன்றி, அச்சம், பயம் மற்றும் வெட்கம் ஆகியனவும் காரணமாக அமைகின்றன.

பாடசாலை மட்டத்தில் பாலியல் கல்வி தொடர்பில் வெகுவாகப் பேசப்படவில்லையென அறியமுடிகின்றது; வீடுகளிலும் பேசப்படுவதில்லை. வீடுகள் மற்றும் பாடசாலைகளில், பாலியல் கல்வி தொடர்பில் கலந்துரையாடி, பாதகங்களை எடுத்தியம்புதல் வேண்டும் என்பதனூடாகவே மேற்குறிப்பிட்ட சம்பவங்களை ஓரளவுக்கேனும் குறைத்துகொள்வதற்கு வாய்ப்பாக அமையுமென கண்டறியப்பட்டுள்ளது.

ஆகையால்தான், பல்வேறான மாற்றுச் செயற்பாடுகளின் மூலமாக பாலியல் ரீதியான ஒத்திகைகளை மேற்கொள்வதற்கு, இளைஞர்களும் யுவதிகளும் முயலுகின்றனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

பாலியல் அறிவை விடவும், கர்ப்பத்தைத் தடுக்கும் ‘உறைகள்’ தொடர்பில், சமூகமட்டத்தில் ப​ல்வேறான தவறான கண்ணோட்டமே விதைக்கப்பட்டுள்ளது.

இதனால் எதிர்பார்க்கப்படாத கர்ப்பங்களும் தரிக்கின்ற. அந்த ‘உறைகளை’ எவ்வாறு பயன்படுத்துவது, அவற்றைப் பயன்படுத்துவதனால் ஏற்படும் சாத மற்றும் பாதகங்கள் என்னவென போதியளவான விளக்கங்களும் சமூகத்தில் விதைக்கப்படவில்லை.

இது, தேவையற்ற கர்ப்பம் மற்றும் இளம் கர்ப்பம் ஏன்? வயது முதிர் கர்ப்பத்தையும் உண்டாக்கி விடுகின்றது. இது தனக்குத் தானே குழியை வெட்டிக்கொள்கின்ற செயலுக்கு ஒப்பானதாகும்.

‘உறைகள்’ பயன்படுத்தினால், உச்ச இன்பத்தை அனுபவிக்க முடியாமல் போய்விடுமென்ற, அற்ப சிந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து ஒரு சமூகம் விடுபடவேண்டுமென்றும் இல்லையேல், மேற்குறிப்பட்ட அநாவசியமான கர்ப்பங்களை ஒருபோதும் தவிர்க்கவே முடியாது.

எந்த வயதுகளில் கர்ப்பம் தரித்தாலும் அம்மா அம்மாதான். எனினும், பதின்மபருவதில் கர்ப்பிணியாகும் அம்மாக்கள், தங்களுடைய கருக்களை கருவிலேயே கலைத்து, உயிர்களுக்கு பங்கம் விளைவித்துக் கொள்கின்றனர்.

இவ்வாறு, மலராமலே உதிரும் மொட்டுகளைக் காப்பாற்றவேண்டியது அனைவரினதும் கடப்பாடாகும். அதற்காக வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும். அதற்கு விழிப்புணர்வு அவசியமானதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கவர்ச்சி உடையில் கலக்கிய ஐஸ்வர்யாராய்..!!
Next post ‘வேலைக்காரன்’ படத்தின் கேரள உரிமை அதிக விலைக்கு விற்பனை..!!