ஈழம் பெற்றுத் தருவதாக வலம்வரப் போகின்றார்கள்..!! (கட்டுரை)

Read Time:13 Minute, 17 Second

நாட்டின் சகல உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல், எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஆகவே நாடு, இன்னொரு தேர்தல் திருவிழாவைக் கொண்டாத் தயாராகிறது. இந்நாட்களில் இருந்து பெப்ரவரி மாதத் தேர்தல் திகதி வரையிலான இரண்டு மாதங்கள், அரசியல்வாதிகள் மக்களை நோக்கிப் படை எடுக்க, அணி திரளப் போகின்றார்கள். மக்களை “நேசிக்க”த் தொடங்கப் போகின்றனர்.

தெற்கில், மைத்திரி எதிர் பலப்பரீட்சை களமாக உள்ளூராட்சித் தேர்தல் அமையப் போகின்றது. அதற்கிடையில் ஐக்கிய தேசியக் கட்சியும் தனித்துப் போட்டியிட்டு, தன் பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவைப்பாட்டில் உள்ளது.

வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களைப் பொறுத்த வரை, அரசியல் உரிமைகள் மிகவும் முக்கியமானதும் சற்றேனும் விட்டுக் கொடுக்க முடியாத அவசியமானதுமான ஒன்றாகும். ஆனால், மறுபுறத்தே இதற்குச் சமாந்தரமாக அபிவிருத்திப் பணிகளும் முக்கியமானவை என்பதில் அடுத்த பேச்சுக்கு இடமில்லை.

போர் நடைபெற்ற காலங்களில் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பன பூச்சியத்துக்கு அண்மித்ததாகவே காணப்பட்டது. ஆகவே, தற்போது தனிநபர் அபிவிருத்தியில் ஆரம்பித்து, குடும்பம் மற்றும் தான் வாழும் சூழல் என ஒட்டு மொத்தச் சமூகத்தையும் முன்னேற்ற வேண்டியது முதன்மையான விடயம் எனலாம்.

அந்த வகையில், உள்ளூராட்சித் தேர்தல் மூலம் கிராம சபை, நகர சபை, மாநகர சபை எனச் சபைகள் ஊடாக, அந்தப் பகுதி மக்கள் தத்தம் ஊர்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களைத் திறம்பட ஆற்ற வேண்டிய தேவைகள் உள்ளன.

வடக்கு, கிழக்கிலும் முன்னைய காலங்களில் மிகவும் சுருக்கமாகச் சாதாரண, அபிஷேகத் திருவிழா போன்று நடைபெற்று வந்த இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், தற்போது பல கூட்டங்கள் கலந்துகொள்ளும் மங்கள வாத்தியங்களோடு, மிகவும் சிறப்பாக நடக்கும் தேர்த் திருவிழா என விழாக் கோலம் பூண்டு விட்டது எனலாம்.

தற்போது, ஊர்களில் நடைபெற்று வருகின்ற மங்கல, அமங்கல நிகழ்வுகளில் வெள்ளை வேட்டியுடன், இரு கரங்களையும் கூப்பியவாறு வரும், தேர்தலில் களம் இறங்க உள்ள பிரமுகர்கள் மெல்ல மெல்ல, வலம் வரத் தொடங்கி விட்டார்கள்.

மக்களின் சுகதுக்கங்களைக் கேட்டு வருகின்றார்கள். தமது மக்களின் காவலர்கள் போல நடந்து (நடித்து) வருகின்றனர். பக்குவமாகப் பவனி வருகின்றனர்.

ஆயுதப் போராட்டத்தின் எதிர்பாராத மௌனத்துடன் (2009) சடுதியாகத் தமிழ் மக்களின் ஒட்டு மொத்த வாழ்வும் தாழ்வும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. கூட்டமைப்பினர் திடீரெனத் தமிழ் மக்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் ஆக்கப்பட்டார்கள்; ஆனார்கள்.

அவ்வாறு, பெரும் பொறுப்பாளிகள் ஆக்கப்பட்டவர்கள், எள்ளவும் பொறுப்பற்ற ஆட்களாக நடந்து கொள்வதாகத் தமிழ் மக்கள் கவலை அடைந்துள்ளனர். சேதம் கண்ட தேசத்தை மீள மீட்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள், தங்களுக்குள் சேற்றை வாரிவாரி இறைக்கிறார்கள்.

தமது மக்கள் அடுத்த வேளை உணவுக்கே அல்லல்படுகின்ற வேளை, இவர்கள் கதிரைப் பங்கீட்டுக்கு கொஞ்சமும் வெட்கமின்றி அடிபடுகின்றனர். ஏன் என்றால், “இதெல்லாம் மக்களுக்காக” என நாகூசாமல் சொல்கின்றனர்.

கடந்த காலங்களில், தமிழ்க் கட்சிகளுக்கிடையிலும் அல்லது தமிழ் ஆயுத அமைப்புகளுக்கிடையிலும் ஒற்றுமை இன்மை காரணத்தினால் ஏற்பட்ட இழப்புகள், வருத்தங்கள் தொடர்பாக வகுப்புகள் எடுக்க வேண்டிய தேவை எவருக்கும் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் கீழ், எதுவுமே தமிழ் மக்கள் அடைந்து விடவில்லை என ஒரு வரியில் கூறி விடவும் முடியாது. ஆனாலும், அடைய வேண்டிய இலக்குகள் ஆயிரம் இருக்கையில், இவர்கள் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்கின்றனரா என்பதே தொக்கி நிற்கும் வினா ஆகும்.

கூட்டமைப்புக்கும் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு என்ற குறுகிய வட்டத்துக்குள் நின்று வாக்களிக்கவில்லை. மாறாக ஒரு பெரும் கடமை உணர்வுடன் தமிழ் மொழி, தமிழர் நிலம், தமிழர் இருப்பு என்ற உயரிய எண்ணத்துடனேயே மக்கள் வாக்களித்தனர். இதையே வீட்டுச் சின்னத்தில், தும்புத்தடி போட்டியிட்டாலும் வெற்றி பெறும் என்ற கதை கூடச் சொல்கின்றது.

ஆனால், உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கொழும்பின் அறிவிப்புடன், வடக்கு, கிழக்கில் நாளாந்தம் பற்பல காட்சிகள் நடந்தேறி வருகின்றன. சற்றும் எதிர்பாராத புதிய கூட்டுகள்; பிரிவுகள், அவற்றுக்கான முனைப்புகள் என அசிங்கங்கள் அரங்கேறுகின்றன.

‘சமஷ்டிக் கட்சி’ என ஆங்கிலத்தில் தனது பெயரைக் கொண்ட தமிழரசுக் கட்சியினரும் ‘ஈழம்’ மற்றும் ‘தமிழ் ஈழம்’ எனத் தங்களின் அமைப்பின் பெயரைக் கொண்ட, தமிழ் மக்களின் விடுதலைக்காகக் கடந்த காலத்தில் ஆயுதம் ஏந்தியவர்களும், வெறும் 48 மாதங்கள் நிர்வகிக்கப் போகும் உள்ளூராட்சிச் சபைகளுக்கு முட்டி மோதும் அருவருப்பான சம்பவங்கள் தினசரியாகச் செய்திகள் வடிவில் வருகின்றன.

ஆக வடக்கு, கிழக்கில் பெரும் கொடிய போரை எதிர் கொண்டு, நலிவுற்ற தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்வோர், இன்னமும் ஒற்றுமைப்படாத நிலையில் உள்ளனர். இந்தநிலையில், போரை வழிப்படுத்திய தெற்கில் உள்ளோர் ஒரு வழிக்கு வந்து தீர்வை வழங்குவார்களா?

உலக வரலாற்றில், சிங்கப்பூர் மக்கள் லி குவான்யூ என்பவராலும், சீன தேசத்து மக்கள் மா ஓ சேதுங் என்பவராலும் வழிப்படுத்தப்பட்டார்கள்; நெறிப்படுத்தப்பட்டார்கள்; வாழ்வு அளிக்கப்பட்டார்கள்.

அதேபோல, வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களைத் தற்போதைய ஏதும் அற்ற ஏதிலியான நிலையிலிருந்து மீட்கக் கூடிய பொதுவான வேலைத் திட்டங்களைத் தலைவர்கள் எனக் கூறுவோரால் ஏற்படுத்த முடியாமல் போனமை, தலைவர்களின் பெரிய பலவீனமே.

தற்போதைய உள்ளூராட்சித் தேர்தலை ஒட்டிய ஆசனப் பங்கீட்டால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான அடிபாடுகளைப் பார்த்து அகிலமே சிரிக்கின்றது.

இவர்களது பிரிவும் கூட்டும் தங்களையும் தங்கள் அரசியல் இருப்பையும் கட்சிகளையும் முன்னிலைப்படுத்துவதற்கே என்பது நிதர்சனம் வெளிப்படை உண்மை. கூட்டமைப்பு பல கட்சிகளாகப் பங்கிடப்பட்டால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பறி போகலாம். அது தமிழரசுக் கட்சிக்கு கவலை; தனி வழி சென்றால், சில வேளைகளில் அரசியலுக்கு முழுக்குப் போட வேண்டி வந்துவிடும் என ஏனைய கட்சிகளுக்குக் கவலை. இங்கு எங்கே மக்கள் நலன்?

முல்லைத்தீவில் ஒரு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர், துணுக்காய் தனக்கு வேண்டுமாம். இன்னொருவர் புதுக்குடியிருப்பு தனக்கு வேண்டுமாம். ஆனால், இருவருமே தம் மாவட்டத்தில் தாம் இழந்த மணலாறு (வெலிஓயா) எமக்கு (தமிழர்களுக்கு) வேண்டும் என இதுவரை நாடாளுமன்றில் கேட்கவில்லை.

ஒட்டு மொத்தமாகத் தமிழ் மக்கள் எதிலும் எல்லோரிலும் நம்பிக்கை அற்ற வெறுப்பும் கோபமும் ஒருங்கே கலந்த மன நிலையில் உள்ளனர் என்பதை யாரும் அறியவில்லை. இதுவே பெரும் துயரம்.

இப்போது, கூட்டமைப்புப் பங்காளிகள் சமரசத்துக்கு வந்து விட்டார்கள்களாம். ஆகவே, பகைமையைப் பறை அடிக்காமல், அறைக்குள் இருந்து காதும் காது வைத்தது போல, பேசித் தீர்த்திருக்கலாம். ஏன் எம் இனத்து ஒற்றுமையில் கறை படிய விட்டார்கள். ஏன் சேற்றை வாரி இறைத்தார்கள். சரி இனி அடிபடாவிட்டால் நல்லது.

ஆகவே வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் இல்லங்கள் நோக்கி, தமிழ்க் கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் என வேட்பாளர்கள் அணி திரளத் தயாராக உள்ளனர்.

அவர்களுக்கான உருக்கமான வேண்டுகோள் யாதெனில், தயவு செய்து உங்களால் நடைமுறைப்படுத்தக் கூடியவற்றை மட்டும் சொல்லுங்கள். மறுபுறம் சொன்னதை நடைமுறைப்படுத்துங்கள். அதனால் மட்டுமே நீங்கள் சொன்னவை வாக்கு என அழைக்கப்படும்.

வெறுமனே வாக்கு வேட்டைக்காக வாக்குறுதிகளை அள்ளிக் கொட்ட வேண்டாம். உள்ளூராட்சித் தேர்தல் தமிழ் மக்களுக்கான அன்றாட மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான சர்வரோக நிவாரணி என மறந்தும் கூற வேண்டாம். உங்கள் வார்த்தைகளுக்குள் மயங்கும் நிலையில் மக்கள் இல்லை.

தெற்கை மையமாகக் கொண்ட, சிங்களத் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் வாக்குறுதிகள் அல்லது அவர்களது வடக்கு, கிழக்கு முகவர்கள் வழங்கும் வாக்குறுதிகள் தொடர்பில் தமிழ் மக்கள் அலட்டிக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படாது. ஏனெனில் அவ்வாறான வாக்குறுதிகள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு ஏழு தசாப்த கால பழுத்த பட்டறிவுப் பகிர்வு உண்டு.

ஆனாலும் மறுபுறத்தே தமிழ் அரசியல் அமைப்புகள் சிதறுண்டு, பல கட்சிகளாகவும் சுயேட்சைக் குழுக்களாகவும் களம் இறங்கும் கள நிலை காணப்படுகின்றது.
இது சிங்களத் தேசியக் கட்சிகளுக்கு வடக்கு, கிழக்கில் இன்னமும் ஆர்வத்துடன் அரசியல் நடத்தும் கதவுகளை நாமே அகலத் திறந்ததாக அமையலாம்.
நமது கைகளால் நம் தலையில் நாம் மண்ணை அள்ளி போட தயாராவது போல உள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்கும் தனுஷ்..!!
Next post நாளை ஒரே நாளில் 7 திரைப்படங்கள் ரிலீஸ்: தியேட்டர்களுக்கு தட்டுப்பாடு..!!