முஸ்லிம் கூட்டமைப்பு: புதுவழியில் பயணிக்கும் முஸ்லிம் அரசியல்..!! (கட்டுரை)

Read Time:18 Minute, 39 Second

தமிழர்களுக்கான அரசியலில், ஒன்றிணைந்து செயற்படுவதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்முரண்பாடுகளும் கீறல்களும் விழுந்துகொண்டிருக்கின்ற ஒரு காலசூழலில், முஸ்லிம்களுக்கான கூட்டமைப்பொன்று, ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு’ என்ற பெயரில் உதயமாகி இருக்கின்றது.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில், அஹிம்சை ரீதியாகப் போராடிய தமிழரசுக் கட்சியுடன், ஆயுதத் தொடர்புள்ள இயக்கங்களாக ஒரு காலத்தில் அறியப்பட்ட அரசியல் கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போல, முஸ்லிம் சமூகத்துக்கிடையே அரசியல் செய்து கொண்டிருக்கின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கியிருக்கின்றன. இதன்மூலம் முஸ்லிம்களின் அரசியல், வேறு புதியதொரு பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

முஸ்லிம்கள், ஒற்றுமையைப் பற்றிப் பேசிப்பேசியே பிரிந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அரசியல் ரீதியாகவும் மார்க்கத்தைக் கடைப்பிடிக்கும் விடயத்திலும் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள், இப்போது வெவ்வேறு பரிமாணங்களை எடுக்கத் தொடங்கியிருக்கின்றன.

குறிப்பாக, பிரதேசவாதம் என்பதும் முஸ்லிம்களிடையே அரசியல்வாதிகளால் விதைக்கப்பட்டுள்ளதுடன், அரசியல் ரீதியான பிளவுகள் வலுவடைந்திருக்கின்றன.
சுமார், 50 வருடங்களாக உரிமைக்காகப் போராடி, அதில் 30 வருடங்கள் ஆயுதப் போராட்டம் மேற்கொண்ட தமிழ்ச் சமூகம், கடைசியில் வந்து நிற்பது, ஜனநாயக நீரோட்ட அரசியல் வழிமுறைக்கே என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்றும் அது பிழையான வழியில் பயணிக்கின்றது என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், கூட்டமைப்புக்குள் சில அணிசார் பிளவுகள் தோற்றம் பெற்றிருந்தாலும், இந்த ஒன்றரை தசாப்தங்களாகக் கூட்டமைப்பு, தமிழர் அரசியலில் நிகழ்த்தியவைகள் ஒன்றுமில்லை என்றாகி விடாது.

எதுஎப்படியோ, அஷ்ரபின் மறைவுக்குப் பிறகு, பல முஸ்லிம் கட்சிகள் தோற்றம் பெற்றன. ஊர்வாத அரசியலும், பணம் சம்பாதிக்கும் சுயலாப அரசியலும் வியாபித்தது. ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியலே பெரிய பண்பியல் மாற்றத்துக்கு உள்ளானது.

பின்னர் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளுக்கும் மு.காவுக்கும் இடையில், பெரும் அரசியல் பனிப்போர், போட்டி அரசியல் போன்றவை தோற்றம்பெற்றன. ஒரே வகையான பொருட்களை வெவ்வேறு ‘லேபல்’களில் விற்பனை செய்யும் முதலாளிகள் மாதிரி, ஒரே விதமான அரசியலை, வேறுபட்ட அணுகுமுறைகளோடு முஸ்லிம் கட்சிகள் முன்வைத்துக் கொண்டிருந்தன; கொண்டிருக்கின்றன.

இது பிரித்தாளும் உத்திக்கு இரையாக இட்டுச் சென்றது. பிரித்தலும் ஆளுதலுமான வியூகம், முஸ்லிம் சமூகம் அரசியல் ரீதியாகத் துண்டாடப்படுவதற்கு காரணமாகியது என்பதை யாரும் மறுக்க முடியாது.

‘அதாவுல்லா போனால், ரிஷாட் இருக்கின்றார் தானே; ரிஷாட் போனால் ஹக்கீமை வைத்துச் சாதிக்கலாம்’ என்ற எண்ணம் பெருந்தேசியச் சக்திகளுக்கு ஏற்பட்டது. முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இடையில், ‘யார் பெரிய ஆள்’ என்ற போட்டி நிலவியதால், இந்த எண்ணம் வெற்றியளித்தது.

ஆனால், முஸ்லிம் மக்களுக்கு இது இழப்புகளையே கொண்டு வந்தது என்பது கண்கூடு. அரசியல்வாதிகள் பிரிந்ததால், சமூகத்தில் ஒற்றுமை சிதைவடைந்தது. எனவே, ஒற்றுமை எனும் பலத்தைப் பயன்படுத்தி, எந்த உரிமையையும் முஸ்லிம்களால் பெற முடியாமல் போனது. இவ்வாறு, முஸ்லிம்கள் இழந்தவற்றின் பட்டியல் நீளமானது. அது இன்றுவரையும் நீண்டுகொண்டுதான் இருக்கின்றது.

ஆயுதப் போராட்டத்தின் பக்கவிளைவாக, முஸ்லிம்களுக்குப் பல இழப்புகள் ஏற்பட்டன. ஒரு தனியான தேசிய இனமும் இரண்டாவது சிறுபான்மை இனமுமான முஸ்லிம்கள், சமாதான உடன்படிக்கைகளில் ஒரு சிறு குழுப் போல குறிப்பிடப்பட்டனர்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஹலால், ஹபாயா பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டன. பள்ளிவாசல்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகின. பேருவளை மற்றும் அளுத்கமையில் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதுடன், இன்றுவரை அதற்கான இழப்பீடுகளோ நீதி நிலைநாட்டல்களோ மேற்கொள்ளப்படவும் இல்லை.

மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை, முஸ்லிம்கள் மனம்விரும்பி நிலைநாட்டினர். ஆனால், அதற்குப் பிறகும் இனவாத முன்னெடுப்புகளும் கிந்தோட்ட போன்ற அசம்பாவிதங்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. முஸ்லிம் கட்சிகளை நடாத்திக் கொண்டிருப்பவர்களும் தங்களது கையாலாகாத்தனத்தின் மீது பயணித்துக் கொண்டே இருக்கின்றனர்.

இதனால், மிக அண்மைக்காலத்தில் 20ஆவது திருத்தம், உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்திருத்தம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்திருத்தம், வடக்கு-கிழக்கை இணைக்கும் முஸ்தீபு, தேர்தல் முறைமை மாற்றத்தில் முஸ்லிம்களின் விருப்பு வெறுப்புகள் கருத்தில் கொள்ளப்படாமை உட்பட, மிக முக்கியமாக, உத்தேச அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை, முஸ்லிம்களின் அபிலாஷைகளை உள்ளடக்கியதாகத் தயாரிக்கப்படவில்லை.

இப்படி, அநேகமானவற்றை முஸ்லிம்கள் இழந்து கொண்டிருப்பதற்கு முஸ்லிம் கட்சிகளிடையே நிலவும் பிளவும், ஒரு முக்கிய காரணம் என்பதே நீண்டகால அவதானிப்பாகும். எனவே, முஸ்லிம் கட்சிகள், தமிழ்க் கட்சிகளைப் போல, ஒன்றுபட்டு ஒரு கூட்டமைப்பாக உருவாக வேண்டும் என்ற கோரிக்கைகள், கடந்த பல வருடங்களாக, முஸ்லிம் சிவில் சமூகத்திடமிருந்தும் ஊடகவியலாளர்களிடம் இருந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மு.காவில் இருந்து ஹசன் அலி, பஷீர் சேகுதாவூத் அணியினர் பிரிந்த பின்னர், இதற்கு ஏதுவான ஒரு களம் உருவானது என்றுதான் கூற வேண்டும். இந்தக் களநிலையைப் பயன்படுத்தி, ஒரு முஸ்லிம் கூட்டமைப்பை நிறுவுவதற்கு ஹசன் அலி தலைமையில் இயங்கிய, தூய முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினரும், ஓரிரு முஸ்லிம் ஊடகவியலாளர்களும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். முஸ்லிம் கட்சிகள் எல்லாவற்றுக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டதுடன், பச்சை சமிக்ஞை காட்டிய சில தரப்பினருடன், பேச்சு வார்த்தைகளும் நடாத்தப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், முஸ்லிம் கூட்டமைப்பில் நம்பிக்கை வைக்கவில்லை. அத்துடன், அது தனக்கு எதிரானவர்களின் கூட்டு என்ற நிலைப்பாட்டிலும் இருந்தார். எனவே, மு.காவுடன் எவ்வித நேரடிப் பேச்சுகளும் இடம்பெறவில்லை.

ஆனால், ஆரம்பத்ல் இருந்து மக்கள் காங்கிரஸ், ஹசன் அலி அணியினருக்கு இடையிலான பேச்சுகள் முன்னேற்றகரமானதாக அமைந்திருந்தன. அ.இ.ம.கா தலைவர், பல விட்டுக் கொடுப்புகளைச் செய்யத் தயாராக இருந்தார். அவருக்கு அதில் அரசியல் ஆதாயமும் இருந்தது.

இந்த அடிப்படையில், முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பான ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு’ இம்மாதம் 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஹசன் அலி மற்றும் பஷீர் அணியினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு மற்றும் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆகியன ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் கூட்டமைப்பாக இணைந்து செயற்படவுள்ளதாக, கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், கூட்டாக இரு கட்சிகளும் உத்தியோகபூர்வமாக அறிவித்தன.

பின்வரும் 12 முக்கிய விடயங்களைத் தமது கொள்கைப் பிரகடனமாக முன்வைத்தே, இக் கூட்டமைப்பு பிரகடனம் செய்யப்பட்டிருக்கின்றது.

01. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் இறைமையைப் பாதுகாப்பதற்கும் ஐக்கிய இலங்கைக்குள் இனங்களுக்கிடையில் சமத்துவத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்கும் சகல இன மக்களோடும் இணைந்து முன்னோடிகளாகச் செயற்படுதல்;

02. சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் நாட்டின் அரச கரும மொழிகளாகத் தொடர்ந்தும் பேணப்படுவதோடு, நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் அவரது சொந்த மொழியில் சகல கருமங்களையும் ஆற்றுவதை உறுதிப்படுத்தச் செயற்படுதல்;

03. இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ் இனங்களைப் போல, முஸ்லிம்களும் ஒரு தனியான தேசிய இனம் என்பதோடு அவர்களுடைய சுயநிர்ணத்தையும் உறுதிப்படுத்தச் செயற்படல்;

04. வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாகவே இருத்தல் வேண்டும் என்பதுடன், கிழக்கு மாகாணத்தை வேறு எந்தவொரு மாகாணத்துடனும் முழுமையாகவோ, பகுதியாகவோ, நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ இணைக்கக் கூடாது. அத்தோடு 1960 முதற்கொண்டு, திட்டமிட்டுக் கிழக்கு மாகாணத்தோடு இணைக்கப்பட்ட பிரதேசங்களை, கிழக்கு மாகாணத்திலிருந்து நீக்கிவிடுவதற்காக செயற்படுதல்;

05. அதிகாரப் பகிர்வு என்பது மாகாண சபைகளோடு மட்டுப்படுத்தப்படாமல், உள்ளூராட்சி சபைகளும் அதிகார வலுவுள்ளதாக மாற்றப்படுவதுடன், அதிகார அலகின் ஆள்புலத்துக்கு உட்பட்ட எந்தவொரு சிறுபான்மை இனத்துக்கும் எதிரான அத்துமீறலைத் தடுக்கக் கூடிய பொறிமுறையொன்றை ஸ்தாபிக்கச் செயற்படல்;

06. நாட்டில் காணப்படுகின்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை, தொடர்ந்தும் பேணப்படுவதோடு, நேரடியாக மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் பொறிமுறை மாற்றங்களுக்கு உட்படாதிருப்பதற்காகச் செயற்படல்;

07. தற்போது நடைமுறையிலுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முறைமை தொடர்ந்தும் பேணப்படுவதோடு, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விகிதாசாரத் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவரப்படும் முயற்சிகளுக்கு எதிராகச் செயற்படுவதோடு, அண்மைக் காலத்தில் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களால் சிறுபான்மை சமூகங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகளை நிவர்த்திக்கப் பாடுபடல்;

08. நாட்டின் சகல மதப் பிரிவினரினதும் சுதந்திரமான மதவழிபாட்டுக்கான உரிமை உறுதிப்படுத்தப்படுவதோடு, மத வழிபாடுகளில் ஏற்படுத்தப்படும் தடைகளுக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளத்தக்க வலுவான சட்ட ஏற்பாடுகளை உருவாக்க அரசாங்கத்தை வலியுறுத்திச் செயற்படுதல்;

09. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பலவந்தமாகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீள மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதுடன், முஸ்லிம்களின் பூர்வீக காணிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகச் செயற்படுவதோடு, பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்தச் செயற்படுதல்;

10. அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்போது, மாவட்ட ரீதியாக இன விகிதாசாரத்தைப் பேணும் வகையில், தற்போது நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளைத் திருத்தம் செய்வதுடன், அபிவிருத்திச் செயற்பாடுகளில் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால், சமத்துவம் பேணப்படுவதை உறுதிசெய்யப் பாடுபடல்;

11. நாட்டின் நிர்வாகச் செயற்பாடுகளில், மொழி ரீதியான சிரமங்களை எதிர்கொண்டுள்ள அம்பாறை மாவட்டத்தில், தமிழ்பேசும் சமூகத்தவர் பெரும்பான்மையாக வாழ்கின்ற கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய தேர்தல்த் தொகுதிகளை உள்ளடக்கியும், குறித்த மூன்று தொகுதிகளில் வாழ்கின்ற மக்களின் விகிதாசாரத்துக்குத் தேவையான காணி நிலத்தைக் கொண்டதுமான நாட்டின் 26 ஆவது நிர்வாக மாவட்டத்தை ஸ்தாபிக்கச் செயற்படுதல்;

12. அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர் உள்ளடங்கலாக, நாட்டின் சகல மட்டங்களிலும் காணப்படும் உயர் பதவிகளில், இன விகிதாசாரம் பேணப்படுவதை உறுதிப்படுத்த அரசாங்கத்தை வலியுறுத்திச் செயற்படுதல். சரிபிழைகள், குறைநிறைகள், விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் அப்பால், முஸ்லிம்களின் கனவு நனவாகியிருக்கின்றது என்றுதான் கூறவேண்டும்.

மேலும், இக்கூட்டமைப்பு இப்போதுதான் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது என்றபடியால், இப்போதிலிருந்து அதன்மீது கவனமும் அவதானமும் குவிக்கப்படுகின்றது.

அத்துடன், அதன் உருவாக்கத்தின் அடிப்படைக்கூறு, அதிலுள்ளவர்களின் கருத்தியல்கள், கூட்டமைப்பு வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் பற்றியெல்லாம் நிறையவே எழுதவும் பேசவும் வேண்டியிருக்கின்றது.

ஆனால், இது அரசியல் இலாபங்களுக்கு அப்பால் நின்று முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்காகப் போராடுவதற்கான ஒரு கூட்டமைப்பாக இருக்க வேண்டும்.
அதைவிடுத்து, வழக்கமான எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு கருவியாக அல்லது தேர்தல்க் கூட்டாக இது அமையுமாயின், முஸ்லிம் கூட்டமைப்பு வெற்றியளிக்க மாட்டாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இயக்குனராக அவதாரம் எடுக்கும் அரவிந்த் சாமி..!!
Next post பலூன் படத்தில் ஜெய் ஹீரோ இல்லை: இயக்குனர் சினிஷ்..!!