சர்வகட்சிக் கூட்டத்துக்கான அழைப்பு..!! (கட்டுரை)

Read Time:16 Minute, 42 Second

பிராந்திய சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வொன்றை சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்க இணங்கிய ஜே.ஆர், 1983 நவம்பர் 30ஆம் திகதி மாலை, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை மீண்டும் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, பார்த்தசாரதியோடு ஜே.ஆர் இணங்கிய விடயதானங்கள் பற்றி, ஜே.ஆரும் இந்திரா காந்தியும் ஆராய்ந்தனர்.

ஜே.ஆர் பிராந்திய சபைகளை ஏற்றுக்கொண்டதை வரவேற்ற இந்திரா காந்தி, வடக்கு-கிழக்கு இணைப்புக்கும் அவர் இணங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால், ஜே.ஆர் அதை ஏற்பதாக இல்லை. “முஸ்லிம்களும் சிங்களவர்களும் கிழக்கிலே இணைந்தால், அது பெரும்பான்மையாகும். எனவே, வடக்கு-கிழக்கு இணையும்போது, அவர்களது எதிர்காலம் பற்றிய கவலைகள் உண்டு” என்று ஜே.ஆர் கூறினார்.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், ஜே.ஆர் கூறியது, 1981ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களின்படி சரியானதே.

ஆனால், திருக்கோணமலை, மட்டக்களப்பு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் விடத் தமிழர்களே பெரும்பான்மையாக இருந்தார்கள். இதனால்தான், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் கூட, “அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில், முஸ்லிம்கள் விரும்பினால், அவர்கள் தனித்ததொரு தீர்வை எதிர்காலத்தில் முன்னெடுக்கலாம்” என்று பார்த்தசாரதியிடம் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், 1983ஆம் ஆண்டில் ஜே.ஆர், கிழக்கிலே வாழ்ந்த தமிழ் பேசும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் மக்களை, சிங்களவர்களோடு சேர்த்து அடையாளப் படுத்தியமை, சற்றுப் புதுமையான அணுகுமுறை. ஆனால், இது ஜே.ஆரினது மட்டுமல்ல, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் அணுகுமுறையை அடிக்கோடிட்டுக்காட்டி நிற்கிறது.

வடக்கு, கிழக்கு இணைப்பைத் தடுக்க வேண்டுமென்றால், தமிழ்-முஸ்லிம் மக்கள் “தமிழ் பேசும் மக்களாக” ஒன்றிணைவது தடுக்கப்பட வேண்டும். இதுவும் ஒரு வகை பிரித்தாளும் தந்திரமே.

ஒரு தந்திரம் வெற்றிபெற, தந்திரம் செய்பவனது திறமையைப் போலவே, தந்திரத்துக்கு ஆட்படுபவனின் பலவீனமும் முக்கிய காரணமாக அமைகிறது.

இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில், இந்த விடயம் மிகச் சிக்கலானதும் முக்கியமானதுமாகும்.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோடு பயணித்த எம்.எச்.எம்.அஷ்ரப், கூட்டணியுடனான பயணத்தை முடித்துக் கொண்டமை ஏன், முஸ்லிம்களின் தனி வழி அரசியலின் ஆரம்பம் என்ன, அதன் நோக்கம் என்ன, இலங்கை முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் என்ன என்பது, தனித்து ஆராயப்பட வேண்டியதொன்று.

ஆனால், இந்த இடத்தில் நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மேடையொன்றில், “அமிர்தலிங்கம், தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டாலும், அஷ்ரப், தமிழீழக் கோரிக்கையை கைவிட மாட்டான்” என்று
எம்.எச்.எம்.அஷ்ரப், உணர்ச்சிவசப் பேசியிருந்தார்.

தமிழ் இளைஞரின் ஆயுதக் குழுக்கள் உருவாகிய கால கட்டங்களில், பல தமிழ் பேசும் முஸ்லிம் இளைஞர்களும் தனிநாட்டுக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், இந்த நிலை எப்படி மாறியது?

தமிழ்த் தேசியம் என்பதிலிருந்து, முஸ்லிம் தேசியம் எப்படிப் பிரிந்தது என்ற வரலாறும் கட்டாயம் ஆராயப்பட வேண்டியது. அதை உணரும் போதுதான், இனப்பிரச்சினையின் வரலாற்றை நாம் முழுமையாக விளங்கிக் கொள்ள முடியும்.

நிற்க, பிராந்திய சபைகளைத்தான் ஏற்றுக் கொள்ளச் சம்மதிப்பதாகத் தெரிவித்த ஜே.ஆர், “வேண்டுமானால் வடக்கு, கிழக்கு இணைப்பைத் தமிழ்த் தலைமைகள் சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிக்கட்டும்; அதற்கு நான் தடையில்லை” என்று தெரிவித்தார்.

இந்திரா காந்தியைப் பொறுத்தவரை, இதை ஒரு சிறந்த முதற்படியாகப் பார்த்தார். ஆகவே “இறுதித் தீர்வுக்கு இது ஒரு முதற்படியாக இருக்கட்டும்” என்று ஜே.ஆரிடம் சொன்னவர், “வடக்கு, கிழக்கு இணைப்பில்லாத தீர்வை அமிர்தலிங்கம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என்பதையும் எடுத்துரைத்தார்.

ஜே.ஆரின் ஊடக அறிக்கை

1983 டிசெம்பர் முதலாம் திகதி ஜனாதிபதி ஜே.ஆர், இலங்கை திரும்பினார். அதேதினம், ஜே.ஆர், ஊடகங்களுக்கு விடுத்திருந்த அறிக்கையில்,
‘பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள, புதுடெல்லி சென்றிருந்தபோது, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன், இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிக் கலந்துரையாடும் வாய்ப்புக் கிட்டியது. நான், இந்தியா செல்லும் முன்பு இந்த விடயம் பற்றி, இலங்கையிலுள்ள பல்வேறு அரசியல் தலைவர்களுடனும் உரையாற்றியிருந்தேன். அத்தோடு, இந்தியப் பிரதமரின் விசேட தூதுவராக வந்த கோபால்சாமி பார்த்தசாரதியும் இந்த விடயம் பற்றி, என்னுடன் இலங்கையிலும் இந்தியாவிலும் பேசியிருந்தார்.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டால் மட்டுமே, சாத்தியமான தீர்வுத் திட்டங்கள் பற்றி என்னால், அவர்களோடு பேச முடியும் என்பதை நான், அவர்களிடம் தெட்டத்தௌிவாகச் சொல்லியிருந்ததை இந்த இடத்தில் ஞாபகப்படுத்துகிறேன்.

எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது, தமிழர் பிரச்சினைக்கு, அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் தீர்வொன்று எட்டப்படுமானால், தமது தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடத் தயாராக இருக்கிறது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய அரசாங்கமானது, பிரிவினைக்கு எதிரானது என்பதோடு இலங்கையின் இறைமை, சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாட்டை ஆதரிக்கிறது என்று தெட்டத்தௌிவாகச் சொன்னமையும் எனக்கு மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்தியப் பிரதமரின் விசேட தூதுவர் பார்த்தசாரதி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நவம்பர் மாதம் எம்மோடு கலந்துரையாடிப் பெற்ற முன்மொழிவுகளுக்கான பதிலை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிடமிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறார்.

அதன்பின்னர், நான் இந்த முன்மொழிவுகளை ஆராய, சர்வகட்சி மாநாடொன்றை நடத்த முன்மொழிகிறேன்’ என்று அந்த ஊடக அறிக்கை அமைந்திருந்தது.

சர்வகட்சிக் கூட்டத்துக்கான அழைப்பு

இதன் சுருக்கம் இதுதான். முதலாவதாக ஒரு சர்வகட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, தீர்வு முன்மொழிவுகள் தொடர்பாக, சர்வ கட்சி மாநாடு ஒன்று நடத்தும் திட்டம் பற்றி ஆராயப்படும். சர்வகட்சி மாநாடு நடத்த எதற்கு சர்வகட்சிக் கூட்டம்? நேரடியாகவே சர்வகட்சி மாநாட்டை நடத்தலாமே? என்ற ஐயம் எழலாம்.

ஜே.ஆர் தலைமையிலான அமைச்சரவையானது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன், அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடும் வரை, பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்று தீர்மானித்திருந்தது.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோ, தாம் ஏற்றுக்கொள்ளத் தக்க தீர்வொன்று எட்டப்படும் வரை, தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடத் தயாராக இல்லை.
இதேவேளை இந்தியா, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்ற அழுத்தத்தை ஜே.ஆருக்குத் தந்திருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைத் தானாக அழைப்பதை ஜே.ஆர் விரும்பவில்லை.

அதனால்தான், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அழைப்பது தொடர்பில், சர்வகட்சிக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் முடிவெடுக்கட்டும் என்று ஜே.ஆர் கூறியிருந்தார். ஆகவே, முதலில் நடக்கவிருக்கும் சர்வகட்சிக் கூட்டத்தின் நோக்கம் தீர்வுத்திட்டம் தொடர்பில் சர்வகட்சி மாநாடொன்று நடத்தவது பற்றியும், அதில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி கலந்துகொள்வது பற்றியும் தீர்மானிப்பதாகும்.

ஆகவே, அந்த முடிவை சர்வகட்சிகளும் சேர்ந்தெடுத்தால், அது ஜே.ஆரினதோ, ஐக்கிய தேசியக் கட்சியினதோ முடிவாகாது என்பதுடன், அந்த முடிவிலிருந்து ஜே.ஆர், தன்னை எதிர்காலத்தில் விலக்கிக் கொள்ளவும் முடியும். ஆகவேதான், ஜே.ஆர் இந்தத் தந்திரோபாயத்தைக் கையாண்டார் என்பார்கள்.

எது எவ்வாறாயினும், ஜே.ஆர், 1983 டிசெம்பர் 21ஆம் திகதி சர்வகட்சிக் கூட்டத்துக்கான அழைப்பை அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியிருந்தார். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி
(ஜே.வி.பி) மற்றும் நவ சமசமாஜக் கட்சி ஆகிய தடைசெய்யப்பட்ட காரணத்தின் நிமித்தம் அழைக்கப்படவில்லை.

அமிர்தலிங்கத்தின் நிலை

மறுபுறத்தில், ஜே.ஆருடனான சந்திப்புக்குப் பின்னர், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்த இந்திரா காந்தி, ஜே.ஆர் இணங்கியுள்ள தீர்வுக்கு அவர்களையும் இணங்குமாறு கேட்டுக்கொண்டார்.

தீர்வுக்கு இணங்குவதாகத் தெரிவித்த அமிர்தலிங்கம், “ஆனால், வடக்கு-கிழக்கு இணைப்பில்லாது, என்னால் மக்கள் முன் செல்ல முடியாது” என்று இந்திரா காந்தியிடம் தெரிவித்தார். இந்தச் சந்திப்பை அடுத்து, அமிர்தலிங்கம் தலைமையிலான தலைவர்கள் மீண்டும் சென்னை திரும்பினர்.

சென்னை திரும்பியவர்கள், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களிடமிருந்து கடும் எதிர்ப்பைச் சந்தித்தனர். எம்.ஜி.ஆர், கருணாநிதி உள்ளிட்ட தமிழகக் கட்சிகளைச் சந்தித்து, தீர்வுத்திட்ட முன்மொழிவுகளைப் பகிர்ந்து கொண்ட அமிர்தலிங்கம் குழுவினர், தொடர்ந்து, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களையும் தமிழ்நாட்டில் சந்தித்து, தாம் இணங்கிய தீர்வுத் திட்ட முன்மொழிவுகளையும், டெல்லி சந்திப்பு விவரங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

ஆனால், அவர்கள் அமிர்தலிங்கத்தின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. குறித்த அதிகாரப் பகிர்வுத் திட்டம் குறித்து அவர்கள் தமது அதிருப்தியை வௌிப்படுத்தினர். குறிப்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அமிர்தலிங்கம் இதற்கு இணங்கியதைக் கடுமையாக எதிர்த்தார்.

தமிழ் மக்கள் வழங்கிய மக்களாணையை மீற அமிர்தலிங்கத்துக்கு உரிமையில்லை என்பது பிரபாகரனது நிலைப்பாடாக இருந்தது. தான், இதற்கு இணங்கியதற்குச் சில காரணங்களை அமிர்தலிங்கம் சொன்னார்.

முதலாவதாக, இந்திரா காந்தியின் அழுத்தம். இரண்டாவது, இது தமிழர்களின் நியாயமான உரிமைகளைச் சிங்களத் தலைமைகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை உலகுக்கு காட்ட, இது சந்தர்ப்பமாக அமையும், அதன்படி எமது ஆயுதப் போராட்டத்தையும் நியாயப்படுத்த முடியும்,

அடுத்ததாக, எமது நியாயமான கோரிக்கைகளை எடுத்துரைக்க, சர்வகட்சி மாநாடு ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்று அமிர்தலிங்கம் சில நியாயங்களை முன்வைத்தார். தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை, இந்தக் காரணங்கள் திருப்தி செய்யவில்லை.

ஜே.ஆர் காலங்கடத்தவும், இந்தக் காலப்பகுதியில் தனது இராணுவத்தைப் பலப்படுத்தவும் அதன் பின்னர், தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆயுதம் கொண்டு சிதைக்கவுமே திட்டமிட்டுள்ளாரென, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், குறிப்பாக விடுதலைப் புலிகள் கருதினர். அமிர்தலிங்கம் எதிர்பார்த்தது போலவே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது.

ஆனால், அமிர்தலிங்கம் வேறு எதைச் செய்திருக்க முடியும் என்ற கேள்வி இங்கு முக்கியம். எங்களுக்குத் தனிநாடு வேண்டும் என்பதில் அமிர்தலிங்கம் விடாப்பிடியாக நின்றிருந்தால், அது இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றியிருக்குமா?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் வாழ்க்கைக்கு அவசியமானது: திரிஷா..!!
Next post கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி..!!