கைகூடாத கூட்டு..!! (கட்டுரை)

Read Time:20 Minute, 20 Second

ஏனைய காலங்களை விட, தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளிடையே விநோதமான ஒற்றுமைகளும் பகைமை பாராட்டல்களும் ஏற்பட்டு விடுவது வழக்கமானது.

மக்களைப் பேய்க்காட்டி, ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக ‘ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி உறவுபோல’ யாருடனும் கூட்டு வைத்துக் கொள்வதற்கு, சிறுபான்மைக் கட்சிகள் மட்டுமல்ல பெரும்பான்மைக் கட்சிகளும் பின்னிற்பதில்லை.
‘வேற்றுமையில் ஒற்றுமை காணுதல்’ என்ற கோட்பாடு, அரசியலில், தேர்தல் காலத்தில் மட்டுமே அதிகமதிகம் பரீட்சார்த்தம் செய்யப்படுகின்றது.

அந்த வகையில் வடமாகாணத்தில், மூன்று நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தில், பிரதான தமிழ்க் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு பிரதான முஸ்லிம் கட்சி எடுத்த முயற்சி, கடைசித் தறுவாயில் கைகூடாமல் போயிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவதால் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாமேயொழிய, இதனால் தமிழ் – முஸ்லிம் உறவு வலுப்பெறும் என்று சொல்வதற்கில்லை.

என்றாலும், இவ்வாறு இணைந்து போட்டியிடும் முயற்சி, சிறுபான்மையினங்களின் அரசியல் பெருவெளியில் சில புரிந்துணர்வுகளுக்கு வித்திடும் வாய்ப்பிருந்தது. ஆனால், அது சாத்தியமற்றதாகப் போயிருக்கின்றது என்பது சந்தோசமான செய்தியல்ல.

இது தொடர்பாக, இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணப்படுவதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்த போதும், இது உண்மையிலேயே ஒரு தேர்தல் கூட்டுக்கான பேச்சுவார்த்தை என்பதாலும், இதில் அவரவரின் ‘இலாபநட்டக் கணக்கு’ கடுமையாகச் செல்வாக்குச் செலுத்தும் என்பதாலும் இப்பேச்சுகள், இன நல்லுறவை அடிப்படையாகக் கொண்டதாகவோ இதய சுத்தியானதாகவோ இருந்திருக்குமென்று கருதுவது கடினம்.

ஆற்றைக் கடப்பதற்கு அண்ணன் உதவுவான் என்று தம்பி கருதலாம். ஆனால், தம்பி உதவமாட்டான் என்று அண்ணன் கருத நிறையவே வாய்ப்பும் இருக்கிறது.

குறிப்பாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பீட்டளவில் அதீத ஈடுபாடு காட்டிய போதிலும், தமிழரசுக் கட்சியின் சில முக்கியஸ்தர்கள், இது விடயத்தில் விருப்பமற்று இருந்ததாகக் கூறப்படுகின்றது.

இதற்குக் காரணங்களும் இருக்கலாம். அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, தமிழரசுக் கட்சியோ, தமது ஆட்புல எல்லைகள் குறித்தும், அதில் தம்முடைய ஆளுகை குறித்தும் எப்போதும் விழிப்புடன் செயற்படுகின்றன.

எனவே, அதற்குள் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றார்கள் என்றபோதிலும் மு.காவுடன் இணைந்து கேட்பதால் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு அனுகூலம் கிடைக்காது என்று அவர்கள் கருதியிருக்கலாம்.

வடக்கில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வெற்றியில் பங்காளராகலாம் என்று மு.கா எண்ணினாலும், மு.காவுடன் இணைந்தாலேயே வெற்றி பெறலாம் என்ற நிலை தமிழரசுக் கட்சிக்கு இல்லை என்றும் கூற முடியும்.

இவ்வாறான பின்புலத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விசேட ஹெலிகொப்டர் மூலம், மு.கா செயலாளர் நிசாம் காரியப்பர் தலைமையில் மன்னார் சென்றிருந்த குழுவினர், அங்கு பேச்சுவார்த்தைகள் நடைபெறாத நிலையில், வெறுங்கையுடன் திரும்பி வந்தார்கள்.

இது ஒரு சிவப்பு சமிக்ஞை என்பதை உணர்ந்து கொண்ட மு.கா, தமிழரசுக் கட்சியுடன் கூட்டுச் சேரும் எண்ணத்தைக் கைவிட்டு, வடக்கில் உள்ள சில உள்ளூராட்சி சபைகளில் தனித்து போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் எப்போதும் நல்லுறவு இருந்து வந்திருக்கின்றது. சில காலத்துக்கு முன்னர் தமிழ்த் தேசியத்தின் நிலைப்பாடுகளுக்குச் சாதகமான நிலைப்பாடுகளை அல்லது த.தே.கூட்டமைப்பை மனங்குளிரச் செய்யும் நிலைப்பாடுகளை மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் எடுத்திருந்தார்.

வடக்கு – கிழக்கு இணைப்பு விடயத்தில், அவர் வெளிப்படுத்திய நிலைப்பாட்டை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இதனால், தமிழர்கள் மனம் மகிழ்ந்த போதும் மு.கா தலைவரின் நிலைப்பாடு முஸ்லிம் மக்களிடையேயும் முஸ்லிம் அரசியலிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ‘மு.கா தலைவர் விலை போய் விட்டார்’ என்று பேசுமளவுக்கு விமர்சனங்கள் தீவிரமடைந்தன.

இதனால் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, முஸ்லிம்களையும் சமாளிக்க வேண்டிய நிலைக்கு மு.கா தலைவர் தள்ளப்பட்டார் எனலாம்.

சில இடங்களில் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்துக்காகச் சற்றுத் தனது பிடியை இறுக்கிய போது, த.தே.கூட்டமைப்பு அரசியல்வாதிகள் சிலர் அதை விரும்பியிருக்கவில்லை என்று தகவல்கள் கசிந்திருந்தன.

மறுபக்கத்தில், மு.கா தலைவர் என்ற ஒரேயோர் அரசியல்வாதியை மட்டும் வைத்துக்கொண்டு, வடக்கு, கிழக்கில் தாம் நினைத்ததைச் செய்து விட முடியாது என்ற யதார்த்த நிலையையும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் உணர்ந்து கொண்டிருப்பார்கள் என்று அரசியல் நோக்கர்கள் அபிப்பிராயம் கொள்கின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே, வன்னியில் இணைந்து போட்டியிடும் முயற்சிகள் சாத்தியமற்றதாகி இருக்கின்றன.

வன்னியின் பல உள்ளூராட்சி சபைகளில், தமிழரசுக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸும் சேர்ந்து போட்டியிடப் போவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்ததையடுத்து, நவீன ஊடகங்கள் வாயிலாக மு.காவை நோக்கிப் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கோட்டையான இப்பிராந்தியத்தில், தனியே போட்டியிட்டு வெற்றிபெற முடியாது என்பதாலேயே மு.கா இவ்வாறான வியூகத்தை வகுத்துள்ளது என்றும் இது, வடக்கு, கிழக்கு இணைப்புக்கான ஒத்திகை என்றும் ஒரு தரப்பினர் கூறினார்கள்.

இது நல்லிணக்க முயற்சியின் ஆரம்பம் என்று ஒரு சிலர் கூறிய போதும், இல்லையில்லை தனியே போட்டியிட்டால் வெற்றிபெற முடியாது என்பதால் ரவூப் ஹக்கீம் இப்படியான ஒரு சாணக்கியத்தை கையாள்வதாகவும், ஏனைய இடங்களில் ஐ.தே.கட்சியின் வாக்குகளுக்குள் மறைந்துகொள்வது போன்ற ஓர் உத்தியே இதுவும் என்று மு.காவின் எதிர்த் தரப்பினர் கூறினார்கள். அதற்குக் காரணங்களும் இருந்திருக்கலாம்.

ஆனால், காரணங்கள் மற்றும் நியாயங்களுக்கு அப்பால் நின்று, இவ்விடயத்தை நோக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. அதாவது, தமிழர் அரசியலுக்கும் முஸ்லிம்களின் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. தமிழர் அரசியலில் கற்றுக் கொண்ட அறிவுடனும், அதனுடன் சங்கமித்துப் பயணிப்பது சிரமம் என்ற பட்டறிவுடனும்தான் முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியல் பரிணமித்தது.

ஆகையால், இவ்விரண்டு கட்சிகளும் தேர்தல் காலத்தில் சேர்ந்தியங்க எடுத்த முயற்சிகள் வரவேற்கத்தக்கவை என்பதுடன் கைகூடியிருக்க வேண்டியவையுமாகும்.

ஆனால், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியோடு உடன்பாடு கண்டு, வடமாகாணத்தில் இணைந்து செயற்பட்டு, அதன்மூலம் ந.தே.முன்னணிக்கு ஓர் உறுப்பினரையும் வழங்கிய த.தே.கூட்டமைப்பு, இம்முறை மு.கா இணைந்து போட்டியிடக் கோரிய போது, கிட்டத்தட்ட முகத்தைத் திருப்பிக் கொண்டுள்ளது என்பது கவனிப்புக்குரியது.

இதேசமயம், முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் வியூகங்கள் முஸ்லிம் மக்களிடையே வேறு விதமாக நோக்கப்படுவது பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் என்பது முஸ்லிம்களின் தாய்க்கட்சி என்று கூறப்படுவது; அது தனித்துவ அடையாள அரசியலை முன்மொழிந்தமையால் ஆகும். ஆனால், கடந்த 17 வருடங்களில் அக்கட்சி தனித்துவ அரசியலை வளர்ச்சியடையச் செய்துள்ளதா என்பதைக் களநிலைவரங்கள் எடுத்து விளக்குகின்றன.

மக்கள் நலனை முன்னிறுத்திய அரசியல் செய்யாமை, தலைமை மீதான விமர்சனங்கள், மரத்தின் முக்கிய கிளைகளை இழந்தமை, தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களைத் தவற விட்டமை, ஆளும் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் மூழ்கிப் போகின்றமை எனப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதைக் காணமுடிகின்றது. இதேபோன்ற விமர்சனங்கள் மற்றைய முஸ்லிம் கட்சிகள் மீதும் முன்வைக்கப்படுகின்றன.

இம்முறை உள்ளூராட்சித் தேர்தலைப் பொறுத்தமட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் போலவே முஸ்லிம் காங்கிரஸும் அதிக உறுப்பினர்களைப் பெற வேண்டும் என்பதற்காக அல்லது பெருந்தேசியக் கட்சியுடனான உறவுக்காகப் பல உள்ளூராட்சி சபைகளில் தமது சொந்தச் சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பைத் தவறவிட்டிருக்கின்றன.

குறிப்பாக, மு.கா பல இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் சவாரி செய்கின்றது. ஒரிரு சபைகளில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக ஐக்கிய முன்னணி என்ற சிறிய கட்சிகளில் போட்டியிடுகின்றது. கட்டுப்பணம் செலுத்த முடியாமல் போனமையால் சுயேட்சைக் குழுவிலும் ஓர் உள்ளுராட்சி சபைக்கு ஆட்களைக் களமிறக்கின்றது. விரல்விட்டு எண்ணக் கூடிய இடங்களிலேயே மரச் சின்னத்தில் தனித்துவமாகப் போட்டியிடுகின்றது.

முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒன்றுசேர வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம் மக்களிடையே மட்டுமன்றி மு.காவுக்குள் இருக்கின்ற பலரிடமும் இருந்து கொண்டிருக்கின்ற நிலையில், தற்போது உருவாக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கான கூட்டமைப்புக்குள் அங்கம் வகிப்பதில் உள்ள அனுகூலங்களை மறந்து பாதகங்களை மட்டுமே கருத்திற்கொண்டு, அதில் பங்காளியாக இணைந்து கொள்ள எவ்வித விருப்பத்தையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தெரிவிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

எந்த இணைவும் முஸ்லிம்களின் நலனை முன்னிறுத்திய இதயசுத்தியான முயற்சியாக இருக்குமென்றால் அது நல்ல முன்மாதிரி என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துகளும் இல்லை.

ஊவா மாகாண சபைத் தேர்தல் போன்ற ஓரிரு தருணங்களில் முஸ்லிம் காங்கிரஸ் இன்னுமொரு முஸ்லிம் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. அதுபோல இம்முறை முஸ்லிம் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்காவிட்டாலும் கூட்டமைப்புடனோ அல்லது வேறு முஸ்லிம் கட்சிகளுடனோ இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருக்கலாம்.
முஸ்லிம் பிரதேசங்களில் மு.கா வாக்கு வங்கிகளில் ஏற்பட்டுள்ளதாக தோன்றுகின்ற அதிர்வுகளின் தாக்கத்தை அதன்மூலம் தணியச் செய்திருக்கலாம்.அல்லது தனித்துப் போட்டியிட்டு தனித்துவ கோஷத்தை பயன்படுத்தியிருக்கலாம்.

ஆனால், எந்த முஸ்லிம் கட்சியுடனும் சேராமல் ஐ,தே.கட்சியில் இணைந்து போட்டியிடுகின்றமையும் சிறிய இரவல் கட்சிகளின் ஊடாக களமிறங்குகின்றமையும் பல செய்திகளைச் சொல்லாமல் சொல்கின்றது.

செயற்படு நிலையிலுள்ள இன்னுமொரு முஸ்லிம் கட்சியுடனான தேர்தல் கூட்டாக இணைந்து கொள்ளாத அதேநேரத்தில், தற்போது நிறுவப்பட்டுள்ள முஸ்லிம் கூட்டமைப்புடன் நிபந்தனை அடிப்படையிலாவது இணைந்து செயற்பட விரும்பாத மு.கா, வன்னியில் தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்தியங்க முனைகின்றது என்ற காரணத்தினாலேயே இது ஓர் அரசியல் தந்திரோபாயமாகப் பார்க்கப்படுகின்றது. எது எவ்வாறிருப்பினும் கடைசித் தறுவாயில் இவ்விடயம் கைகூடாமல் போயிருக்கின்றது என்பது மு.காவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவில் சறுக்கல் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

உண்மையாகத் தேர்தல் கூட்டுகளால் மாத்திரம் தமிழ் – முஸ்லிம் உறவும் நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்படப் போவதில்லை. பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிக்கும் அப்துல்லாவும் ஐங்கரனும் தமக்கிடையே பேசிக் கொண்டு, புரிந்துணர்வுக்கு வராத வரையில் என்னதான் அரசியல் தலைவர்கள் கூட்டுச் சேர்வதாலோ, வடக்கு – கிழக்கை இணைப்பதாலோ இனங்களுக்கு இடையில் உறவைக் கட்டியெழுப்ப முடியாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தலில் போட்டியிடும் விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முஸ்லிம் கட்சிகள் பின்பற்ற வேண்டும். தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களைப் பெருக்கிக் கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடனோ சுதந்திரக் கட்சியுடனோ இணைந்து போட்டியிடுவதைக் காண முடியாது. இதற்குக் காரணம், தனித்துவத்தை நிரூபிப்பதாகும்.
அதாவது தமிழ்க் கூட்டமைப்புக்கு (தமிழரசுக் கட்சி ஊடாக) ஆதரவளிக்கின்ற ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வாக்குகளையும் ஒரு கூடையில் சேகரித்து, அதைத் தமது பலமாகக் காட்டி, ஆட்சியாளர்களிடம் இருந்து தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் பேரம் பேசும் உத்தியையே, தமிழ்த் தரப்பு கையாள்கின்றது.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், முஸ்லிம்களின் வாக்குகளை ஒன்றாகத் திரட்டாமல், தனித்தனியான வியூகங்களை வகுக்கின்றன. அதிலும் குறிப்பாக சகோதர இனங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஐ.தே.கட்சி, சு.கட்சி மற்றும் தமிழரசுக் கட்சியையும் நாடிச் செல்கின்ற ஒரு நிலைமை, முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலுக்கு ஒவ்வாத ஒரு பண்பியல்பாகும்.

எத்தனை கூட்டுகள் உருவானாலும், உருவாகாவிட்டாலும் முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே அரசியல் ரீதியாக ஒற்றுமைப்படாதவரை, முஸ்லிம் கட்சிகளையும் முஸ்லிம் அரசியலையும் பெருந்தேசியக் கட்சிகள் கிள்ளுக்கீரையாகவே பயன்படுத்துவார்கள் என்பதுடன், சிறுபான்மை தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகளை ஒரு பொருட்டாகவே கணக்கெடுக்க மாட்டா என்ற யதார்த்தத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டாக்டர் பட்டமளிப்பு விழா: மனமுடைந்த பிரியங்கா சோப்ரா..!!
Next post ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி..!!