எனக்கு ஆதரவு தெரிவிக்க அநாகரீகமாக நடக்க வேண்டாம்: மம்முட்டி..!!
கேரளாவில் நடிகர், நடிகைகள் சர்ச்சையில் சிக்கி தவிப்பது சமீபத்தில் தொடர் கதையாக உள்ளது. ஓடும் காரில் நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
அதன்பிறகு புதுச்சேரியில் போலி முகவரி ஆவணம் கொடுத்து சொகுசு கார்களை பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலாபால், நடிகர்கள் சுரேஷ் கோபி எம்.பி., பகத்பாசில் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது நடிகை பார்வதிக்கு சமூக வலைதளங்களில் ஆபாசமாக மிரட்டல் விடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ளது.
திருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற பிரபல நடிகை பார்வதி, நடிகர் மம்முட்டி நடித்த கசாபா மலையாள படத்தில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் வசனங்கள் இடம்பெற்றிருப்பதாகவும், அதை மம்முட்டியே பேசி இருப்பது வேதனை அளிப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நடிகை பார்வதியை குறிவைத்து சமூக வலைதளங்களில் கடுமையான கருத்துக்களை மம்முட்டி ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள். மிகவும் ஆபாசமான முறையில் அரங்கேறி வரும் இந்த இணையதள தாக்குதல் பற்றி நடிகை பார்வதி கேரள போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் செய்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சர்ச்சைகள் பெரிய அளவில் கிளம்பி உள்ள நிலையில் முதல் முறையாக நடிகர் மம்முட்டி இது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். ஆன்லைன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மம்முட்டி கூறியதாவது:-
நான் தற்போது நிலவி வரும் கசாபா பட சர்ச்சைக்குள் நுழைய விருப்பவில்லை. தற்போது நமக்கு தேவை அர்த்தமுள்ள விவாதம் தான். இந்த பிரச்சினை எழுந்த உடனேயே நான் நடிகை பார்வதியை தொடர்பு கொண்டு அவரிடம் பேசி ஆறுதல் கூறினேன். நம்மைப் போன்றவர்கள் இது போல விமர்சனங்களை எதிர்கொள்ள தான் வேண்டும் என்று அவரிடம் கூறினேன். எனக்கு ஆதரவு தெரிவிப்பதாக இது போன்று அநாகரீகமாக யாரும் நடந்து கொள்ள வேண்டாம். நான் வெளிநாட்டில் இருந்ததால் இந்த சர்ச்சை பற்றி உடனே பதில் அளிக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating