போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்கவேண்டும் முஸ்லிம்கள் கோரிக்கை

Read Time:5 Minute, 3 Second

Pap-Rom.jpgமத நல்லிணக்கத்தை வலியுறுத்தி போப் ஆண்டவர் பேசிய பேச்சில் முஸ்லிம்கள் பற்றி கூறிய ஒரு வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம்கள் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரி உள்ளனர்.
போப் ஆண்டவர் பெனடிக்ட் கடந்த செவ்வாய்க்கிழமை தன் சொந்த நாடான ஜெர்மனிக்கு சென்றார். அங்கு பவேரியாவில் உள்ள ரெஜின்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் அவர் மாணவர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் இஸ்லாம் மதத்தைப் பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த நிகழ்ச்சியில் போப் ஆண்டவர் பேசும்போது 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பைசாடின் பேரரசர் மனுவல் 2-ம் பாலாயியோலோகஸ் முஸ்லிம் மதத்தை பற்றிக்கூறிய கருத்தை மேற்கோள் காட்டி பேசினார். அந்த பேரரசர், முஸ்லிம் மதம், வாள் முனையில் தங்கள் கொள்கையை பரப்பியது என்று கூறியதை மேற்கோள் காட்டிப்பேசிய போப் ஆண்டவர் முஸ்லிம் மதத்தின் புனிதப்போரை கண்டித்து சில கருத்துக்களை கூறினார். இதற்கு உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

பாகிஸ்தானில்

இஸ்லாமிய நாடுகள் போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரி உள்ளன. பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் போப் ஆண்டவரின் விமர்சனத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

போப் ஆண்டவரின் இந்த விமர்சனம், முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி உள்ளது. இது ஐ.நா.சபையின் தீர்மானத்துக்கு எதிரானது. உலகில் உள்ள பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் இடையே உள்ள நல்லிணக்கத்தை பேணி பாதுகாக்க அவர் தனது விமர்சனங்களை திரும்பப் பெறவேண்டும் இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது. இந்த தீர்மானம் பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பிரான்சு நாட்டில்

பிரான்சு நாட்டு முஸ்லிம் மத கவுன்சில் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்தோனேசிய நாட்டின் முஜாஹிதீன் கவுன்சில், இந்தோனேஷியாவின் மிகப்பெரிய இஸ்லாமிய அமைப்பான முகம்மதியா ஆகிய அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன. போப் ஆண்டவர் இஸ்லாத்தையும், புனிதப்போரையும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என்று அந்த அமைப்புகள் கூறி உள்ளன.

துருக்கி நாட்டின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள மத விவகார இயக்குநரகம் போப்பின் பேச்சு முழுவதும் பகைமையும், விரோதமும் நிறைந்து இருந்தன என்று குறிப்பிட்டு உள்ளது. அவருடைய பேச்சு வெறுக்கத்தக்கதாகவும், பாரபட்சமானதாகவும் இருந்தது என்றும் குறிப்பிட்டு உள்ளது.

மன்னிப்பு கேட்கவேண்டும்.

குவைத் நாட்டின் இஸ்லாமிய விவகாரத்துறை அதிகாரிகள் போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரினார்கள்.

எகிப்து நாட்டின் முஸ்லிம் அமைப்பு ஒன்று போப் பேசியதை திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் இஸ்லாமிய நாடுகள் வாடிகன் நாட்டு உடன் உள்ள உறவை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்று கோரி உள்ளது. இப்படி உலக முழுவதும் உள்ள முஸ்லிம் அமைப்புகள், இஸ்லாமிய அறிஞர்கள் போப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் போப் ஆண்டவரின் செய்தித்தொடர்பு அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் இஸ்லாமியர்களை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் போப் ஆண்டவருக்கு இல்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கைப்பற்றிய பகுதிகளில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற்றால் பேச்சுவார்த்தை: புலிகள் நிபந்தனை
Next post அரண்மனைக்கு வந்தார் குட்டி இளவரசர் ஜப்பான் மக்கள் மலர் தூவி வரவேற்பு