பணி அனுமதி பெற சவூதியில் இனி திறனறி தேர்வு கட்டாயம்
சவூதியில் புதிதாக பணி நியமனம் பெறும் வெளிநாட்டு தொழிலாளர்கள் சவூதியில் வசிப்பதற்கு அனுமதி பெற அவர்கள் திறன் தேர்வில் பங்கேற்பது கட்டாயமாகிறது. புதிதாக தேர்வுபெறும் தொழிலாளர்கள் அந்த பணிக்கான தகுதி உடையவர்களா? அந்த பணிக்கு லாயக்கானவர்களா என்பதை சோதிக்கும் வகையில் இந்த தேர்வு இருக்கும். இது பற்றி சவூதி தொழிலாளர் துறை அமைச்சர் காசி அல் கோசைபி கூறியதாவது: சவூதியில் பணிபுரியும் தற்போதைய தொழிலாளர்களுக்கு புதிய ஏற்பாடு படிப்படியாக நடைமுறைப் படுத்தப்படும். சவூதியில் தங்குவதை புதுப்பிப்பதற்கும் இந்த ஏற்பாடு கட்டாயமாகும். 3 மாதத்துக்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திறனறி தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது. தொடக்கமாக சேவைத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அங்கேயே பணி செய்வதற்கான உரிமம் தரப்படும். இந்த தேர்வு நடைமுறைக்காக பல்வேறு மொழிகள் இடம் பெற்ற இணையதளத்தை தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. சவூதியில் உள்ள தொழிலாளர்கள் திறமை வாய்ந்தவர்களாகவும் தரமிக்கவர்களாகவும் இருப்பதை உறுதி செய்வதே இந்த தேர்வின் நோக்கம். சவூதி அரேபியாவில் சுமார் 70 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், வங்கதேசம், எகிப்து, யேமன், சிரியா, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். 2006-வுடன் ஒப்பிடுகையில் திறமைமிக்க வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தொழிலாளர் அமைச்சகம் வழங்கிய விசா கடந்த ஆண்டு 34. 57 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார் அல் கோசைபி.
Average Rating