சர்வகட்சி மாநாடு ஆரம்பம்..!! (கட்டுரை)

Read Time:18 Minute, 5 Second

சர்வகட்சி மாநாட்டு அழைப்போடு, தற்போது இரண்டு தொகுதி முன்மொழிவுகள் அனெக்‌ஷர் “பி”, அனெக்‌ஷர் “சி” ஆகியன பின்னிணைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த இரண்டும் ஜே.ஆரினதோ, அரசாங்கத்தினதோ, ஐக்கிய தேசியக் கட்சியினதோ உடைய முன்மொழிவுகள் அல்ல. அதனை அவ்வாறு முன்னிறுத்த, ஜே.ஆர் தயாராக இருக்கவில்லை.

யாருடைய முன்மொழிவுகள் என்று சொல்லப்படாமலே, அனெக்‌ஷர் “சி” முன்வைக்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரே விடயம், “கொழும்பிலும் டெல்லியிலும் நடந்த கலந்தாலோசனையின் விளைவாக எழுந்த முன்மொழிவுகள்” என்பது தான்.

அப்படியானால் அது ஜே.ஆர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, பார்த்தசாரதி ஆகியோரின் இணைந்த முன்மொழிவுகளாகத்தானே இருந்திருக்க வேண்டும்? ஆனால் ஜே.ஆர், இதைத் தனது முன்மொழிவுகளாக ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னை, இதிலிருந்து அந்நியப்படுத்தியே வைத்திருந்தார்.

ஜே.ஆரின் இந்தப் போக்கு, மற்றைய பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஏனெனில், சர்வகட்சி மாநாட்டுக்கு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அழைப்பது தொடர்பான சர்வகட்சிக் கூட்ட முடிவுக்குப் பின்னர், அம்முடிவை, சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் அனைத்தினதும் ஒருமித்த முடிவு என்ற பாங்கில், ஜே.ஆர் ஏற்கனவே பொதுவிலே முன்னிறுத்தி, தன்னை முடிந்தவரை அந்த முடிவிலிருந்து அந்நியப்படுத்தவே முயன்றமை, வௌிப்படையாகத் தெரிந்தது.

ஆகவே, புதிதாக வந்திருக்கும் அனெக்‌ஷர் “சி” பற்றியும், சர்வகட்சி மாநாடு பற்றியும் கலந்தாலோசிக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு, 1984ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் திகதி கூடியது. அந்தக் கூட்டத்தில் ஜே.ஆர் சூழ்ச்சி செய்ய முயல்கிறாரோ என்ற சந்தேகம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலராலும் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அனெக்‌ஷர் “சி” பற்றி, ஜே.ஆரிடம் மேலதிக விளக்கம் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இது பற்றி ஊடகங்களுக்குக் கருத்துரைத்த சிறிமாவோ பண்டாரநாயக்க, “நான் அழைக்கச் சொன்னதால் தான், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, சர்வகட்சி மாநாட்டுக்கு அழைத்ததாக ஜனாதிபதி ஜே.ஆர், ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். தற்போது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அனைத்துக் கட்சிகளும் தமது முன்மொழிவுகளை முன்வைக்க, ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கிறார்.

“ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி, தனது முன்மொழிவுகளை இன்னும் முன்வைக்கவில்லை. அவர் எம்மை முன்மொழிவுகளைச் முன்வைக்கச் சொல்லி, நாம் சொன்னதனால்தான், தமிழர்களுக்கு பிராந்திய சபைகளை வழங்கினேன் என்று, முழுநாட்டுக்கும் சொல்லும் வகையிலான சூழ்ச்சி ஒன்றுக்கு முயல்கிறார் என்றே நாம் ஐயம் கொள்கிறோம். ஆகவே, முதலில் ஐக்கிய தேசியக் கட்சி தனது முன்மொழிவுகளை முன்வைக்கட்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளின் இந்தப் போக்கானது, தமிழ் மக்களுக்கு நியாயமானதோர் அரசியல் தீர்வை வழங்குவது, ஏதோ செய்யத்தகாத தீட்டைப் போன்றதும், அதைச் செய்வது பெரும் பாவகாரியம் போன்றதுமான தோற்றத்தை உருவாக்குவது போலுள்ளது.

உண்மையில் இந்த நிலை வருவதற்குக் காரணமே, இந்த இரண்டு கட்சிகளும்தான். இனரீதியில் பிளவடைந்த வாக்குவங்கி எனும் சவக்குழியைத் தோண்டியதில், இந்த இரு கட்சிகளின் பங்கு முக்கியமானது. அதுவும் பண்டாரநாயக்கவின் பங்கு, மிக முக்கியமானது. அந்த சவக்குழியை விட்டு வௌியே வருவதற்கு, இரு கட்சிகளும் தயங்க வேண்டிய சூழல் உருவாகியிருந்தது.

ஏனென்றால், ஒன்று அதற்கு முயலும் போது, இன ரீதியாகப் பிளவடைந்த வாக்குவங்கியை பயன்படுத்தி மற்றையது காலை வாரிவிடுமோ என்ற அச்சம் இருதரப்பிற்கும் இருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியை சர்வகட்சி மாநாட்டிற்கு அழைத்தது சிறிமாவோவின் விருப்பின் பேரில்தான் என்று ஜே.ஆர் சொல்லியமைக்கும், எந்தவொரு முன்மொழிவுகளையும் முதலில் தானோ, தனது கட்சியோ முன்வைக்காமைக்கும் இதுதான் காரணம்.

ஜே.ஆரின் இந்த போக்கு பற்றிக் கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் அநுர பண்டாரநாயக்க, “ஜனாதிபதி ஜே.ஆர், பார்த்தசாரதியோடு தான் இணங்கிய முன்மொழிவுகளிலிருந்து தன்னை அந்நியப்படுத்தியுள்ளதானது, பார்த்தசாரதியை மட்டுமல்ல, முழு நாட்டையும் ஏமாற்றும் செயல்” என்று குறிப்பிட்டார். அனெக்‌ஷர் “சி” விடயம் தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மட்டுமல்ல, மஹஜன எக்ஸத் பெரமுனவும் (மக்கள் ஐக்கிய முன்னணியும்) அதிருப்தியடைந்திருந்தது.

ஜே.ஆரின் தந்திரோபாயம்

நடந்தவைகளை முழுமையாகப் பார்க்கும் போது, ஜே.ஆரின் நோக்கம் மிகத் தௌிவாகப் புலப்படுகிறது. ஜே.ஆர், பேச்சுவார்த்தை மூலமான அதிகாரப் பகிர்வுத் தீர்வைவிட, இராணுவ ரீதியிலான தீர்வையே விரும்பினார். தமிழர் மத்தியில் ஜனநாயக அரசியல் தலைமை பலமிழந்து, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பலமடைவதை, ஜே.ஆர் சாதகமானதாகவே பார்த்திருக்க வேண்டும்.

அப்போதுதான் அந்தப் போராட்டத்தைப் பயங்கரவாதமாகச் சித்திரித்து, இராணுவ ரீதியில் அடக்க முடியும். இடைநடுவில் இந்தப் பேச்சுவார்த்தைகள் சர்வதேச அழுத்தத்தின் விளைவிலானது. குறிப்பாக இந்தியாவின் அழுத்தத்தின் பாலானது. இந்தியாவுடன் முரண்படும் வலு ஜே.ஆருக்கு இருந்திருந்தால், அதனை நிச்சயம் ஜே.ஆர் செய்திருக்கக்கூடும், ஆனால் அது அவருக்கு இருக்கவில்லை.

தனது முழுமையான விருப்பமின்றி பார்த்தசாரதியுடன் ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டிய சூழல் ஜே.ஆருக்கு இருந்தது. அவர் விரும்பி அதைச் செய்திருந்தால், அதைச் சுலபமாக அவர் நிறைவேற்றியும் நடைமுறைப்படுத்தியும் இருக்க முடியும். ஆனால் அவர் அதனைச் செய்யாதது, அவரது விருப்பமற்ற மனநிலையைப் பறைசாற்றுகிறது. அந்த உடன்பாட்டை ஜே.ஆர், தானாக இனி நிராகரிக்க முடியாது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எதிர்த்தரப்புக் கட்சிகள் அதை நிராகரித்தால், சர்வகட்சி மாநாடு அதை நிராகரித்தது என்று, ஜே.ஆரால் இந்தியாவிடம் அந்த நிராகரிப்பை முன்வைக்க முடியும். அவற்றை ஏற்றுக்கொண்டால், தமிழ் மக்களுக்குத் தீர்வை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்டவையே முன்வைத்தன என்று, பெரும்பான்மை வாக்குவங்கி முன்பு சொல்லிவிட முடியும். ஆனால் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்டவை, இந்தத் தந்திரோபாயத்தை உணர்ந்த நிலையில், ஜே.ஆர் தனது அடுத்தகட்ட காய்நகர்த்தலை முன்னெடுத்தார்.

ஜே.ஆர் – பௌத்த மகாசங்கக் குழு சந்திப்பு

1984ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி, நாயக்க தேரர்களை உள்ளடக்கிய பௌத்த மகா சங்கக் குழுவோடு, சந்திப்பொன்றை ஜே.ஆர் நடத்தினார்.

இந்தச் சந்திப்பில், அஸ்கிரிய பீடத்தின் பீடாதிபதி பலிபனே சந்தானந்த மகாநாயக்க தேரர், அமரபுர ஸ்ரீ தர்மரக்கித நிகாயாவின் பீடாதிபதி மதிஹே பண்ணசிஹ தேரர், அமரபுர ஸ்ரீ சத்தம்மவாச நிக்காயாவின் அதிபதி தலல்லே தம்மானந்த தேரர், வல்பொல ராஹுல தேரர், பெல்லன்வில விமலரட்ண தேரர், மாதுலுவாவே சோபித தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த மகா சங்கக் குழு, அனெக்‌ஷர் “சி” முன்மொழிவுகளை, தாம் முழுமையாக நிராகரிப்பதாக ஜனாதிபதி ஜே.ஆரிடம் தெரிவித்தது. மேலும் மாவட்ட அபிவிருத்தி சபைகளை விட மேம்பட்டதொரு தீர்வுக்கு, தாம் சம்மதிக்கப் போவதில்லை என்பதையும் தெரிவித்திருந்தது.

ஜே.ஆர் எண்ணியது நடந்துவிட்டது. பார்த்தசாரதியோடு டெல்லியில் ஏற்பட்ட அனெக்‌ஷர் “சி” உடன்பாட்டுக்கு, இலங்கையில் செல்வாக்கு மிக்க பௌத்த பிக்குகளிடமிருந்து பலமான எதிர்ப்பு வந்துவிட்டது. அனெக்‌ஷர் “சி”-ஐத் தவிர்ப்பதற்கு, இதனை பலமானதொரு காரணமாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு, ஜே.ஆருக்கு கிடைத்துவிட்டது.

சுதந்திரக் கட்சியின் அறிவிப்பு

1984ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி, சர்வகட்சி மாநாடு நடைபெறவிருந்த நிலையில், அனெக்‌ஷர் “சி” தொடர்பில் உரிய விளக்கத்ததை, ஜனாதிபதி ஜே.ஆர் வழங்காததனால், சர்வகட்சி மாநாட்டில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் மஹஜன எக்ஸத் பெரமுனவும், ஜனவரி 8ஆம் திகதி அறிவித்தன.

ஜே.ஆரின் காய்நகர்த்தல்கள் இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலை, வேறுமாதிரியாக இருந்தது.

அமீருக்கு அதிர்ச்சி தந்த யாழ். விஜயம்

1984 ஜனவரி 4ஆம் திகதி கொழும்பை வந்தடைந்திருந்த அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோர், ஜனவரி 8ஆம் திகதி, யோகேஸ்வரனுடன் யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். தமிழ் மக்களின் தன்னிகர் தலைவனாக கருதப்பட்ட, தமிழ் இளைஞர்களால் இரத்தத் திலகமிடப்பட்டு தோள்களில் தாங்கி ஆராதிக்கப்பட்ட அமிர்தலிங்கத்துக்கு, அதிர்ச்சிமிக்கதொரு வரவேற்புக் காத்திருந்தது.

யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்த அமிர்தலிங்கம் குழுவினரை, சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கும் சுவரொட்டிகள் வரவேற்றன.

அமிர்தலிங்கத்தின் கோட்டையாக ஒரு காலத்தில் இருந்த யாழ். பல்கலைக்கழகத்துக்கு அமிர்தலிங்கம் விஜயம் செய்தபோது, அங்கு கரவொலிக்குப் பதிலாக, கூச்சல் சத்தமே அமிர்தலிங்கத்தை வரவேற்றது.

சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்ற தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் நிலைப்பாட்டுக்கு, தமிழ் இளைஞர் மத்தியில் ஆதரவு இருந்ததை அமிர்தலிங்கம் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். அத்துடன் தாம் தமது மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ளதையும் அவர் உணர்ந்திருக்க வேண்டும். அவர் நாட்டிலில்லாத ஏறத்தாழ 6 மாத காலப்பகுதியில் ஏற்பட்டிருந்த மாற்றம், அவரை நிச்சயம் அதிர்ச்சியடையச் செய்திருக்கும்.

தமிழ் இளைஞர்களின் நிலைப்பாட்டில் அமிர்தலிங்கம், முழுமையாகக் குறைகொள்ளவும் முடியாது.

ஏனென்றால், இந்த இளைஞர்களிடம் தமிழீழக் கனவை விதைத்ததில், அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரின் பங்கு முக்கியமானது.

அன்று இளைஞர்கள் இரத்தத் திலகமிட்டு, தோள்களில் அமிர்தலிங்கத்தைச் சுமந்து கொண்டாடக் காரணம், அமிர்தலிங்கம் “சுதந்திரத் தமிழீழத்தை அடைந்தே தீருவோம்” என்று உணர்ச்சி பொங்கப் பேசியதாகும்.

பிராந்திய சபைகளை அடைந்தே தீருவோம் என்று அமிர்தலிங்கம் பேசியிருந்தால், இரத்தத் திலகங்களும், தோள்களில் சுமந்த கொண்டாட்டங்களும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.

தான் வளர்த்துவிட்ட “தனிநாட்டுக்கான” தாகம், இன்று தனக்கெதிராகத் திரும்பியிருப்பதை, அமிர்தலிங்கம் நேரடியாக உணர்ந்து கொண்ட தருணமாக இது இருந்திருக்க வேண்டும்.

ஆனால், சர்வகட்சி மாநாட்டில் பங்கெடுப்பதைத் தவிர, அமிர்தலிங்கத்துக்கு வேறு வழியில்லை.

இந்தியாவின் இரட்டை வழி இராஜதந்திரக் காய்நகர்த்தலில் அமிர்தலிங்கம் தரப்பும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுத் தரப்பும் சிக்கிப் பிளவடைந்திருந்தன என்றும் இதை நாம் நோக்கலாம்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தீர்வு என்று உறுதியாக அமிர்தலிங்கத்திடம் சொன்ன இந்தியாதான், மறுபுறத்தில் தமிழீழக் கனவைச் சுமந்த தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சிகளையும் வழங்கியது.

இது, ஆயுதங்களைக் கொண்டு தனிநாட்டுக் கனவை நனவாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையை, தமிழ் இளைஞர்களிடம் உருவாக்கியது.

இணக்கப்பாட்டினூடான தீர்வொன்றை அடைவதிலிருந்து தமிழ் இளைஞர்கள் விலகத்தொடங்கியதற்கும் இது முக்கிய காரணமாக இருக்கலாம்.

மறுபுறத்தில், தனிநாட்டின் சாத்தியப்பாடின்மையை, அமிர்தலிங்கம் குழு உணர்ந்திருந்தது.

ஏனென்றால் அமிர்தலிங்கம் நம்பிய ஒரே சர்வதேச சக்தியான இந்தியா, அதற்கான எந்தச் சாத்தியமும் இல்லை என்பதை, அமிர்தலிங்கத்துக்குத் தௌிவாக எடுத்துரைத்திருந்தது.

தமிழ் மக்களும், தமிழ் அரசியலும் சிக்கியிருந்த மிகப்பெரிய முரண்பாட்டுச்சிக்கல் இதுதான்.

யாழிலிருந்து கொழும்பு திரும்பிய அமிர்தலிங்கம் குழு, 1984ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி, பெரும் இராணுவப் பாதுகாப்புடன், சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ள, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்கு வருகை தந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒருவழியாக தணிக்கை சான்றிதழை பெற்ற பத்மாவதி படக்குழு – பெயர் மாற்றம், கனவு பாடலில் திருத்தம்..!!
Next post ஜீவா – நிக்கி கல்ராணி நடிக்கும் கீ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!