மரண தண்டனை கைதிகளை மன்னித்து ஆயுள் தண்டனை விதிக்கும் பாகிஸ்தான் அரசின் திட்டத்துக்கு இஸ்லாமிய தலைவர்கள் எதிர்ப்பு
மரண தண்டனை கைதிகளை மன்னித்து ஆயுள் தண்டனை விதிக்கும் பாகிஸ்தான் அரசின் திட்டத்துக்கு அந்நாட்டில் உள்ள இஸ்லாமிய தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மரண தண்டனை கைதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்கான திட்டத்தை அதிபர் முஷாரபுக்கு அரசு அனுப்பும் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஜா கிலானி நாடாளுமன்றத்தில் அறிவித்தார். கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பேநசீர் புட்டோவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் இத்திட்டத்தை அறிவித்தார். இதற்கு அந்நாட்டின் இஸ்லாமிய மதத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மிகவும் கொடூரமாக குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்று இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் கூறப்பட்டுள்ளது. அதை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை. கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகள் விரும்பினால், குற்றவாளிக்கு மரண தண்டனையில் இருந்து மன்னிப்பு அளிக்கலாம். கொள்ளை, கொலை, கள்ளத் தொடர்பு, மத நிந்தனை போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்று இஸ்லாமிய மதத் தலைவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர். மேற்கத்திய நாடுகள் மரண தண்டனையை எதிர்க்கின்றன. அந்த நாடுகளை திருப்திபடுத்துவதற்காக பாகிஸ்தான் பிரதமர், மரண தண்டனையை நீக்குவதாக அறிவித்துள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Average Rating