இலங்கையில் சண்டை: 47 விடுதலைப் புலிகள் பலி; பயிற்சி முகாம் செயல்பட்டு வந்த கிராமத்தை ராணுவம் கைப்பற்றியது
இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 47 விடுதலைப்புலிகளை கொன்று விட்டதாகவும், அவர்களது பயிற்சி முகாம் செயல்பட்டு வந்த கிராமத்தை பிடித்து விட்டதாகவும் ராணுவம் அறிவித்து உள்ளது. இலங்கையில் தனி நாடு கேட்டுப் போராடும் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே ஆங்காங்கே தொடர்ந்து கடுமையான சண்டை நடந்து வருகிறது. அண்டன்குளம் என்ற இடத்தில் நேற்று நடந்த சண்டையில் 11 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும், ராணுவ வீரர்கள் 4 பேர் படுகாயம் அடைந்ததாகவும் ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நானயக்கரா தெரிவித்தார். அந்தப் பகுதியில் 13 சதுர கிலோ மீட்டர் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் ராணுவம் கொண்டு வந்து விட்டதாகவும், அன்டன்குளம் ராணுவத்தின் வசம் வீழ்ந்ததன் மூலம், விடுதலைப் புலிகளின் உணவுக்கூடமாக திகழ்ந்த மன்னார் பகுதி முழுவதையும் விடுதலைப் புலிகள் இழந்து விட்டதாகவும் அவர் கூறினார். மன்னார் பகுதியில் இன்னொரு இடமான பாப்பாமொட்டை மற்றும் நெடுவரம்பு என்ற பகுதிகளில் நடந்த சண்டையில் 21 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக உதயநானயக்கரா தெரிவித்தார். இதே போல வெளிஓயா பகுதியில் நடந்த சண்டையில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர், 23 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் தேசிய பாதுகாப்பு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ராணுவ வீரர்கள் 3 பேர் பலியானார்கள் என்றும் அது கூறியது. இதே பகுதியில் ஜனகபுரா என்ற இடத்தில் நடந்த சண்டையில் 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், 9 பேர் படுகாயம் அடைந்ததாகவும், ஒரு ராணுவ வீரர் பலியானதாகவும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது. மட்டக்களப்பின் கிழக்குப் பகுதியில் உள்ள கலுவன்கேரணி என்ற இடத்தில் ஒரு விடுதலைப்புலியை சுட்டுக் கொன்றதாகவும், யாழ்ப்பாணம் பகுதியில் கல்லிக்கல் என்ற இடத்தில் கண்ணிவெடி வெடித்ததில் ஒரு ராணுவ வீரர் பலியானார், இன்னொரு வீரர் படுகாயம் அடைந்தார் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது. மன்னார் பகுதியின் வடமேற்கில் பரப்பக்கடன்தான் என்ற இடத்தில் ராணுவம் கடுமையாக போரிட்டு அந்த கிராமத்தையே கைப்பற்றியது. இந்த கிராமத்தில் பல பெரிய கட்டிடங்கள் உள்ளன என்றும், விடுதலைப் புலிகளின் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்பட பெரிய பயிற்சி வளாகமே நடந்து வந்தது என்றும், விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான பானுவின் மறைவிடம் இங்குதான் செயல்பட்டு வந்தது என்றும், விடுதலைப்புலிகளின் சுடுகாடும் இங்குதான் உள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Average Rating