By 25 January 2018 0 Comments

ஹேப்பி ப்ரக்னன்ஸி!!

மூன்றாவது ட்ரைமஸ்டரின் முக்கிய காலகட்டம் இது. இந்தப் பருவத்தில் ஒவ்வொரு தாயின் வயிறும் ஒவ்வொரு சைஸில் இருக்கும். சிலருக்கு பெருத்த வயிறும் ஒருசிலருக்கு அளவான வயிறும் இருக்கும். தாயின் உடல்வாகு, குழந்தையின் எடை, பனிக்குடத்தின் அளவு, தாய் எவ்வளவு எடை கூடியிருக்கிறார் என்பதற்குத் தக வயிற்றின் அளவும் இருக்கும். எனவே, உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் குழம்பிக்கொள்ள வேண்டாம். கர்ப்ப காலத்தின் மிக முக்கியமான பருவமான 31வது வாரம் முதல் 34வது வாரம் வரை வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

வாரம் 31

இப்போது உங்கள் குழந்தையால் வெளி சப்தங்களை துல்லியமாகப் பிரித்தறிய முடியும். அம்மாவின் குரல், மற்றவர்களின் குரல், வெவ்வேறு குரல்களின் தனித்தன்மைகள் ஆகியவற்றை நன்கு அறியும். தாயின் அடிவயிறு நன்கு வளர்ந்திருக்கும். இந்த நேரத்தில் ஆரோக்கியமான தாய் ஒருவர் 10-12 கிலோ வரை எடை அதிகரித்திருக்க வேண்டும். அசெளகர்யமான உணர்வைத் தடுக்க முறையான மூச்சுப் பயிற்சிகளை நிபுணர்களின் பரிந்துரையோடு மேற்கொள்ளலாம்.

வாரம் 32
உங்கள் குழந்தை இப்போது தலை முதல் பாதம் வரை சராசரியாக 18.9 இஞ்ச் நீளம் வளர்ந்திருக்கும். அதன் எடை சுமார் ஒன்றே முக்கால் கிலோ முதல் இரண்டு கிலோ வரை இருக்கும். தாயின் கர்ப்பப்பை முழுதும் குழந்தை நிறைந்திருக்கும். சில குழந்தைகள் வயிற்றுக்குள்ளேயே உருண்டு புரண்டு விளையாடும். கண்களைச் சிமிட்டியும்; மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டும் பழகும்.

இப்போது முதல் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையும் மருத்துவரைப் பார்த்துவருவது நல்லது. சிலருக்கு மார்காம்புகளில் இருந்து சீம்பால் எனும் மஞ்சள் வண்ண திரவம் கசியத் தொடங்கும். உறங்கும்போது இடதுபுறமாகச் சாய்ந்து உறங்குங்கள். இதனால் அஜீரணத்தைத் தவிர்க்கலாம். கால்களை சற்று உயரமாக தூக்கி வைத்துக்கொள்ளுங்கள். கால்களுக்கு ஸ்டாக்கிங்ஸ் அணியுங்கள். இதனால் கால் வீக்கத்தைத் தவிர்க்கலாம்.

வாரம் 33

இந்த வாரம் முதல் அடுத்த ஏழு வாரங்களுக்குள்ளாக உங்கள் குழந்தை தற்போது உள்ள எடையில் அரைப்பங்கு அதிகரிக்க வேண்டும். சிலருக்கு வயிற்றில் குழந்தை நகர்ந்துகொண்டே இருப்பது இப்போது ஓரளவு குறைந்திருக்கும். அன்னையின் இதயத் துடிப்பை குழந்தை லயித்துக்கேட்கும் காலம் இது. எனவே நகர்வது குறைந்திருக்கும். அன்னையின் எடை 12 கிலோவாவது அதிகரித்திருக்க வேண்டும். இந்த வாரம் நீங்கள் அதிகரிக்கும் எடையில் கிட்டதட்ட பாதி உங்கள் குழந்தைக்குத்தான் போகும். எனவே,
சத்துள்ள உணவை உண்டு எடை அதிகரிக்க முயலுங்கள். இந்தப் பருவத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவதும் நல்லதே. அவசியம் எனில் இது குறித்து மருத்துவரிடமும் ஆலோசனை கேட்டுவிடுங்கள்.

வாரம் 34

வயிற்றில் உள்ள குழந்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை சராசரியாக 19.8 இஞ்ச் வரை வளர்ந்திருக்கும். எடை இரண்டரை கிலோ வரை இருக்கும். தாயின் வயிற்றில் தற்போது தலைகீழான நிலையில் குழந்தை இருக்கும். குழந்தையின் அனைத்து உறுப்புகளும் முழுமையாகவே வளர்ந்திருக்கும். நுரையீரல் மட்டும் இன்னும் சற்று முழுமையடைய வேண்டியது இருக்கும். குழந்தையின் சருமம் மிகவும் மென்மையாக பிங்க் நிறத்தில் இருக்கும்.

அது இன்னும் சற்று முதிர வேண்டியது இருக்கும். கை விரல் நகங்கள் நன்கு வளர்ந்திருக்கும். ஆனால், கால் விரல் நகங்கள் முழுமையடையாது இருக்கும். குழந்தைக்கு நன்கு முடி வளர்ந்திருக்கும். கர்ப்பப்பை முழுதும் இறுக்கமாகும் அளவுக்கு முழுமையாக வளர்ந்திருப்பதால் குழந்தையால் முன்பைப் போல் அசைய முடியாது. அன்னையின் கர்ப்பப்பை பிரசவத்துக்கு தயாராகும் விதத்தில் கடினமாக மாறும். இதனால் தாய்க்கு பொய்வலி ஏற்படக்கூடும். பெல்விஸ் பகுதி விரிவடைவதால் முதுகு வலி இருக்கக்கூடும்.

அன்னையின் தொப்புள் நன்கு வெளித்தள்ளி மலர்ந்திருக்கும். மொத்தத்தில் இந்த நான்கு வாரங்களில் உங்கள் குழந்தை இரண்டரை கிலோ வரை எடை கூடியிருக்கும். குழந்தையின் உறுப்பு வளர்ச்சி கிட்டதட்ட நிறைவடைந்து எடை கூடுவதற்காகக் கொழுப்பு மற்றும் தசை வளர்ச்சி தொடங்கியிருக்கும். குழந்தையின் மூளை செயல்திறன் மிக வேகமாக முன்னேறும். சிறு சிறு உடல் உபாதைகள் இருந்தாலும் இந்த ட்ரைமஸ்டரில் ஓரளவு சுகமான மாதம் இது.

டாக்டர் ஒரு டவுட்

நான் எட்டு மாதங்கள் கருவுற்றிருக்கிறேன். இயல்பாகவே, சற்று பருமனான உடல்வாகு. தற்போது 10 கிலோ வரை எடை அதிகரித்திருக்கிறேன். இனிமேல் எடை கூடாமல் இருப்பதற்காக கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை தவிர்த்துவிட்டு புரோட்டின்கள் மட்டும் எடுத்துக்கொள்ளலாமா?
– ஆர்.ஷாலினி, திருப்பரங்குன்றம்.

இது முற்றிலும் தவறான எண்ணம். கர்ப்ப காலத்தில் ஒரு தாய் 10 கிலோவுக்கு மேல் எடை அதிகரிப்பதால் குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை. மேலும், கர்ப்ப காலம் என்பது குழந்தையின் முழு ஆயுளுக்குமான அஸ்திவாரமான காலகட்டம். பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும் என்றால் அன்னை அனைத்துவிதமான ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட வேண்டியது அவசியம். ஓர் ஆரோக்கியமான உணவில் கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புக்கள், வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துகள் என அனைத்தும் இருக்க வேண்டியது அவசியம்.

அதுதான் சமவிகித உணவு. சமவிகித உணவைச் சாப்பிடும்போதுதான் தாய்க்கும் குழந்தைக்கும் வளர்சிதை மாற்றங்கள் இயல்பான கதியில் நிகழும். கார்போஹைட்ரேட் என்பது மாவுச்சத்து. நம் உடலுக்கு அவசியமான ஆற்றலை உடனடியாகத் தருவதில் பெரும்பங்கு வகிப்பவை கார்போஹைட்ரேட்கள்தான். கர்ப்பிணிகள் இதைத் தவிர்க்கும்போது தாய் சேய் இருவருமே பாதிக்கப்படுகிறார்கள். குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு கார்போஹைட்ரேட் மிகவும் அவசியம். உடலின் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி, மூளை செல்களின் துரிதமான செயல்பாடு ஆகியவற்றுக்கு காரணமானதும் அதுதான்.

மாவுச்சத்தற்ற ஒரு டயட் மலச்சிக்கல், மார்னிங் சிக்னெஸ் பிரச்சனைகள், அஜீரணம் போன்ற பல்வேறு உடல் கோளாறுகளை உருவாக்கக்கூடும். உடல் எடையைக் குறைப்பது என்பதை குழந்தைப் பேற்றுக்குப் பிறகு யோசியுங்கள். டயட் முதல் உடற்பயிற்சி வரை அதற்கு பல வழிகள் உள்ளன. அதை எல்லாம் இப்போது யோசிக்க வேண்டாம். தினசரி காலை நேரத்திலோ மாலை நேரத்திலோ காலார நடப்பது, சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை மருத்துவர் ஆலோசனைப்படி மேற்கொள்வது போன்றவற்றால் உடல் எடையை ஓரளவுக் கட்டுப்படுத்தலாம். அதுவே, சிறந்த வழி. தேவையற்ற டயட்களை மேற்கொண்டு சிரமப்படாதீர்கள்.Post a Comment

Protected by WP Anti Spam