அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர் எதிர் துருவங்களாக வலம் வந்த ஹிலாரியும், ஒபாமாவும் கூட்டாக இணைந்து ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர் எதிர் துருவங்களாக வலம் வந்த ஹிலாரியும், ஒபாமாவும் கூட்டாக இணைந்து ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். இதனால் அமெரிக்க தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் யார் என்பதில் ஹிலாரி-ஒபாமா இடையே கடும் போட்டி நிலவியது. இவர்கள் இருவருக்கும் இடையேயான பிரசாரத்தின் போது, ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிப் பேசினர். இந்நிலையில், ஒரு வழியாக ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக பாரக் ஒபாமா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அமெரிக்க தேர்தல் களத்தின் காட்சிகள் மாறத் தொடங்கின. ஒபாமாவின் தேர்வை ஏற்க, ஹிலாரி முதலில் சற்றுத் தயங்கினாலும், பின்னர் அவரது கட்சியின் முடிவை ஏற்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிக் கனியை பறிக்க ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக மெக்கைன் முன்னிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து ஒபாமா போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் ஒபாமா முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை எதிர் எதிர் துருவங்களாக இருந்து வந்த ஹிலாரியும், ஒபாமாவும், நியூ ஹாம்ஷையர் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்முறையாக கூட்டு பிரசாரம் மேற்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய ஒபாமா, “கடந்த 16 மாதங்களாக செனட்டர் ஹிலாரியும், நானும் போட்டியாளர்களாக வலம் வந்தோம். பிரசாரத்தின் போது, நாங்கள் இருவரும் வெவ்வேறு இலக்குகளைக் கொண்டு பயணித்தோம். ஆனால், வரலாறு படைக்க தற்போது இருவரும் ஒன்றிணைந்துள்ளோம்’ என்றார். ஒரு தலைவராக ஹிலாரி கிளிண்டனை நான் மிகவும் மெச்சுகிறேன். ஒரு வேட்பாளராக அவரிமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன் என்றார் ஒபாமா. ஒபாமா இவ்வாறு கூறியதும், கூட்டத்தினரின் கைத்தட்டல் விண்ணை பிளந்தது. வெள்ளை மாளிகைக்கான அடுத்த போட்டியில், மெக்கைன்-ஒபாமா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வந்த போதிலும், ஒபாமா தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
Average Rating