‘பத்மாவதி’யும் வாக்கு வங்கி அரசியலும்!!

Read Time:14 Minute, 23 Second

வன்முறைகள், கலவர மேகங்கள் சூழ ‘பத்மாவதி’ திரைப்படம் நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது.
190 கோடி ரூபாய், பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘பத்மாவதி’ திரைப்படத்தில் முக்கிய நட்சத்திரங்களான தீபிகா படுகோன், ரன்வீர் சிங், சாகித் கபூர் போன்றவர்கள், படம் வெளிவருமா வெளிவராதா என்று கவலையடைந்திருந்த நேரத்தில், உச்சநீதிமன்றத்தின் புண்ணியத்தால் ‘பத்மாவதி’ திரைப்படம் ஜனவரி 25 ஆம் திகதி நாடு முழுவதும் திரையிடப்பட்டுள்ளது.

இவ்வளவு அச்சுறுத்தல்களுக்கு இடையில், முதல் நாளிலேயே பத்து இலட்சம் பேர், ‘பத்மாவதி’ திரைப்படத்தைப் பார்த்திருக்கிறார்கள் என்பது தயாரிப்பாளருக்கு வெற்றியாக இருக்கலாம். ஆனால், மாநிலத்தை ஆளும் முதலமைச்சர்களுக்குப் பெரும் சவாலாகவே அமைந்து விட்டது என்பதுதான் உண்மை!

இந்தியாவில் உள்ள வட மாநிலங்களான ஹரியானா, இராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களை ‘பத்மாவதி’ சர்ச்சை, இன்னும்கூட உலுக்கிக் கொண்டுதான் இருக்கிறது.
பிரதமர் நரேந்திரமோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. என்றாலும் பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ்ஸின் மீது கலவரக்காரர்கள் கல்வீச்சு நடத்தியது, உச்சக்கட்ட வன்முறையாகி விட்டது.

“கர்னி சேனா என்ற இந்து அமைப்பைத் தடை செய்ய வேண்டும்” என்றும் “அந்த அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பு” என்றும் ஒட்டுமொத்த ஆங்கிலத் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் விவாதங்கள் நடத்த வேண்டிய கட்டாயத்தை ‘பத்மாவதி’ வன்முறை ஏற்படுத்தி விட்டது.

‘பத்மாவதி’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன்னர், தணிக்கை சபை அனுமதி கொடுத்து விட்டது. ஆனாலும் மாநில முதலமைச்சர்கள், அதற்குத் தடை போட்டார்கள். பிறகு உச்சநீதிமன்றம், அந்தப் படத்தைத் திரையிடலாம் என்று அனுமதி கொடுத்து விட்டது.

பிறகும் ராஜ்புட்களின் அமைப்பான ‘கார்னி சேனா’ பத்மாவதி படத்தைத் திரையிட ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று போர்க்கொடி உயர்த்தியது.

அத்துடன் நிற்காமல், வட மாநிலங்களில் கார் எரிப்பு, கல்வீச்சு என்று வன்முறைகளில் குதித்தது. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் உச்சநீதிமன்றமா அல்லது இது போன்ற சின்னச்சின்ன அமைப்புகளா என்ற கேள்விக்கு என்ன விடை என்று மக்களே கவலை கொள்ளும் நிலை ஏற்பட்டது.

இந்தக் ‘கார்னி சேனா’வுக்குப் பயந்து மாநில முதல்வர்கள் தவித்தனர். ஆனால், ஹரியானாவில் நடைபெற்ற பாடசாலை மாணவர்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு, உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பில் சிக்குவோம் என்று கருதிய ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேச முதல்வர்கள் கலவரக்காரர்கள் மீது வழக்கு தொடுத்து வன்முறைகளைத் தடுக்க முற்பட்டார்கள். ஆனாலும்கூட, அதில் உறுதி தெரியவில்லை.

‘ஆட்சி பரிபாலனம்’, ‘நீதிமன்ற அதிகாரம்’ ‘திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்து அமைப்புகள்’ போன்றவற்றுக்கு இடையில் ‘பத்மாவதி’ திரைப்படம் சிக்கித் தவித்தது. இந்நிலை, இந்தியத் திரைப்பட வரலாற்றில் ஒரு கரும்புள்ளி மட்டுமல்ல; அரசியல் சட்டம் அளித்துள்ள கருத்துச் சுதந்திரத்துக்கு, விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகவே உருவெடுத்தது.

பாடசாலைக் குழந்தைகள் மீதான தாக்குதலுக்குக் காரணமானவர்களை ஹரியானா மாநில அரசாங்கம் கைது செய்தாலும், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாநில அரசாங்கம் படுதோல்வி அடைந்து விட்டது.

ஒரு திரைப்பட விவகாரம் சட்டம், ஒழுங்குப் பிரச்சினையாக மாறிய முன்னுதாரணங்கள் எத்தனையோ இருந்தாலும், ‘பத்மாவதி’ திரைப்பட வன்முறை அனைத்திலிருந்தும் சற்று வித்தியாசமானது. ஏனென்றால், ஒரேயொரு ‘கார்னி சேனா’ அமைப்பு, ஆறு மாநிலங்களில் திரைப்படத்துக்கும் அரசாங்க நிர்வாகத்துக்கும் சவாலாக நின்றது. அரசியல் சட்டத்தின்படி மாநிலப் பட்டியலில் இருக்கும், சட்டம், ஒழுங்கை உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, முழுமையாக நிலைநாட்டுவதில் ஒரு மாநில முதலமைச்சரின் பொறுப்பு என்ன என்பதை மீண்டும் வரையறுக்க வேண்டிய சூழலை ‘பத்மாவதி’ திரைப்பட வெளியீடு உருவாகியிருக்கிறது.

கடந்த காலங்களில் சந்தன வீரப்பன், கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்திச் சென்ற போது, கர்நாடகத்தில் கலவரம் ஏற்பட்டது. தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் உள்ள காவிரிப் பிரச்சினைகளால் கலவரம் ஏற்பட்டிருக்கிறது.

ஏன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பெங்களூர் நீதிமன்றத்தால் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட போது, தமிழகத்தில் வன்முறை ஏற்பட்டது. அப்போதெல்லாம் உச்சநீதிமன்றம், சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது மாநில அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை வலியுறுத்திக் கூறியது.

ஒரு சில கட்டங்களில், “சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட முடியாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்வோம்” என்று உச்சநீதிமன்றமே எச்சரித்த முன்னுதாரணங்கள் பல உண்டு.

அதேமாதிரிதான், ‘பத்மாவதி’ திரைப்பட விவகாரத்திலும் முதலில் தடையை நீக்கிய உச்சநீதிமன்றம், “மாநில அரசாங்கங்கள் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்” என்று உத்தரவிட்டது.

மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடிய போது, “நீதிமன்றம் ஒன்று இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று ‘பத்மாவதி’ திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று குறுக்கே நின்ற மாநில அரசாங்கத்துக்கு எச்சரிக்கையும் செய்தது.

ஆனாலும், முதலமைச்சர்கள் முதல்சுற்றில், அமைதி காத்தார்கள். அந்தவகையில், ஹரியானாவில் பாடசாலைக் குழந்தைகள் மீதான தாக்குதல், ‘பத்மாவதி’ திரைப்படம் வெளிவருவதற்கான பாதையை அமைத்துக் கொடுத்தது என்றே கருத வேண்டும்.

ஆம்! அதன் பிறகுதான் ‘கார்னி சேனா’ கலவரக்காரர்கள் மீது காவல்துறை மக்களுக்கு தெரிகிற மாதிரி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தீபிகா படுகோன், ரன்வீர் சிங், சாகித் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் ‘பத்மாவதி’ திரைப்படத்தின் தொடக்கத்திலிருந்தே எச்சரிக்கைகளைச் சந்தித்தனர். குறிப்பாக, தீபிகா படுகோனுக்கும் ‘பத்மாவதி’ திரைப்படத்தைத் திரையிட அனுமதிக்க வேண்டும் என்று வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேக்குமே கொலை மிரட்டல்கள் விடப்பட்டன என்பதை திரையுலகத்தினரை மட்டுமல்ல மூத்த வழக்கறிஞர்களைக் கூட பயம் கொள்ள வைத்தது என்றே சொல்லலாம்.

‘ராஜ்புட் கவுரவம்’ என்ற அடிப்படையில் ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு எழுந்த சர்ச்சை மீண்டும் உச்சநீதிமன்றத்துக்கு வரப் போகிறது. பொதுவாக, இதுவரை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ‘கார்னி சேனா’ என்ற ஓர் அமைப்பு மதிக்காமல் கலவரத்தில் ஈடுபட்டது புதிய வரலாற்றை உருவாக்கியிருக்கிறது.

படத்தைத் திரையிட அனுமதித்த பிறகும், சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய மாநில அரசாங்கங்கள் ஒரேயொரு ‘கார்னி சேனா’ அமைப்பைப் பார்த்துக் கைகட்டி நின்றது சட்டத்தை மதிக்கும் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உச்சநீதிமன்றமே, உத்தரவிட்டும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முடியாமல் முதலமைச்சர்கள் தவிப்பது, உள்நோக்கம் கொண்டதா அல்லது வாக்காளர்களை இந்துத்துவா அடிப்படையில் பிரிக்கும் வாக்கு வங்கி அரசியலா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதை வாக்கு வங்கி அரசியல் என்று கூறுவதற்கு, ‘பத்மாவதி’ திரைப்பட சர்ச்சை பற்றி எரியும் நான்கு மாநிலங்களிலுமே பா. ஜ.க ஆட்சி நடப்பது முதல் காரணம். அதிலும், குறிப்பாக ராஜஸ்தானும் மத்திய பிரதேச மாநிலமும் விரைவில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க இருப்பது முக்கிய காரணம்.

மத்திய பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் பா.ஜ.க எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. தோல்வி முகத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி அங்கு வெற்றியைச் சுவைத்து விட்டது.

அதனால், மத்திய பிரதேசத்தில் ஆட்சியை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் பா.ஜ.க முதலமைச்சர் சவுகான், அங்கு பிரதான வாக்கு வங்கியாக இருக்கும் ‘ராஜ்புட்’கள் எதிர்க்கும் ‘பத்மாவதி’ திரைப்பட விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க முடியாமல் தவிக்கிறார்.

இதேநிலைதான், ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் பா.ஜ.க முதலமைச்சர் வசுந்தராராஜே சிந்தியாவுக்கும் என்றால் மிகையாகாது. ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு எதிராக வன்முறை வெடிக்கும் மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி இருப்பதால் ‘இந்துத்துவா’ வாக்குவங்கி அரசியலுக்குப் ‘பத்மாவதி’ திரைப்படச் சர்ச்சை தூபம் போடப்படுகிறது.

‘பத்மாவதி’ தங்களுக்குத் தேர்தல் இலாபம் என்று தேர்தலைச் சந்திக்கவிருக்கும் பா.ஜ.க மாநில முதலமைச்சர்கள் கருதுவதால், ‘பத்மாவதி’ எதிர்ப்பு என்ற நெருப்பை அணைக்க முடியாத அளவுக்கு வன்முறை தலைவிரித்தாடுவதற்கு அனுமதி வழங்கி விட்டு, அமைதி காக்கிறார்கள்.

மற்ற மாநிலங்களில், இது போன்ற வன்முறைகள் நடைபெற்றால், உடனே அறிக்கை கேட்கும் மத்திய உள்துறை அமைச்சகமும்,“சட்டம், ஒழுங்கு மாநில விவகாரம்” என்ற கூறி அமைதி காக்கிறது.

ஆனால், ‘பத்மாவதி’ திரைப்படச் சர்ச்சை உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் தொடருவதால், இது ‘மாநில விவகாரம்’ என்பதையும் தாண்டி மத்திய அரசாங்கத்திடம் வந்து நிற்கிறது.

மாநிலங்களுக்கு இடையில் உள்ள நதி நீர்ப் பிரச்சினைகளில் எப்படி ஒரு கட்டத்தில் மத்திய அரசாங்கம் தலையிடுகிறதோ அது போல், இது போன்ற உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த விடயங்களில் மத்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டும் சூழ்நிலை உருவாகலாம்.

மத்திய, மாநில அரசாங்கங்களின் உறவுகள், கருத்துச் சுதந்திரம், உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றுவது போன்ற விவகாரங்களில் ஒரு புதிய வரைமுறையை உருவாக்கும் சூழ்நிலையை ‘பத்மாவதி’ திரைப்படம் ஏற்படுத்தியிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதயத்தின் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் டிராகன் பழம்..!!
Next post 11 ஆபத்தான நாடுகள் – தடையை நீக்கிய அமெரிக்கா!!