By 2 February 2018 0 Comments

சில்லறைத்தனமான விமர்சனங்கள் ஏன்?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கை முழுவதிலும் அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் தேசிய அரசாங்கத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு, இரண்டு பிரதான கட்சிகளும் மோதிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன என்பதைப் பார்க்கும் போது, இதன் வீரியத்தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.

தேசிய கட்சிகள் மாத்திரமன்றி, பிராந்தியக் கட்சிகளுக்கும் இடையில் அவற்றின் ஆதரவாளர்களுக்கும் இடையிலும், மோதல்கள் அதிகரித்திருக்கின்றன. கட்சிகளுக்குள்ளும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணத்தில், குறித்த மதத்தவர்களுக்கு மாத்திரம் வாக்களிக்குமாறு கோரும், மதவாத/ மதத்துவேச பிரசாரங்கள் தொடர்பிலும் கவனம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில், புதிய விமர்சனங்கள் எழுப்பப்படுவதைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தும் கூட்டங்களின் பாதுகாப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பு எதற்கு போன்ற விமர்சனங்கள், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் மோசமானதாக, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதால் தான், இந்தப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற விமர்சனத்தையும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது, போதியளவிலான விமர்சனங்கள் காணப்படுகின்றன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அக்கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்குப் போதுமான விமர்சனங்கள் காணப்படுகின்றன. எனவே, தகுதியான வேட்பாளர்களை எதிரணிக் கட்சிகள் கொண்டிருந்தால், சரியான பிரசாரத்தை முன்னெடுத்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விழுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

ஆனால் அதை விடுத்து, துரோகிப் பட்டம் கட்டுவதென்பது, தமிழ் மக்களின் ஆரோக்கியமான அரசியல் எதிர்காலத்துக்குப் பொருத்தமற்றது என்பதை மறந்துவிடக்கூடாது. முன்னைய காலங்களில், விடுதலைப் புலிகளின் கொள்கைகளை அல்லது செயற்பாடுகளை எதிர்த்த எவராக இருந்தாலும், துரோகிப் பட்டம் கட்டப்பட்ட வரலாற்றைப் பார்த்தோம். இப்போது, தமிழ்த் தேசியத்தில், எதிர்ப்பு அரசியல் செய்யாத எவரையும் துரோகியாகப் பார்க்கும் சூழல் அமைந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தான், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர். அவர் விரும்பினாலோ, விரும்பாவிட்டாலோ, குறிப்பிட்ட அளவிலான பாதுகாப்பு இல்லாமல், அவரை எங்கு செல்லவும், அவரது பாதுகாப்புப் பிரிவினர் அனுமதிக்கப் போவதில்லை.

இலங்கையின் அரசியல் முன்னுரிமை ஒழுங்கு முறையில், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அடுத்தபடியாக முன்னுரிமையைக் கொண்டுள்ள நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கான பாதுகாப்பு, உயர்ந்த அளவில் காணப்படப் போகின்றமை வழக்கமானது. நாட்டின் ஜனாதிபதி, ஓர் இடத்துக்குச் செல்வதற்குச் சில நாட்கள் முன்னரிருந்தே, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுவிடும். அப்படியாக இருக்கும் போது, எதிர்க்கட்சித் தலைவர் செல்லும் கூட்டத்தில், அவர் இருக்கும் போது பாதுகாப்பு இருக்கக்கூடாது என எதிர்பார்ப்பது நியாயமற்றது.

அவரது மக்களைச் சந்திப்பதற்கே அவருக்கு எதற்குப் பாதுகாப்பு என்றால், தெற்கிலுள்ள சிங்கள மக்களைக் காணச் செல்லும் போது, ஜனாதிபதிக்குப் பாதுகாப்பு வழங்குவதில்லையா என்ற கேள்வியை, உங்களுக்கு நீங்களே எழுப்பிப் பார்த்துக் கொள்ளலாம்.

இரா. சம்பந்தனுக்கான பாதுகாப்பை ஏற்றுக் கொண்டாலும் கூட, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு அதிகரித்திருக்கும் பாதுகாப்பை ஜீரணிப்பதற்கு, குறிப்பிட்ட ஒரு பிரிவினர் தயாராக இல்லை என்பது தான் உண்மையாக இருக்கிறது. “சாதாரண நாடாளுமன்ற உறுப்பினருக்கு, எதற்கேன் இந்தப் பாதுகாப்பு? இவர், அரசாங்கத்துடன் இணைந்துவிட்டார். அதனால் தான் இப்படிப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது” என்பது, முக்கியமான கருத்தாக இருக்கிறது.

எம்.ஏ. சுமந்திரன், அரசாங்கத்தில் இணைந்திருக்கவில்லை என்பதற்கான ஆதாரம் இருக்கின்றதாயின், அவற்றைப் பகிரங்கப்படுத்த வேண்டும். இல்லையெனில், அக்குற்றச்சாட்டை வெளிப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

சுமந்திரன் எம்.பிக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தால், அவருக்கான மேலதிகமான பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற விளக்கமும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவருக்கென்ன பிரச்சினை என்ற கேள்வி தான் எழுப்பப்படுகிறது. சுமந்திரன் மீதான கொலை முயற்சி இடம்பெற்றதைத் தொடர்ந்து, அது தொடர்பான வழக்கு, இன்னமும் நடைபெற்று வருகிறது. அதுவும், வடக்கில் வைத்துத் தான் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதால், “சுமந்திரனுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதும் இல்லை” என்ற கருத்து, அடிபட்டுப் போடுகிறது.

இதில் முக்கியமாக, சுமந்திரனுக்காக அதிக பாதுகாப்பு வழங்கப்படுகிறது என விமர்சிப்பவர்களின் விமர்சனத்தைக் கேட்டு, அவருக்கான பாதுகாப்பு நீக்கப்பட்ட பின்னர், சுமந்திரனின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமாயின், “சிங்கள – பௌத்த இனவாத அரசாங்கம், தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுத்த ஒருவரின் பாதுகாப்பை நீக்கி, அவரைக் கொன்றுவிட்டது” என்ற விமர்சனத்தை, இதே பிரிவினர் முன்வைப்பார்கள்.

இது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வேறு கட்சிகளோ பற்றியதல்ல. மாறாக, இலங்கையின் தமிழ் அரசியல் கலாசாரத்தைப் பற்றியது. தமிழ் அரசியல் சூழலென்பது, ஒருவரையொருவர் துரோகி என்றும் அரசாங்கத்தின் கைக்கூலி என்றும் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தால், மாற்றுக் கருத்துகளுக்கும் மாற்று அரசியல் போக்குகளுக்குமான சூழல் ஏற்படாது.

உதாரணமாக, அடுத்த தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் படுதோல்வியடைந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணியோ அதிக ஆசனங்களைப் பெறுமாயின், தற்போது தமக்கெதிராகப் பயன்படுத்தப்படும் பாணியையே பயன்படுத்துவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனையக்கூடும். அதனால்தான், நீண்டகால நோக்கில் பார்க்கும்போது, இப்படியான போலி விமர்சனங்களும் உணர்வுகளைத் தூண்டும் விமர்சனங்களும் முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டியவை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான இவ்வாறான தரங்கெட்ட விமர்சனங்களை விமர்சிக்கும் போதோ அல்லது எதிர்க்கும் போதோ, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வால்பிடிக்கிறீர்கள்” அல்லது “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையாள்” என்ற விமர்சனங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் வழங்கப்படுவதையும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. எல்லோருக்குமோ, ஏதோ ஒரு வகையில் அரசியல் சார்பு இருக்கிறது. நடுநிலை என்பது, யதார்த்தமான ஒரு நிலைப்பாடு கிடையாது.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நியாயப்படுத்தும் அதிகமான பத்திகளும் கட்டுரைகளும் வருவதற்குக் காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது தான், இவ்வாறான போலி விமர்சனங்கள் அதிகமாக முன்வைக்கப்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தரப்பிலிருந்து, ஏனைய கட்சிகள் மீது, இவ்வாறான தரங்கெட்ட விமர்சனங்கள் வெளிவந்ததாகத் தெரியவில்லை. அரசியலில், பொய்கள் என்பதை சாதாரணமாகிப் போய்விட்டன என்பது உண்மை தான். ஆனால், அரசியல் ரீதியான பொய்யென்பது வேறு, தனிப்பட்ட ரீதியிலான இவ்வாறான போலி விமர்சனங்கள் என்பது வேறு.

உதாரணமாகச் சொல்லப் போனால், சுமந்திரன், தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, அவர் ஏதோ தவறான உறவில் யாருடனோ இருக்கிறார் என்ற ரீதியில், சமூக ஊடக இணையத்தளங்களில் பதிவுகளைக் காணக்கூடியதாக இருந்தது. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உறவை, இவ்வாறு கேவலமாகச் சித்திரிப்பது என்பது, நாமெல்லாம் கட்டிக்காக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் தமிழ்க் கலாசாரத்துக்கு, முற்றிலும் எதிரானது. அத்தோடு, அரசியலில் சம்பந்தப்படாத அப்பெண்ணின் புகைப்படங்களை இவ்வாறு அரசியலுக்காகப் பயன்படுத்துவதும், ஏற்றுக்கொள்ளத் தக்கது அன்று.

இல்லை, அந்தப் பதிவுகளை மேற்கொண்டவர்கள் சந்தேகித்ததைப் போல், அதில் இருந்தது சுமந்திரனின் மகள் இல்லை என்றே வைத்துக் கொள்வோம். வேறு யாரோ பெண்ணுடன் தான் சுமந்திரன் இருந்தாரென்றே வைத்துக் கொண்டாலும், அதற்கும் அவருடைய அரசியலுக்கும் இடையில் என்ன சம்பந்தம் இருக்கிறது? வளர்ந்த ஓர் ஆண், இருதரப்பிலும் விருப்பமுள்ள உறவொன்றைக் கொண்டிருப்பது, அரசியல் விமர்சகர்களுக்குத் தேவையற்ற ஒன்று. தனது பதவியையும் அதிகாரத்தையும் அவர் துஷ்பிரயோகம் செய்கிறார் என்ற ஆதாரம் காணப்பட்டால் மாத்திரமே, அது அரசியல் விமர்சனத்துக்குத் தேவையானது.

எனவே, எதிர்கால தமிழ்த் தேசிய அரசியல் விமர்சனங்களாவது, தனிநபர் தாக்குதல்களையும் துரோகிப் பட்டங்களையும் விட்டுவிட்டு, கொள்கைகள் பற்றியதாகவும் அரசியல் செயற்பாடுகள் பற்றியதாகவும் அமையுமென்பதை உறுதிப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை, நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam