ஆசியக் கிண்ணக் கிரிக்கட்: பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை இறுதியில்..
பாகிஸ்தானில் இடம்பெற்றுவரும் 9வது ஆசியக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளின் ‘சுப்பர் 4’ சுற்றின் 3வது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை, இலங்கை அணி 158 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிக இலகுவாகத் தோற்கடித்தது. இதன் மூலம் ஆசியக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதிபெற்றுள்ளது. கராச்சி தேசிய கிரிக்கட் மைதானத்தில் நேற்று பிற்பகல் 2.30 ஆரம்பித்த இந்த ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் மஹெல ஜெயவர்த்தன, தனது அணி துடுப்பொடுத்தாடும் என்று அறிவித்தார். இதன் படி முதலில் ஆடிய இலங்கை அணி, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 332 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில், தனது 39வது பிறந்தநாளை நேற்றுக் கொண்டாடிய சனத் ஜெயசூர்யா 88 பந்து வீச்சுக்களைச் சந்தித்து 130 ஓட்டங்களையும், குமார் சங்ககார 121 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷின் பந்து வீச்சில் பர்கட் ரெஷா, அலொக் கபாலி ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை கைப்பற்றினர். 333 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலளித்தாடி பங்களாதேஷ் அணி, 38.3 ஓவர்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 174 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதன் மூலம், 152 ஓட்டங்களனால் தோல்வியடைந்தது. இந்த தோல்வியை அடுத்து, பங்களாதேஷ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறத் தவறியது. பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில், ரஹிபுல் ஹசன் 52 ஓட்டங்களையும், நஜிமுடீன் 47 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர். இலங்கையின் சார்பில் பந்து வீசிய முத்தையா முரளிதரன் 5 விக்கட்டுக்களையும், அஜந்த மென்டிஸ் 2 விக்கட்டுக்களையும் விழ்த்தினர். போட்டியின் ஆட்டநாயகனாக சனத் ஜெயசூர்யா தெரிவானார். ‘சுப்பர் 4’ சுற்றின் 4வது போட்டி நாளை இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையில் நடைபெறும்.
Average Rating