மனதுக்கும் தேவை முதல் உதவி!!

Read Time:6 Minute, 26 Second


‘ஒரு விபத்து, ஏதேனும் அசம்பாவிதம் என்றால் உடனடியாக முதல் உதவிகளைச் செய்கிறோம். உயிரைக் காப்பாற்ற உடலுக்குச் செய்யப்படும் இந்த முதல் உதவிகளைப் போலவே மனதுக்கும் முதல் உதவி தேவை’ என்கிறார் உளவியல் மருத்துவரான ராமன்.‘‘நெருக்கமானவர்களின் பிரிவு, வன்முறைகள், விபத்து, இயற்கைப் பேரழிவுகள் போன்று மனிதர்களின் மனதை பாதிக்கக்கூடிய நிகழ்வுகள் அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.இதனால் தனி மனிதர்கள் மட்டும் இல்லாமல் குடும்பங்கள், சில நேரங்களில் ஒட்டுமொத்த சமுதாயமேகூட பாதிப்புக்குள்ளாகிறது. இதுபோன்ற எதிர்பாராத உளவியல் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களில் ஒரு சிலரே அதிலிருந்து மீண்டு வருகிறார்கள். பெரும்பாலானவர்கள் அதிலிருந்து மீள முடியாமல் கடுமையான பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

இதுபோன்ற தருணங்களில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அவரைச் சுற்றியுள்ளவர்கள் முதலில் ஆதரவுக்கரம் தர வேண்டும். சக மனிதர்கள் இதுபோல் மனரீதியாக ஆதரவு அளிப்பதையே உளவியல் முதல் உதவி(Psychological First Aid) என்கிறோம்’’ என்றவரிடம் உதவி ஒருவருக்குத் தேவை என்பதை எப்படி உணர்ந்துகொள்வது என்று கேட்டோம். ‘‘காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் பயப்படுவது, கலகலப்பாக இருக்கக்கூடியவர் திடீரென்று யாருடனும் பழகாமல் தனிமையில் இருப்பது, உடல் சோர்வு, ஆர்வமாக ஈடுபடும் செயல்களில் ஆர்வம் குறைவது, வேலைத்திறன் குறைவது, அதிகப்படியான தூக்கம் அல்லது தூக்கமின்மை, தன்னம்பிக்கை இழத்தல், வேலைக்கோ, கல்லூரிக்கோ செல்வதைத் தவிர்ப்பது, ஆவேசமாகக் கத்துவது போன்றவை ஒருவரிடம் தென்பட்டால் அவர்களுக்கு உளவியல் முதல் உதவி தேவை என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

தற்கொலை எண்ணம் தூண்டப்படுபவர்களின் நடவடிக்கைகள் சற்று மாறுபட்டவை. எப்பொழுதுமே ஒரு பொருளுக்காக சண்டையிடுபவர்கள், திடீரென அதை தியாகம் செய்யும் மனநிலைக்கு வந்திருப்பார்கள். ‘அதை அவளுக்கே கொடுத்துவிடுங்கள்… எனக்கு இனிமேல் தேவைப்படாது’ என்பார்கள். இன்னும் சிலர், ‘கொஞ்ச நாட்கள்தானே… எல்லாவற்றையும் அனுபவித்துவிடுகிறேன்’ என்று விரக்தியாகப் பேசுவார்கள்.இந்த நடத்தை மாற்றங்களை உடனிருப்பவர்கள் கூர்ந்து கவனித்து அவருக்கு முதலில் ஆதரவு தர வேண்டும். அவர்களை தனிமையில் விடாமல் தங்களுடனேயே வைத்துக் கொள்ள வேண்டும். அவருடைய உறவினர் மட்டுமல்லாது உடன் பயில்பவர்கள், வேலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அக்கறையோடு இந்த முதல் உதவியைச் செய்யலாம்.’’

உளவியல் முதல் உதவியை எப்படி செய்வது ?
‘‘உளவியல் படித்தவர்கள்தான் முதல் உதவி செய்ய வேண்டுமென்பதில்லை; அது தொழில் முறை ஆலோசனையும் இல்லை. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெருக்கமானவர்கள் யாராக இருந்தாலும் இந்த முதல் உதவியைச் செய்யலாம். யாரை பாதுகாப்பாகவும், சௌகர்யமாகவும் உணர்கிறார்களோ அவர்கள் முதலில் பேச்சு கொடுக்கலாம்.பாதிப்பு நடந்த நேரம், இடம், காரணம் என விளக்கமாகப் பேசக் கூடாது. அது அவசியமும் இல்லை; எதனால் ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது என்ற மூல காரணத்தை ஆராய முற்பட வேண்டியதும் இல்லை. பேசுவதற்கேற்ற அமைதியான சூழலைப் பார்த்துப் பேச வேண்டும். கசப்பான அனுபவத்தை கூற வற்புறுத்தாமல், அவர்களாகவே பேச முற்படும் வரை பொறுமையுடன் கேட்பது அவசியம்.

பாதிக்கப்பட்டவர்களின் வார்த்தைகளை கிண்டலடிக்காமல், காயப்படுத்தாமல் அவர்களின் தேவைகள், பிரச்னைகளுக்குத் தகுந்தவாறு பதில் அளிப்பதும் முக்கியம். ‘நீ கத்துகிறாய், மற்றவர்களை துன்புறுத்துகிறாய், இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாய்’ என்று குத்திக்காட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.பெரும்பாலும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதை ஒப்புக் கொள்வதில்லை. அதனால், அவர்களைப் பலவந்தப்படுத்தாமல், சாதாரண மருத்துவ சோதனை என்று எடுத்துக்கூறி பொது மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

பொது நல மருத்துவருடன் இணைந்து அதன்பிறகு மனநல சிகிச்சையை மேற்கொள்ள வைப்பது ஒரு நல்ல உத்தி.
டென்ஷன், மன அழுத்தம் என்று மனநலம் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்துள்ள இக்காலகட்டத்தில் ஒவ்வொருவருக்குமே அந்தப் பொறுப்பு இருக்கிறது. பொதுநல மருத்துவர்களே ஆரம்பகட்ட உளவியல் சிகிச்சையை மேற்கொள்ளும் வகையில் அரசு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். மேலும், பயிற்சி பெற்ற மருத்துவர்களைக் கொண்டு நடத்தப்படும், அங்கீகரிக்கப்பட்ட மனநல மையங்களை அரசு அதிக அளவில் நிறுவுவதும் அவசியம்” என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கன்னி ராசி ஆன காதல் மன்னன்!!
Next post சினிமாவில் நடிப்பது மட்டும்தான் என் வேலையா? ஸ்ருதிஹாசன் கடும் கோபம்!!