தொப்பை குறைய டிப்ஸ்!!

Read Time:6 Minute, 47 Second

போலீஸ்காரர்களின் தொப்பையை குறைக்க கர்நாடக மாநிலத்தில் சிறப்பு பயிற்சி திட்டம்: இந்த நடவடிக்கை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில போலீஸுக்கும் பொருந்தும் என்பதால், அதற்கு தேவையான பல்நோக்கு ஐடியாக்களை இலவசமாக அள்ளி வீசுவதில் பெருமை கொள்கிறோம்!

நடராஜா ஐடியா
போலீஸ்காரரின் பணி இடத்தை அவருடைய வீட்டிலிருந்து குறைந்தது பத்து கிலோ மீட்டர் தூரத்திலாவது அமைத்து, அவர் தினமும் யூனிஃபார்மில் நடந்தே செல்ல வேண்டும் என்று சட்டம் போடலாம். இந்த கட்டாய சட்டத்தால், ஏறக்குறைய பெரும்பாலான போலீஸ்காரர்கள் தினமும் நடந்தே செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். அவர்களுக்கு, வாக்கிங் பயிற்சியுடன், ரோடுகளில் போலீஸ் நடமாட்டம் அதிகரித்து, நாட்டில் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. இதன் வழியாக நீதிமன்ற பணியாளர்களுக்கு பணிச்சுமை குறைந்து, அவர்கள் உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்திருக்க நேரிடும். பக்க விளைவாக, அவர்களின் தொப்பை அதிகரித்து, அதற்காக ஒரு ஸ்பெஷல் திட்டம் அமல் படுத்த வேண்டிய அவசியம் ஏற்படலாம்!

அளவு உணவு ஐடியா
தொப்பை போலீஸ்காரர்களுக்கு என பிரத்தியேக ஸ்பெஷல் உணவு கடைகள் திறக்கலாம். குங்குமச் சிமிழ் அளவிலான கப்புகளில் உணவு வழங்கும் இந்த உணவகங்களில்தான் போலீஸ்காரர்கள் சாப்பிடவேண்டும் என்று சட்டம் போடலாம். இதன் மூலம் போலீஸ்காரர்களின் சேமிப்பு அதிகரித்து, தொந்தி சேர்ப்பதற்கு மாற்றாக அவர்கள் வீடு போன்ற சொத்துகளை சேர்க்கலாம். இதனால், நலிந்து கிடக்கும் ரியல் எஸ்டேட் தொழில் வளர வாய்ப்புகள் ஏற்படும். அந்த வளர்ச்சி, வங்கிகளில், ரியல் எஸ்டேட் தொழிலுக்காக கடன் வாங்கியவர்களின் வாராக்கடன் குறையும் (ஆட்டோ கேப்பில் ஒரு பொருளாதார ஐடியாவும் விட்டாச்சு!).

ஆடல் பாடல் ஐடியா
பணியில் இருக்கும் ஒவ்வொரு போலீஸ்காரரும் ‘ஜிமிக்கி கம்மல்….’ போன்ற டிரெண்டியான ஒரு பாடலுக்கு உடலை வளைத்து, வேகமாக ஆடவேண்டும். அதைப் பார்த்து ரசிக்கும் பொதுமக்கள், அவர் வசம் இருக்கும் ‘தொப்பை குறைப்பு’ பயிற்சி நோட்டு புத்தகத்தில் கையெழுத்திட்டு அவர் ஆடி மகிழ்வித்ததை ஆவணப்படுத்த வேண்டும். ஒவ்வொரு போலீஸும் தினமும் குறைந்தது நூறு கையெழுத்தாவது பெற்றால்தான் அவருக்கு பிரமோஷன் என்ற திட்டம் வந்தால், தொப்பை குறைந்து, போலீஸிற்கும், பொது மக்களுக்கும் இடையேயான நட்பும் வளரும் என்பது நிச்சயம். இதனால், போலீஸ்பணியில் சேர விரும்புகிறவர்கள் அதிக அளவில் டான்ஸ் கற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள். இந்த ஐடியாவால், வேலையில்லாத பல டான்ஸ் டீச்சர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகும்.

குதிப்பு பயிற்சி ஐடியா
ஒரிஜினல் லைசென்ஸ் போன்ற ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்கள் பிடிபடும்போது, ஓட்டுனரை ஓரம் கட்டுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட போலீஸ்காரர், கால்களை பூமிக்கு மேல் ஒரு அடி உயரத்திற்கு உயர்த்தி, பத்து முறை குதித்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தவேண்டும் என சட்டம் இயற்றலாம். இது போன்ற குற்றவாளிகள் பத்து பேர் பிடிபட்டால், ஒரே நாளில் போலீஸ்காரரின் தொப்பை பத்து சதவீதம் குறைவது நிச்சயம். இம்மாதிரி சந்தோஷ குதிப்புகளுக்கு, போலீஸ்காரர்கள் பிரத்தியேக பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்.

இதனால், நாடு முழுவதும் ‘குதிப்பு’ பயிற்சி பள்ளிகள் முளைத்து, பலருக்கு வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும். பயிற்சிக் கட்டணத்தை ‘குதிப்பு’ வரி என்ற பெயரில், வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கலாம் (சைக்கிள் கேப்பில், நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு ஒரு ‘வரி’ ஐடியாவும் கொடுத்தாச்சு!). எம்பிக் குதிக்கும்போது தவறி கீழே விழும் தொப்பைதாரர்களுக்கு முதல் உதவிக்காக, ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வண்டிகளை நிறுத்தினால், வேலையில்லாமல் மொபைல் கேம் விளையாடிக் கொண்டிருக்கும் பல டிரைவர்களுக்கு வேலை கிடைக்கும். வாகன உற்பத்தி பெருகி, நாட்டின் ஜி.டி.பியும் வளர்ச்சி அடையும் (பிரதமர் மோடிக்கும் ஒரு ஐடியா வழங்கியாச்சு!).

ஓட்ட ஆக்டிங் ஐடியா
நாட்டு பாதுகாப்பில் பற்றுடைய ஒவ்வொரு குடிமகனும், தொப்பை போலீஸை கண்டதும் பயந்து ஓடுவது போல் நடிக்கலாம். சில கிலோ மீட்டர் தூரம் ஓடிய பிறகு, மூச்சிரைக்க துரத்திக்கொண்டு ஓடிவரும் போலீஸிடம் உண்மையைச் சொல்லி, ஒரு பூ கொடுத்து ‘விஷ் யூ லெஸ் தொந்தி’ என்று கை குலுக்கலாம். இதனால், அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஓட்டப்பந்தய போட்டிகளுக்கு சில குடிமகன்கள் தயார்படுத்தப்படவும் வாய்ப்பு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 13 வயது சிறுமியுடன் உடலுறவு – 3 பேருக்கு சிறை!
Next post சுருதிஹாசனுக்கு டிசம்பரில் திருமணம்… !!