By 20 February 2018 0 Comments

காவிரிப் பிரச்சினைக்கு உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு!!

‘பூஒன்று புயலானது’ என்பது போல், தமிழகத்துக்கும் அண்டை மாநிலங்களுக்கும் இடையில், 93 வருடமாகப் போர்க்களத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த காவிரிப் பிரச்சினைக்கு, இந்திய உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால், ஒரு விடிவுகாலம் பிறந்திருக்கிறது.

தமிழகத்தின் பங்கான, 192 டி.எம்.சி தண்ணீர், 177.75 டி.எம்.சியாகக் குறைந்து விட்டது. “மாநில உரிமை பறிபோய் விட்டது” என்ற, உச்சக்கட்டக் குரலை எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுப்பியிருக்கிறது.

“அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” என்று தி.மு.க சார்பில் வலியுறுத்தப்பட, “தண்ணீருக்குப் பதில், இந்தத் தீர்ப்பால் கண்ணீர் வந்திருக்கிறது” என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டொக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

விவசாயச் சங்கங்கள், ஆங்காங்கே போராட்டத்தில் குதித்துள்ளன. அ.தி.மு.கவுக்கு மிகப்பெரிய தலைவலியை உருவாக்கப் போகும் இந்தத் தீர்ப்பு, இனிவரும் காலங்களில் யார் துரோகம் செய்தது என்ற விவாதத்துக்கு, வழிவகுக்கும் என்றே, இப்போதைய சமிக்ஞைகள் தெளிவுபடுத்துகின்றன.

‘நடந்தாய் வாழி காவேரி’ என்பது பாடல் வரிகள். ஆனால், இன்றைக்கு ‘முடிந்தாய் காவேரி’ என்று, இந்தத் தீர்ப்பின் வாயிலாகப் பேச முடியாத சூழ்நிலையில் தமிழக விவசாயிகள், தமிழக எதிர்க்கட்சிகள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன.

கர்நாடகாவில் தொடங்கும் காவிரிப் படுகையில் உள்ள, 740 டி.எம்.சி தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது பற்றி, தமிழக, கர்நாடக மாநிலங்களுக்குள் நேரடியாகவும் கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்களுக்கு இடையில் கூட்டாகவும், இந்த நதிநீர்ப் பிரச்சினை, 1924இல் இருந்து தொடங்கி இன்றுவரை, நீதிமன்றங்கள், நடுவர் மன்றம், பேச்சுவார்த்தைகள் என்று பல கட்டங்களில் போராட்டத்தைச் சந்தித்து விட்டது.

மாநிலங்களுக்குள் ‘மல்லுக்கட்டு’ நடக்காத வருடங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்க, யுத்தமே நடத்த வேண்டிய சூழல் இன்றைக்கும் இருக்கிறது. அதற்கான தீர்வுதான் இப்போது கிடைத்திருக்கிறது. என்றாலும், தமிழகத்துக்கான தண்ணீரைக் குறைத்தமை, பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.

“ஆறு வாரங்களுக்குள், காவிரி அதிஉயர் சபையை அமைக்க வேண்டும், இந்த ஆறு வாரங்களுக்குப் பிறகு, கால அவகாசம் நிச்சயம் நீட்டிக்கப்பட மாட்டாது” என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்து. இந்தத் தீர்ப்பின்படி, மாதந்தோறும் திறந்து விடும் தண்ணீரின் அளவு, 15 வருடங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்றெல்லாம், உச்சநீதிமன்றம் தீர்ப்பை அமுல்படுத்த மத்திய அரசாங்கத்துக்கும், சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்களுக்கும் இறுக்கமான உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தாலும், கடந்த காலங்களில் மத்திய அரசாங்கமோ, சம்பந்தப்பட்ட மாநிலங்களோ உச்சநீதிமன்ற உத்தரவுகளை, உடனடியாக நிறைவேற்றிவிடவில்லை என்பதையும் புறந்தள்ளி விட முடியாது.

இடைக்காலத் தீர்ப்பை, கர்நாடகம் ஏற்காமல் பிரச்சினை செய்தது. காவிரி நதி நீர் ஆணைக்குழு அமைப்பதற்குத் தடங்கல் செய்தது. இறுதித் தீர்ப்பை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, அவ்வப்போது தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தபோது, அதையும் ஏற்க மறுத்தது எல்லாம் கடந்த கால அனுபவங்கள்.

காவிரி அதிஉயர் சபையை மூன்று தினங்களுக்குள் அமையுங்கள் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும், ‘உங்களுக்கு அப்படி உத்தரவிடும் அதிகாரம் இல்லை’ என்று வாதிட்டு, அதைச் செய்யாமல் இருந்தது மத்திய அரசாங்கம்.

ஆகவே, தற்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள காலக்கெடுவுக்குள் மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கங்களும் நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டால், காவிரிப் பிரச்சினைக்கான தீர்வு, பாதிக் கிணற்றைத் தாண்டி விட்டதாகவே அர்த்தம்.

காவிரியின் கடந்தகால வரலாறுகளைப் பார்த்தால், அமைச்சர்களின் பேச்சுவார்த்தை மூலம் தமிழகமும், கர்நாடகமும் தீர்வு கண்டு கொள்ள முடியும் என்றும், முதலமைச்சர்களுக்குள் பேசிக் கொள்ளலாம் என்றும் எடுத்த முடிவுகள் எவையும், பிரச்சினைக்குத் தீர்வைக் காணவில்லை. பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கருணாநிதி, முதலமைச்சராகவும் பேசிப் பார்த்தார்.எதிர்க்கட்சி வரிசையில் இருந்த
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரும் கர்நாடக மாநில முதலமைச்சர்களிடம் பேசிப் பார்த்தார்கள். நடுவர் மன்றத்துக்கு முன்பும் சரி, பின்பும் சரி காவிரிப் பிரச்சினை பேச்சுவார்த்தையில் தீராது என்பது முடிவானது மட்டுமல்ல; இறுதியான நிலைப்பாடாகவே உருவாகி விட்டது.

இதுபோன்ற சூழ்நிலைகளை மனதில் வைத்து, முதலில் தி.மு.க சார்பில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண, நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார். அதை எம்.ஜி.ஆரும் தொடர்ந்தார். என்றாலும், மத்தியில் பிரதமராக வி.பி.சிங் இருந்த போதுதான், காவிரி நதி நீர்ப் பிரச்சினையைத் தீர்க்க, நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

1990களில் அமைக்கப்பட்ட இந்த நடுவர் மன்றத்துக்கு, இடைக்காலத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை தேடி, உச்சநீதிமன்றத்துக்குப் போனார் கருணாநிதி.
“அதிகாரம் உண்டு” என்று அளித்த தீர்ப்பின் அடிப்படையில், ஜெயலலிதா முதன் முதலாக முதலமைச்சராக இருக்கும் போது, இடைக்காலத் தீர்ப்பு வெளிவந்தது. தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. காவிரி நீர் வழங்க வேண்டும் என்று அப்போது உத்தரவிடப்பட்டது.

அந்தத் தீர்ப்பை, அரசிதழில் வெளியிட, ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டே உண்ணாவிரதம் இருந்தார். காவிரி கலவரம், இருமுறை 1992இலும் 2017இலிலும் கர்நாடகாவில் நிகழ்ந்து, தமிழர்கள் தாக்கப்பட்டதை மறந்து விட முடியாது.

இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில், காவிரி வரைவுத்திட்டமொன்றை உருவாக்கியவர், பிரதமராக இருந்த ஐ.கே. குஜ்ரால். அப்போது அவரது அமைச்சரவையில் இருந்த தி.மு.க, இதற்கு வழிகோலியது. ஆனால், இதை அ.தி.மு.க கடுமையாக எதிர்த்தது. இந்நிலையில், ஆட்சிக்கு வந்த பிரதமர் வாஜ்பாய், காவிரி வரைவுத் திட்டத்தின் அடிப்படையில், காவேரி நதி நீர் ஆணைக்குழு அமைத்தார்.

அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதியையும் கர்நாடக முதலமைச்சராக இருந்த பாட்டீலையும் அழைத்து, ஒன்பது மணி நேரத்துக்கும் மேல் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த ஆணைக்குழுவை அமைத்தார் வாஜ்பாய். ஆனால், “காவிரி நதி நீர் ஆணைக்குழு கூடிக் கலையும் கிளப் போல் அமைக்கப்பட்டுள்ளது” என்று கடுமையாக விமர்சித்தார், எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஜெயலலிதா.

இத்தனைக்கும் அப்போது, ஜெயலலிதாவின் ஆதரவில்தான் வாஜ்பாய் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணைக்குழு, தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட போது, அதைக் கர்நாடகம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுபோன்ற சூழலில், இறுதித் தீர்ப்பு வெளிவந்த பிறகு, அதை அரசிதழில் வெளியிட மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் தயங்கி வந்தது. தி.மு.க அக்கூட்டணியில் இருந்தும் அரசிதழில் முடிவை வெளியிட வைக்க முடியவில்லை.

ஆகவே, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த நேரத்தில், உச்சநீதிமன்றத்துக்குப் போய் உத்தரவு பெற்று, அதன் பேரில் காவிரி இறுதித் தீர்ப்பு 2013 ஆம் ஆண்டில், அரசிதழில் வெளியிடப்பட்டது.

ஆனால், 2018 ஆகிய இன்றுவரை, காவிரி அதிஉயர் சபை அமைக்கப்படவில்லை. இப்போதுள்ள பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கமும் அந்த வாய்ப்பைக் கோட்டை விட்டது. ஆளுமை மிக்க தலைமைகளாக, முதலமைச்சர் பதவியில் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் இருந்த போதே, காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தை உச்சநீதிமன்ற, நடுவர் மன்ற உத்தரவுகளை ஏற்றுக் கொள்ள வைக்க முடியவில்லை.

இத்தனைக்கும் அந்தக் காலகட்டங்களில் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசாங்கமோ அல்லது பா.ஜ.க அரசாங்கமோ தி.மு.கவையோ அல்லது அ.தி.மு.கவையோ நம்பி ஆட்சியில் நீடித்தன. ஆனால், இன்றுள்ள பா.ஜ.க அரசாங்கத்துக்கு அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளின் ஆதரவும் மத்தியில் ஆட்சியில் நீடிக்க தேவையில்லை.

ஆனால், பா.ஜ.கவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் விரைவில் நடக்கப் போகும் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வேண்டும். ஆகவே, கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகின்ற நேரத்தில், காவிரி அதிஉயர் சபை அமைக்கப்பட்டு, தமிழகத்துக்கு இப்போதைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு மூலம் உள்ள, 177.75 டி.எம்.சி தண்ணீராவது கிடைத்து விடுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.

காவேரி அதிஉயர் சபை அமைக்க வேண்டும். பிறகு அந்த சபையின் இறுதித் தீர்ப்பின்படி, மாதந்தோறும் வழங்கும் காவிரி நீர் பற்றிய ஆணை பிறப்பிக்க வேண்டும். இவற்றைக் கர்நாடக மாநில அரசாங்கம் மதித்து நிறைவேற்ற வேண்டும்.

அண்டை மாநிலங்களுக்குள் நல்லுறவு நிலைக்க வேண்டும் என்றும், அரசியலைப் பார்க்காமல் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டால் மட்டுமே, உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தக் காவிரித் தீர்ப்பு மூலம், கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு நீர் கரைபுரண்டு ஓடி வரும்.அதற்குத் தீர்வு, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சிகளின் கையில்தான் இருக்கிறது.Post a Comment

Protected by WP Anti Spam