48 புலிகள் பலி – முக்கிய தளம் “மைக்கேல் பேஸ்” பகுதி பிடிபட்டது
விடுதலைப் புலிகளின் முக்கிய ராணுவத் தளமான மைக்கேல் பேஸ் பகுதியைக் கைப்பற்றி விட்டதாகவும், இது தொடர்பான கடும் சண்டையில் 48 விடுதலைப் புலிகளைக் கொன்றுவிட்டதாவும் இலங்கை ராணுவம் கூறியுள்ளது. இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாக அவ்வப்போது இலங்கை ராணுவம் செய்திகள் வெளியிட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்து விடுதலைப் புலிகள் பெரிதாக எந்த ரியாக்ஷனும் காட்டுவதில்லை. 2002-ம் ஆண்டிலிருந்து இதுவரை 4700 விடுதலைப் புலிகளை தங்கள் ராணுவம் கொன்று விட்டதாகவும், பதிலுக்கு 425 ராணுவத்தினரை மட்டுமே இழந்திருப்பதாகவும், இந்த போருக்கு இந்தியா பேருதவி புரிந்ததாகவும் சமீபத்தில் இலங்கை ராணுவ தளபதி சனத் பொன்சேகா தெரிவித்திருந்தார். இப்போது அவர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் புலிகளின் முக்கிய முகாமைக் கைப்பற்றியதாகக் கூறியுள்ளார். அவர் அறிக்கையிலிருந்து… வடக்கில் முல்லைத் தீவு காட்டுப் பகுதிக்கு அருகிலிருக்கும் புலிகளின் முக்கியக் கேந்திரம் மைக்கேல் பேஸ். இங்கிருந்துதான் புலிகள் தங்கள் வான் வழித் தாக்குதல்களை நடத்துவதாகக் கூறப்படுகிறது. 200 சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ள இந்த மிக முக்கியமான ராணுவ தளத்தைக் கைப்பற்ற யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, வெலிஓயா பகுதிகளிலிருந்து ராணுவத்தினர் ஒருங்கிணைந்து தாக்குதல் தொடுத்தனர், கடந்த மூன்று தினங்களாக. இச்சண்டையில் 17 புலிகள் நேற்று கொல்லப்பட்டனர். வெலிஓயா அருகே வடக்கு கிரிப்பன்வேவாவில் நடந்த சண்டையில் 6 போராளிகள் கொல்லப்பட்டனர். அம்பட்டன்குளம் அருகே நடந்த சண்டையில் இரு புலிகளும், நவந்தகுளம் சண்டையில் 2 புலிகளும், துனிக்கை, நொச்சிக்குளம் பகுதிகளில் தலா இரண்டு விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். நொச்சிக்குளம் பங்கர் ஒன்றைக் கைப்பற்றியதோடு, அங்கிருந்த மூன்று புலிகளையும் கொன்றுவிட்டதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளார் பொன்சேகா. ஆனால் ராணுவத் தரப்பில் ஒரு வீர்ர் மட்டுமே பலியானதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து புலிகள் தரப்பில் எந்த பதிலறிக்கையும் இல்லை.
Average Rating