10 லட்சம் சிகரெட் துண்டுகளை சேகரித்து சாதனை படைத்துள்ள பெண்!!
கலிபோர்னியாவைச் சேர்ந்த சாலி டாலி, புகைப்பழக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக, புகைத்துவிட்டுத் தூக்கி எறியும் சிகரெட் துண்டுகளை அப்புறப்படுத்தி, சேகரித்தும் வருகிறார்.
கடந்த 14 ஆம் திகதியுடன் 10 லட்சம் சிகரெட் துண்டுகளைச் சேகரித்து விட்டிருக்கிறார். தினமும் இடுக்கி, குப்பைத் தொட்டியுடன் கிளம்பி விடுகிறார். கண்ணில் படும் சிகரெட் துண்டுகளைச் சேகரிக்கிறார்.
தன்னுடைய சிறிய கருவியில் எண்ணிக்கையைக் குறித்துக்கொள்கிறார். “பத்து லட்சம் சிகரெட் துண்டுகளை மூன்றரை ஆண்டுகளில் நான் சேகரித்ததை எல்லோரும் சாதனையாக நினைக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இது வேதனை. சிகரெட் பிடிப்பவர்களை மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் தீங்கை விளைவிக்கிறது. குப்பைத் தொட்டியில் போடாமல், தெருவில் வீசும் சிகரெட் துண்டுகளே இவ்வளவு என்றால், மொத்த எண்ணிக்கையை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.
ஒரு சில நாட்கள் 3 ஆயிரம் சிகரெட் துண்டுகளைக் கூடச் சேகரித்திருக்கிறேன். சிகரெட் பிடிப்பவர்களிடம் குப்பைத் தொட்டியில் முறையாகப் போடச் சொல்வேன். பிறகு சிகரெட் எவ்வளவு தீங்கானது என்பதை விளக்கி, பழக்கத்தை விட்டு விடும்படிக் கேட்டுக்கொள்வேன். புகைப் பிடிப்பதை விடுகிறார்களோ இல்லையோ, தெருவில் வீசாமல் குப்பைத் தொட்டியில் வீசும் வழக்கத்தையாவது சிலர் கடைபிடிப்பது என்னுடைய முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறேன்” என்கிறார் சாலி டாலி.
Average Rating