ஊர் நாய்களை பார்த்து அல்சேசன்கள் குரைப்பது போல…!!

Read Time:16 Minute, 4 Second

ஊர் நாய்களைப் பார்த்து அல்சேசன் நாய்கள், தூரத்தில் நின்று குரைக்கின்ற கதையாகிப்போனது, நமது நாட்டின் இன்றைய அரசியல் சூழல்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்து, மார்தட்டிக் கொண்டவர்களெல்லாம், பேசாமல் பெட்டிப்பாம்புகளாக அடங்கிப்போனார்கள். 2014ஆம் ஆண்டின் இறுதிவாக்கில், அப்பத்தை உண்டுவிட்டு அடுத்த நிமிடம், “நான் அவர்களுடன் ஒன்றுமில்லை” என்று, தொடங்கி வைக்கப்பட்ட நல்லாட்சிக்கான முயற்சி, 2015 ஜனவரியில் மஹிந்தவைத் தூக்கி எறிந்தது.

ஆனால், அதை முறியடிப்பதற்கான முயற்சியிலிருந்து, தான் விலகப் போவதில்லை என்ற பிடிவாதத்துடன், ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு மஹிந்த ராஜபக்ஷ உறுப்பினரானார். ஹம்பாந்தோட்டையில் அவரது மகனும் வெற்றிபெற்றார். அது ராஜபக்ஷ குடும்பத்துக்கு இரட்டை வெற்றி என்று கூடச் சொல்லலாம்.

அரசியலில் தம் பலத்தை நிரூபிப்பதற்காகவே போட்டிபோடுகிற தன்மையென்பது, ஒன்றும் புதிதல்ல. அது, எல்லோருக்கும் உள்ளதொரு பண்புதான்.

அந்தப் பண்பு, சிறியது முதல் பெரியது, பலமானது இயலாதது என்ற பாகுபாட்டுக்கும் அப்பாற்பட்டதே. அதே நிலைதான் அரசியலுக்கும். அந்த வகையில், மஹிந்த ராஜபக்ஷ அடுத்த தடவை, வடக்கில் போட்டியிட்டால்கூட, ஆச்சரியப்படுவதற்கில்லை.

இலங்கை வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (கடந்த காலத்தில் கூட்டுச் சேர்ந்த, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) ஆகிய இரண்டு கட்சிகளே, பெரும்பான்மைக் கட்சிகளாகக் கொள்ளப்படுகின்றன. தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு), ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி என்பவையெல்லாம், சிறுபான்மைக் கட்சிகள் தான்.

“முதலை விழுங்குகிறது விழுங்குகிறது என்று, உண்மையிலேயே விழுங்கியது” என்பது போலத்தான், இலங்கையின் அரசியல் என்று சொல்வதை விடவும், “அரசனைக் கண்டு புருசனைக் கைவிட்டுவிட்டோமோ?” என்கிற அளவில், நாட்டு மக்கள் எல்லோரும் சிந்திக்கின்ற காலம்தான் இன்றைய காலம்.

“பிச்சை வேண்டாம், நாயைப் பிடி” என்று, தாம் உண்டு தம் வேலையுண்டு என்று மக்கள், தம் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கையில்தான், உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அனைவருமே, குழப்பத்துக்குள் காணப்பட்ட ஒரு நிலைமையைக் காணக்கூடியதாக இருந்தது.

இதற்கு மத்தியில் தான், மஹிந்தவின் மீள்வருகை இடம்பெற்றிருக்கிறது. ஆனால், மஹிந்த ஏன் மீள வரவேண்டும் என்றுதான் பலரும் கேட்கிறார்கள். அதாவது, மஹிந்தவைத் தூக்கி விழுங்கிவிடுவோம் என்பது போன்று வந்ததுதான், இந்த நல்லாட்சி அரசாங்கம்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை, சீனாவுக்குக் கொடுக்க முயன்று பெரும் பிரச்சினையைக் கட்டிக்கொண்டார்கள்.

அடுத்து, கொழும்புத் துறைமுக நகரத்திட்டத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளைச் செய்தார்கள். அதுவும், பெரும் பாம்பாக வந்து விழுங்கப் பார்த்தது. அதிலிருந்து பலி கொடுத்துத் தப்பிக் கொண்டார்கள்.

அதை விடவும், தனியார் மருத்துவக் கல்லூரி, பெரும் பூதாகரமான பிரச்சினையாக, இந்த அரசாங்கத்தில்தான் வெடித்தது. இன்னமும் சரியான அமைதியானதொரு நிலைமையை ஏற்படுத்த முடியாமல்தான் இருக்கிறது.

அரசியலானது, நேர்மை நிறைந்த அபிவிருத்தியினால் நிரம்பியிருக்க வேண்டும். ஆனால், ஏற்கெனவே இருந்ததைச் சீர்மை பெறச் செய்வோம் என்ற இறுமாப்புப் பேச்சுடன் வந்தவர்கள் தொடர்பில் மக்கள், இப்போது புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தை வேறு யார் பயன்படுத்திக் கொண்டார்களோ இல்லையோ, மஹிந்த ராஜபக்ஷ சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்.

நாட்டைப் பொறுத்தவரையில், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில், உரிமை அரசியல் ஒரு பக்கமாகவும், அதற்குச் சமாந்தரமாக, அபிவிருத்தி அரசியலும் புகுந்து விளையாடின.

தமிழர்களைப் பொறுத்தவரையில், “எழுபது ஆண்டுகளாக, இலங்கையில் நடைபெறும் உரிமைப் போராட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற வேண்டும்; அப்படியானால் தமிழினத்தின் உரிமைக்காகப் போராடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற வேண்டும். இதற்கான அடிப்படைத் தேர்தலாக, கிராமிய மட்டத்திலான மக்களின் ஈடுபாட்டை நாம் காட்ட வேண்டும்; அதேநேரம் அதனுடன் நலிந்து போயிருக்கும் நமது மக்களின் மண்ணுக்கான அபிவிருத்தியும் மேலோங்க வேண்டும். இதற்கு முன் இப்பதவிகளிலிருந்தவர்கள் செய்த மோசடிகளால், முழுமையானதாக அமையவில்லை. இரண்டு விடயங்களும் ஒருங்கே வெற்றி பெற வேண்டுமானால், மக்களாட்சி முழுமை பெறவேண்டுமாக இருந்தால், மலரப்போகும் உள்ளூராட்சி சபைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதாக இருக்க வேண்டும்” என்று பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்பை இல்லாமல் ஆக்கி, தமிழினத்தின் ஒற்றுமையைச் சிதறடிக்க, ஏனைய அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுவினர்களும் கங்கணம்கட்டி நிற்கிறார்கள்.

தற்பொழுது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை முழுவடிவம் பெற்று நிறைவேறுவதன் மூலம், நம்மினம் உரிமை பெற்றிட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி மிக அவசியமாகின்றது.

எனவே நமது வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வது நமது தார்மீகக் கடமையாகும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இருந்தாலும் மக்களின் முடிவு காரணமாக, இப்போதும் யாரும் ஆட்சியமைக்க முடியாத, ஏனைய கட்சிகளுடன், சுயேட்சைக் குழுக்களுடன் கூட்டுச் சேர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதாகவே இருக்கிறது.

இந்தநிலையில் தான், இலங்கையில் இப்போதைய அரசியல் இருக்கிறது. யார் யாரின் காலில்விழுவது என்பதை விடவும், யாரிடமிருந்து யார் தப்பிக்கொள்வது என்பதே முக்கியம் பெறுகிறது. காரணம், ஆரம்பத்தில் சொன்னதைப்போல, அல்சேசன்களே பயந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

அரசமைப்பு மாற்றம், தேர்தல் முறை மாற்றம், எல்லை நிர்ணயம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கையில், காலம் இழுத்தடிக்கப்பட்டு, தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படவில்லை; திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டு, இறுதியில் வட்டாரமும் விகிதாசாரமும் சேர்ந்ததாக, ஒரு முறையைக் கொண்டு வந்திருக்கிறோம் என்று திருப்திப்பட்டுக் கொண்டார்கள்.

ஆனால், இப்போது யாருக்கும் ஆட்சியமைத்துக் கொள்ள முடியாத நிலை தோன்றியிருக்கிறது. உண்மையில் நடந்து முடிந்த இந்தத் தேர்தலில், விடியும் முன்பிருந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும், விடிந்தபிறகு இல்லாமல்போனதுதான் அதிகம் என்று சொல்லலாம்.

இந்நிலையில், தமிழர்கள் ஆட்சி அமைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் இணைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே நிலைப்பாடு. இருந்தாலும் தமிழ்த் தேசியக் கொள்கையளவில் ஒன்றுபட்டிருக்கக் கூடிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதில், எந்த விதமான இடரும் இல்லை.

இருந்தாலும், கொள்கைகளுக்கப்பால், எதிர்க்கட்சிகள் என்று சொல்லப்படுகிற கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது, ஆட்சேபனைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்குமா என்பதும் கேள்விதான்.

இந்த நிலையில் தான், துண்டு துண்டாகப் பிளந்து போயிருக்கும் தமிழ்க் கட்சிகள், எப்படி ஒன்று சேரும், யார் அதற்கு மணி கட்டுவது என்றெல்லாம் நாம் சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலை இந்தத் தேர்தலால்தான் வந்தது. சிறுபான்மைக் கட்சிகளில் பலதுக்கு பலவுடன் கோபம், காழ்புணர்ச்சி, பொறாமை என வேண்டாத எல்லாம் இருக்கின்றன.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் சேரட்டும் பார்ப்போம் என்று ஒரு சிலரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் சேர்கிறார்களா பார்க்கலாம் என்று இன்னும் பலரும், இதே போன்று வேறு தரப்புகளும் காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதேநேரத்தில், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் களமிறங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்கிற அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும், யாருடன் இணைவார்கள் என்றுகூட விமர்சனங்கள் பேச்சப்படுகின்றன.

ஆனால், தேர்தல் முறை மாற்றத்தால் உருவான விகிதாசார ஆசனங்களை வைத்துக் கொண்டு மேயர் பதவி, பிரதி மேயர் பதவி, தவிசாளர் பதவி, பிரதித் தவிசாளர் பதவி தரவேண்டும் என்று பேரம் பேசுகின்ற கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் கூட இருக்கத்தான் செய்கின்றன.

கடந்த காலங்களைப் போல், தேர்தல் மேல் கொண்ட வெறுப்பால் வாக்களிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டு விடும் என்றிருந்த நிலையில், உருவாகிப்போன 75 சதவீதத்தைத் தாண்டிய வாக்களிப்பு, தமிழர் தரப்பு இனி என்ன செய்யவேண்டியிருக்கும் என்ற கேள்வியையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்த இடத்தில்தான், தமிழ் மக்களது பிரச்சினைக்கு இந்தக்காலத்தில் தீர்வு கிடைக்குமா என்ற பெரும் சிந்தனையையும் நாம் நடத்தவேண்டிய ஒரு சூழல் உருவாகிறது. கிடைக்கிற சந்தர்ப்பங்களைச் சரியாகவும் முழுமையாகவும் பயன்படுத்தாத ஒருவன் வாழ்க்கையில் மட்டுமல்ல எந்த ஒரு விடயத்திலும் வெற்றியைக் காணமுடியாது என்பதற்கு உள்ளூராட்சித் தேர்தல் மஹிந்த அணியின் வெற்றி மற்றுமொரு உதாரணமாகும்.

இது போன்றதொரு ஒன்றுமில்லாத பிரம்மை பிடித்த நிலை வரப்போகும் மாகாணசபைத் தேர்தலிலும் ஏற்பட்டுவிடுமா என்று சிந்திப்பதற்கு அப்பால், இன்னும் 4 வருடங்களின் பின்னர் நடக்கப்போகும் உள்ளூராட்சித் தேர்தலிலும் இருக்குமா அல்லது மாற்றப்படுமா என்ற கேள்வியையும் வெளியில் அவதானிக்க முடிகிறது.

எல்லா அரசியல்வாதிகளிடமும், அரசியல் கட்சிகளிடமும் உருவாகியிருக்கும் இந்த வட்டார விகிதாசார முறைத் தேர்தல் மாற்றம், மீண்டும் வட்டாரத்தை மட்டும் கொண்டுவருமா, விகிதாசாரத்தை மட்டும் தொடருமா என்பதற்கான பதிலையே இது நாடிநிற்கின்றது.

இதைச் சாத்தியப்படுத்துவதற்கும் பெரும்பான்மை மக்களின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குமான இயலுமையையும் உருவாக்குவதற்குமான அரசியல் சூழல் இலங்கையில் ஏற்படுமா என்பதுதான் இன்றைய நாடாளுமன்ற அரசியல் சூழலில் மிகப்பெரிய விடை தெரியா விடுகதை. இந்த விடுகதைக்கு அல்சேசன்களிடமிருந்தா ஊர் நாய்களிடமிருந்த பதில் கிடைக்கும் என்பது விழிப்புக்குறி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐரோப்பாவில் கடும் குளிர் – இதுவரை 55 பேர் பலி!!
Next post (மகளிர் பக்கம்)கார்மேகக் கூந்தல் வேண்டுமா?