புற்றுநோய் ஆராய்ச்சிக்காக அமெரிக்க வாழ் இந்தியருக்கு ரூ.7 கோடி நிதியுதவி!!
புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சிக்காக அமெரிக்க வாழ் இந்தியருக்கு ரூ.7 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாழ்ந்து வரும் நவீன் வரதராஜன், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் வேதியியல் மற்றும் மூலக்கூறு இணை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். புற்றுநோயால் குறிப்பாக கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை குறித்து இவர் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இவருக்கு டெக்சாஸ் மாகாணத்தின் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புற்றுநோய் தடுப்பில் டி-செல்களின் ஆற்றலை அதிகரிப்பது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள ரூ.7 கோடி நிதி அளித்துள்ளது.
இவருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ள உயிரியல் மற்றும் உயிர்வேதியியல் இணை பேராசிரியர் சாங்ஹுக் சங் என்பவருக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இவர் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சை குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி குறித்து வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டி செல் இம்யூனோதெரபி சிகிச்சையில் புற்றுநோய் நோயாளிகளுக்கு சீராக உருவாக்கப்பட்ட டி செல்களை உட்புகுத்தி, அதன்மூலம் கட்டிகளை கண்டுபிடித்து அழிக்கும் ஆராய்ச்சிக்கு இந்த நிதியை பயன்படுத்த உள்ளேன்’ என்று கூறியுள்ளார்.
உலகளவில் பெண்கள் அதிகளவில் உயிரிழக்கும் 4வது புற்றுநோயாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளது. இந்த நோய் குறித்த ஆராய்ச்சியில் கடந்த 10 வருடங்களாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
Average Rating