By 7 March 2018 0 Comments

(கட்டுரை)ரணிலின் பதவி பறிபோகுமா?

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் தாக்கம், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஐ.தே.கவுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள், அதன் தலைமைத்துவத்துக்கான சவாலாகவும் மாறியிருக்கிறது.

ஐ.தே.கவில் எப்போதுமே தலைமைத்துவச் சிக்கல்கள் இருந்து வந்தமை வரலாறு. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தலைவர்களாக மேலெழும் போது, இந்தச் சிக்கல்கள் ஏற்பட்டு வந்துள்ளன.
ஐ.தே.கவின் தலைவராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கவுக்கும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்கவுக்கும் இடையிலான தலைமைத்துவச் சிக்கலே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கக் காரணமானது.

அதற்குப் பின்னர், டட்லி சேனநாயக்கவுக்கும் ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கும் இடையிலும் தலைமைத்துவம் தொடர்பான முரண்பாடுகள் இருந்தன.

அதேநெருக்கடியை ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் எதிர்கொண்டார். அவர் ஜனாதிபதியாகவும் கட்சித் தலைவராகவும் இருந்த போது, தனது வாரிசாக காமினி திசநாயக்கவை வளர்த்துக் கொண்டிருந்தார். ஆனால், பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாச, ஜே.ஆர்.ஜெயவர்த்தனவையே அச்சுறுத்தும் அளவுக்கு வலுவானவராக மாறினார்.

பின்னர், பிரேமதாச கட்சித் தலைவராக மாறியபோது, அவருக்கு எதிராக காமினி திசநாயக்கவும் லலித் அத்துலத் முதலியும் போர்க்கொடி உயர்த்தினார்கள்.

பின்னர், ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்திலும் கூட சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களின் எதிர்ப்புகள், சவால்களை அவர், சந்தித்து வந்திருக்கிறார்.

ஐ.தே.கவின் வரலாற்றில் காணப்பட்ட தலைமைத்துவம் தொடர்பான போட்டியின் நீட்சி, இப்போதும் தொடர்கிறது.

1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, கடந்த 24 ஆண்டுகளில் மிகப்பெரிய சோதனைகளைச் சந்திக்க நேரிட்டது.

சந்திரிகா குமாரதுங்கவினதும், மஹிந்த ராஜபக்ஷவினதும் ஆட்சிக்காலங்களில் நீண்டகாலம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த போதும் 1999இல் சந்திரிகா குமாரதுங்கவுடனும், 2005இல் மஹிந்த ராஜபக்ஷவுடனும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த போதும்-

2001 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், 2014இல் ஊவா மாகாண சபையைக் கைப்பற்றிய அதற்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த 17 தேர்தல்களில் ஐ.தே.க தோல்வியடைந்த போதும்-
கடைசியாக இரண்டு ஜனாதிபதி தேர்தல்களில் ஐ.தே.க வேட்பாளர்களை நிறுத்த முடியாமல்போன போதும், ரணில் விக்கிரமசிங்க சாதுரியமாகத் தனது தலைமைத்துவத்தைக் காப்பாற்றிக் கொண்டார்.

ஐ.தே.கவின் வரலாற்றில், ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ்தான், ஐ.தே.க அதிககாலம் அரசியல் வனவாசத்தை எதிர்கொண்டிருக்கிறது. அதிக சவால்களையும் சந்தித்திருக்கிறது.

ஆனாலும், ஜே.ஆர்.ஜெயவர்த்தன, பிரேமதாச போன்ற வலுவான தலைவர்களை விடவும், ரணில் விக்கிரமசிங்க அதிகம் தாக்குப் பிடிக்கும் தலைவராக நீடித்து வந்திருக்கிறார்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த காலத்தில், ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.கவின் தலைவராக நீடிப்பதை, விரும்பியிருந்தார் என்றொரு கதை கூறப்படுவதுண்டு. அதேபோல, இப்போது ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.கவின் தலைவராக நீடிப்பதை, மேற்குலகம் விரும்புவதாகவும் பேச்சு உள்ளது.

ரணில் விக்கிரமசிங்க, கட்சிக்குள் தனக்கு எதிராகக் கலகக் குரல்கள் எழும்பிய போதெல்லாம், அதை மிகத் திறமையாக எதிர்கொண்டு வந்திருக்கிறார். அவ்வப்போது, கட்சிக்குள் மறுசீரமைப்பு என்ற பூச்சாண்டியைக் காட்டி, கரு ஜெயசூரிய, சஜித் பிரேமதாச போன்றவர்களை அவர் சமாளித்துக் கொண்டார்.

ஒரு கட்டத்தில் சஜித் பிரேமதாசவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான மோதல்கள் பகிரங்கமாகவே நடக்கத் தொடங்கியபோது, சஜித்துக்கு பிரதித் தலைவர் பதவியை வழங்கி, அந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

அது, 2014 ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.கவின் வெற்றிக்கும் வழி வகுத்தது. இன்று வரையில், சஜித் பிரேமதாச அமைதியாக இருப்பது, ரணில் விக்கிரமசிங்கவுக்குச் சாதகமான விடயமாகவே இருக்கிறது.

ஐ.தே.கவின் அடுத்த கட்டத் தலைமைத்துவத்துக்கான போட்டியில், கட்சியின் முன்னாள் தலைவர்கள் பலரின் நேரடி மற்றும் குடும்ப வாரிசுளும் இருக்கின்றனர்.

உதாரணத்துக்கு, டி.எஸ்.சேனநாயக்கவின் பேரன், வசந்த சேனநாயக்க, அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நெருங்கிய உறவினரான ருவான் விஜேவர்த்தன, பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச, காமினி திசநாயக்கவின் மகன் நவீன் திசநாயக்க என்று அரசியல் வாரிசுகள் பல அடுத்த கட்டப் போட்டிக்காகக் காத்திருக்கின்றன.

அதேபோல, ஒரு காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்குச் சவாலாக இருந்த சபாநாயகர் கரு ஜெயசூரியவும் கூட, அவரைத் தாங்கிப் பிடிப்பதில் உறுதியாக இருக்கிறார்.

ஐ.தே.கவுக்குள் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்துக்கு எதிராக உயர்மட்டத் தலைவர்கள் யாரும் இப்போது குரல் எழுப்பவில்லை. அவருக்கு எதிரான போர்க்கொடி, ஐ.தே.கவின் மூன்றாவது மட்டத் தலைமையில் இருந்தே எழுந்திருக்கிறது.

பாலித ரங்க பண்டார, லசந்த அழகியவன்ன போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான், இப்போது ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற குரலை எழுப்பியுள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மட்டத்தில் இருந்து எழுந்திருக்கின்ற இந்த எதிர்ப்பின் பின்னணியில் உள்ள காரணங்களும் சந்தேகத்துக்குரியவை தான்.
இப்போதைய நிலையில், ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைப் பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்துபவராக மஹிந்த ராஜபக்ஷவே மாறியிருக்கிறார்.

ஏனென்றால், ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.கவின் உறுதியான தலைவராக இருக்கும் வரையில், அவரைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ.

அண்மைய அரசியல் குழப்பங்களின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர், மஹிந்த அணியினருடன் சேர்ந்து ஆட்சியைப் பிடிக்க முற்பட்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட விரும்பியோ விரும்பாமலோ அதற்கு ஒத்துழைத்துச் செயற்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஆனாலும், 19 ஆவது அரசமைப்பு திருத்தச்சட்டம் தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கவசமாக மாறியது. 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி, பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. இதைச் சட்டமா அதிபர், ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்திய பின்னர் தான், பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் முடிவை அவரும் கைவிட நேரிட்டது. இதனால் தான், கூட்டு அரசாங்கம் இன்று வரை காப்பாற்றப்பட்டு வருகிறது.

ஜனாதிபதிக்கு நெருக்குதல் கொடுத்து அதைச் செய்விக்க முடியாது என்ற நிலையில், பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரைணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்ற வேண்டும். அதைத் தாம் செய்தால், போதிய ஆதரவு கிடைக்காது என்பது மஹிந்த அணிக்குத் தெரியும்.

எனவேதான், ஐ.தே.கஇல் இருந்தே, ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்துக்கு எதிராகச் சிலரைத் தூண்டி விட முயற்சி எடுக்கப்படுகிறது. ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரவும் தயங்கமாட்டோம் என்று பாலித ரங்க பண்டார கூறியிருப்பதன் பின்னணி, இதுவாக இருக்கலாம்.

ஐ.தே.கவின் ஒரு பகுதியினர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்தால், அதைத் தாம் ஆதரிப்போம் என்று உடனடியாகவே அறிவித்திருக்கிறது ஒன்றிணைந்த எதிரணி. ஜே.வி.பியும் அதற்குச் சாதகமாகக் கருத்தை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில்,
ஐ.தே.கவுக்குள், ரணிலின் தலைமைக்கு எதிராகச் செயற்படக் கூடியவர்கள், எத்தனை பேர் உள்ளனர் என்பது, வெளியே தெரியாத இரகசியமாக இருக்கிறது.

ஒருவேளை, அந்த அணி பலமானதாக இருந்தால், ஒன்றிணைந்த எதிரணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி என எல்லாத் தரப்புகளும் இணைந்து, அவரைப் பதவியிறக்கக் கூடும்.

அத்தகையதொரு கட்டத்தில், நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி மிக முக்கியமானதாக இருக்கும். ஒருவகையில் அது கூட்டமைப்புக்கு, சங்கடங்களை ஏற்படுத்தும் முடிவாகவும் இருக்கலாம்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக உருவாகி வருகின்ற தலைமைத்துவச் சிக்கலுக்கு, அவர் உடனடியாகத் தீர்வு காணத் தவறினால் அது, ஓடுமீன் ஓட உறுமீனுக்காக காத்திருக்கும் கொக்குகளுக்கு நல்ல வேட்டையாகத்தான் இருக்கும்.Post a Comment

Protected by WP Anti Spam