(கட்டுரை)வடக்கு – கிழக்கில் இரு கட்சி ஜனநாயகச் சூழல்?

Read Time:13 Minute, 21 Second

“வடக்கு கிழக்கில் ஒரு கட்சி ஏகபோகம் உடைந்து, இரு கட்சித் தடம் ஒன்று உருவாகியிருக்கின்றது. இரு கட்சி ஜனநாயகத்தை நோக்கி, தமிழ்ப் பரப்பு நகர்கிறது” என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் குறிப்பிட்டிருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சிரேஷ்ட அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘பூகோளவாதம்- புதிய தேசியவாதம்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில், தலைமையுரை ஆற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே, நிலாந்தனின் கருத்து அமைந்திருந்தது. வட்டாரத் தேர்தல் முறையொன்று கொண்டிருக்கின்ற அம்சங்களையும் தேவைகளையும் அவர் கருத்தில் எடுத்துப் பேசியிருந்தாலும், ‘இரு கட்சித் தடம்’ என்கிற விடயத்தை அவர், என்ன கோணத்தில் முன்மொழிந்திருந்தார் என்கிற கேள்வி எழுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக, பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை முன்னிறுத்தி, 2015இல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய கட்சிகளுக்கும், அதன் பங்காளிகளுக்கும், இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளன.

தெற்கில் ஐக்கிய தேசியக் கட்சியும் மைத்திரி தரப்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் படுதோல்வியைச் சந்தித்திருக்கின்ற நிலையில், வடக்கு- கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியிலிருந்து, சுமார் இரண்டு இலட்சம் வாக்குகள் இழக்கப்பட்டிருக்கின்றன.

தேர்தல் முடிவுகளின் பிரகாரம், கூட்டமைப்பின் பின்னடைவு என்பது வெளிப்படையானது. வடக்கு- கிழக்கில் அதிக சபைகளில் வெற்றிபெற்றிருந்தாலும், அறுதிப்பெரும்பான்மைப் பெற்று ஆட்சியமைக்கும் சூழலைப் பெற முடியவில்லை என்பது தோல்வியாகக் கொள்ளப்பட வேண்டியதுதான்.

ஆனால், கூட்டமைப்பின் பின்னடைவை, தமிழ்த் தேசிய அரசியலில், இரு கட்சி ஜனநாயகத்துக்கான ஆரோக்கியமான கட்டமாக உணர முடியுமா? உண்மையில் அதற்கான அம்சங்களைத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டிருக்கின்றனவா?

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் (2012), வடக்கு மாகாண சபைத் தேர்தல் (2013), பொதுத் தேர்தல் (2015) ஆகியவற்றில், கூட்டமைப்பு பெற்ற வாக்குகள், தமிழ்த் தேசிய அரசியலில் ஏக பிரதிநிதிகள் என்கிற அங்கிகாரத்தை அண்மித்தவை.

அதுவும், கடந்த பொதுத் தேர்தலில், கூட்டமைப்பு பெற்ற வெற்றி என்பது, எதிர்பார்க்கப்பட்ட அளவையும் மீறியது. மஹிந்த ராஜபக்ஷ காலம் வரையில், கூட்டமைப்பை எதிர்ப்பு அரசியலின் வடிவமாக முன்னிறுத்திய தமிழ் மக்கள், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான காலத்தில், (ஒரு வகையில்) தமது ஆளும் கட்சியாக உணரத் தொடங்கினார்கள். மத்திய அரசாங்கத்தோடு கூட்டமைப்பு, பெரும் இணக்கநிலை அரசியலைக் கடைப்பிடித்தமையும் அதற்குக் காரணமாகும்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தரப்பாகவும், யுத்தத்தின் கோர வடுக்களைத் தாங்கி நிற்கின்ற தரப்பாகவும் தமிழ் மக்களின் அரசியலும் சமூக பொருளாதாரத் தேவைகளும் எந்தவித விட்டுக்கொடுப்புகளுக்கும் உள்ளாக முடியாதவை.

அரசியல் உரிமைகள் மற்றும் நீதிக்கான கோரிக்கைகள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்ற அதே தருணத்தில், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளும் நாளுக்கு நாள் அதிகரித்தே வந்தன. அரசியல் தீர்வொன்றைப் பெறுவது சார்ந்து, கூட்டமைப்பு எடுத்து வைத்த அடிகள், அதன் பிடரியில் ஓங்கி அறைய, வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியாத நிலை என்பது, முகத்தில் குத்தியது. இந்த நிலைகள்தான், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்க ஆரம்பித்தன.

யாழ்ப்பாணத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெற்ற வாக்குகளின் அளவுக்கும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி பெற்ற வாக்குகளின் அளவுக்கும் இடையில் சில ஆயிரங்களே வித்தியாசம்.
ஆனால், கடந்த பொதுத் தேர்தலோடு ஒப்பு நோக்கும் போது, முன்னணி பெற்ற வாக்குகள் ஐந்து மடங்கினால் அதிகரித்திருக்கின்றன. அந்த ஐந்து மடங்கு வாக்குகளில், கூட்டமைப்பு மீதான அதிருப்தி வாக்குகள் மற்றும் முன்னணி மீதான நம்பிக்கை வாக்குகளின் வீதம் எவ்வளவு என்பதுதான் எடுத்து நோக்கப்பட வேண்டியது.

யாழ். மாநகர சபைக்கான தேர்தலில் தமிழரசுக் கட்சியின் உள்ளகக் குழப்பம், முன்னணியை நோக்கி எவ்வளவு வாக்குகளைக் கொண்டுவந்து சேர்ந்தது, சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் அருந்தவபாலன் எவ்வளவு வாக்குகளை முன்னணியின் பக்கத்துக்குக் கொண்டு வந்து சேர்ந்தார் என்பதெல்லாம் கருத்தில் எடுக்கப்பட வேண்டியவை. அத்தோடு, வட்டாரத் தேர்தல் முறையொன்று, கொண்டிருக்கின்ற வாக்களிப்பின் அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

யாழ். தேர்தல் மாவட்டத்தில், இரண்டாமிடம் பெற்ற முன்னணி, வடக்கு- கிழக்கின் ஏனைய மாவட்டங்களில் எத்தனையாவது இடத்தைப் பிடித்தது என்கிற விடயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.

குறிப்பாக, யாழ் மாவட்டத்திலிருந்து அடுத்திருக்கின்ற கிளிநொச்சி மாவட்டத்திலேயே, இரண்டாமிடம் என்கிற நிலையை முன்னணியால் அடைய முடியாத போது, ஆய்வாளர் நிலாந்தனின் இரு கட்சி ஜனநாயத்துக்கான வாய்ப்புகள் பற்றிய உரையாடல்களுக்கு அது வலுச் சேர்ப்பதாகக் கொள்ள முடியாது.

இன்னொரு பக்கம், முன்னணி பெற்ற வாக்குகளை, கூட்டமைப்பின் அதிருப்தியாளர்களை ஒருங்கிணைப்பதற்கான கருவியாகக் கொள்ள முடியும் என்கிற ரீதியில் நோக்கினாலும், அதன் அடுத்த கட்டங்களை எவ்வாறு வடிவமைக்கப்போகிறார்கள்?

ஏனெனில், வட்டார முறைத் தேர்தலிலிருந்து அரசாங்கம் பின்வாங்கி, பழைய தேர்தல் முறைக்குச் செல்லும் போது, கிராமங்கள், பிரதேசங்கள் சார்ந்த வாக்கு வங்கி உடைபடும். அது, முன்னணி எங்கெல்லாம் வாக்குகளைப் பெற்றதோ அதிலும் பின்னடைவை ஏற்படுத்தலாம். அத்தோடு, தமிழரசுக் கட்சியின் உள்ளக குழப்பங்கள் தீர்க்கப்படும் போது, அந்த வாக்குகளும் மீண்டும் கூட்டமைப்பின் பக்கமே வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

குறிப்பாக, விகிதாசாரத் தேர்தல் முறையில், அதிக வாக்குகளைப் பெறும் கட்சியின் பக்கம் நிற்பதே, தமது வெற்றியை உறுதிப்படுத்தும் என்கிற நிலையில், மற்றக் கட்சிகளை நோக்கிய தமது ஆர்வத்தை வெளியிட்டவர்கள் பின்வாங்குவார்கள். அது, அவர்களின் ஆதரவாளர்களையும் பின்வாங்கச் செய்யும்.

அப்படியான நிலையில், முன்னணியை முன்னிறுத்தி மாத்திரம் பலமான இன்னோர் அணி உருவாக முடியாது. மாறாக, கூட்டமைப்பிலிருந்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அனந்தி சசிதரனும் முன்னணியை நோக்கி வந்தால், அவர்களோடு சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் தரப்பும் இணைந்தால், ஓர் அதிர்வை உண்டு பண்ணக் கூடிய அணியை உருவாக்கலாம்.

ஆனாலும், அது, யாழ். மாவட்டத்தைத் தாண்டி, அதிர்வை உண்டு பண்ணுமா என்பதே பெரும் கேள்வி? அந்தக் கேள்விக்கான பதில்கள் தொடர்ந்தும் ஏமாற்றமளிக்கின்ற நிலையிலேயே, கூட்டமைப்புக்கு எதிராகத் தரப்புகள் இன்றுவரை ஓரணியில் இணைய முடியாமல் போயிருக்கின்றன.

விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த சூழலில், அவரை நோக்கி, தீர்க்கமான முடிவை எடுக்குமாறு வலியுறுத்துவதற்காகவே நிலாந்தன், இரு கட்சி ஜனநாயகத்துக்கான சூழல் வாய்த்திருக்கின்றது என்று உரையாற்றியிருப்பதாக இன்னோர் அரசியல் ஆய்வாளர் இந்தப் பத்தியாளரிடம் கூறினார். இந்தப் பத்தியாளரும், அந்தக் கருத்தோடு குறிப்பிட்டளவு இணங்கினாலும், கடந்த மூன்று வருடங்களில் விக்னேஸ்வரனை நோக்கி, தீர்க்கமான முடிவுகளை எடுக்குமாறு, தமிழ் மக்கள் பேரவைக்காரர்களும், முன்னணியும், ஊடகங்களும், அரசியல் பத்தியாளர்களும் வலியுறுத்திச் சோர்ந்து போன நிலையில், நிலாந்தனின் முயற்சி பலனளிக்குமா என்று நோக்க வேண்டியிருக்கின்றது.

விக்ரமாதித்தன்- வேதாளம் கதையாக நீளாமல், விக்னேஸ்வரன் தீர்க்கமான முடிவெடுக்கும் பட்சத்தில், யாழ். அரசியல் அரங்கு இன்னும் சற்று அதிர்வுகளைச் சந்திக்கலாம்.

அத்தோடு, அந்த அதிர்வை யாழ்ப்பாணத்திலிருந்து அடுத்த கட்டங்களை நோக்கி, ஊடுகடத்துவதிலுமே இரு கட்சி ஜனநாயகத்துக்கான உண்மையான கட்டங்கள் தங்கியிருக்கின்றது. மாறாக, யாழ் மாவட்டத்தின் கிராமங்களுக்குள்ளேயே செல்ல முடியாத அரசியல் நிலைப்பாடு- அதிர்வொன்றைத் தமிழ்த் தேசிய அரசியலின் பெருமாற்றமாக அடையாளப்படுத்துவது என்பது, உண்மையில் ஆரோக்கியமானதா என்கிற கேள்வியும் எழுகின்றது.

தமிழ்த் தேசிய அரசியலில் இரு கட்சி ஜனநாயகத்துக்கான கட்டம் என்பது, நல்லூரில் மாத்திரமல்ல, ஊர்காவற்துறையிலும் இயக்கச்சியிலும் முள்ளிவாய்க்காலிலும் நெடுங்கேணியிலும் திருகோணமலையிலும் செங்கல்லடியிலும் அம்பாறையிலும் உணரப்பட வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (உலக செய்தி) அழியப்போகிறது சிரியா – 2,700 ஆண்டுகளுக்கு முந்தைய ஆருடம்!
Next post மூன்று வண்ணங்களுடன் பிரத்யேக கொடி அறிமுகம்!!