கொசோவோ: விடுதலையின் விலை(கட்டுரை)!!

Read Time:19 Minute, 42 Second

விடுதலையின் விலை குறித்த கேள்விகள் தவிர்க்க இயலாதவை. விடுதலைக்காகப் போராடும் அனைவரும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

தவறியவர்களை, வரலாறு பாரபட்சமின்றித் தண்டித்திருக்கிறது. அதற்கு நாமும் விலக்கல்ல என்பதை இங்கு நினைவூட்டல் தகும். விடுதலைகள் வெல்லப்பட வேண்டியவையே ஒழிய, இரந்து பெறும் ஒன்றல்ல.

வெல்லப்படாத விடுதலைகள் புதிய மேலாதிக்கவாதிகளுக்கு அடிமையாக வழிசெய்துள்ளன. எனவே, விடுதலை வெல்லப்படுவது எவ்வளவு முக்கியமானதோ, அதேயளவு முக்கியமானது, அது எவ்வாறு வெல்லப்படுகிறது என்பதாகும்.

கொசோவோ, தனிநாடாகத் தன்னை அறிவித்து, பத்து ஆண்டுகள் நிறைவைக் கடந்தவாரம் கொண்டாடியது. இற்றைக்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்னர், கொசோவோ தன்னைத் தனிநாடாக அறிவித்த போதும் சரி, அதற்கான மேற்குலக அங்கிகாரம் வழங்கப்பட்ட போதும் சரி, அடுத்து மலர்வது தமிழீழம் தான் என்ற வகையில், ஏராளமான கருத்துகள் எழுதப்பட்டு, புதிய நம்பிக்கைகள் ஊட்டப்பட்டன.

சர்வதேச சமூகம், எப்போதும் தமிழர்களின் பக்கமே இருக்கிறது என்ற கருத்துப்படவும், சுயநிர்ணய உரிமையை மேற்குலகம் ஆதரிக்கிறது என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

கொசோவோ தனி நாட்டுப் பிரகடனமும் அதற்கான அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அங்கிகாரமும் தனித் தமிழீழத்துக்கான புதிய முன்னுதாரணமாகக் காட்டப்பட்டது. முன்னர் இஸ்‌ரேல், வங்கதேசம் எனப் பலவும் காட்டப்பட்டு வந்ததை இங்கு நினைவுகூர்வது தகும்.

“சேர்பியர்கள் பெருந்தேசிய மேலாதிக்கவாதிகள் என்பதனாலேயே, யூகோஸ்லாவியா உடைந்தது” என்றும் “சேர்பியர்களின் தேசிய இனவெறியாலேயே, கொசோவோ பிரிந்து செல்ல நேர்ந்தது” என்றும் மிகையாக, எளிமைப்படுத்தப்பட்ட ஒரு புனைவை, மீண்டும் மீண்டும் கேட்கிறோம்.

யூகோஸ்லாவியாவின் விடயத்தில் அந்த நாடு ஸ்லாவ் தேசிய இனங்கள் பலவற்றின் ஒன்றிணைவால் உருவான நாடு ஆகும். அங்கே எவ்விதமான தேசிய இன ஒடுக்கலும், இருந்ததில்லை என்பதும் பலருக்கு நினைவுக்கு வருவதில்லை.

அங்கே இருந்துவந்த தேசிய இனங்களிடையே போட்டி இருந்தது. இடையிடையே பகைமையான உணர்வுகளும் இருந்தன. ஆனால், அது 1990கள் வரை மோதல்களுக்கோ பிரிவினைக்கோ இட்டுச் செல்லவில்லை. பொருளாதார ஏற்றதாழ்வுகள் இருந்தன. மிக மோசமான பொருளாதார நெருக்கடி இருந்து வந்த 1980களிலும்,ய பிரிவினைக்கான இயக்கங்கள் உருப்பெறவில்லை.

மதத்தாலும் மொழிப் பிரிவுகளாலும் இனப் பிரிவுகளாலும் வேறுபட்ட யூகோஸ்லாவியத் தேசிய இனங்களைப் பிரிப்பதில், திருச்சபைக்கும் ஜேர்மனிக்கும் பயன் இருந்தது. ஆனாலும், யூகோஸ் லாவியாவில் தன்னுடைய படைகளை நிலைநிறுத்தத் திட்டமிட்டிருந்த அமெரிக்காவுக்கு (பொஸ்னியா என்றே பலராலும் அழைக்கப்படும்) பொஸ்னியா-ஹெர்ட்ஸகொவினா வாய்ப்பான ஓர்இடமாயிற்று. அங்கே பிரிவினை தூண்டிவிடப்பட்டது.

ஜேர்மனிய, வத்திக்கான் ஊக்குவிப்புடன் ஸ்லொவீனியாவும் குறோவேஷியாவும் யூகோஸ்லாவிய சமஷ்டியினின்று பிரிந்துபோக முற்பட்டபோது, யூகோஸ்லாவியக் குடியரசுத் தலைவரான மிலொஷோவிச், சேர்பியப் பேரினவாதியாகத் தன்னை அடையாளப்படுத்தவில்லை.

மாறாக, யூகோஸ்லாவியா தொடர்ந்தும் ஒன்றுபட்ட நாடாக இருக்கும் தேவையையே வற்புறுத்தினார். குறோவேஷியப் பிரிவினையின் போது, மேலைநாட்டுக்குச் சார்பான நிலைப்பாட்டை எடுத்த அதன் தலைவர் துஜ்மன், பின்னர் சேர்பியர் கட்கு எதிரான இனத் துவேஷத்தைக் கட்டவிழ்த்து விட்டார்.

அதுமட்டுமன்றி, குறோவேஷியாவின் க்றயினா மாகாணத்திலிருந்து இரண்டரை இலட்சம் சேர்பியர்கள் இனச் சுத்திகரிப்புக்கு உள்ளானார்கள்.

பொஸ்னியாவில் பொஸ்னிய முஸ்லிம் மேலாதிக்கச் சிந்தனையுடைய அலியா இஸெத்பெகோவிச், அமெரிக்க ஆதரவுடன் பொஸ்னியாவின் மூன்று தேசிய இனங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்த முற்பட்டார்.

அக்காலத்தில் அமெரிக்கா, முஸ்லிம் தீவிரவாதத்தை வளர்த்து வந்தது என்பதையும், சோவியத் ஒன்றியம் உடைவதை ஊக்குவித்ததும் போதாமல், முஸ்லிம் தீவிரவாதிகளைக் கொண்டு, ரஷ்யாவை மேலும் பலவீனப்படுத்துகிற பணிகளிலும் தீவிரம் காட்டியதையும் நாம் நினைவிலிருத்த வேண்டும்.

இத்தகைய பின்னணியிலேயே செஸ்னியாவில் சேர்பிய, குறோவேஷிய, முஸ்லிம் தேசிய இனங்களிடையிலான மோதலுக்கான நிலை உருவானது. இம் மூன்று சமூகங்களும் மதத்தால் மட்டுமே வேறுபட்ட ஒரே சேர்ப் இனத்தவர் என்பதும், மதம் சார்ந்த அரசியலும் அந்நிய ஆக்கிரமிப்புமே மூன்று சமூகங்களையும் வெவ்வேறாக்கின என்பதும் நினைவிலிருத்த வேண்டிய உண்மைகளாகும்.

எனினும், இன்னொரு முறை நடந்த அந்நியக் குறுக்கீட்டின் மூலம், பொஸ்னிய சரித்திரம் மூன்று சமூகங்களிடையிலும் மும்முனைப் போராட்டமாக வெடித்தெழ நேர்ந்தது. இதன் விளைவுகளில் சேர்பிய இனத்தவரது குற்றங்கள் மட்டுமே பேசப்பட்டதுடன் அவை மிகைப் படுத்தப்பட்டு, அதே பொய்கள் இன்னும் திரும்பத் திரும்பக் கூறப்படுகின்றன.

சேர்பியாவையும் மொண்டி நெக்ரோவையும் மசிடோனியாவையும் கொண் டிருந்த எஞ்சிய யூகோஸ்லாவியா, எவ்வகையிலும் பொஸ்னியாவில் குறுக்கிட இயலாதவாறு தடைகட்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

எனவே, மிலொஷோவிச், பொஸ்னியாவின் இரத்தக் களரிக்குப் பங்களித்தவரல்ல. எனினும், வெளி உதவியுடன் சேர்பியர்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் குறோவேஷிய இனத் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டம் பற்றிப் பேசப்படுவதில்லை. முஸ்லிம் தீவிரவாதிகளுடைய குற்றங்களும் பேசப்படுவதில்லை.

பொஸ்னியாவில் அமெரிக்கா, நேட்டோ, ஐ.நா எனும் மூன்று அந்நிய சக்திகளைச் சேர்பியர்கள் எதிர்கொண்டனர். அதனால், அவர்களது மனித உரிமை மீறல்கள் நியாயமாகிவிடாத போதிலும், அவர்களை மட்டுமே குற்றவாளிகளாக்குவது தவறான நோக்கமுடையது.

கொசோவோவும் வொய்வொதினாவும் சேர்பியாவின் சுயாட்சி மாகாணங்கள். அங்கு வலுவான சுயாட்சிகள் இருந்தன. கொசோவோவில் ஒரு கணிசமான சேர்பிய சிறுபான்மையினர் இருந்தனர். சோவியத் ஒன்றியத்தின் சரிவுக்குப் பின்னரே அங்கு கொசோவோ தேசியவாதம் கிளறிவிடப்பட்டது.

கொஸொவோ தீவிரவாத இயக்கம் ஒன்று சேர்பியாவின் ‘சோஷலிஸ’ ஆட்சியைப் பலவீனப்படுத்துகிற நோக்கத்துடன் அமெரிக்காவால் ஆயதபாணியாக்கப்பட்டது. சேர்பியப் படைகட்கும் அமெரிக்கா ஆதரவு பெற்ற தீவிரவாதிகளுக்கும் மோதல்கள் வலுத்த போதும், கொசோவோவில் இனப் படுகொலைகள் நடக்கவில்லை.

எப்போது நேட்டோ, சேர்பியா மீது குண்டு வீச்சைத் தொடங்கியதோ, அப்போதுதான் கொசோவோ, அல்பேனியர் மீதான தாக்குல்கள் நிகழ்ந்தன. கொசோவோவில், சேர்பியர்கள் விரட்டப்பட்டது பற்றி அதிகம் பேசப்படுவதில்லை.

ரஷ்யா மீள எழுச்சி பெற்று வருகிற நிலையில், ஒரு வலுவான சேர்பியாவை அமெரிக்கா விரும்பவில்லை. சேர்பியாவை பூரண அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வந்து, ரஷ்யாவுக்கு எதிராகப் பாவிக்க இயலாததாலேயே, முதலில் மிலொஷொவிச்சைப் பலவீனப்படுத்தப் பாவிக்கப்பட்ட கொசோவோ தீவிரவாதம், நாட்டைப் பிரிக்கும் அளவுக்குப் போக அனுமதிக்கப்பட்டது. பாதுகாப்பின்பேரில் இன்று, பொஸ்னியாவில் இன்னமும் அந்நியப் படைகள் உள்ளன. நாடு இன்னமும் பொருளாதாரத்தில் பின்தங்கியே உள்ளது.

கொசோவா தனி நாடாவதற்கு, அங்கு புகுந்து கொண்ட நேட்டோப் படைகளின் பிரசன்னம் அடிப்படையாக இருந்தது. ஆனால், இன்றும் அப்படைகள் இருக்கவே செய்கின்றன. இனியும் அவை இருக்கவே போகின்றன.
இதில் உள்ளடங்கி உள்ள உண்மை என்னவெனில், அமெரிக்காவும் பிற வல்லாதிக்க சக்திகளும் பிரிவினையை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பதன் அர்த்தம், அவர்களது பொருளாதார, அரசியல், இராணுவ நலன்களின் அடிப்படையிலேயே ஆகும். சம்மந்தப்பட்ட மக்களின் நலன்களில் இருந்தல்ல.

இவ்விடத்தில், கொசோவோ விடுதலையைடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த அறிக்கையை இங்கு பகிர்தல் பொருத்தம். அவ்வறிக்கையில், ‘உயிர்களை உவப்பீகை செய்து, சுதந்திரம், இறைமை, உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி, விடுதலையை வென்றெடுத்துள்ள வகையில், தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழர் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர்’ என்று தொடங்குகிறது.

இன்று கொசோவோ சுதந்திமடைந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில், கொசோவோவின் நிலை என்ன, அதன் விடுதலையின் விலை என்ன என்பதை நோக்குவது பொருத்தம்.

கொசோவோவின் உழைக்கும் வலுவுள்ள சனத்தொகையில் 33 சதவீதமானவர்களுக்கு வேலையில்லை. ஐரோப்பாவின் மிகவும் இளவயதுச் சனத்தொகையைக் கொண்ட இந்நாட்டில், (மொத்த சனத்தொகையில் 70சதவீதமானவர்கள்) 60சதவீதமான இளைஞர்களுக்கு வேலையில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நாட்டுக்கு வெளியில் இருக்கும் புலம்பெயர் சமூகத்தின் முதலீட்டிலேயே தங்கியுள்ளது. 80சதவீதமான அந்நிய முதலீடுகள், புலம்பெயர் கொசோவர்களாலேயே செய்யப்படுகிறது.

1.8 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட கொசோவோவில், கடந்த 10 ஆண்டுகளில் 250,000 கொசோவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். கொசோவோவை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை, கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2008ஆம் ஆண்டு, கொசோவோ தனிநாடாக அறிவிக்கப்பட்டவுடன் புலம்பெயர்ந்து வாழும் பலர், சொந்த நாட்டுக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அரசியலில் பதவிகளைப் பெறுவதற்காகவும் ஆட்சியில் பங்குபெறுவதற்காகவுமே மிகச் சிறிய தொகையினர் கொசோவோவுக்குத் திரும்பினார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில், புலம்பெயர்ந்தவர்களுக்கும் தாய்நாட்டுக்கும் இடையிலான உறவு குறைவடைந்து வந்துள்ளது. ஊழல் மலிந்த நாடுகளில் ஒன்றாக கொசோவோவை ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நசனலின் வருடாந்த ஊழல் குறிகாட்டி அளவிடுகிறது.

அரசியல் ரீதியில், இன்னமும் ஐக்கிய நாடுகள் சபையின் தயவிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தயவிலுமே கொசோவோ இருக்கிறது. 1999ஆம் ஆண்டு ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஒப்புதலின் கீழ் உருவாக்கப்பட்டு, அனுப்பப்பட்ட கொசோவோவுக்கான ஐக்கிய நாடுகள் இடைக்கால நிர்வாகக் குழுவானது (UN Interim Administration Mission to Kosovo) இன்றுவரை கொசோவோவில் உள்ளது.

இக்குழுவே கொசோவோவின் அரசியல், நிர்வாக, சட்ட ஒழுங்கைத் தீர்மானிக்கிறது. இக்குழு என்ன செய்தது, எவ்வாறெல்லாம் அங்குள்ள சிறுபான்மையினருக்கு விரோதமாக இயங்கியது, மனித உரிமைகள் மறுப்புக்கும், ஊழல்களுக்கும், வன்முறைகளுக்கும் எவ்வாறு இக்குழு துணை போனது என்பது பற்றி, இக்குழுவின் மூத்த அதிகாரிகளாக இருந்த இருவர் எழுதிய நூல் வாசிக்கத்தக்கது. ‘Peace at any Price: How the World Failed Kosovo’ என்ற இந்நூல் மேற்குலக ஆசியுடனான சுதந்திரம் குறித்த பல கேள்விகளை எழுப்புகிறது.

அதேவேளை, கொசோவோவின் சுதந்திரத்துக்கு உதவுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டத்தின் ஆட்சிக்கான கொசோவோக் குழு 2008ஆம் ஆண்டு கொசோவோவுக்கு அனுப்பப்பட்டது. 2,000 பேரை உள்ளடக்கிய இக்குழுவே கொசோவோவின் சட்ட ஒழுங்குக்குப் பொறுப்பாக உள்ளது. இக்குழுவில் உள்ள பொலிஸாரே கொசோவோவின் சட்ட ஒழுங்கை நிர்வகிக்கிறார்கள்.

இவர்களே சட்டத்துறை நிபுணர்களாகவும் நீதிபதிகளாகவும் உள்ளனர். இவர்களுடைய ஆணை 2012ஆம் ஆண்டு முடிவடைந்த போது, கொசோவோ நாடாளுமன்றம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இவர்களது ஆணை தொடர்ந்து இருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்னமும் கொசோவோவின் அலுவல்களைத் தீர்மானிப்போராக இக்குழுவில் உள்ளோரே உள்ளனர். கொசோவோவின் சுதந்திரம் என்பது பெயரளவிலேயே என்பதை விளங்குவது சிரமமல்ல.

இதேவேளை, கொசோவோவின் அயலுறவுக் கொள்கை மிகுந்த நெருக்கடிகளை எதிர்நோக்குகிறது. ரஷ்யா, சீனா, பிரேஸில் உள்ளிட்ட பல முக்கியமான நாடுகள் கொசோவோவை அங்கிகரிக்கவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவியலும் என்று விடுதலையின் போது சொல்லப்பட்டாலும், இன்றுவரை அது சாத்தியமாகவில்லை. ஸ்பெயின், கிறீஸ், ரொமேனியா, ஸ்லவாக்கியா மற்றும் சைப்பிரஸ் ஆகிய ஐந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கொசோவோவை அங்கிகரிக்கவில்லை. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது இன்றுவரை சாத்தியமாகவில்லை.

கொசோவோ பல படிப்பினைகளைத் தந்துள்ளது. விடுதலை என்பது அறஞ்சார்ந்த ஒரு பிரச்சினையுமாகும். அது யாருடைய அறம் எத்தகைய அறம் என்பன பற்றிய கேள்விகள் எப்போதுமே உள்ளன. இதை மக்களாகிய நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இல்லாவிடில் தமிழ் மக்கள் இன்னோர் அவலத்தில் தள்ளப்படுவது தவிர்க்கவியலாதாகும். தமிழ் மக்களால் தனித்துநின்று போராட இயலாது. எனவே, அந்நிய அரசுகளின் ஆதரவு தேவை என்று வாதிப்போர், பழைய பிழைகளையே திரும்பச் செயுமாறு தூண்டுகிற காரியத்தையே திரும்பத் திரும்பச் செய்கிறார்கள்.

அவர்களின் நோக்கம் சுயநலன் சார்ந்தது மட்டுமன்றி, மக்கள் விரோதமானதும் கூட. எங்கள் அனுபவங்களிலிருந்து நாங்கள் கற்றவை அனைத்தையுமே மறுக்கிற விதமாக, எங்கள் தலைமைகளது அரசியல் நடத்தை அமைகிறது.

இது மிகவும் ஆபத்தானது. இது குறித்து நாம் அவதானமாக இருக்க வேண்டும். இல்லாவிடின் அதற்கான பலன்களை அனுபவிக்கப்போவது மக்களே அன்றி வித்தைகாட்டுகின்ற தலைமைகள் அல்ல.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொன்விழா கண்ட பூ (சினிமா செய்தி)..!!
Next post மகிழ்ச்சியின் உச்சத்தில் அமலா போல்(சினிமா செய்தி)!!