(மகளிர் பக்கம்)தாய்ப்பால் கொடுப்பது கட்டாயமாக்கப்படுகிறது?

Read Time:14 Minute, 53 Second

சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு விடுத்திருக்கும் இரண்டு கேள்விகள் இவைதான்… பெண்களின் பேறுகால விடுப்பை 270 நாட்களாக ஏன் உயர்த்தக் கூடாது? தாய்ப்பால் ஊட்டுவதைக் கட்டாயமாக்க ஏன் சட்டம் இயற்றக் கூடாது? இந்தக் கேள்விகள் நியாயமானவை போலத் தெரிந்தாலும் இது பெண்கள் மத்தியில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மாதவிலக்கின் போது முதல் நாள் விடுமுறை அளிப்பதை சில நிறுவனங்கள் செயல்படுத்தின. ஆனால் அது தங்களை ஆணுக்கு இணையானவர்களாக இல்லாமல் பலவீனமாகக் காட்டும் என்ற எதிர்ப்பையும் ஒரு சில பெண்கள் தெரிவித்தனர். டாக்டர் ஐஸ்வர்யா தொடர்ந்துள்ள வழக்குகளின் அடிப்படையில் நீதிமன்றம் இக்கேள்விகளை எழுப்பியுள்ளது.

சிவகாசி அருகில் உள்ள சித்துராஜபுரம் தொடக்க சுகாதார மையத்தில் 2015 மார்ச் 20ல் டாக்டர் ஐஸ்வர்யா பணியில் சேர்ந்துள்ளார். ஜூலை மாதம் ஐஸ்வர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஜூலையில் இருந்து 2016 ஜனவரி 3ம் தேதி வரை ஆறு மாதங்கள் பேறுகால விடுப்பில் இருந்தார். அதன் பின் பணியில் சேர்ந்தார். முதுகலைப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுதினார். சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

2017 மே 10ல் படிப்பில் சேரும்படி உத்தரவு வந்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியிருக்கவில்லை எனக் கூறி ஐஸ்வர்யாவைப் பணியில் இருந்து விடுவிக்க சுகாதாரப் பணிகள் இயக்குனர் மறுத்துவிட்டார். முதுகலைப் படிப்புக்கான சேர்க்கை விதிகளின்படி, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். ஐஸ்வர்யா பேறுகால விடுமுறையாக ஆறு மாதங்கள் விடுப்பில் இருந்ததால், அந்த நாட்களை தவிர்த்துக் கணக்கிடும் போது இரண்டு ஆண்டுகள் பணி முடித்திருக்கவில்லை எனக் கூறப்பட்டது.

இதையடுத்து, இந்த நிபந்தனையை எதிர்த்தும் பணியில் இருந்து விடுவித்து, முதுகலைப் படிப்பில் சேர அனுமதிக்கும்படி கோரியும், உயர்நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா மனு தாக்கல் செய்தார். அவர் நீதிமன்றத்தை நாடியபோது முதுகலை சேர்க்கையை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்து நீதிபதி கிருபாகரன் அளித்த தீர்ப்பு இதுதான்.

ஐஸ்வர்யாவின் முதுகலைப் படிப்பை ரத்து செய்தது செல்லாது. பேறுகால விடுமுறையை அனுபவிக்க மனுதாரருக்கு உரிமை உள்ளது. பேறுகால விடுமுறையும் பணியின் ஒரு பகுதியாகக் கருத வேண்டும். எனவே, இரண்டு ஆண்டுகள் பணியைப் பூர்த்தி செய்துள்ளார். சேர்க்கை ரத்து உத்தரவு செல்லாது என்பதால் மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்க மறுக்கக்கூடாது. எனவே 2018- 19ம் கல்வியாண்டில் மனுதாரரை, முதுகலை மருத்துவப் படிப்பில் சேர்க்க வேண்டும். பெண்கள் கருவுற்றிருக்கும்போது கடுமையான பணிகளைச் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் பேறுகால விடுமுறை வழங்கப்படுகிறது.

பயிற்சிக்காலம், நிரந்தரப் பணி என, பேறுகால விடுமுறைக்கான விதியில் பாகுபாடு காட்டவில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரை, ஐஸ்வர்யா ஒன்றும் தற்காலிக பணியாளர் அல்ல: பணி நிரந்தரத்துக்கான பயிற்சியில் உள்ளார். பயிற்சியில் இல்லாத ஊழியர்கள் கூட பேறுகால விடுப்பு எடுக்க உரிமை உள்ளது. ஐஸ்வர்யாவைப் பொறுத்தவரை எந்தத் தவறும் இல்லை. தவறான புரிதலால் அதிகாரிகள் செய்த தவறால் மருத்துவப் படிப்பில் சேர்க்கை ரத்தாகியுள்ளது.

குழந்தை பெறுவது பெண்ணின் அடிப்படை உரிமை. பிறந்த குழந்தை மட்டும் அல்லாமல் பெற்ற தாய்க்கும் அக்கறையான கவனிப்பு தேவை. எனவே பெண் ஊழியர்களுக்கு பிரசவத்தின் முன்னும் பின்னும் போதிய விடுமுறையை அரசும் நிறுவனங்களும் வழங்க வேண்டிய கடமை உள்ளது. பேறுகால விடுப்பாக, மாநில அரசு 270 நாட்கள் வழங்குகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 180 நட்கள் மட்டும்தான் வழங்கப்படுகிறது.

தொழிற்சாலைகள், சுரங்கம், கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு, 182 நாட்கள் வழங்கப்படுகிறது. பேறுகால விடுப்பு இருக்கும்போது அதை பணிக் காலமாக கருத எப்படி மறுக்கப்பட்டது என்பது புரியவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக அரசு அலுவலர்கள் எப்படி செயல்படுகின்றனர் என்பதை இந்த வழக்கு வெளிக்காட்டுகிறது.

முடிவெடுக்க வேண்டிய அதிகாரிகளுக்கு, பெண் ஊழியர்களுக்கான பேறுகால விடுப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளை சேர்க்கிறேன். மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் ரபுமனோகர், மாநில அரசு சார்பில் சிறப்பு பிளீடர் பாப்பைய்யா நோட்டீஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்.

கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
* தமிழக அரசின் உத்தரவு போல் பேறுகால விடுப்பை 270 நாட்களாக மத்திய அரசு ஏன் உயர்த்தக் கூடாது?
* பேறுகால விடுப்பை அதிகரிக்காத மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏன் உத்தரவிடக் கூடாது?
* பேறுகால விடுப்பு மற்றும் தாய்ப்பால் அருந்தும் குழந்தையின் உரிமையை தேசிய நலனாகக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஏன் சட்டம் கொண்டுவரக் கூடாது.
* ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் அருந்துவதற்கு குழந்தைகளுக்கு உரிமை உண்டு என்பதை நீதிமன்றம் ஏன் அறிவிக்கக் கூடாது.
* மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் விதமாக பேறுகால சலுகைகள் பெறும் பெண் ஊழியர்களிடம் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது என ஏன் உத்தரவாதம் பெறக்கூடாது?
* அரசு பெண் ஊழியர்களுக்கு பிரசவகாலத்தில் குறித்த நேரத்தில் விடுமுறை வழங்காத அதிகாரிகளுக்கு ஏன் தண்டனை வழங்கக் கூடாது?
* குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதைப் பொறுப்பாக்கும் விதத்தில் மத்திய அரசு ஏன் சட்டம் கொண்டுவரக் கூடாது?

இத்தனைக் கேள்விகள் கேட்டு விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார் நீதிபதி. தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் ஒரு பெண்ணுக்கான தேவைகள் குறித்து சென்னை மகளிர் மருத்துவர் நித்யாவிடம் கேட்டோம். அவர் கூறுகையில், “தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் பாசப்பிணைப்பை உருவாக்குகிறது. பெண்கள் குறைந்த பட்சம் 6 மாதங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால் தாயும் குழந்தையும் அடையும் நன்மைகளை விளக்குகிறோம். இன்றைய பெண்கள் மத்தியில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்கின்றன. குழந்தை பிறந்த உடன் சுரக்கும் தாய்ப்பாலில் கொலஸ்ட்ரம் நிறைந்துள்ளது. குழந்தையின் ஜீரணத் தன்மைக்கு ஏற்ப கிடைக்கும் உணவாகும்.

ஆறு வாரங்களுக்குப் பின் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்திகள் தாய்ப்பாலில் அதிகமாக இருக்கும். குழந்தையின் வளர்ச்சிக்கும் தேவைக்கும் ஏற்ப தாய்ப்பாலின் தன்மையும் மாறுகிறது. இதனால் ஆறு மாதங்களுக்கு எந்தத் தடையும் இன்றி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணுக்கு போதிய ஓய்வும் தேவைப்படுகிறது.

குழந்தை பிறந்த அயற்சி, குழந்தை அழும்போதெல்லாம் எழுந்து பால் கொடுப்பதால் போதிய தூக்கம் இருக்காது. பால் கொடுக்கும் தாய் நல்ல மனநிலையிலும் இருக்க வேண்டும். தாயும் சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் வேலைக்கு செல்லும்போது பால் கட்டிக் கொள்ளும் அவஸ்தையை அனுபவிக்கின்றனர். தாய், சேய் இருவரின் நலனுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டம் முக்கியமானது. மார்பகப் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் தாய்க்கு ஏற்படாமல் தடுக்கிறது.

இதனால் குழந்தை பிறந்த ஆறு மாதங்கள் பெண்ணுக்கு விடுமுறை தேவைப்படுகிறது. இது ஆரோக்கியமான குழந்தையை வளர்த்தெடுக்க பெண்ணுக்கு உதவியாக இருக்கும்’’ என்கிறார் மருத்துவர் நித்யா. மதுரை சோக்கோ அறக்கட்டளை துணை இயக்குனர் செல்வி கோமதி பேறுகால விடுப்பைப் பொறுத்தவரை அரசு செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விளக்குகிறார்.

“அரசு அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பெண் ஒருவர் பேறுகால விடுப்பு கிடைக்காததால் வழக்குப் போட முடியுமா என்று என்னிடம் வந்தார். பல குடும்பங்களில் திருமண செலவுக்காக வாங்கிய கடன், குழந்தைகளுக்கான கல்விக்கடன், வீடு கட்ட வாங்கிய கடன் என ஏதாவது ஒரு கடன் சுமையோடுதான் பல பெண்கள் வேலைக்கு செல்கின்றனர்.

என்னிடம் வழக்குப் போடலாமா என்று கேட்டு வந்த பெண் அரசு அலுவலகத்தில் கான்ட்ராக்ட் முறையில் பணியாற்றி வந்தார். பேறு கால விடுப்புக் கேட்டு அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் அலுவலர்கள் லாஸ் ஆஃப் பே அடிப்படையில் வேண்டுமானால் விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள் என்று அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தினர். அந்தப் பெண்ணை ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்தியிருந்தார். பேறுகால விடுப்பை அனுமதித்திருந்தால் அவருக்கு சம்பளத்துடன் விடுமுறை கிடைத்திருக்கும்.

சம்பளம் இல்லாமல் விடுப்பு எடுத்தால் கடன் கட்ட முடியாது. இதற்காக வழக்கு போட்டால் வேலைக்கு ஏதாவது பாதிப்பு வந்து விடுமா என அந்தப் பெண் பயந்தார். அரசின் சட்டம், நடைமுறைகள் என்று இருந்தாலும் அதை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு அவசியம். அலுவலகங்களில் பணிபுரியும் ஆண்கள் பெண்களுக்கு அளிக்கப்படும் பேறுகால விடுப்பைக் கூடுதல் சலுகையாகக் கருதுகின்றனர்.

இது பெண்ணுக்கு அளிக்க வேண்டிய அடிப்படை உரிமை. அமைப்பு சாரா நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் நிலைமை மேலும் மோசமே. பேறுகால விடுப்புக்காக வேலையை விட வேண்டிய நிலையில் பெண்கள் உள்ளனர். குழந்தைப் பிறப்புக்காக பெண்ணின் வளர்ச்சி, வருமானத்தை இழக்கும் நிலை மாற்றப்பட வேண்டும். சம்பளத்துடன் விடுப்பு அளிப்பதோடு அதனைப் பணிக்காலமாகவே கருத வேண்டும்’’ என்கிறார்செல்வகோமதி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (வீடியோ)அன்று பேதை இன்று மேதை | சர்வதேச மகளிர் தினம் -2018
Next post (மருத்துவம்)மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை!!