கனிஷ்கா விமான விபத்து: எஞ்சிய ஒரு குற்றவாளியும் ஜாமீனில் விடுதலை
ஏர்-இந்தியா கனிஷ்கா விமான விபத்து தொடர்பாக சிறையில் இருந்த எஞ்சிய ஒரு குற்றவாளியும் கனடா நீதிமன்றத்தால் வெள்ளிக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 1985-ம் ஆண்டு கனடாவிலிருந்து புறப்பட்ட ஏர்-இந்தியா கனிஷ்கா விமானம், அயர்லாந்து கடற்பகுதியில் வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த 329 பேரும் விபத்தில் பலியாயினர். இறந்தவர்களில் பெரும்பாலோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள். வெடிகுண்டு வைக்கப்பட்டதால் நடுவானில் விமானம் வெடித்துச் சிதறியதாக புலனாய்வுத் துறையினர் கண்டறிந்தனர். இந்த சதித் திட்டத்தில் முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்ட சீக்கியர்கள் சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு சிலர் விடுவிக்கப்பட்டும், சிலர் ஜாமீனிலும் வெளிவந்தனர். எஞ்சிய ஒரே குற்றவாளி இந்தர்ஜித் சிங் ரெயாத் (55) மட்டும் சிறையில் இருந்தார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண நீதிமன்றம், ரூ. 2 கோடி ஜாமீன் உத்தரவாதத்தின்பேரில் அவரை விடுவிக்க உத்தரவிட்டது. இதே வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அஜெய்ப் சிங் பாக்ரி மற்றும் ரிபுடமன் சிங் மாலிக் ஆகிய இருவரும் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டு விட்டனர்.
Average Rating