‘இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுக்கும் துணை’!(மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 8 Second

1990 களின் இறுதி யில் புகழ் வெளிச்சத்திற்கு வந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் காமெடி நடிப்பில் உச்சத்தில் இருந்தவர் நடிகர் ரமேஷ் கண்ணா. உதவி இயக்குனர், வசனகர்த்தா, இயக்குனர் என்பதையும் தாண்டி சிறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நம் மனதில் பதிந்தவர். இவர் நடிப்பில் வெளிவந்த ‘ப்ரண்ட்ஸ்’ பட காமெடி எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் மறக்க முடியாத ஒன்று. அவர் தன் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்த தன் மனைவி குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டவை இங்கே…

“எங்களுடையது ஏற்பாடு செய்யப் பட்ட திருமணம். 40 படங்களுக்கு மேல் இசையமைத்தவர் பழைய இசை அமைப்பாளர் பி. எஸ். திவாகர். இசை அமைப்பாளர் யூனியனில் பொருளா ளராக இருந்தவர். பெரிய நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களும் இவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். அந்த பி.எஸ். திவாகர்தான் என் மாமனார். அவரின் 2வது மகள் தான் என் மனைவி ஷோபா. ஷோபாவின் வீட்டுக்கு கிடார் மற்றும் வயலின் இசை கற்றுக்கொள்ள என் அக்கா மகள்கள் செல்வார்கள்.

அப்படியாக இரு வீட்டாருக்கும் நன்கு பழக்கமாகி எனக்கு ஷோபாவை பெண் பார்த்தார்கள். பெண் பார்த்துவிட்டு வந்து நான் பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன். காரணம், பெண்ணை எனக்குப் பிடிக்காதது இல்லை. நான் அப்போது இயக்குனர் பாண்டியராஜன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். என் இளம் வயதிலே அப்பா, அம்மா இறந்துவிட்டனர். எனக்கென்று நல்ல வேலை, நிரந்தர வருமானம், வீடு போன்றவை முதலில் அமையட்டும் என நான் நினைத்தேன். எனவே ஒரு படம் இயக்கிய பிறகு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன்.

வீட்டில் எல்லாரும் ஏன் பெண்ணை பிடிக்கவில்லை என்றாய்? ஏன் இப்படிச் செய்தாய்? என மாறி மாறி கேட்ட பிறகு விஷயத்தைச் சொன்னேன். அப்போது ஒரு படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. படம் சென்சார் வரை போனது. அதனால் எல்லாரும் படம் தான் வரப்போகிறதே முதலில் கல்யாணம் செய்து கொள் எனச் சொன்னார்கள். அதனால் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன். 1988 செப்டம்பர் மாதம் பதினோராம் தேதி திருமணம் விமரிசையாக நடைபெற்றது. சென்னையில் உள்ள அசோகா ஹோட்டலில் தான் நடந்தது. பாடகி பி.சுசீலா தொடங்கி நிறைய பெரிய ஆட்கள் திருமணத்திற்கு வந்திருந்தனர். பெண் வீட்டார் தான் திருமண ஏற்பாடுகள் செய்தனர்.

நான் உதவி இயக்குனராக இருந்ததால் என் சார்பாக சில விஐபிக்கள் வந்திருந்தனர். மாமனார் சினிமாவில் பெரிய மனிதர் என்பதால் அவர் சார்பாக தான் நிறைய விஐபிக்கள் வந்திருந்தனர். அப்படியாக பெரிய அளவில் எங்கள் திருமணம் நடைபெற்றது. என் மனைவி ஷோபா என்னை விட அதிகம் படித்தவர். கான்வென்ட்டில் படித்தவர். இசைக்கருவிகளும் வாசிக்கத் தெரியும். ஆனால் அவரிடம் அந்த கர்வம் எல்லாம் கிடையாது. திருமணத்திற்குப் பிறகும் என் படம் வெளியாகவில்லை. குழந்தைகள் பிறந்தும் வெளியாகவில்லை. திருமணமான சில வருடங்களுக்குள்ளேயே மாமனார், மாமியார் இறந்துவிட்டனர். என் மாமனார் இறந்த ஆண்டு என் இரண்டாவது மகன் பிறந்ததால் அவனுக்கு அவர் பெயரை இணைத்து பிரஜீஸ் திவாகர் என வைத்தோம்.

போதிய வருமானம் எல்லாம் இல்லை. எளிமையான வாழ்க்கை தான். வசதியான வீட்டில் வளர்ந்தவர் ஷோபா. ஆனால் என் எளிய வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தினார். அது தான் அவருடைய பெரிய ப்ளஸ். அவர் மட்டும் அப்படி இல்லாமல் இருந்திருந்தால் நான் மிகவும் நொந்து போய் இருப்பேன். வீட்டை அவர் தான் பார்த்துக் கொள் வார். நான் காலையில் சென்றால் இரவு தான் வருவேன். பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள், என்ன ஏது எதுவும் எனக்கு தெரியாது. எல்லாவற்றையும் அவர் தான் பார்த்துக் கொள்வார்.

முதல் பையன் எங்கள் முதல் கல்யாண நாள் அன்று பிறந்ததால் அவன் பிறந்த நாள் மட்டும் ஞாபகம் இருக்கும். இரண்டாவது பையன் பிறந்த நாள் எது என்று யாராவது கேட்டால் கூட ஞாபகம் இருக்காது. வீட்டில் கேட்டு தான் சொல்வேன். எந்நேரமும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருப்பேன். கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக வேலைப் பார்த்தேன். பிறகு நடிகனானேன். அதன் பிறகு தான் வாழ்க்கை ஓரளவு செட்டில் ஆனது. ஆனால் அதுவரை எனது எல்லா கஷ்டத்திலும் என் மனைவி எனக்கு உறுதுணையாக இருந்தார்.

மிகவும் பொறுமையாக இருப்பார். நான் நன்றாக வருவேன் என்று என்னை முழுமையாக நம்பினார். அதிர்ந்து பேச மாட்டார். நான் எதாவது கோபமா சத்தம் போட்டால் கூட எதிர்த்துப் பேசாமல் உள்ளே போய் விடுவார். என் பிள்ளைகளுக்கு அவர்களின் அம்மாவை தான் ரொம்ப பிடிக்கும். பசங்களை நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறார். பிள்ளைகளுக்கு எது வேண்டுமென்றாலும் அவரிடம் தான் கேட்பார்கள். என் மனைவி என்னைக் கேட்டு அதை அவர்களுக்கு வாங்கித் தருவார். மிக நன்றாக சமைப்பார்.

நான் நடிகன் ஆவேன் என்று நாங்கள் இருவருமே எதிர்பார்க்கவில்லை. நான் நடிக்க வந்த பிறகு அவர் ஒரு நாளும் சூட்டிங் பார்க்க வந்ததில்லை. அதற்கு ஆசைப்பட்டதுமில்லை. நடிக்க வந்து 20 வருடத்தில் இப்போது தான் முதன் முறையாக பட சூட்டிங் பார்க்க வந்திருந்தார். அதுவும் அந்தக் காலத்து அரவிந்த் சாமியின் ரசிகைகளான அவரின் தோழிகள் விருப்பப்பட்டதால் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ பட சூட்டிங்குக்கு அவர்களுடன் இணைந்து வந்திருந்தார். எல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொண்டதால் தான் என் கேரியரில் என்னால் கவனம் செலுத்த முடிந்தது. இல்லையென்றால் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேன்.’’

நடிகர் ரமேஷ் கண்ணாவின் மனைவி ஷோபா…

“நிறைய பேர் என்னை பெண் பார்த்தார்கள். ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை. நல்ல குணமாகவும், அழகாகவும் இருந்ததால் இவரை தான் எனக்குப் பிடித்திருந்தது. அப்பாவுக்கு இவர் சினி ஃபீல்டில் இருந்ததினால் வருத்தம் தான். இருந்தாலும் எனக்கு அவரை பிடித்திருந்ததால் அப்பா திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். இவர் முதலில் டைரக்ட் செய்ய வேண்டும் என்று கல்யாணத்திற்கு தயங்கினார். ஆனால் நான் அவரை புரிந்து கொண்டேன். அதனால் வருத்தம் எல்லாம் இல்லை.

பிறகு நல்லபடியாக திருமணம் நடைபெற்றது. எங்களுக்குத் திருமணம் ஆகி 29 வருஷங்களாகிறது. நாங்கள் முதன் முதலாக சேர்ந்து பார்த்த படம் ‘கேளடி கண்மணி’. முதலில் சேர்ந்து போன இடம் வேளாங்கண்ணி. முதல் வருட திருமண நாள் அன்று முதல் மகன் ஜஸ்வந்த் கண்ணன் பிறந்தான். இரண்டாவது மகன் பிரஜீஸ் திவாகர். முதலில் அவருக்கு சொற்ப வருமானம் தான். அதுவும் நிரந்தரமில்லாமல் இருந்தது.

மிகவும் கஷ்டமாக இருக்கும். வசதியான வீட்டில் வளர்ந்ததால் அழுகை அழுகையாக வரும். என் பெற்றோர்கள் இறந்த பிறகு எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த அப்பாவுடைய நண்பர் மலையாள டைரக்டர் ஜி.பி. பாலன் அவர்களின் குடும்பம் எங்களுக்கு மிகவும் சப்போர்ட்டிவ்வாக இருந்தனர். எங்கள் குழந்தைகள் அவர்கள் வீட்டில் தான் பெரும்பாலான நேரங்கள் இருப்பார்கள். அதன் பிறகு இவருக்கு கொஞ்சமாக இருந்தாலும் நிரந்தர வருமானம் வந்தது. அதன் பின் 1998ல் நடிகரானார்.

‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படம் தான் எங்கள் வாழ்க்கையின் டர்னிங் பாயின்ட். முதன் முதலாக படம் பார்க்கப் போன போது இத்தகைய திருப்புமுனையை இவருக்கு அளித்த விக்ரமன் சாரின் நல்ல மனத்தை நினைத்து மிகவும் உணர்ச்சிப் பூர்வமாக இருந்தேன். இரண்டாவது முறை பார்க்கும் போது தான் கதை மனதில் பதிந்தது. மெல்ல மெல்ல வளர்ந்தோம். சைக்கிள், வண்டி, செகண்ட் ஹாண்ட் கார், புது கார் என ஒரு ஒரு படியாகத் தான் வளர்ந்தோம். ஒரு வழியாக பிள்ளைகள் காலேஜ் படிப்பதற்குள் வாழ்க்கையில் செட்டில் ஆகிட்டோம்.

எங்களை என் கணவர் நல்ல முறையில் பார்த்துக்கொள்வார். கேட்ட பொருட்களை வாங்கித் தருவார். நகைகள் கேட்டால் எதுவும் சொல்லாமல் வாங்கித் தருவார். ஆனால் தேவை இல்லாமல் புடவைகள் வாங்கி அடுக்குவதில் அவருக்கு விருப்பம் கிடையாது. வீட்டில் அவ்வளவாக இருக்க மாட்டார். எந்நேரமும் பிஸி தான். பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்ட வேண்டிய விஷயத்தில் கண்டிப்பாக இருப்பார். மகன்கள் இருவரும் இன்ஜினியரிங் படித்துவிட்டு இப்போது உதவி இயக்குனர்களாக பணிபுரிகின்றனர். வாழ்க்கை திருப்தியாக போய் கொண்டு இருக்கிறது”.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்(அவ்வப்போது கிளாமர்)…!! !!
Next post தமிழகத்திற்கு குரல் கொடுக்காத ரஜினி, ஏன் அரசியலுக்கு வரவேண்டும்?(சினிமா செய்தி)