ஒவ்வொரு துளி தேநீரிலும் கலந்திருக்கும் உதிரம்(மகளிர் பக்கம்)!!

Read Time:25 Minute, 4 Second

ஆனைமலை காடுகளில் தழைத்திருக்கும்
ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில்
அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்…
நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் குடிக்கும்
ஒவ்வொரு துளி தேநீரிலும்
கலந்திருக்கிறது எமது உதிரம்…
– ஆதவன் தீட்சண்யா

ஆனைமலைக் காடுகளில் மட்டுமல்ல, எந்த மலையின் தேயிலைத் தோட்டத்திற்கும் இது பொருந்தும். காலையில் எழுந்ததும் தேநீர் கோப்பையை கையில் பிடித்தால்தான் பலருக்கும் அன்றைய பொழுது விடியும். நாம் பருகும், சூடான தேநீருக்குப் பின்னால் தன்னலமற்ற பலரின் உழைப்பும், சுரண்டலும் புதைந்து, நாம் அருந்தும் தேநீரோடு கலந்தே கிடக்கிறது. அதைப் பற்றி அறியவும், தேயிலை தோட்டங்களில் இரவு பகல் பாராமல் பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வியலை, குறிப்பாக பெண்களின் நிலை உணரவும், நீலகிரி நோக்கி பயணித்தோம்.

மலைகளின் அரசியான ஊட்டி இருக்கும் நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலம். தேயிலைத் தோட்டங்களோடு, பச்சைக் கம்பளம் போர்த்திய அழகில், உயரமான பைன் மரங்களோடு, மலைக் குன்றுகளும் இணைய பார்க்க கண்கொள்ளா காட்சிதான். மலை அரசியின் மடிக்குள் பல கதைகள் புதைந்து கிடந்தாலும், மிகவும் முக்கியமான கதை தாயகம் திரும்பிய இலங்கை மலையகத் தமிழர்களின் கதை. 150 ஆண்டுகளுக்கு முன்பு 1860ல் 10 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்ற அடிமைகளாக நம் தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

மூன்று தலைமுறைகளாக அங்கேயே உழைத்து, இலங்கை மண்ணின் மக்களாய் மாறிய நிலையில், அங்கு வாழ முடியாத நிலை ஏற்பட, அப்போதைய இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மற்றும் இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகா ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1964ல், 5 லட்சத்து 25 ஆயிரம் மலையகத் தமிழர்கள் மீண்டும் தமிழகம் திரும்பும் நிலை ஏற்பட்டது. அவர்களில் பலர் தேயிலை தோட்டங்கள் நிறைந்த நீலகிரி மாவட்டங்களில் குடியமர்த்தப்பட்டனர். தேயிலை தோட்டங்களிலே 5 தலைமுறைகளைத் தாண்டியும் வேலை செய்யும் நிலை இன்றுவரை அவர்களின் தொடர்கதை…

தேயிலைக் கொழுந்துகளை பதினைந்து நாட்கள் இடைவெளியில் மாதமிருமுறை பறிக்கவேண்டும். இது தொடர்ந்து வருடம் முழுவதும் நடைபெறும். இதனை பறிக்கும் வேலைகளை பெரும்பாலும் வயதான மற்றும் இளம் வயதுப் பெண்களும் இணைந்தே செய்கின்றனர். இப்படி பறிக்கப்பட்ட தேயிலை இலைகளைத் தொழிற்சாலைகளுக்கு தலைச் சுமையாகக் கொண்டு சென்று சேர்க்கும், இவர்களுக்கு பணிப்பாதுகாப்பற்ற தினக் கூலியே வழங்கப்படுகின்றது.

இது குறித்து கக்குச்சி பஞ்சாயத்து முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் கதிரேசனிடம் பேசியபோது, ‘‘தாயகம் திரும்பிய தாழ்த்தப்பட்ட வகுப்பினர், மலைவாசி மக்கள், கேரளாவில் இருந்து வந்தவர்கள் என நீலகிரி மாவட்டத்தில் மக்கள் பரவலாக ஆங்காங்கே உள்ளார்கள். அதில் நாங்கள் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள். வெள்ளையர்கள் ஆட்சியின் போது வறுமை காரணமாக பெரம்பலூர், சேலம், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் இருந்து இலங்கை சென்று தேயிலைத் தோட்டங்களை எங்கள் மூதாதையர்களே உருவாக்கினார்கள். இந்தியாவிற்கு பலரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அதில் இங்கிருந்து சென்ற எங்கள் மூதாதையர்களும் அடக்கம். பெரும்பாலும் நாங்கள் இலங்கையில் பிறந்து வளர்ந்து படித்தவர்கள். ஒப்பந்தத்தால் திருப்பி அனுப்பப்பட்ட நாங்கள் இங்குள்ள தேயிலை எஸ்டேட்டுகளுக்கு அருகிலேயே, புறம்போக்கு மற்றும் அரசு இடங்களில், அரசையும், நில உடமையாளர்களையும் எதிர்த்துப் போராடி, கிராமம் கிராமமாக, நீலகிரி மாவட்டம் முழுவதும் தேயிலைத் தோட்டங்களுக்கு அருகிலேயே ஆங்காங்கே குடியேறியுள்ளோம்.

இலங்கையில் எங்களின் மூதாதையர் என்ன செய்தார்களோ அதைத்தான் நாங்களும் இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் செய்கிறோம். நீலகிரி மாவட்டம் முழுவதும் இந்த மாதிரியான கிராமங்கள் அதிகம் உண்டு. தாயகம் திரும்பியவர்களில் 40 ஆண்டுகள் கடந்து, மூன்று தலைமுறை தொட்டு வசிக்கும் இந்த கிராம மக்கள் வசிக்கும் நிலத்திற்கு, ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்களுக்கு பட்டா கிடையாது. தொண்டு நிறுவனங்களின் உதவிகளோடு கட்டிய சின்னச்சின்ன வீடுகள்தான் இவர்களின் வசிப்பிடம். நில உரிமையற்ற எங்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை எல்லாம் உள்ளன.

தேயிலைத் தோட்டங்களை நம்பியே எங்களின் வாழ்வாதாரம் உள்ளது. தினக் கூலி அடிப்படையில் பெண்களும் ஆண்களும் வேலை செய்கிறார்கள். மிகவும் குறைவான கூலி எங்களுக்கு. காலையில் எட்டு மணிக்குச் சென்றால் மாலை ஐந்து மணிவரை தேயிலை பறிக்க வேண்டும். இதற்கு பெண்களுக்கு 200 ஆண்களுக்கு 400 முதல் 500 வரை தினக் கூலியாகத் தரப்படுகிறது. இலங்கையில் ஒப்பந்தம்போடும்போதே தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய என எழுதி வாங்கி வந்தவர்களுக்கு, சில தேயிலைத் தோட்டங்களை அரசு ஆங்காங்கே உருவாக்கி உள்ளது. உதாரணம் டேன்டீ. இதில் தாயகம் திரும்பியவர்களுக்கு, முன்னுரிமை கொடுத்து வேலை தந்துள்ளார்கள்.

இவர்களுக்கு ஒரு நாளைக்கு 275 எனக் கணக்கிட்டு மாத ஊதியமாக வழங்கப்படும். தாயகம் திரும்பியவர்களில் சிலர் விபரம் தெரியாமல், அவர்கள் உறவினர்கள் இருக்கும் இடத்தை தேடிச் சென்றவர்கள் உண்டு. அரசு தோட்டங்களிலும், பெரும் நிறுவனங்களின் தோட்டங்களிலும் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் பணிப் பாதுகாப்பு உண்டு. மிகப் பெரிய எஸ்டேட் உரிமையாளர்கள், அவர்களின் எஸ்டேட்டுக்கு அருகிலேயே சில கூலித் தொழிலாளர்களை, வீடுகள் கட்டிக் கொடுத்து அவர்களுக்கு உரிமையான தோட்டத் தொழிலாளர்களாகவும் குடியமர்த்தியுள்ளனர்.

பெரும்பாலும் பெண்கள் தேயிலைத் தோட்டங்களை நம்பியே இங்கு உள்ளனர். பெண் தலைமையில் உள்ள குடும்பங்கள், வீடு இல்லாத நிலை என பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் இங்கு ஏராளம். அமைப்பு சாராத் தொழிலாளர்கள் என்பதால் பணிப் பாதுகாப்பு, கூலி உயர்வு என எதற்கும் போராட முடியாத நிலையே பெரும்பாலும் உள்ளது. மக்கள் மறுவாழ்வு மன்றம் உருவாகி, அவர்களின் போராட்டத்தின் விளைவால், வெளிநாட்டு நிதிகளைத் திரட்டி, தொண்டு நிறுவனங்கள் மூலம் தாயகம் திரும்பியவர்களுக்கு, நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தால், நீலகிரி மாவட்டத்தில் மழை சரியாக இல்லை. வறட்சி நிலவுகிறது. கீழே புயல் வந்தால் மட்டுமே இங்கு பெரும் மழை வரும். தேயிலைச் செடியினை சரியான முறையில் பராமரித்து எடுப்பதில்தான் தரம் உள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறை இலை எடுப்பார்கள். ஒரு மாதத்திற்கு இரண்டு முறை சம்பளம் தர முடியாது எனச் சில தோட்ட உரிமையாளர்கள், நன்றாக வளர வைத்து ஒரே மாதத்தில் எடுக்கும்போது தேயிலையின் தரமும் போய்விடும், உழைப்பாளர்களின் கூலியும் குறையும். மேலும் பறிக்கப்பட்ட தேயிலைகளை ஏ,பி, சி என தரம் பார்த்து வாங்குவார்கள். பறித்ததில் தரம் குறைவான இலை இருந்தால் அதற்கும் கூலி குறைக்கப்படும்.

பெரும் நிறுவனங்கள் இயந்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். 50 பேர் செய்யும் வேலையினை ஒரேயொரு இயந்திரத்தை வைத்து செய்துவிடுகிறார்கள். இதனால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். வேலை இழப்பு நிறைய உள்ளது. என் அப்பா 50 ரூபாய் கூலி வாங்கினார். போக்குவரத்துச் செலவையும் சேர்த்து, நான் 200 ரூபாய் கூலி வாங்குகிறேன். இதுதான் இப்போதுவரை எங்கள் நிலை” என முடித்தார். கோத்தகிரிக்கு அருகில் உள்ள கக்குச்சி பஞ்சாயத்திற்குட்பட்ட பாக்யம் நகர் தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்யும் பெண்களிடம் பேசியபோது அவர்களின் பெரிய பிரச்சனையாக, தங்கள் குடும்பத்து ஆண்கள், தங்களுக்குக் கிடைக்கும் கூலிகளை குடித்தே அழிப்பதாகக் குமுறினர்.

ஆண்கள் தூரங்களில் உள்ள எஸ்டேட்களுக்கு சென்று வேலை செய்தால், தினக் கூலியாக அவர்களுக்கு 700 முதல் 800 கூட கிடைக்கும். கூலி முழுவதையும் குடித்தே அழிக்கிறார்கள். ஆண்களுக்கு இணையாக வேலை செய்யும் தங்களின் சம்பளம் அவர்களுக்கு இணையாக அதிகமாக வேண்டுமெனத் தங்கள் தரப்பு நியாயத்தை வைத்தனர்.

புஷ்பராணி

‘நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்யும் பெண்கள்தான் அதிகம் கஷ்டப்படுகிறோம். பெண்கள் குடும்பத்தை தூக்கி சுமப்பார்கள். ஆண்கள் குடியை சுமக்கிறார்கள். எல்லாப் பெண்கள் மனதிலும் கனலும் பிரச்சனை இது. எல்லோர் வீட்டிலும் இருக்கும் பெரிய பிரச்சனை இது. மிகப் பெரிய போராட்டங்கள் செய்தும் எங்களால் குடியைத் தடுக்க முடிவில்லை. ஆண்கள் சம்பாதிப்பது மொத்தமும் அரசு நிறுவனமான டாஸ்மாக் கடைகளுக்கே செல்கிறது. மது ஒழிப்பு போராட்டத்தின்போது, நீலகிரி மாவட்டத்தில் நிறைய கடைகளை அடைத்தும், ஆண்கள் எங்கிருந்தாலும் நீண்டதூரம் சென்று வாங்கி வருகிறார்கள். இதனால் ஜீப் ஓட்டுபவர்களின் தொழில்தான் செழித்தது. 60 கிலோ மீட்டர் கடந்து கூட சென்று மதுவை வாங்கி வருகிறார்கள்.

பெண்களாகிய நாங்கள் வீட்டுக்குத் தேவையான ரேஷன் பொருட்களை வரிசையில் நின்று, அடித்துப்பிடித்து வாங்கி வருவோம். ஆனால் எங்கள் குடும்பத்து ஆண்கள், குவாட்டர்களை கடையில் கடைசியாக நின்றுகூட வாங்கிக் குடிக்கிறார்கள். குடி எங்கள் குடும்ப வாழ்வை மிகவும் சீரழிக்கிறது. குடிகாரக் கணவர்களை வைத்துக்கொண்டு எங்கள் பெண்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். கொடுமைகளை அனுபவிக்கிறார்கள்.

ஜானகி

தினமும் பிழைப்புக்காக தேயிலைத் தோட்டம் உள்ள அட்டிக்குச் செல்கிறோம். காலை 8 மணிக்கு சென்றால் மாலை 5 மணி வரை 8 மணி நேர வேலை. தினக்கூலியாக 200 தருகிறார்கள். கம்பெனி தோட்டம், மிகப் பெரிய எஸ்டேட் என்றால் 220 கூலி தருவார்கள். அதில் எங்களில் போக்குவரத்துச் செலவு 30 ரூபாய் போய்விடும். சீசன் அதிகமாக இருந்தால் 60 முதல் 70 கிலோ வரை தேயிலை பறிப்போம். சீசன் குறைவாக இருந்தால் ஒரு நாளைக்கு 25 முதல் 30 கிலோ வரை எடுப்போம். காலநிலை மாற்றத்தால், நாங்கள் பறித்த இலை 30 கிலோவை விடக் கம்மியாக இருந்தால் கிலோவுக்கு 5 ரூபாய் எனக் கணக்கிட்டுத் தருவார்கள்.

சந்திரமணி

தேயிலை தோட்டங்களில் நீர் நிற்காமல் காவாய் எடுப்பது, புல் புடுங்குவது, பூச்சி மருந்து அடிப்பது, எரு போடுவது, உரமிடுவது, களை எடுப்பது என எல்லா வேலைகளையும் தேயிலைத் தோட்டங்களில் செய்வோம். 5 வருடத்திற்குப் பிறகு குத்துச் செடியினை(நட்ட தேயிலைச் செடி) வெட்டி விடுவோம். மீண்டும் அது தழைக்கும். நீலகிரியில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தால் தேயிலை கருகிவிடும். மழை அதிகமாக இருந்தாலும் இலை அதிகமாக வளர்ந்து பறிக்காமல் விடப்படும், மழை குறைவாக இருந்தாலும் இலை வளர்ச்சி இன்றி எங்கள் வருமானம் பாதிக்கும்.

அதிகமான மழைப் பொழிவு பனிப் பொழிவு காலத்தில் அதற்கேற்ப ப்ளாஸ்டிக் உடைகளால் எங்களை போர்த்திக் கொண்டு மழையிலும் குளிரிலும் இலை பறிப்போம். பறிக்கும்போது கை விரல்கள் பாதிக்கும். பாம்பு, குளவி, அஸ்வினி பூச்சியின் தாக்குதலால் கை முகமெல்லாம் சிவப்பாக மாறும். மூக்கிற்குள் சிறுசிறு துகள் போன்ற பூச்சிகள் நுழைந்து விடும். தொடர்ந்து தும்மல், இருமல், மூச்சிரைப்பு, ஆஸ்துமா வரும்.

பூச்சித் தாக்குதலால் எங்கள் உடல் நிலை பெரிதும் பாதிக்கும். தோல் தொடர்பான வியாதிகள் வரும். எங்கள் நிலை எங்கள் குழந்தைகளுக்கு வரக் கூடாது என எங்கள் கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு இந்த பனி, மழை, குளிரைப் பொறுத்துக்கொண்டு இந்தக் கூலிக்கு வேலை செய்து பிள்ளைகளை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கிறோம். எங்கள் பிள்ளைகளாவது நாலெழுத்துப் படித்து நல்ல நிலைக்கு வரணும்.

இருதய மேரி

தாமதமாக 8 மணிக்கு மேல் சென்றால் கூலியில் 30 ரூபாயை பிடித்துவிடுவார்கள். அதில் 170 அல்லது 180தான் கிடைக்கும். இந்தக் குறைவான கூலியில்தான் வீட்டுக்குத் தேவையான ரேஷன் பொருட்கள் வாங்கணும், பிள்ளைகள் படிப்பு செலவு, வீட்டுச் செலவு, போக்குவரத்துச் செலவு, மருத்துவச் செலவு எல்லாம் பார்க்கணும். விற்கும் விலைவாசியில் இதெல்லாம் எங்களால் சுத்தமாக முடியவில்லை. சில தோட்ட உரிமையாளர்கள் 5 மணிக்குகூட விட மாட்டாங்க. அப்போது மலைப்பகுதி என்பதால் விரைவில் இருட்டி விடும். காட்டு வழியில் வரும்போது பாம்பு, எருமை, காட்டுப் பன்றி, கரடி, புலி, சிறுத்தை எல்லாம் எங்காவது வழியில் இருக்கும். அவற்றையும் சமாளித்து வரணும்.

பிரபாவதி

எங்களின் படிப்பிற்கு ஏற்ற வேலை இங்கு கிடைக்காது. நாங்கள் 10வது படித்திருந்தாலும், +2 வரை படித்திருந்தாலும் எங்களுக்கு இங்கு இதுதான் வேலை. எங்கள் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு, வெளி வேலைக்குச் செல்வது என்பது எங்களால் இந்த மலைப்பகுதிகளில் சுத்தமாக முடியாது. பெரும்பாலும் அருகில் இருக்கும் தோட்டங்களிலே இலைகளைப் பறித்துக் கொடுத்து அன்றைய குறைவான கூலிகளைப் பெற்றுச் செல்வோம்.

தவிர கேரட், பீன்ஸ், காலிஃபிளவர், முட்டைகோஸ், பீட்ரூட், கிழங்கு எடுக்க என மற்ற எல்லாதோட்ட வேலைகளுக்கும் செல்லத் துவங்கியுள்ளோம். தனசேகரிமலைச் சரிவுகளில் நின்று பறிப்போம். எங்கள் முதுகுகளில் பறிக்கப்பட்ட இலைகளின் கனம் எப்போதும் இருக்கும். பெரும்பாலும் தேயிலைப் புதருக்குள் கரடி இருக்கும். தோட்டத்தில் இருப்பவர்களையும், மாலையில் வேலை முடித்துச் செல்பவர்களையும் திடீர் எனத் தாக்கும். சில நேரங்களில் காட்டெருமைகள் எங்களை முட்ட வரும். சுவைக்கு நம்மை அடிமையாக்கி, நம் தினப் பொழுதுகளை புத்துணர்ச்சியூட்டும் சூடான தேநீர் கோப்பைக்கு பின்னால் இருக்கும், தேயிலைத் தோட்டப் பெண்களின் வலி மிகுந்த வாழ்க்கை நீலகிரியின் குளிரையும்..அழகையும்..ரசனையையும்.. மீறி நமக்கு வலியினைத் தந்தது.

– மகேஸ்வரி
படங்கள்: கவின் மலர்

தேயிலையின் வரலாறு

சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகத் தேயிலை உற்பத்திசெய்யும் நாடு இந்தியா. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவில் தேயிலை பயிரிடப்பட்டது தேயிலை சாகுபடிக்கு நுண்ணிய வடிகட்டிய களிமண் மணலில் தான் நன்கு செழித்து வளரும்.தேயிலைச் செடி வேர்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும்.அதனால்தான் தேயிலை சாகுபடிக்கு மலைச்சரிவுகள் ஏற்ற இடமாக உள்ளன.

தேயிலைச் செடி ஒரு வகையான முட்புதர்தான். இதன் விதைகள் நாற்றங்காலில் விதைக்கப்படுகின்றன. அவ்விதை ஒரு வருடம் கழித்து, சிறு செடிகளாக முளைக்கின்றன. பிறகு சிறுசெடிகள் தோட்டத்தில் ஒரு மீட்டர் தூரத்திற்கு ஒரு செடியென நடப்படுகின்றது. மூன்று வருடங்கள் கழித்து தேயிலைச் செடிகள் துளிர்விட்டு சாகுபடிக்கு தயாராகிவிடுகின்றன. சாகுபடி தொடர்ந்து 40 வருடங்கள் நடைபெறுகிறது.

தேயிலைச்செடி சுமார் இரண்டு முதல் மூன்று மீட்டர் உயரத்திற்கு வளரும். பிறகு ஃபேக்டரியில் தேயிலைகளை உலரவைத்தல், உருட்டுதல், நொதித்தல், சூடேற்றுதல், வெட்டுதல், தரம்பிரித்தல், கலக்குதல், பிறகு விற்பனைக்கு தயார் செய்தல் என அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தென் இந்தியாவில் நீலகிரி, கர்நாடகா, கேரளா ஆகிய இடங்களில் அதிகமாக தேயிலை விளைகின்றது.

இந்தியாவில் அஸ்ஸாம் தேயிலை சாகுபடியில் முதல் இடமும் மேற்குவங்காளம் இரண்டாம் இடமும், தமிழ்நாடு மூன்றாம் இடமும் வகிக்கின்றது. உற்பத்தியில் சுமார் 60% தேயிலை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சூடான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. தமிழ்நாட்டில் நீலகிரியில் தமிழ்நாடு தேயிலை உற்பத்தி நிறுவனமான டேன்டீக்கு ஆலைகள் உள்ளன.

சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம்

1815ல் ஆங்கிலேயர் ஆட்சியில், இலங்கையின் மையப் பகுதியான மலையகத்தில், தோட்டப்பணிகளுக்கு தொழிலாளர்கள் தேவைப்பட்டதால், திருநெல்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளிலிருந்து தொழிலாளர்கள், கூட்டம் கூட்டமாக அழைத்துச் சென்றனர். அவர்கள் அங்கே அடிமைகளாகவே நடத்தப்பட்டனர்.

1948ல் இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றதும், இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களுக்கு இலங்கையில் உரிமை மறுக்கப்பட்டு, நாடற்றவர்களாக 5.25 லட்சம் மக்கள் தமிழகத்திலிருந்து எவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டார்களோ, அவ்வாறே சாரைசாரையாக சென்னை, தூத்துக்குடி, இராமேஸ்வரம் கடற்கரைகளில் படகு மூலம் கைதிகளைப்போல் இறக்கி விடப்பட்டனர். தங்கள் மூதாதையர் இருந்த மண்ணில் திக்கற்று, திகைத்து நின்றனர். மீண்டும் தேயிலைத் தோட்டத் தொழிலுக்காக கொடைக்கானல், நீலகிரி, மூணாறு, வால்பாறை, கர்நாடகத்தில் உள்ள சிக்மகளூர், கேரளா, டார்ஜிலிங் வரை இவர்கள் பயணித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதியோருக்கான சிறப்பு உணவுமுறை(மருத்துவம்)!!
Next post சூர்யா முடிவால் அதிர்ச்சியில் திரையுலகம்!!(வீடியோ)