அமெரிக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமரிடம் பாதுகாப்பு சோதனை!!
அமெரிக்காவுக்கு தனிப்பட்ட முறையில் சென்ற பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி, விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகவும், தீவிரவாதிகளுக்கு புகலிடமாக விளங்குவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸியை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்திய சம்பவம் மிகுந்த சர்ச்சையை எழுப்பியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் அப்பாஸியின் சகோதரி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பார்ப்பதற்காக கடந்த வாரம் தனிப்பட்ட முறையில் அமெரிக்காவுக்கு அப்பாஸி சென்றார். விமானத்தில் சென்ற அவர், வாஷிங்டன் விமான நிலையத்தில் சாதாரண பயணிகளை போல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அப்பாஸி ஒரு கையில் பெட்டி, ஒரு கையில் கோட்டுடன் பாதுகாப்பு சோதனையில் இருந்து வெளியே வரும் காட்சிகள் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘இந்த நடவடிக்கை பாகிஸ்தானை அவமதிக்கும் செயலாகும். அப்பாஸி ஒரு நாட்டின் பிரதமர். அவரிடம் ராஜ்ய ரீதியிலான பாஸ்போர்ட் உள்ளது. அவர் ஒரு நாட்டின் பிரதிநிதி. 22 கோடி மக்களின் பிரதிநிதியாக இருக்கும்போது அவருக்கென்று மரியாதை உள்ளது. பாகிஸ்தான் அவமானப்படுத்தப்பட்டு உள்ளது’ என்று பாகிஸ்தான் ஊடகங்கள் சாடியுள்ளன.
Average Rating