மருந்துகளால் வரும் சரும அலர்ஜி!!(மருத்துவம்)

Read Time:18 Minute, 14 Second

அழகே… என் ஆரோக்கியமே…

நோய்களும் அதற்கான மருந்துகளும் அதிகமாகிக் கொண்டிருப்பதைப் போலவே மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளும் இன்னொரு புறம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, மருந்துகளினால் சருமங்களில் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்…

ஒரு நோயாளியின் உடல்நலனை முழுவதுமாக அறிந்து கொடுக்கப்படுகிற மருந்துகள், மாத்திரைகள் கூட இதுபோல் பக்கவிளைவுகளை உண்டாக்கிவிடுவதுண்டு. அது முழுவதுமாக ஒருவரின் உடல்நலனையும், அவரது மருத்துவ வரலாறையும், மரபியல் ரீதியான காரணங்களையும் அறிந்த நீண்ட நாள் குடும்ப நல மருத்துவரின் ப்ரிஸ்க்ரிப்ஷன்கள் கூட சமயங்களில் அதுபோல் தவறாகப் போவதுண்டு. இது ஏன்?எந்த மருத்துவரும் ஒரு நோயாளிக்கு வைத்தியம் பண்ணும்போது அவர் நன்றாக இருக்க வேண்டும். அவர் நோய் சரியாக வேண்டும்.

நம்மை நம்பி வந்தவர்களுக்கு நம்மால் முடிந்த நன்மை செய்ய வேண்டும் என்றுதான் நினைப்பார். அவர்களுக்கு என்ன நோய், அதற்கு என்ன மருந்து கொடுத்தால் நல்லது’ இந்த ஒரு விஷயம் மட்டும்தான் மருத்துவரின் மனதில் இருக்கும். இதன் பிறகும் எப்படி அலர்ஜி உண்டாகிறது?

ஒவ்வொரு மருந்தினாலும் பலனும் உண்டு; பக்கவிளைவும் உண்டு. ஒவ்வொரு மருந்துக்கும் உரிய பலனை நினைத்துத்தான் மருத்துவர் மருந்தை அறிவுறுத்துவார். ஆனால், சிலருக்கு பலன் இல்லாமல் அந்த மருந்தின் தேவையில்லாத பக்க விளைவு மட்டும் வந்துவிடுகிறது.

இது எல்லோருக்கும் நடப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே உண்டாகிறது. இதைப் புரிந்துகொள்ள Pharmacokinetics-ஐ பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். இதை ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் நம் உடல் ஒரு மருந்தை என்னவாக எதிர்கொள்கிறது என்பதுதான் Pharmacokinetics. ஒரு மருந்தை நாம் உட்கொண்ட பிறகு அது நம் உடலில் எவ்வாறு உறிஞ்சப்படுகிறது, அதன்பின் ரத்தத்தில் எந்த அளவு சேர்கிறது, எங்கெல்லாம் அந்த மருந்து செல்கிறது, அந்த மருந்தை நம் உடம்பு எப்படி ஜீரணிக்கிறது. எவ்வாறு உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும்.

அதாவது, நாம் உட்கொள்ளும் மருந்து உடலுக்குள் பலவிதமாக, பலநிலைகளில் செயல்படுகிறது. மருந்து உறிஞ்சப்படுதல்(Absorption), பரவுதல்(Bioavailability), விநியோகித்தல்(Distribution), வளர்சிதை மாற்றம்(Metabolism) மற்றும் வெளியேற்றம்(Excretion) என்னும் செயல்கள் நடைபெறுகிறது.

நாம் ஒரு மருந்தை எந்த வழியில் எடுத்துக்கொள்கிறோமோ அதைப்பொறுத்தும், அது உள்ளே உறிஞ்சப்படும் இந்த விதம் மாறும். வாய் வழியாக எப்போதும்போல் மாத்திரையாகவோ அல்லது நாக்கின் அடியில் வைத்துக் கொள்வது அல்லது சப்பிச் சாப்பிடுகிற மாத்திரையாகவா அல்லது ஊசியாக போடப்படுகிறதா, மூக்கின் வழியாக கொடுக்கப்படுகிறதா என்பதைப் பொறுத்து ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொருவிதமான உறிஞ்சும் தன்மை இருக்கிறது.

தமனியில் நேரடியாக (Intravenous) செலுத்தப்படும் முறை தவிர, மற்ற முறைகளில் தரப்படுகிற மருந்து உடலில் பலவகை செல் சவ்வுகளைத் தாண்டித்தான் ரத்தத்தில் சேரும். அதேபோல் அது திரவ வடிவத்தை அடைந்தால் மட்டுமே தமனி செல்களின் சவ்வுகளுக்குள் செல்ல முடியும். அதாவது, மாத்திரை கரைந்தால் மட்டுமே உடலினுள் எங்கேயும் செல்ல முடியும்.

இதில் முக்கியமான விஷயம் பரவுதல் (Bioavailability). அதாவது, ஒரு மருந்தில் உள்ள முக்கிய காரணி Active Moiety எந்த அளவு ரத்தத்தில் கலந்து நமக்குத் தேவையான இடத்தில் தேவையான செயலைப் புரிகிறது, Chemical equivalence என்பது ஒரு மருந்து எவ்வளவு உள்ளே உள்ளது என்பதைப் பொறுத்தது.

உதாரணம், Paracetamol மாத்திரை பல பெயரில் கிடைத்தாலும் (Calpol-500 Malidens -500) மாத்திரை ஒன்றுதான். ஆனால், Bioeqcuivalence என்பது ஒரே சக்திவாய்ந்த மாத்திரை வெவ்வேறு நிறுவனத்தைச் சேர்ந்து இருந்தாலும் ரத்தத்தில் ஒரே அளவில் சென்று சேர்கிறதா என்பது கேள்விக்குறிதான்.

உதாரணம் 500 மி.கி. ஆனால் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு விலை. இது ஏன்? மருந்து ஒன்றாக இருந்தாலும் மருந்துடன் சேர்ந்து அந்த மருந்து உள்ளே செல்வதற்கு பல விஷயங்களை ஒவ்வொரு நிறுவனத்திலும் சேர்க்கும்.

இதனை Drug delivery system என்று கூறுவார்கள். சில நேரங்களில் ஒரே மருந்து ஒரே அளவு. ஆனால், வெவ்வேறு நிறுவனத்தின் மருந்துகளை சாப்பிட்டால் இரண்டும் உடலில் ஒரே அளவில் சென்று சேராது. ஆகையால், மருத்துவர் ஒரு மருந்தை பல்வேறு நிறுவனங்கள் பரிந்துரைத்தாலும் எதில் அவர் நம்பிக்கை பெற்றுள்ளாரோ அதையே எழுதுவார். இதை அறியாதவர்கள் என்றாவது ஒருநாள் தாம் சாப்பிடும் மருந்து வேறு நிறுவனத்தில் விலை மிகவும் குறைந்தோ அல்லது மிகவும் அதிகமாகவோ இருப்பதை அறியும்போது திகைப்படைந்து விடுகிறார்கள்.

இதில் இந்த மருந்தின் விலை நிர்ணயம். மருத்துவரின் கையில் இல்லை. பெரும்பாலான மருத்துவர்கள், தாம் எழுதும் மருந்து தரமானதா என்பதை யோசித்துத்தான் எழுதுவார்கள்.ரத்தத்தில் சேர்ந்த மருந்து, உடலின் வெவ்வேறு இடங்களை போய்ச் சேரும் விதம் ரத்த ஓட்டம் மற்றும் அந்தந்த இடங்களில் உள்ள செல் சுவரின் வகையைப் பொறுத்து மாறும். முக்கியமாக கல்லீரலில்தான் முதன்மையாக மருந்துகள் செரிமானம் அடையும். அப்படி செரிமானம் ஆகும் மருந்துகள் அதன் வீரியத்தை இழக்கும். ஆனால், சில மருந்துகள் உள்ளே செல்லும்போது வீரியமற்றதாகவும் செரிமானம் அடைந்தபின் வீரியமுள்ளதாகவும் மாறும்.

அவ்வகை மருந்துகளை Prodrug என்றழைப்பார்கள். இந்த மருந்து செரிக்கப்படுவதில் ஏற்படும் வித்தியாசம்தான் மருந்து ஒவ்வாமைக்கு காரணமாக அமையும். ஒரு சிலருக்கு மருந்துகள் மிகவும் சீக்கிரமாக செரிமானமாகிவிடும். அப்படி நேர்ந்தால் அவர்களுக்கு அந்த மருந்தே வேலை செய்யாது.

சிலருக்கு உடம்பில் மருந்து செரிமானமாவது மிகவும் மெதுவாக நடக்கும். அப்படி நேரும்போது அவர்களுக்குத் தேவையில்லாத ஒவ்வாமை நிகழும். மருந்து செரிமானமாவதில் இருக்கும் வித்தியாசமானது ஒருவருடைய மரபணு, உடலில் உள்ள மற்ற நோய்கள்.

(எ.கா.) கல்லீரல் பிரச்னை அல்லது முற்றிய இதயக்கோளாறு மற்றும் அவர்கள் எடுத்துக்கொள்ளும் மற்ற மருந்துகளோடு ஏற்படும் வேதியியல் மாற்றங்களைப் பொறுத்து மாறும்.பொதுவாக, குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே மருந்து கொடுக்க வேண்டும். ஏனெனில், சிறு குழந்தைகளுக்கு கல்லீரல் வளர்ச்சி அடைந்திருக்காது.

வயதானவர்களுக்கு கல்லீரலின் செயல்திறன் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதுமட்டுமல்ல, செரிக்கப்பட்ட மருந்து சிறுநீரகத்தின் வழியாகவோ அல்லது பெருங்குடல் வழியாகவோதான் உடலிலிருந்து வெளியேற்றப்படும். ஆக சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகவும் எச்சரிக்கையோடுதான் மருந்து கொடுக்க வேண்டும். சில மருந்துகள் வியர்வை, எச்சில் மற்றும் தாய்ப்பாலிலும் வெளியேறக் கூடும்.

மருந்து ஒவ்வாமைகளை எதிர்பார்க்கக்கூடிய ஒவ்வாமை, எதிர்பாராத ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தியினால் வரக்கூடியவை என பிரிப்பார்கள்.எதிர்பார்த்த ஒவ்வாமைகள் அதாவது இந்த மருந்து எடுத்தால் இன்ன பக்கவிளைவுகள் வரும் என்ற predictable side effects தெரிந்து கொள்ள முடியும்.

மொத்த விளைவுகள் (Cumulative effects)

குறிப்பிட்ட மருந்தை குறுகிய காலங்களுக்கு கொஞ்சமாக எடுத்துக் கொண்டால் பிரச்னையில்லை. ஆனால், நீண்ட நாட்கள் உட்கொள்வதால் வருவது Cumulative effects.

தாமதமான விளைவுகள் (Delayed Toxicity)

சில மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டபின், சில வருடங்கள் கழித்து வரக்கூடியது.

எளிதான விளைவுகள் (Facultative effects)

இதற்கு எடுத்துக்காட்டு ஒரு கிருமிநாசினி மாத்திரையை உட்கொள்ளும்போது, அதாவது சளி குறைய ஒரு மாத்திரையை உட்கொள்வதால் பிறப்புறுப்பில் அரிப்பு உண்டாவது, கிருமி நாசினி உடம்பில் உள்ள அனைத்து பாக்டீரியாவையும் குறைக்க முயற்சி செய்யும்போது இதுதான் நேரம் என்று Candida albieans என்ற பூஞ்சை அதிகமாகி அரிப்பை உண்டாக்கும்.

Teratogenic

சில மாத்திரைகள் உட்கொண்டிருக்கும்போது கருத்தரித்தால் அல்லது கருத்தரித்த பின்பு மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சில மாத்திரைகளை உட்கொண்டால் அது குழந்தைக்கு குறை வளர்ச்சி அல்லது குறைபாடே உண்டாக்கலாம். எதிர்பாராத ஒவ்வாமைகள் குறிப்பிட்ட ஒரு மருந்தை உடல் சகித்துக் கொள்ளாத மற்றும் தனிப்பட்ட ஒருவருக்கு மட்டும் ஏற்படும் ஒவ்வாமை போன்ற ஒவ்வாமைகள் எதிர்பாராதவை.

Intolerance

ஒரு சிலருக்கு, மருந்தை மிகக்குறைவாக எடுத்தால்கூட ஒத்துக்கொள்ளாமல் போகும். இவர்களுக்கு அந்த மருந்து செரிப்பதில் தாமதம், கல்லீரல் அல்லது சிறுநீரக செயல்பாடு குறைவு அல்லது இவர்களது மரபணு அமைப்பில் உள்ள ஒரு வித்தியாசம் போன்றவை மருந்து ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

Idiosyncrasy

இதை யாராலும் எதிர்பார்க்க முடியாது. எந்த ஆராய்ச்சியிலும் இது எதனால் யாருக்கு ஏற்படும் என்று முன்கூட்டியே கண்டுபிடிப்பது மிகவும் கடினம். சில மரபணு வித்தியாசத்தில் ஒரு சில நொதிகளில் வேறுபாடு அல்லது குறைபாடு இருக்கலாம். இதுபோல் பல குறைபாடுகள் உள்ளன. இப்படி நொதிகளில் வித்தியாசம் உள்ளவர்கள் பல மருந்துகளுக்கு வித்தியாசமான ஒவ்வாமைகளுக்கு ஆளாவார்கள். இது எல்லோருக்கும் ஏற்படுவதில்லை என்பதால், பரிசோதனையை மருத்துவர் செய்யச் சொல்வதில்லை.

தேவையான பரிசோதனைகளைச் செய்யும்போதே மக்கள் மருத்துவர்கள் தேவையில்லாத பரிசோதனைகளைச் செய்வதாக எண்ணுகிறார்கள். தேவையில்லாத பரிசோதனைகளை யாரும் செய்வதில்லை மற்றும் ஒரு நொதி குறைபாடுக்கு உள்ள ஒரு பரிசோதனை. மற்ற நொதி குறைபாடுகளை கண்டுபிடிக்க உதவாது.

அதனால், மருந்து ஒவ்வாமை ஏற்பட்டால் மருத்துவரை குறை கூறுவதை தவிர்த்து, எந்த மருந்துக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதை அறிய முற்படுங்கள். உங்கள் மருத்துவர், என்ன மருந்தை எழுதினார் என்பதை அவர் மட்டுமே அறிவார், அதனால் அவரிடமே எடுத்துச் சொல்ல வேண்டும்.
தான் எழுதிக் கொடுத்த மாத்திரையைப் பார்த்து எதற்கு அலர்ஜி ஆகியிருக்கலாம் என்று அப்போதுதான் கண்டுபிடிக்க முடியும். அந்த மருந்துகளின் பெயரை நினைவில் வைத்துக் கொள்வது அல்லது அதை எழுதி வைத்துக் கொள்வது நல்லது.

எந்த மருத்துவரிடம் சென்றாலும் உங்களுக்குள்ள மருந்து அலர்ஜியைப் பற்றி சொல்ல மறக்க வேண்டாம். அந்த குறிப்பிட்ட மருந்தாக இல்லாவிட்டாலும், வேறு புதிய மருந்தின் கட்டமைப்பின் ஒரு சில இடத்தில் பழைய மருந்தைப்போல் இருந்தால், புதிய மருந்துகளினாலும் அலர்ஜி ஏற்படலாம். அதனால் புதிய மருந்தை எழுதிய மருத்துவரிடம், ‘எனக்கு ஏற்கனவே அலர்ஜி இருக்கு என்று சொன்னேன். நீங்கள் அப்படியும் எனக்கு அலர்ஜி ஏற்படுத்துகிற மாத்திரையை கொடுத்துவிட்டீர்கள்’ என்று சண்டை போடாதீர்கள். ஏனென்றால் அவருக்கும் அது தெரியாது.

இதுவரைக்கும் நான் சொன்னவை சாதாரண ஒவ்வாமைகள் பற்றியது. ஆனால், சிலவகை மருந்து ஒவ்வாமைகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. அதில் சில வகைகள் Dress Syndrome, Drug Reaction Eosinophilia, Systemic Symptoms. Stevens Johnson Syndrome மற்றும் Toxic Epidermal Necrolysis. இவ்வகை ஒவ்வாமைகள் ஏற்பட்டால் உள்ளே இருக்கும் உறுப்புகள் பாதிக்கப்படலாம். மேற்புறத் தோலில் தீக்காயம் பட்டதுபோல் தோல் முழுவதும் கருகி விடலாம். இதனால் எளிதில் கிருமித் தொற்று ஏற்பட்டு, உடம்பு முழுவதும் அது பரவிவிடக்கூடும்.

முக்கியமான நோய்களை குணப்படுத்தக்கூடிய அல்லது கட்டுப்படுத்தக்கூடிய சில முக்கியமான மருந்துகளே கூட மோசமான அலர்ஜியை உருவாக்கிவிடுபவை. எடுத்துக்காட்டாக, T.B.யை கட்டுப்படுத்த உபயோகிக்கப்படும் மாத்திரைகள், வலிப்பை கட்டுப்படுத்த உதவும் மாத்திரைகள், மிக ஆபத்தான கிருமியைக் கொல்லும் மாத்திரைகள், இன்னும் சில மாத்திரைகள் உடனே அலர்ஜியை உருவாக்காது. ஆனால் 2-3 மாதங்கள் உங்கள் உடம்பில் சேர்ந்த பின்பு மோசமான அலர்ஜியை உருவாக்கும். அந்த மருந்தை எழுதிய மருத்துவர்கூட அதை கண்டுபிடிப்பது கடினம்.

ஆகையால், மருந்து ஒவ்வாமையை பற்றி ஓரளவாவது புரிந்துகொள்வதோடு, மருத்துவரையும் நம்புவது அவசியமாகிறது. ஆங்கிலத்தில் ஒரு மேற்கோள்
உள்ளது. ‘It is strange that doctors call what they do Practice.’ இது நோயாளிக்கு மட்டுமல்ல; மருத்துவருக்கும் பொருந்தும்.ஆமாம்… மருத்துவம் என்பது பெருங்கடல் போன்றது. எவ்வளவுதான் படித்திருந்தாலும் ஒவ்வொரு மருத்துவரும், அவர் வாழ்நாள் முழுவதும் அனுபவம் மற்றும் பயிற்சிகளை வளர்த்துக் கொண்டேதான் இருக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை கடத்தல் வழக்கு – டிரைவர் அதிர்ச்சி தகவல்!! (சினிமா செய்தி)
Next post ரஜினியுடன் இணையும் இரு நாயகிகள்…. !! (சினிமா செய்தி)