ஆப்கான் யுத்தக் களத்தில் ஐ.அமெரிக்கா எதிர் ரஷ்யா – பாகிஸ்தான்!!(கட்டுரை)

Read Time:10 Minute, 52 Second

வேகமாக மாறிவரும் பூகோள அரசியலில், சீனாவினதும் ரஷ்யாவினதும் அண்மைய ஆதிக்கம், பனிப்போரின் பின்னரான காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்கா கொண்டிருந்த மேலாதிக்கத்தைச் சமநிலைப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. இதன் ஒரு பகுதியாகவே, பிராந்திய வல்லாண்மையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில், மேற்கத்தேய நாடுகளுக்கு இணையாக ரஷ்யாவும், இராணுவ உடன்பாடு, இணைந்த பாதுகாப்பு உடன்படிக்கை மூலமாக, குறிப்பாக ஆசிய பிராந்தியத்தில் புதியதோர் இணைந்த கட்டமைப்புக்கு, வழிவகுத்திருக்கிறது.

இதன் ஒரு பகுதியாகவே, ரஷ்யாவும் பாகிஸ்தானும், வரலாற்றில் ஒரு முறை இராணுவ யுகத்தின் போட்டியாளர்களாக இருந்தும், குறித்த இவ்வாய்ப்பைப் தக்கவைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர் என்பதையே, அண்மைய ரஷ்ய – பாகிஸ்தான் இணைந்த கொள்கைகளும் உடன்படிக்கைகளும் வெளிப்படுத்துகின்றன. இவ்விரண்டு நாடுகளும், ஆப்கான் மோதல்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் அச்சுறுத்தல், பொருளாதார ஒருங்கிணைப்பு போன்ற துறைகளில் இணைந்து செயற்படுவதற்குத் தயாராகியுள்ளன.

இதற்குக் காரணங்களாக அண்மைக்காலத்தில் ஆப்கானிஸ்தான் தொடர்பான அணுகுமுறையில் ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்பாட்டிருந்தமை, ஐ.அமெரிக்காவின் மனிதாபிமான உதவிகளை பாகிஸ்தானுக்கு வழங்கியமையை இடைநிறுத்தியதன் மூலம் பாகிஸ்தான் – அமெரிக்க உறவுகளில் ஏற்பட்ட பாதிப்பு, பயங்கரவாதத்துக்கு உதவும் நாடென பாகிஸ்தான் மீது ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேரடியாகவே பழிசுமத்தியமை என்பனவற்றைத் தொடர்ந்து, அண்மைய கொள்கைகளால் ஏற்பட்ட பாதிப்பு, ஐ.அமெரிக்காவுடன் மூலோபாய களக்கொள்கையை பேணுதல், ரஷ்யாவுக்கு மாற்றீடாக அண்மைக்காலத்தில் ஐ.அமெரிக்க, இஸ்ரேல், மேற்கத்தேய நாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் இந்தியா விருப்பம் செலுத்துகின்றமை — குறிப்பாக, ரஷ்யாவை விடுத்து இஸ்ரேலிடம் அண்மையில் இந்தியா உயர் தொழில்நுட்ப ஆயுத கொள்வனவு, குறைந்த விலையில் எண்ணெய் விற்பனை உட்பட பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கைகள் — மற்றும் மேற்கத்தேய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடையை விதித்திருந்த போது, ரஷ்யாவுக்கு மிகவும் தேவையாயிருந்த ஆசிய பொருளாதாரச் சந்தை நிலைமையை இந்தியா – தனது ஐ.அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளுடனான உறவை வளர்க்கும் முயற்சியில் ரஷ்யாவுக்கு வழங்காதிருந்தமை என்பன, ரஷ்யாவும் பாகிஸ்தானும், பிராந்திய மட்டத்தில் ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்குவதில் செல்வாக்குச் செலுத்தியிருந்தன எனக் கூறமுடியும்.

குறித்த இணைந்த பிராந்திய பாதுகாப்புக் கட்டமைப்பின் பிரகாரம், ரஷ்ய- பாகிஸ்தான் பாதுகாப்பு, இராணுவ ஒத்துழைப்பு என்பது, 2014இல் பாகிஸ்தானின் மீது சுமத்தப்பட்ட ஆயுதத் தடைகள் நீக்கலைத் தொடர்ந்து இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் மூலமாக, இராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு வழிவகுத்திருந்தது. குறித்த உடன்படிக்கையின் பிரகாரம், ரஷ்யாவும் பாகிஸ்தானும், “அரசியல், இராணுவப் புலனாய்வு பற்றிய தகவல் பரிமாற்றம், அவை தொடர்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பயங்கரவாதம், பயங்கரவாதத்துக்கு எதிரான பிரிவுகளில் இணைந்து செயற்படுதல், ஆப்கானிஸ்தானின் அபிவிருத்திகளுக்கு இணைந்து செயற்படுதல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான ஆயுத மற்றும் இராணுவ கொள்வனவு விற்பனையை மேற்கொள்ளுதல்” என்பவற்றை அடிப்படியாக கொண்டு உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் உறுதியான வளர்ச்சியைக் காட்டும் வகையில், இராணுவ ஒத்துழைப்புடன் கூடிய கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையொன்றை, 2017ஆம் ஆண்டில் DRUZBHA (நட்பு) என்ற பெயரில் இரு நாடுகளும் நடத்தியிருந்தன. இவற்றுக்கெல்லாம் மேலதிகமாக, குறித்த உடன்படிக்கை பாகிஸ்தானின் வெளிநாட்டு, பாதுகாப்புக் கொள்கைகளை மறுசீரமைத்தல், பொருளாதார வளர்ச்சியைப் புவிசார் அரசியலுக்கும், ஆசியாவின் கொள்கைக்கும், ரஷ்ய முன்னிலைக்குமான நிலைமையை ஏற்படுத்தல் என்பவற்றை ஏற்படுத்தக்கூடிய அடிப்படை கட்டமைப்பாகவே பார்க்கப்படுகின்றது.

குறித்த இக்கட்டமைப்பு, பிராந்தியத்தில் — குறிப்பாக தெற்காசியாவில் — தனது வல்லமையை மீளக் கட்டியெழுப்பும் ரஷ்யாவினதும் பாகிஸ்தானினதும் இணைந்த செயற்பாடாகவே பார்க்கப்பட்டுகின்றது. இதன் முதற்கட்டமாகவே ஆப்கானிஸ்தானின் அபிவிருத்தி, இரு நாடுகளின் இணைந்த உடன்படிக்கையில் கருத்தில் கொள்ளப்பட்டமை அவதானிக்கத்தக்கது. சீனாவும் இவ்விரு நாடுகளும், தமது மேலாண்மையைத் தக்கவைப்பதில் பிராந்திய அமைதியும் ஸ்திரத்தன்மையும் செல்வாக்குச் செலுத்தும் என்பதை அறிந்திருந்த வகையிலும், குறிப்பாக ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மையை பேணுதல் தொடர்பில் ஐ.அமெரிக்காவின் செல்வாக்கைக் குறைத்தல் அவசியமானது எனவும் கருதும் வகையாலும், ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் ஐ.அமெரிக்கா வெளிப்படைத்தன்மையை பேணவில்லை, அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு ஆப்கானிஸ்தானில் ஒரு புகலிடத்தை வழங்குவதில் மேற்கத்தேய நாடுகளின் புலனாய்வுத்துறை நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன என்ற முறைப்பாட்டின் அடிப்படையிலும், ஐ.அமெரிக்காவைத் தாண்டி, ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானும் ரஷ்யாவும் தொடர்ச்சியாகச் செயற்படுதலே, பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாண்மையைச் சமநிலைப்படுத்தும் என்ற காரணங்களாலும், ரஷ்யாவும் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானின் அபிவிருத்தியில் முதலீடு செய்கின்றன.

இதன் ஒரு பகுதியாகவே இரு நாடுகளும், ஆப்கானிஸ்தானில் நீண்டகால ஐ.அமெரிக்க இராணுவ நிலைப்பாட்டை சமாதானத்துக்கும் ரஷ்யாவினதுமட் பாகிஸ்தானினதும் மூலோபாய நலன்களுக்கும் தீங்கு விளைவிப்பதாக கருதுகின்றன. இதன் ஒரு பகுதியாகவே, ரஷ்யாவின் உதவியுடன் வடக்கு ஆப்கானிஸ்தானில் ஆப்கானிய தலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான கொடூரமான தாக்குதலை மேற்கொண்டிருந்தது.

ரஷ்யாவையும் பாகிஸ்தானையும் பொறுத்தவரை, இரு நாடுகளுக்கும் ஆப்கானிஸ்தானில் அரசியல் ஸ்திரத்தன்மையொன்று ஏற்படுதல், அவ்வரசியல் ஸ்திரத்தன்மையை ஆப்கான் தலிபான்கள் உள்வாங்கப்படுத்தல் என்பன, கொள்கை ரீதியான எதிர்பார்ப்பாகும். அதுவே நீண்டகாலத்தில் பிராந்தியத்தில் ஒரு வல்லாண்மையை ஏற்படுத்துவதில் பாகிஸ்தானுக்கும் பரந்தளவில் ரஷ்யாவுக்கும் உதவும் என, இரு நாடுகளும் கணக்கிடுகின்றன. இவற்றின் பின்னணியிலேயே ஆப்கான் அபிவிருத்தி, இராணுவக் கட்டமைப்பை விருத்திசெய்தல் தொடர்பில் ஐ.அமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருந்த பாதுகாப்பு நிதியாண்டு அறிக்கையில், கடந்த ஆண்டுகளை விட கணிசமான தொகையை ஒதுக்கியிருக்கின்றமை பார்க்கப்பட வேண்டியதாகும். இது, பிராந்தியத்தில் மிகவிரைவில் எந்த ஒரு முடிவுக்கும் இட்டுச்செல்லாது என்பதையே காட்டுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினி ரசிகை சீமானை வெளுத்து வாங்கி!!(வீடியோ)
Next post பாலுறவுக்கு ஏற்ற சிறந்த நிலைகள்!!(அவ்வப்போது கிளாமர்)