டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உடன் காதலா?: இந்தி நடிகர் ஷாகித் கபூர் பதில்
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவை காதலிப்பதாக வெளிவரும் வதந்திகளால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்த முடியாது என்றும் இந்தி நடிகர் ஷாகித் கபூர் தெரிவித்தார். டென்னிஸ் விளையாட்டில் கவர்ச்சி புயலாக வலம் வந்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் சானியா மிர்ஸா, இந்தி நடிகர் ஷாகித் கபூருடன் காதல் வயப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அவர்கள் இரண்டு பேரும் மும்பை, கோவா என்று ஊர் ஊராக சுற்றி வந்தனர். ஓட்டல்களில் இரவு விருந்தில் கலந்து கொண்டனர். இந்தியில் வளர்ந்து வரும் இளம் நடிகரான ஷாகித் கபூர் நடிப்பில் `ஜாப் வே மெட்` என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அந்த படத்தில் ஷாகித் கபூரின் நடிப்பை பார்த்து விட்டு, அவர் மீது சானியாவுக்கு தீராத காதல் பிறந்ததாக கூறப்படுகிறது. சானியா உடனான காதல் குறித்து கேட்டபோது, “இது போன்ற வதந்திகளை நான் எப்போதுமே சீரியசாக எடுத்துக் கொள்வது கிடையாது. சானியாவை பற்றி எனக்கு நன்றாக தெரியும். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். `ஜாப் வே மெட்` படத்தை பார்த்து விட்டு அவர் என்னைப் பாராட்டினார். இது தவிர வேறு ஒன்றும் புதிதாக இல்லை” என்றார். அப்படி என்றால் மும்பை மற்றும் கோவாவில் ஓட்டல்களில் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றீர்களே? அதற்கு என்ன அர்த்தம்? என்று அவரிடம் கேட்டபோது, “அதுவா? ஓட்டல்களில் இருவரும் சேர்ந்து மதிய உணவு, இரவு உணவு சாப்பிட்டோம். அதில் எந்த தப்பும் இல்லையே? அதற்காக சானியாவை எப்போது சந்தித்தேன். எத்தனை முறை சந்தித்தேன் என்றெல்லாம் கூற வேண்டிய அவசியம் கிடையாது. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாது” என்றார்.
சானியா பாராட்டு
இதற்கிடையே, `கிஸ்மத் கனக்சன்` என்ற புதிய திரைப்படம் வெளியாக உள்ளது. அதில் ஷாகித் உடன் நடிகை வித்யா பாலன் நடித்து இருக்கிறார். அது குறித்து ஷாகித் கூறுகையில், “என்னை விட வயது முதிர்ந்தவராக வித்யா பாலன் இருந்ததால் முதலில் தயங்கினேன். ஆனால், திரையில் பார்க்கும் போது எங்களுடைய ஜோடிப் பொருத்தம் அருமையாக உள்ளது. சானியா மிர்சா கூட, படத்தை பார்த்து விட்டு `அடுத்த வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் வித்யாபாலன் இருப்பதாக பாராட்டினார்” என்றார்.
நடிப்பின் மீது கவனம்
முதலில் இந்தி நடிகை கரீனா கபூர், அதன் பிறகு நடிகை வித்யா பாலன் ஆகியோரின் காதல் வலையில் ஷாகித் வீழ்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது சானியாவின் காதல் வலையில் ஷாகித் சிக்கி இருக்கிறார்.
ஆனால், “கடந்த இரண்டு ஆண்டுகளில், தொழில் ரீதியாக எனக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, நடிப்பு தொழிலின் மீது மட்டுமே என்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன்” என்று பதில் கூறுகிறார், ஷாகித்.
Average Rating