சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்ப நூற்றுக்கணக்கான இலங்கை பெண்கள் காத்திருப்பு
சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பி வருவதற்காக சுமார் 200 இலங்கைப் பணிப்பெண்கள் அரசாங்கத்தின் தடுப்பு முகாமில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம், 169 பேர் கொழும்பு திரும்புவதற்காக தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் காத்திருப்பதாக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தொழில் ஆலோசகராகக் கடமையாற்றும் எல்.அபேரட்ன தெரிவித்துள்ளார். இது இவ்வாறிருக்க, தமது நாடுகளுக்கு திரும்பிச் செல்ல விமானச் சீட்டுக்கள் கிடைக்காமல் ரியாத்திலுள்ள ஆட்களை வெளியேற்றும் நிலையம் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகிறது. தமது நாடுகளுக்கு நாடு கடத்தும் வரை தடுத்து வைக்கப்பட்டிருப்போர் முகாம்களில் வைக்கப்படுவதாக ஆசிய இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார். விசாக்காலம் முடிந்து தங்கியிருந்தவர்கள், சிறையிலிருந்து விடுதலையானவர்கள், தப்பிச் சென்ற பெண் பணியாளர்கள் போன்றோருக்கு கிங்காலித் விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுகிறது. அவர்களது கைரேகை அடையாளத்தைக் கொண்டே அவர்கள் பட்டியலுக்குள் இடம்பெறுகின்றனர். பயணம் செய்ய முடியாத விரக்தியால் கடந்த சனிக்கிழமை கணிசமான அளவு இந்தியர்கள் உண்ணாவிரதமிருந்தனர். இலங்கையைச் சேர்ந்த 169 பெண்கள் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியுள்ளனர். கொழும்புக்கு வருவதற்கு ஆசனங்களுக்காக அவர்கள் காத்திருப்பதாக அபேரட்ன கூறியுள்ளார். விமானக் கட்டணங்களை அவர்களே செலுத்த வேண்டியிருப்பதால் மலிவான கட்டணத்துக்காக அவர்கள் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். அண்மையில் விமானப் பயணக் கட்டணங்கள் அதிகரித்திருப்பதால் கோடை காலப் பகுதியில் அவர்களால் நாட்டுக்கு செல்ல முடியாதிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Average Rating