கணினியில் கணக்கு எழுதலாம்! கைநிறைய சம்பாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 51 Second

இன்றைய சூழலில் ஒரு குடும்பத்தில் இருவரும் வேலைக்குப் போனால்தான் சமாளிக்க முடியும் என்ற நிலை உள்ளது. அந்த அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உள்பட இதர செலவுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில், படித்துவிட்டு வேலை தேடும் பெண்களுக்கும், வேலைக்குச் சென்ற நிலையில் குடும்பச் சூழல் காரணமாக வீட்டில் இருப்போரும் கணினியில் கணக்கு எழுதி கைநிறைய சம்பாதிக்க முடியும் என்கிறார் வெற்றிவிடியல் ஸ்ரீனிவாசன். அவரிடம் பேசியதில் இருந்து…

‘‘கல்யாணம் ஆன பின் வேலைக்குப் போக முடியாமல் இருக்கும் பெண்கள் உண்டு. திறமை இருக்கும். ஆனால் குடும்பச் சூழல் ஒத்துவராது. ஜி.எஸ்.டி.யின் கீழ் பதிவான நிறுவனங்கள் மாதாமாதம் குறைந்தது மூன்று படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதனால் கணக்கர்களுக்குப் புதிய வாய்ப்புகள் வந்துள்ளன. இதற்கு பி.காம் பட்டதாரிகள்தான் வேண்டும் என்பதில்லை.

அதிகபட்சம் ஒரு மாதகாலம் பயிற்சி எடுத்தால் போதும். வேலையைச் செய்ய முடியும். டேலி போன்ற மென்பொருளைக் கையாள்வதைச் சுலபமாகக் கற்றுக்கொள்ளலாம். பல நிறுவனங்கள் தற்போது கணக்கு வழக்குகளை வைத்துக்கொள்ள விரும்புகின்றன. அதற்குக் காரணம் விற்பனை சம்பந்தமான வரிகளில் கிடைக்கும் சலுகை. அது மட்டுமல்ல. வங்கிக் கடன் விஷயத்திலும் பல அனுகூலங்கள் இருக்கின்றன. அதனால் சுயவேலை வாய்ப்பு பெருகியுள்ளது.

ஒரு கடைக்காரரிடம் நாம் சொல்ல வேண்டியது இதுதான். பெரிய அளவிலே கணக்கு வழக்கை வைக்கவேண்டிய அவசியமில்லை. நாலைந்து ஃபைல்கள் போதும். கொள்முதல் பில்லை எல்லாம் ஒரு ஃபைலில் வைத்துவிடுங்கள். விற்பனை பில் புத்தகத்தைப் பத்திரப்படுத்துங்கள். அதுபோதும். இரண்டேநாளில் நாம் கணக்கைத் தயார் செய்துவிடலாம். இது கடைக்காரர்களுக்கு எளிதான காரியம். அது மட்டுமல்ல. ஜி.எஸ்.டி.யின் கீழ் பதிவு செய்யாதவர்கள் கூட இந்த வகையில் கணக்கு வழக்கை வைத்துக்கொள்ளலாம்’’ என்றவர் ஜி.எஸ்.டி. பற்றி விளக்கினார்.

‘‘ஜி.எஸ்.டி என்பது சரக்கு விற்பனை வரி. இருபது லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை இருந்தால் ஜி.எஸ்.டி. தேவை. அதற்குமேலும் ஒரு கோடியே ஐம்பது லட்சம் வரை குத்து மதிப்பான கணக்கைக் கொண்டு வரி கட்டலாம். இவற்றுக்கெல்லாம் வழி உண்டு. ஆனால் எல்லா கடைக்காரரும் இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்வார்கள். அதனால் பல லாபங்கள் உண்டு. ஓர் எளிய உதாரணம். ஆயிரம் ரூபாய்க்கு நான் மூலப்பொருளை வாங்குகிறேன். அதற்கு 120 ரூபாய் ஜி.எஸ்.டி. கட்டுகிறேன்.

அந்த மூலப்பொருளை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு பொருளைத் தயாரிக்கிறேன். அதை இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்கிறேன். அதற்கு 360 ரூபாய் வரியை வசூலிக்கிறேன். பழைய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் இந்த 360 ரூபாயையும் நான் அரசாங்கத்திடம் கட்டிவிட வேண்டும். ஆனால் ஜி.எஸ்.டி யின் கீழ் இந்த 360-ல் நான் ஏற்கெனவே கட்டின 120 ரூபாயை கழித்துக்கொண்டு மீதி 240 ரூபாயைத்தான் கட்ட வேண்டும். இந்த 120 ரூபாயை டிடக்ட் செய்வதுதான் இன்புட் கிரெடிட். இதைச் செய்ய நான் கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அதனால் எனக்கு லாபம். அதைச் செய்யத்தான் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.’’ ‘‘ஜி.எஸ்.டி-யின் கீழ் பதிவு செய்து கொள்வது, மாதாந்திரக் கணக்குகளைச் சமர்ப்பிப்பது இவையெல்லாமே இன்டர்நெட் மூலமாகத்தான். அதனால் அரசுத் துறை அலுவலகத்தில் கியூவில் நிற்க வேண்டிய அவசியமே இல்லை. 24 மணி நேரமும் பதிவேற்றலாம். ஒரு பஜாரில் உள்ள சிறிய நிறுவனங்கள் அல்லது கொஞ்சம் பெரிய நிறுவனங்களை நாடுங்கள்.

அவர்களது கம்ப்யூட்டரிலேயே ஏதாவது கணக்கு மென்பொருளை ஏற்றச் சொல்லுங்கள். வாரம் ஒரு நாள் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் செலவழித்தால்போதும். கணக்கு வழக்கை நிர்வகிக்கலாம். இப்படி பத்து அல்லது இருபது கடைகள் போதும். பகுதி நேர வருமானத்தை ஈட்டலாம். இதற்கு ஜி.எஸ்.டி. பற்றி கடைக்காரர்களுக்கு நாம் விளக்க வேண்டும். அதன் கீழ் பதிவு செய்யாதவர்களும் கூட கணக்கைச் சரி பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

அவர்களும் கூட நம் வாடிக்கையாளர்களே. ஆக மொத்தம் தற்போது கணக்கு வழக்கில் ஈடுபாடு கொள்ளாதவர்கள் கூட இப்போது ஆரம்பிக்கத் தயாராக இருப்பார்கள். இன்னொரு வியாபார யுக்தியையும் நாம் இங்கே கையாளலாம். இது கூடுதல் வாடிக்கையாளரைக் கொண்டு வந்து சேர்க்கும். உங்கள் பகுதியில் உள்ள ஆடிட்டர்களை அணுகுங்கள். அவர்களது கிளெயன்ட்ஸ் அங்கு நிறைய இருப்பார்கள். அவர்களிடம் உங்களைச் சிபாரிசு செய்வார்கள் அல்லது கணக்கு வழக்கிற்கு உண்டான பதிவுகளை அவர்கள் அலுவலகத்திற்கே வந்து செய்து தரச் சொல்வார்கள்.

டேலி போன்ற மென்பொருட்களில் இரண்டு ஆப்ஷன்கள் உண்டு. அக்கவுன்ட்ஸ் தெரிந்தவர்கள் நேரடியாகப் பதிவிடுவது. தெரியாதவர்களுக்கு வழிகாட்டும் ஆப்ஷனில் கணக்கைப் பதிவேற்றுவது. இரண்டில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றலாம். ஆடிட்டர்களுக்கு நம் மீது நம்பிக்கை வந்துவிட்டால் அதைவிட வேறு பக்கபலம் தேவையில்லை. இதில் இருக்கக்கூடிய வருமானம் எவ்வளவு என்று பார்த்தால் நமக்கே ஆசை வந்து விடும்.

ஒவ்வொரு கடையும் குறைந்தது மூன்று படிவங்களையாவது மாதாமாதம் அளிக்க வேண்டும். அதைத் தொகுத்துச் செய்ய ஒரு கடைக்கு ரூ.500 என்று வைத்துக் கொள்வோம். 20 கடைகள் கிடைத்துவிட்டால் மாதம் ரூ.10000 பார்க்கலாம். அதுவே வேலைப்பளு அதிகமாக இருந்தால் அதற்கேற்ப நம் சேவைக் கட்டணத்தை அதிகரிக்கலாம். மதியம் 1 மணி முதல் 4 மணி வரை பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். அந்த நேரத்தில் இந்தப் பணியைச் செய்யலாம். கடையாக இருந்தாலும் சரி ஆடிட்டர் அலுவலகமானாலும் சரி இந்தப் பணியைச் செய்ய சரியான ஆட்கள் இருப்பதில்லை. தற்போது நல்ல வாய்ப்பு வந்துள்ளது. பயன்படுத்திக் கொண்டால் வருமானம் ஈட்டலாம்.

ஜி.எஸ்.டி. பற்றிய விவரங்களை ஒரு நான்கைந்து நாட்களில் தெரிந்துகொள்ளலாம். அக்கவுன்ட்ஸுக்கு ஒரு மாதம் போதும். எல்லா இடங்களிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. சுமார் 4 ஆயிரம் டியூஷன் ஃபீஸ். ஆனால் இந்த முதலீட்டை ஒரே மாதத்தில் திரும்ப எடுத்துவிடலாம். அக்கவுன்ட்ஸ் தெரிந்த இரண்டு பேர் சேர்ந்து கொண்டால் இன்னும் வேகமாகப் பணியாற்றலாம். அது மட்டுமல்ல.

கணக்கு மென்பொருளை ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.600 என்று வாடகைக்குக்கூட எடுக்கலாம். கடையின் கணினியில் தரவிறக்கம் செய்தால் போதும். ஒரு மூன்று மாத காலத்திற்குச் செலவு இரண்டாயிரத்தைத் தாண்டாது. கடைக்காரர் பலனை ருசித்துவிட்டால் அவரே மென்பொருளை வாங்கிவிடுவார். இதனால் கூடுதல் பயன்களும் உண்டு.

உதாரணமாக ஸ்டாக். இதன் மீது கட்டுப்பாடு இறுக்கமாக இல்லையென்றால் மறைமுக இழப்பு இருக்கும். ஏனென்றால் திருட்டு இருக்கும். இதை மென்பொருள் மூலம் கட்டுப்படுத்தலாம். வாங்கியது இவ்வளவு, விற்றது இவ்வளவு, மீதி ஸ்டாக் இவ்வளவு இருக்க வேண்டும் என்பதைத் துல்லியமாகச் சொல்லலாம். ஜி.எஸ்.டி. என்பது தேவையில்லை என்றால்கூட இதைப்போன்ற விஷயங்களுக்கு கணக்கர்கள் தேவை. பஜார் பகுதியில்தான் பெரும்பாலான வாய்ப்புகள் உள்ளன. வாடிக்கையாளர் நம்பிக்கைதான் இங்கே முதலீடு. அதைப் பெற்றுவிட்டால் போதும். வேலைக்குப் போக முடியாதவர்கள் கூட சம்பாதிக்க முடியும்’’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வியக்க வைக்கும் மனிதன் – அற்புத திறமை!!(வீடியோ)
Next post 1,372 ரோபோ ஒரே இடத்தில் நடனம் : புதிய கின்னஸ் சாதனை!!