தலையை நோக்கி வந்த சவால்கள் தலைப்பாகையுடன் போய்விட்டனவா?(கட்டுரை)

Read Time:12 Minute, 3 Second

2015இல் தொடங்கப்பட்ட போராட்டத்தை, முடித்து வைக்கத்தான் நினைக்கிறேன்; முடியவில்லையே’ என்ற கவலை கலந்த ஏக்கத்துடனேயே, ஜனாதிபதி இப்போதும் பெருமூச்சு விடுவார்.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’, ‘புதிய வருசத்துடன் எல்லாம் போய்விடும்’, ‘காலம் கனியாமலா போகும்’. ‘தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது’ என்றெல்லாம், நமக்கு ஏற்படும் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் போதெல்லாம் மனதைத் தேற்றிக் கொள்வோம்.

அந்தப் பிரச்சினை அல்லது அதன் கடுமை ஓய்ந்து போகும் போது, மீண்டும் வேறு பிரச்சினைகள் வருகையிலும் அவ்வாறுதான் எண்ணிக் கொள்வோம். இது நமது சாதாரணமான வாழ்க்கைக்கென்னவோ பரவாயில்லை. ஆனால், இதேபோலத்தான் நம்முடைய இலங்கை அரசாங்கத்தின் நிலையும் இருக்கிறது.

நல்லாட்சி என்ற பெயர்ப்பலகையின் பின்னால் நடைபெறுகின்ற அநியாயங்களுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா, மக்களுக்கிருக்கும் சுமைகளைக் குறைக்க வழி தேடுமா, இல்லாவிட்டால் அரசுக்கெதிராக கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் உருவாக்குபவர்களுக்கு எதிராகச் செயற்படுமா என்ற நிலைமையே அது.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி, உருவாக்கப்பட்ட மிகப் பெரியதொரு மாற்றம், பண்டாரநாயக்க குடும்பம் மற்றும் ராஜபக்ஷ குடும்பங்களுக்கும் மேலதிகமாக ஒன்றிணைந்து கொண்ட நாட்டின் மிகப் பெரிய அரசியல் மாற்றம், ஓர் அரசியல் புரட்சியாகவே இருந்தது.

அந்தப் புரட்சி, அடுத்ததாக மீண்டும் அரசாங்கத்தை மாற்றியமைத்தது. அதன் மூலம், நாட்டின் பெருங் கட்சிகளை இணைத்த ஒரு தேசிய அரசாங்கம் கொண்டுவரப்பட்டது. சிறுபான்மை மக்களாகிய தமிழர்களின் ஏகோபித்த அரசியல் தலைமையாகக் கருதப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகவும் அதன் தலைவர் ஆர்.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகவும் உருவானார்.

இந்த அரசியல் மாற்றம் உலகளவில் மிகவும் சிறப்பானதாகவே பார்க்கப்படுகிறது. மேற்குலக நாடுகளும் இந்தியாவும் இணைந்து உருவாக்கிய தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்தியே தீருவோம் என்று, எதிர்த்தரப்பு என்று தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் விடாப்பிடியாகவே இருக்கின்றனர்.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது முதல், மஹிந்த ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராகப் பல விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.

ஊழல் குற்றச்சாட்டுகள் பல முன்வைக்கப்பட்டன; கைதுகள் நடைபெற்றன. இதனால் பெரும் குழப்பமே நாட்டில் ஏற்பட்டது. சிறைச்சாலைக்கும், பொலிஸ் நிலையங்களுக்கும், வைத்தியசாலைகளுக்கும், நீதிமன்றங்களுக்குமாக மஹிந்த குடும்பம் சென்று வந்த வண்ணமிருந்தது.

இப்போதும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது கைதுக்கெதிராக, நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றுக் கொண்டே இருக்கிறார்.

இயேசு நாதர் சொன்னது போல, ஒரு கன்னத்தில் அறைந்தால், மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டும் மனோ பக்குவம் யாருக்குத்தான் இருக்கிறது. எனக்கு நடந்ததைப் போன்று, அடுத்தவனுக்கு மேலும் ஒரு மடங்கு திருப்பிக் கொடுப்பேன் என்றுதான் எல்லோரும் நிற்கிறார்கள்.

அந்த உடும்புப்பிடியாகத்தான், இலங்கை மத்தியவங்கி பிணை மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கண்டுபிடிப்பின் பயனாக, நிதி அமைச்சராக இருந்த, ரவி கருணாநாயக்க பதவியை இராஜிநாமாச் செய்தார்.

பின்னர் மீண்டும், கடந்த உள்ளுராட்சித் தேர்தலில், மொட்டு பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றி, வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றிக் களிப்பு மனோநிலை, கண்டிக் கலவரத்தையும் கொண்டுவந்தது.

“நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இளைஞர்களைப் பயன்படுத்துவோம்” என்று பிரதமர் ரணில் பேசிக் கொண்டிருக்கையில், இளைஞர்களின் சூடான இரத்தத்தை தூண்டி, அதில் நாட்டை அல்லோல கல்லோலமாக்கி விட்டு, தாம் குளிர் காயலாம் என்று ஒரு தரப்பு முயன்றது.

ஆனால், சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்களுக்கான தடை வந்து, விசாரணைகள், மிகக்கடுமையாகச் செயற்படுத்தப்பட்டு, கண்டி மற்றும் ஒரு சில பிரதேசங்களுக்குள்ளேயே கலவரங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. இந்தக் கட்டுப்படுத்தல் காரணமாக, தாம் நினைத்த முயற்சி நடைபெறவில்லை என்று குளிர் காய எண்ணியோர் சோர்ந்து போயினர்.

இது இவ்வாறிருக்க, நாட்டைக் கட்டியெழுப்பவேண்டும், அபிவிருத்தியைக் கொண்டுவரவேண்டும் என்று சொல்லிக் கொள்ளும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், மக்கள் மீது மேலும்மேலும் சுமையைக் கொடுத்த வண்ணமே இருக்கிறது. நின்று நிதானித்து எந்த ஒரு விடயத்தையும் அரசாங்கம் செய்ததாகத் தெரியவில்லை.

ஆனாலும், மீண்டும் அதற்கும் மேலதிகமாகக் கொண்டு வந்த முயற்சிதான், பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை. அந்தப்பிரேரணையும் நாடாளுமன்றத்தில் தோற்றுப் போனது. வெற்றிபெற்ற பிரதமர் ஒரு பக்கமிருக்க, தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்து கொண்டு, பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் இந்த அமைச்சரவையில் இருக்க முடியாது; புதுவருடத்துக்கு முன்னரோ பின்னரோ அமைச்சரவை மாற்றப்படும் என்று அறிவித்தல் வந்திருக்கிறது.

இப்போது தினமும் திருவிழாவாகத்தான் இருக்கிறது. இந்தத்திரு விழாவுக்குள் மக்கள் என்ன புதுவருடத்தைக் கொண்டாடப் போகிறார்களோ தெரியாது என்றும் கவலைப்பட வேண்டியிருக்கிறது.

அரசியல் குழப்பங்கள் மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருப்பதால் மக்களிடம் ஒரு நம்பிக்கையீனமே ஏற்படும். இந்த நம்பிக்கையீனம் நாட்டில் அரசியல் மாற்றத்துக்கு வழியை ஏற்படுத்தி விட்டுவிடும் என்றே ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கை கொண்டிருக்கிறது.

நாட்டின் அமைச்சரவை திடமான முடிவுகளை எடுக்கக் கூடியதாகவும் தீர்மானங்களை நிறைவேற்றக் கூடியதாகவும் தொடர்ந்து எவ்வித பிரச்சினைகளும் இல்லாததாக இருத்தல் வேண்டும். ஆனால், தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சரவை மாற்றம் என்பது சர்வ சாதாரணமான விடயமாக இருக்கிறது. இன்றைக்கோ நாளைக்கோ அமைச்சரவை மாறலாம் என்ற நிலையிருந்தால், நாட்டில் எவ்வாறு ஸ்திரத்தன்மை பேணப்படும் என்பதுதான் கேள்வி.

இந்த இடத்தில், எல்லோரும் தமது மனசாட்சிக்கு ஏற்ப செயற்படவில்லையாயின் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது, மக்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்புத் தகர்ந்துவிடும்.

ஊழல், போராட்டங்கள், பிரச்சினைகள் போன்றவற்றுக்கு மத்தியில், ஒழுக்கப் பண்பாட்டின் அடிப்படையிலான நல்லாட்சி எண்ணக்கருவை பாதுகாத்து ஒரு சிறந்த சுபீட்சமான தேசத்தைக் கட்டியெழுப்புவது எவ்வாறு என்பது நமது நாட்டில் எல்லோரிடமும் இருக்கும் கேள்வி.

பொருளாதார நிலைமைகளில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகச் செய்யவேண்டியவற்றைத் தவிர்த்து, தம்மைப் பாதுகாத்துக் கொள்வதும் ஆட்சியைத் தக்கவைப்பற்கான முயற்சிகளை மேற்கொள்வதே இந்த அரசாங்கத்துக்கு வேலையாகிப் போய்விட்டது. இதன் மூலம் பாதிக்கப்படப் போவது, அரசியல்வாதிகளைத் தெரிவு செய்து விட்டோம்; அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நினைப்பில் இருக்கிற மக்கள்தான்.

முன்னாள் ஜனாதிபதியின் அடுத்த திட்டம் என்ன? என்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறார்களோ அப்போதுதான் ஓரளவுக்கேனும் நாட்டை முன்னேற்றக் கூடியதாக இருக்கும்.

அரசியல் தலைவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக்கொண்டிருக்காது, தாம் பொறுப்பேற்ற விடயங்களை உரிய முறையில் நிறைவேற்றி, நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுதல் என்பதே முக்கியம்.

அந்தவகையில், இலங்கையின் அபிவிருத்திச் சவால்களா, நாட்டின் மக்களின் வாக்குகளால் ஆட்சிக்குவந்த அரசியல் வாதிகளின் சவால்களா வெற்றிபெறும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆவி ஓட்டி சென்ற ஆளில்லா பைக் பீதியைக் கிளப்பும்!! (வீடியோ)
Next post பாகிஸ்தான் சோதனை இந்தியாவை தாக்க ‘பாபர்’ ஏவுகணை!!(உலக செய்தி)