குறிப்பால் உணர்த்தல்!!( கட்டுரை )

Read Time:22 Minute, 5 Second

அண்மைக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக, இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில், இம்முறை வசந்த காலத்தில், நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்றோரின் தொகை மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது.

குறிப்பாக, முஸ்லிம்கள் வழமைபோல, நுவரெலியாவுக்குச் செல்லவில்லை என்பது வெள்ளிடைமலை. நாடெங்கிலுமுள்ள முஸ்லிம்கள், கூட்டிணைந்து மேற்கொண்ட இந்நடவடிக்கை, வெற்றியளித்துள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகின்ற சமகாலத்தில், “இது ஒரு வேண்டத்தகாத நிலைப்பாடு” என்றும் சிலர், அபிப்பிராயம் வெளியிட்டு வருகின்றனர். அதாவது, நியூட்டனின் இரண்டாம் விதி வேலை செய்யத் தொடங்கி இருக்கின்றது.

கடந்த சில மாதங்களுக்குள், அம்பாறையிலும் கண்டி மற்றும் அதையண்டிய பிரதேசங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைகள், திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதை உலகறியும்.

1983 ஜூலைக் கலவரம், எவ்வாறு தமிழர்களின் வர்த்தகத்தைக் குறிவைத்து தீக்கிரையாக்கியதோ, கிட்டத்தட்ட அதே பாணியில், இவ்வருடம் பெப்ரவரியில், கண்டியின் சுற்றுவட்டாரத்தில் இடம்பெற்ற வன்முறைகளும், முஸ்லிம்களை இன, மத ரீதியாக நெருக்குவாரப்படுத்தி இருந்தது. இதற்கு மேலதிகமாக, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நாசமாக்கும் இலக்கையும் கொண்டிருந்தமை, பின்னர் புலனாகியது.
பள்ளிவாசல்களையும் வீடுகளையும் தாக்கிச் சேதப்படுத்திய வன்முறையாளர்கள், திகண தொடக்கம் கண்டி ஈறாக, அக்குறணை வரையுள்ள, அதிக எண்ணிக்கையிலான வர்த்தக நிலையங்களைத் தீயிட்டுக் கொழுத்தியிருந்தனர்.

ஆனால், வெறுமனே அவர்கள் வர்த்தக நிலையங்களை மட்டும் நாசப்படுத்தி விட்டுச் செல்லவில்லை. மாறாக, கடைகளை உடைத்து, பணம் வைக்கப்பட்டுள்ள பெட்டகங்களை நொருக்கி, அதிலிருந்த பணத்தையும் பெறுமதியான பொருட்களையும் கொள்ளையடித்துள்ளமை சி.சி.டி.வி காணொளிகளின் மூலம் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியிருக்கின்றது.

அதுமட்டுமன்றி, வியாபார நிலையங்களில் பணத்தைக் கொள்ளையிட்ட பின்னர், பணம் வைக்கப்படும் பெட்டகப் பகுதியை, வெறிகொண்டு சேதமாக்கிய விதமும், தீயிட்டுக் கொழுத்திய பாணியும் ஓரளவுக்கு அவர்கள் கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியை வெளிக்காட்டின.

சில இனவாதச் செயற்பாட்டாளர்களைப் பயன்படுத்தி, ஒரு சில சிங்கள வர்த்தகர்கள், முஸ்லிம் வர்த்தகர்களை, ஆங்காங்கு அச்சுறுத்தி வந்ததாக, சமூக வலைத்தளங்களில் வெளியான கருத்துகளுக்கும், இதற்கும் தொடர்புள்ளதோ எனச் சந்தேகிக்குமளவுக்குச் சம்பவங்கள் இருந்தன.

‘முஸ்லிம்கள் வியாபாரிகள்’ என்று சொல்லப்படுவதற்குக் காரணம், அவர்களது இரத்தத்தில் ஊறிய வியாபாரத் திறன் ஆகும். இன்றும் கூட, பிரபலமான வர்த்தக நிறுவனங்களை, முஸ்லிம்கள் கொண்டிருப்பதுடன், ஒரு சில வர்த்தகத் துறைகளைக் கட்டியாளும் ஆற்றலையும் பெற்றிருக்கின்றனர்.

இதை, இன ரீதியாகப் பார்க்கக் கூடாது. திறமையும் முயற்சியும் இருக்கின்றவனுக்கு, காலம் நினைத்தால் முன்னேற்றத்தை வழங்குகின்றது என்றே நோக்க வேண்டும். ஆனால், நடைமுறை யதார்த்தம் வேறுமாதிரியாக இருக்கின்றது. வியாபாரத்தையும் ஒரு சிலர், இன ரீதியாக நோக்குவதாக, ஓர் அபிப்பிராயம் இருக்கின்றது. சில முஸ்லிம்களும் கூட, அவ்வாறு நோக்குவதுண்டு.

இந்நிலையில், கண்டிக் கலவரத்தின் காரணமாக, அப்பகுதி முஸ்லிம்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. உண்மையில், வன்முறையாளர்கள் சில நூற்றுக்கணக்கான முஸ்லிம் வியாபாரிகளை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்தாலும், முஸ்லிம் நுகர்வோரை மறந்து விட்டனர்.

சிங்களவர்களால் நடத்தப்படுகின்ற கம்பனிகளின் பொருட்கள், சேவைகளைக் கொள்வனவு செய்கின்ற 20 இலட்சம் முஸ்லிம்கள், நாடெங்கும் வாழ்கின்றனர். இதை, ஏப்ரல் வசந்த காலத்தில், அரசாங்கத்துக்கும் சிங்களப் பெருந்தேசியத்துக்கும் குறிப்பால் உணர்த்த, இம்முறை முஸ்லிம்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

பொதுவாகவே சுற்றுலா, விடுமுறை, உணவு,பொழுதுபோக்குகளுக்காக அதிகளவு பணத்தைச் செலவழிப்பவர்களாக முஸ்லிம்கள் கருதப்படுவதுண்டு. நுவரெலியா வசந்தகாலம் வந்துவிட்டால், ஏப்ரல் மாதத்தில் நுவரெலியா மட்டுமன்றி, மத்திய மலைநாடே நிரம்பி வழியும்.

அப்போது எங்கு பார்த்தாலும், முஸ்லிம்கள் (தொப்பி, அபாயா போட்டவர்களும் கூட) வசந்தகாலத்தைக் கழிக்க வந்திருப்பதைக் காண முடியும். குறிப்பாக, 2016ஆம் ஆண்டு வசந்த காலத்தில், நுவரெலியா பள்ளிவாசலில், வெள்ளிக் கிழமை ஜூம்ஆவில் கலந்து கொண்டவர்கள், வீதி முழுவதும் நின்று தொழுதமை பெரும் பேசுபொருளாக ஆகியிருந்தது. ஆனால் இம்முறை, நுவரெலியா வெறிச்சோடியிருந்தது.

கண்டியில் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டதற்குக் கவலை தெரிவிக்கும் முகமாகவும் ‘உங்களது வர்த்தகத்தை, நாம் புறக்கணித்தால் என்ன நடக்கும் என்று பாருங்கள்’ என்பதைச் சிங்கள வர்த்தக சமூகத்துக்கும் அரசாங்கத்துக்கும் உணர்த்துவதற்காகவும் இம்முறை, நுவரெலியா வசந்த காலத்துக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்களால் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

சிங்கள வர்த்தகர்களுக்குப் பாடம் புகட்டுவது மட்டும் இதன் நோக்கமல்ல; மாறாக, கலவரங்கள் தந்த காயங்களும் கவலைகளும் ஆறுவதற்கு இடையில், பாதிக்கப்பட்ட கண்டி முஸ்லிம்கள் இன்னும் வழமையான வாழ்க்கைக்குத் திரும்பாத நிலையில், வீண்கொண்டாட்டங்களை மேற்கொள்ளத் தேவையில்லை என்று முஸ்லிம்கள் நினைத்தனர்.

அத்துடன், ஏப்ரல் பருவகாலத்தில், முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஏதாவது முறுகல்கள், கைகலப்புகள் ஏற்பட்டு, அது பெரும் பிரச்சினையாக மீண்டும் உருவெடுத்துவிடுமோ என்ற பயமும் இருந்தது. இந்த எல்லாக் காரணங்களுக்காகவுமே, முஸ்லிம்கள் பெருமளவுக்கு இம்முறை நுவரெலியாவைப் புறக்கணித்திருந்தனர்.

இம்முறை வசந்தகால விடுமுறையில், முஸ்லிம்கள் வழக்கம் போல, பெரும் எண்ணிக்கையில் நுவரெலியாவுக்குச் சென்றிருக்கவில்லை. இதனால் ‘குட்டி இலண்டன்’ தெருக்களும் மனதைக் கவரும் இடங்களும் சனநெரிசலின்றிக் காணப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.

இது குறித்து, பலதரப்பட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இது ‘முஸ்லிம்களுக்கு வெற்றி’ என்று அநேகர் கருத்து வெளியிட்டு வருவதுடன், “இது ஒரு தவறான முன்மாதிரி” என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

உண்மையில், ஏப்ரல் வசந்தகாலம் என்பது, நுவரெலியாவை மையப்படுத்தியது என்றாலும், அது நுவரெலியா என்ற 15 சதுர கிலோமீற்றர் பரப்பளவான நகரத்துக்கு மட்டுமே உரியதல்ல. விடுமுறைக்காக வருகின்றவர்கள், மாவனல்லை, மாத்தளை, வெலிமட, பலாங்கொடை, கண்டி என இலங்கை வரைபடத்தில், தொடுத்து வரையக் கூடிய பிராந்தியங்களுக்கு உட்பட்ட, பல இடங்களுக்கு விஜயம் செய்கின்றனர்.

இந்நிலையில், கண்டிக் கலவரம் பற்றிய பயம், இன்னும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல சிங்கள, தமிழ் மக்களுக்கும் குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆதலால் சிங்கள, தமிழ் மக்களது வருகையும் சிறு அளவில் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவே தெரிகின்றது. ஆனால், முஸ்லிம்களின் வருகையே பாரிய வீழ்ச்சி கண்டிருக்கின்றது.

கணிசமான முஸ்லிம்கள், இம்முறை உல்லாசத்தைத் தவிர்த்திருந்த போதிலும், இதுதான் சந்தர்ப்பம் என வந்திருந்தவர்களும், வேறு இடங்களுக்குச் சுற்றுலாச் சென்றவர்களும் என, பெருமளவானோர் இருக்கின்றனர் என்பதையும் மறைக்க முடியாது.

எது எவ்வாறிருப்பினும், முஸ்லிம்களின் வர்த்தகத்தின் மீது, இனவாதிகள் கை வைத்தமையால், மனமுடைந்து போயிருக்கின்றோம் என்பதையும், முஸ்லிம் வர்த்தகர்களை இலக்கு வைத்தால், இலட்சக் கணக்கான முஸ்லிம் வாடிக்கையாளர்கள் சிங்கள வர்த்தகர்களின் வருமானத்தில், பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தவும் தயங்க மாட்டார்கள் என்பதையும் நுவரெலியா புறக்கணிப்பானது, சிங்களத் தேசியத்துக்கும் அரசாங்கத்துக்கும் தெட்டத் தெளிவாக உணர்த்திக் கொண்டிருக்கின்றது என்பது முக்கியமானது.

ஏதோவோர் அடிப்படையில், முஸ்லிம்கள் இந்த வேண்டுகோளை ஏற்று, நுவரெலியாவுக்குச் செல்லாமல் தவிர்ந்துக் கொண்டது பாராட்டத்தக்கது. ஒரு சமூகம் சார்ந்த வேண்டுகோளை மதித்து, இந்தளவுக்கு ஒற்றுமைப்பட்டிருக்கின்றார்கள் என்பது, நெருக்குவாரங்கள் அதிகரிக்க அதிகரிக்க, ஓர் இனக் குழுமத்தின் உள்ளக ஒற்றுமை பலப்படுவதற்கு எடுத்துக் காட்டாகவும் அமைந்துள்ளது.

முஸ்லிம்களின் மனவோட்டத்தையும், கண்டி மற்றும் அம்பாறைக் கலவரங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் ஆட்சியாளர்களுக்கும் இனவாதச் சக்திகளுக்கும் இனவாதிகளுக்கு சூடம் காட்டுகின்ற அரசியல்வாதிகளுக்கும் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை உணர்த்த வேண்டிய தேவை ஒன்று இருக்கின்றது. அதை ஓரளவுக்கு, நுவரெலியா வசந்தகாலப் புறக்கணிப்பு நடவடிக்கை செய்திருக்கின்றது என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், இதன் எதிர்த்தாக்கம் அல்லது மறுபக்கம் என்ன என்பது பற்றிச் சிந்திக்க வேண்டிய தேவை, முஸ்லிம்களுக்கு இருக்கின்றது.

உண்மையில், நுவரெலியாவுக்குச் செல்லாமல் தவிர்த்தது, நீண்டகால அடிப்படையில் புத்திசாலித்தனமானதா, பல்லின நாடொன்றில் இது ஆரோக்கியமானதா, மலைநாட்டில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்களும் அவர்களது வாழ்வாதாரமும் இந்தப் புறக்கணிப்பால் பாதிக்கப்படவில்லையா, நுவரெலியாவுக்குச் செல்லாத முஸ்லிம்கள், நிஜமாகவே வீண் பயணங்களை மேற்கொள்ளாது, வீட்டில் இருந்தார்களா, குறிப்புணர்த்தல் அல்லது பாடம்புகட்டுதல் என்பது தற்காலிகமான முயற்சிதானா? என்ற பல கேள்விகளுக்கு, விடை தேட வேண்டிய பொறுப்பு, முஸ்லிம் சமூகத்தின் மீது இருக்கின்றது.

நுவரெலியாவுக்கு, முஸ்லிம்கள் முன்னரைப் போல் போகவில்லை என்பதால் அங்குள்ள விடுதிகள், ஹோட்டல்கள், உல்லாசப் பயணத் தளங்கள், பூங்காக்கள் வெறிச்சோடிக் கிடந்தனவெனக் கூறப்படுகின்றது. இது, முஸ்லிம்களின் எதிர்ப்பைக் குறிப்புணர்த்தும் நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆனால், இதனால் பாதிக்கப்பட்டது சிங்கள வர்த்தகர்கள் மட்டும்தானா? இதன் எதிர்விளைவுகள் எவ்வாறு அமையலாம் என்பது குறித்தும் சிந்திக்க, முஸ்லிம்கள் கடமைப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் மூவின மக்களும் வாழ்கின்றார்கள். குறிப்பாக, முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் அதிகமான கடைகள் உள்ளன. வசந்தகால வருமானத்தில் கணிசமான பங்கு, முஸ்லிம்களுக்கும் செல்கின்றது. அத்துடன், வெளியிடங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் அங்கு சென்றால், முஸ்லிம்களின் வீடுகளிலேயே தங்குகின்றனர். முஸ்லிம் ஹோட்டல்களிலேயே பெரும்பாலும் உணவு உண்கின்றனர்.

பொது இடங்களுக்குக் கொடுக்கும் நுழைவுக்கட்டணங்கள், நட்சத்திர உணவகம் மற்றும் ஆடம்பரச் செலவுகள் தவிர, நடுத்தர வர்க்க முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படும் செலவுகள், பெரும்பாலும் ஒரு முஸ்லிமுக்கு அல்லது தமிழனுக்கே வாழ்வாதாரமாக அமைகின்றது.

இவ்வாறிருக்க, இம்முறை நுவரெலியாவைப் புறக்கணித்ததன் மூலம், அங்கிருக்கின்ற முஸ்லிம்களும் தமிழர்களும் வருமான இழப்பைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

நுவரெலியாவில் சில அசம்பாவிதங்கள் இடம்பெற்றதாக, உருப்பெருப்பிக்கப்பட்ட கதைகள் உலவ விடப்பட்டிருந்தன. இதனால், அங்குள்ள முஸ்லிம்களின் வருமானம் இல்லாது போயுள்ளதாகவும், அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், வருமான இழப்பால் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள், வீட்டுத் தரகர்கள், பயண வழிகாட்டிகள் ‘வட்ஸ்அப்பில்’ அழுது வடிப்பதைப் பார்க்க முடிகின்றது.

அப்படியென்றால், நுவரெலியாவைப் புறக்கணித்தமை முற்றிலும் தவறானதா? என்று நீங்கள் கேட்கலாம். இல்லை, நிச்சயமாக இல்லை. முஸ்லிம்கள், இந்த நாட்டின் வர்த்தகத்தில் மட்டுமல்ல; பொருட்கள், சேவைகள் கொள்வனவிலும் எந்தளவுக்கு முக்கியமானவர்கள் என்பதைச் சிலருக்கு, உறைக்கும்படி சொல்ல வேண்டியிருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், அவ்வாறு நுவரெலியாவைப் புறக்கணித்து விட்டு, எதிர்ப்பைக் காட்டிவிட்டு இருப்பது வேறு விடயம். ஆனால், அது பெரிய வெற்றி என்பது போலவும் எல்லாப் பிரச்சினைகளும் அதனால் தீர்ந்துவிடும் என்பது போலவும் பிரசாரப்படுத்த முனைவது, நல்லதல்ல என்றே தோன்றுகின்றது.

ஏனெனில், நாம் பல்லின நாடொன்றில் வாழ்கின்றோம் என்பதை, முஸ்லிம்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நினைவில் கொள்வது நல்லது.

முஸ்லிம்கள், சிங்கள வர்த்தகத்தைப் புறக்கணிக்கின்றார்கள் என்ற விடயம், சிங்கள சமூகத்தின் மத்தியில் பிரசாரப்படுத்தப்படுமாக இருந்தால், அவர்கள், முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களின் பொருட்களைப் பகிஷ்கரித்தால் என்ன நடக்கும்?

அத்துடன், ஏப்ரலில் போகாத முஸ்லிம்கள் வருகின்ற மாதம் அல்லது அடுத்த வருடம் ஏப்ரலில் போய், இதைவிட அதிகமாகச் செலவழிக்க மாட்டார்கள் என்பதற்கு, என்ன உத்தரவாதம் இருக்கின்றது.

முஸ்லிம்கள் வர்த்தகத்தில் பெயர் போனவர்கள் என்றாலும், அநேக வர்த்தகர்களுக்கு, சமூக அக்கறை கிடையாது என்பதுடன், அவர்களின் நேர்மை பற்றிச் சிங்கள, தமிழ் மக்களிடையே பல விமர்சனங்கள் இருக்கின்றன.

எனவே, முஸ்லிம் வர்த்தகர்களை, இச்சமூகம் காப்பாற்ற வேண்டுமா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. எவ்வாறாயினும், முஸ்லிம்களுக்கு உரித்தான நிறுவனங்கள் என்பது, சமூக ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதுடன், அவை ஆயிரக்கணக்கானோருக்குத் தொழில்வாய்ப்புகளையும் வழங்குகின்றன என்ற அடிப்படையில், இது குறித்துக் கரிசனை கொள்ள வேண்டியுள்ளது.

ஒரு சமூகத்தோடு, இன்னொரு சமூகம் பின்னிப்பிணைந்து வாழ்கின்ற இலங்கைச் சூழலில், சிங்களவர்கள், சிங்கள பௌத்தர்களின் உற்பத்திகளையும் தமிழர்கள், தமிழ் வர்த்தகர்களின் பொருட்களையும் முஸ்லிம்கள், முஸ்லிம் உரிமைத்துவ நிறுவனங்களின் பண்டங்களையும் நுகர்வது என்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகும்.

எனவே, நுவரெலியாவை புறக்கணித்தது நல்லதே. அதுபோல, எதிர்காலத்திலும் சில பகிஷ்கரிப்புகளை முஸ்லிம்கள், ஜனநாயக அடிப்படையில் மேற்கொள்ள நேரிடலாம்.

ஆனால், அவற்றை அமைதியாகச் செய்து விட்டு, சத்தம்போடாமல் இருக்க வேண்டும். இதைப் பகிரங்கமாகச் செய்து விட்டு, ‘வெற்றி வெற்றி’ என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு இருப்போம் என்றால், வேண்டத்தகாத பின்விளைவுகளுக்கு, அது வித்திடலாம்.

அதேவேளை, முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கின்ற அநியாயங்களை, முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முறையான பொறிமுறையையும் தீர்வையும் காணாமல், காலத்துக்கு காலம், பெரும் உணர்ச்சி வசப்பட்டு, இவ்வாறு புறக்கணிப்பதாலும் கடையடைப்புச் செய்வதாலும் மட்டும், முஸ்லிம்களின் இன, மத உரிமைகளும் அபிலாஷைகளும் உறுதிப்படுத்தப்பட்டுவிடும் என்று யாராலும் சொல்ல முடியாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிழிந்த ஜீன்ஸில் திரிஷா ரசிகர்கள் கலாய்ப்பு!! (சினிமா செய்தி)
Next post என்னது, இலியானா கர்ப்பமா? (சினிமா செய்தி)