நீரிழிவும் குழந்தையின்மையை உண்டாக்கலாம்!!(மருத்துவம்)

Read Time:9 Minute, 18 Second

‘‘இந்தியாவில் கருத்தரிப்பின்மை மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. நம் நாட்டில் 27 முதல் 30 லட்சம் தம்பதியினர் கருத்தரிப்பின்மை பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் 10 முதல் 12 தம்பதியினரில் ஒரு தம்பதியினர் கருத்தரிப்பதற்கு சிறப்பு பரிசோதனைகளோ அல்லது பிரத்யேக மருத்துவரின் கருத்தரிப்பு சிகிச்சைகளோ தேவைப்படுகிறது என்பதும் தெரிய வந்திருக்கிறது.

இந்த குழந்தையின்மை பிரச்னைக்கு பல்வேறு காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் நீரிழிவும் பிரதான காரணம் என்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’’ என்கிறார் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் கிருத்திகா தேவி.‘‘குழந்தையின்மை சிகிச்சைக்காக ஒரு தம்பதியினர் வந்திருந்தார்கள். ஏறக்குறைய இரண்டு வருடங்களாக கருத்தரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டும் எந்தவிதமான பலனும் இல்லை. இத்தனைக்கும் கணவருக்கு 34 வயது.

மனைவிக்கு வயது 30. அவர்களிடம் மேற்கொண்ட பரிசோதனையின்போது மனைவி ஆரோக்கியமான கருப்பை மற்றும் கருமுட்டைகளை போதுமான அளவு கொண்டிருப்பதைக் கண்டறிய முடிந்தது. ஆனால், கணவருக்கு விந்தணுவில் குறைபாடுகள் இருப்பதும் தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்து கணவரின் 6 வருட நீரிழிவு நோயின் சிகிச்சை, மருத்துவம் குறித்த அனைத்து விவரங்களையும் ஆய்வு மேற்கொண்டோம். அதில் கணவரின் விந்தணு குறைபாட்டுக்கு நீரிழிவுதான் காரணம் என்பதை கண்டறிய முடிந்தது. இதுபோல் பெரும்பாலான இளம் தம்பதியர்களில் யாராவது ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதினால், கருத்தரிப்பதில் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர்’’.

நீரிழிவு எப்படி கருத்தரிப்பின்மைக்குக் காரணமாகிறது?

‘‘கருத்தரிப்பின்மை என்பது ஒரு வருடம் முழுவதும் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்ட போதும், கருத்தரிக்க இயலாமல் போவதைக் குறிக்கிறது. இந்த கருத்தரிப்பின்மை, கணவர் மனைவி இருவரையும் பாதிக்கலாம். அதனால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து, பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கான சரியான தீர்வைப் பெற்று பலனடைவது மிகவும் அவசியம்.

கருத்தரிப்பின்மைக்கான சரியான காரணம் கண்டுபிடிக்கப்பட்டால், அப்பிரச்னைக்குரிய சரியான சிகிச்சை மேற்கொள்ள முடியும். ‘டைப் 1’ மற்றும் ‘டைப் 2’ நீரிழிவு நோய், தற்போது உலகளவில் அதிகரித்து வரும் வேளையில், நவீன வாழ்க்கை முறையால் ஆரோக்கியமில்லாத உணவு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றால் உண்டாகும் ‘டைப் 2’ நீரிழிவு நோய் ஒரு நவீன நோயாக கூறப்படுகிறது. இந்த நீரிழிவு கருத்தரிப்பின்மைக்கும் காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘டைப் 1’ நீரிழிவு நோய் பொதுவாக இளம் வயதுடையவர்களுக்கு உண்டாவது. தற்போதுள்ள நிலவரப்படி, நீரிழிவு நோயானது இன்னும் சில ஆண்டுகளில் பலமடங்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. சில ஆய்வுகளில் டைப் 1 நீரிழிவு நோயானது, இளைஞர்களை பெருமளவில் பாதிக்கிறது என்றும், இன்னும் 10 ஆண்டுகளில் இதன் பாதிப்பு 50% ஆக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கின்றன.

நீரிழிவு நோயின் பாதிப்பு பல மடங்கு அதிகரித்து வருவது, நீரிழிவுடன் கூடிய கருத்தரிப்பின்மையையும் அதிகரிக்கும். மேலும் நீரிழிவு நோயானது ஆண்கள் மற்றும் பெண்களிடம் இனப்பெருக்கத்துக்கான ஆரோக்கியத்தையும் அதிகம் பாதிக்கும். பெல்ஃபாஸ்டிலுள்ள க்வின்ஸ் பல்கலைக்கழகத்தில் இனப்பெருக்க ஆராய்ச்சி குழுவின் தலைமை மருத்துவரான இஷோலா அக்பஜே வெளியிட்டுள்ள ஆய்வின்படி, ‘நீரிழிவு நோய் இருப்பதாக கண்டறியப்படும் ஆண்களுக்கு, விந்துணுக்களில் உண்டாகும் டிஎன்ஏ பாதிப்பு, ஆரோக்கியமான ஒரு கர்ப்பத்தை தீவிரமாக தடுக்கிறது.

மேலும், நீரிழிவு நோய் இல்லாத ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்பைவிட மிக அதிக பாதிப்பை உண்டாக்குகிறது. நீரிழிவு நோயின் பாதிப்புள்ள ஆண்களுக்கு இனப்பெருக்க திறன் குறைவாகவும் இருக்கலாம். காரணம், அவர்களது விந்துவின் அடர்த்தி குறைவாகவும், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கக்கூடும்.

மேலும் இவர்களுக்கு நீரிழிவு நோயின் காரணமாக விறைப்பு குறைபாடும், பாலுணர்வு குறைவாகவும் இருக்கும். ஆணின் விந்தணுக்கள், பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளை அடையாமல், சிறுநீரகத்துக்குள் சென்றுவிடுகின்றன. மேலும், நீரிழிவை கட்டுப்படுத்த எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் ஆணின் விறைப்பு செயலிழப்புக்குகாரணமாகிறது’ என்று குறிப்பிடுகிறது.’’

பெண்களிடம் இந்த தாக்கம் எப்படி இருக்கிறது?

‘‘பெண்களைப் பொறுத்தவரை நீரிழிவு நோயானது ஹார்மோன்களின் சரிவிகித குறைபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இந்த ஹார்மோன் சரிவிகித குறைபாடு பிசிஓஎஸ்(PCOS) என்று அழைக்கப்படுகிறது. அதிக எடையுள்ள பெண்களுக்கு பிசிஓஎஸ் மற்றும் நீரிழிவு வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இது பல்வேறு புதிய பிரச்னைகளை உருவாக்கும். அதிக உடல் எடை அல்லது பருமன் அதிகமுள்ள பெண்கள் இயற்கையாக கருத்தரிக்க மிகவும் கடினமாக இருப்பதாக உணர்கிறார்கள்.

கருத்தரிப்புக்கான சிகிச்சை முறைகளின் வெற்றி வாய்ப்புகளையும் நீரிழிவு மற்றும் உடல்பருமன் பாதிக்கிறது. சாதாரண குளுக்கோஸ் அளவைவிட அதிகமாக இருக்கும் ஒரு பெண் கருத்தரிக்கும் மாதம் தள்ளிப்போகிறது. துரதிர்ஷ்டவசமாக கருவானது கருப்பைக்குள் செல்வதை நீரிழிவு நிலை தடுக்கிறது. அவள் கர்ப்பமாக இருப்பதை உணரும் முன்னே ஒரு கருச்சிதைவு ஏற்பட்டுவிடுகிறது.’’வெளிநாடுகளில் இதுதொடர்பாக ஆய்வுகள் நடந்திருக்கிறதா?

‘‘அமெரிக்க நீரிழிவு சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, உயர் சர்க்கரை அளவு, பெண்களிடம் 30 – 60 சதவீதம் கருச்சிதைவை அதிகரிக்கிறது. இருப்பினும் நீரிழிவு நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட தம்பதியினர் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்து ஆரோக்கியமான உடல் எடையை தொடர்ந்து பராமரிப்பதன் மூலம் கருத்தரிக்க முடியும். அதிகம் பாதிப்புக்குள்ளான தம்பதிகளுக்கு, நீரிழிவு நோய் மீதான தொடர் கண்காணிப்பு மற்றும் நவீன சிகிச்சை முறைகளான ‘ஐயூஐ’ மற்றும் ‘ஐவிஎஃப்’ சிகிச்சைகள் கருத்தரிக்க உதவி புரிகின்றன”.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பழங்குடிகளிடம் கற்றுக்கொள்வோம்!(மகளிர் பக்கம்)
Next post காலா 50 கோடி வசூல்… !!(சினிமா செய்தி)