பேரவையின் இளைஞர் மாநாடு: விக்னேஸ்வரனைக் கரை சேர்ப்பதற்கான முயற்சி!!(கட்டுரை )

Read Time:12 Minute, 6 Second

இளைஞர் மாநாடுகளை நடாத்துவது தொடர்பான அறிவித்தல்களை, தமிழ் மக்கள் பேரவையும் தமிழரசுக் கட்சியும் அண்மையில் வெளியிட்டிருக்கின்றன.

இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில், மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்படும் வாய்ப்புகள் உண்டு. அவ்வாறான சூழலில், இளைஞர் மாநாட்டுக்கான அறிவித்தல்கள் கவனம் பெறுகின்றன.

தற்போதுள்ள தமிழ்த் தேசிய அரசியல் களத்தை, (குறிப்பாக தேர்தல் கள அரசியலை) நோக்கும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு முனையிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சி.வி. விக்னேஸ்வரனை முன்மொழியும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன இன்னொரு முனையிலும் நிற்கின்றன.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலம் முதல், முன்னணிக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையில் சொல்லிக் கொள்ளும் படியான இடைவெளியும் உண்டு. அது, சரி செய்ய முடியாத அளவுக்கு ஒன்றும் இல்லை.

ஆனாலும், அதற்கு முன்னால் விக்னேஸ்வரன் நிரூபித்துக் காட்ட வேண்டிய சில விடயங்கள் உள்ளன. அதன் ஒரு கட்டமாகவே, இளைஞர் மாநாட்டுக்கான அழைப்பு, பேரவையால் விடுக்கப்பட்டிருக்கின்றது.

முதலமைச்சர் பதவியிலிருந்து விக்னேஸ்வரனை நீக்குவதற்கான முனைப்புகளைத் தமிழரசுக் கட்சி எடுத்த போது, அவருக்கு ஆதரவாக வீதிக்கு வந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள்.

தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றுத் தலைமைக்கான கோஷம் வலுவிழந்திருந்த தருணத்தில், தமிழரசுக் கட்சியின் அவசரக்குடுக்கைத்தனம், விக்னேஸ்வரனை மாற்றுத் தலைமைக்கான ஒரு கட்டத்தில் கொண்டுவந்து சேர்த்தது.

அது, கூட்டமைப்புக்கு எதிரானவர்களை மாத்திரமல்ல, கூட்டமைப்புக்குள் இருக்கின்ற தமிழரசுக் கட்சிக்கு எதிரான தரப்புகளையும் விக்னேஸ்வரனை நோக்கித் தள்ளுவதற்கான ஏதுகைகளை வழங்கியது.

ஆனாலும், 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தன்னுடைய குரல், தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்ட சூழலில், விக்னேஸ்வரன் புதிய அணியொன்றுக்கு தலைமையேற்பதிலிருந்து ஒதுங்கியிருந்தார். அதனால், அவரை நோக்கித் திரண்ட தரப்புகள், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறி நின்றன.

கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ள வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் என்பதைத் தாண்டி, விக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் எந்தவிதமான ஒட்டுறவும் தற்போது இல்லை.
உறவைப் புதுப்பிப்பது சார்ந்து, விக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்புக்கும் பொதுவான தரப்புகளால், (குறிப்பாக, சட்டத்தரணிகள் மற்றும் வர்த்தகர்களால்) கொழும்பில் தற்போது பேச்சுகளும் நடாத்தப்படுவது இல்லை.

தமிழரசுக் கட்சி மாத்திரமல்ல, கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளும் விக்னேஸ்வரனை நோக்கித் தமது எதிர்ப்பைக் காட்டத் தொடங்கிவிட்டன. அண்மையில், நடைபெற்ற கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட்டத்தின் போதும், இது வெளிப்பட்டது.

அவ்வாறான நிலையில், கூட்டமைப்புக்கு எதிரான அணிகளின் தலைமைப் பொறுப்பை, தனது ஆதரவுத் தளத்தை நிரூபித்துக் கொண்டு ஏற்க வேண்டும் என்கிற நிலை, விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

கேள்விகளுக்கு அப்பால், கடந்த வருடம் அவரை நோக்கித் திரண்ட தரப்புகள், தற்போதும் அவ்வாறான நிலையில் இல்லை. கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகளாக முன்னிறுத்துபவர்கள் கூட, விக்னேஸ்வரனுக்கு எதிரான கடும் விமர்சனங்களை, கடந்த சில மாதங்களாக முன்வைப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

குறிப்பாக, அவரது உரைகளிலும் ஊடக அறிக்கைகளிலும் ஒரு நிலை தாண்டிய பூடகமும் முரண்பாடுகளும் காணப்படுகின்றன. இதனால், அவரது உண்மையான நிலைப்பாடு என்னவென்று தீர்மானித்து, அதன்பால் இயங்குவதற்கான தன்மை இழக்கப்பட்டிருக்கின்றது.

கூட்டமைப்பில் மாத்திரமல்ல, முன்னணியிலும் விமர்சனங்களைக் கொண்டு, விக்னேஸ்வரனை நோக்கிக் கடந்த வருடம் அணி திரண்ட சில தரப்புகளையும் அவர், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது கைவிட்டார்.

அதனால், அந்தத் தேர்தலில் என்ன முடிவு எடுப்பது என்பது தெரியாமலேயே, அநாதைகளாக அந்தத் தரப்புகள் அலைந்தன. வேண்டாவெறுப்பாக, தேர்தல் களத்தை அணுக வேண்டியும் வந்தது. இதனால், குறித்த தரப்புகளுக்கு விக்னேஸ்வரன் மீது பெரும் கோபம் உண்டு.

இவ்வாறான சூழ்நிலையில், இளைஞர் மாநாடொன்றை வெற்றிகரமாக நடத்துவது என்பது, விக்னேஸ்வரனுக்கும் பேரவைக்கும் முன்னாலுள்ள பெரும் சவால். ஏனெனில், கடந்த வருடம் கட்சி அடையாளங்களைத் தாண்டி, விக்னேஸ்வரனுக்காகக் கூடிய கூட்டத்தை, இப்போது அணி திரட்ட முடியுமா என்கிற கேள்வி எழுகின்றது?

அத்தோடு, வழக்கமாகவே, பேரவையின் அனைத்து நிகழ்வுகளிலும் செயற்பாட்டுத்தளத்தில் அதிக அர்ப்பணிப்பைக் கட்சிகளே ஆற்றியிருக்கின்றன. ‘எழுக தமிழ்’ அதற்கு நல்லதோர் உதாரணம்.

பேரவைக்குள் இருக்கின்ற புலமையாளர்களுக்கோ, சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்துபவர்களுக்கோ ஆட்களை அணிதிரட்டும் வல்லமை இல்லை.

விக்னேஸ்வரன் அணியில், வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், முன்னாள் அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் கந்தையா அருந்தவபாலன் ஆகியோர் உள்ளனர்.

அவர்களுக்கு ஓரளவுக்கு மக்கள் செல்வாக்கும் உண்டு; மக்களை அணி சேர்க்கும் வல்லமையும் உண்டு. ஆனாலும், அமைச்சர் என்கிற நிலைக்கு அப்பால், அனந்தி சசிதரனின் அரசியல் செயற்பாடுகள் தற்போது கிட்டத்தட்ட உறங்கு நிலையிலேயே இருக்கின்றன. முன்புபோல அவர், அரங்குக்கு வருவதில்லை.

அவ்வாறான கட்டத்தில், பேரவை என்கிற அடையாளத்தோடும், தனக்குள்ள செல்வாக்கோடும், ஐங்கரநேசன் மற்றும் அருந்தவபாலன் ஆகியோரின் ஒத்துழைப்போடும், இளைஞர் மாநாட்டை நடாத்தி முடிக்க வேண்டிய கட்டம் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

குறைந்தது, 5,000 இளைஞர்களையாவது, அணி திரட்டிக் காட்டுவதன் மூலம் தான், கடந்த வருடம் தான் பெற்றிருந்த நிலையை, விக்னேஸ்வரன் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும். அதன்மூலமே, தனிக்கட்சி ஆரம்பித்தாலும், அதனை தலைமைக் கட்சியாகக் கொண்டு புதிய கூட்டணியொன்றுக்குச் செல்ல முடியும்.
ஆனால், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தாம் பெற்ற வாக்குகளையோ, தமிழ்த் தேசிய அரசியலில் தமக்கான அங்கிகாரத்தையோ முன்னணி இழப்பதற்கு விரும்பாது.

குறிப்பாக, குறித்த மாநாடு வெற்றி பெறும் பட்சத்தில், அது, கூட்டமைப்புக்கு எவ்வளவு நெருக்கடிகளை வழங்குமோ, அதேயளவுக்கு முன்னணிக்கும் வழங்கும்.

ஏனெனில், வடக்கு மாகாண சபைத் தேர்தலில், கூட்டமைப்புக்கு எதிரான கூட்டணியில், விரும்பியோ விரும்பாமலோ விக்னேஸ்வரனும் முன்னணியும் சேர வேண்டியிருக்கின்றது.

அவ்வாறான நிலையில், ஆசனப்பங்கீடுகளின் போது, பேரம் பேசுவதற்கான வாய்ப்புகளை இளைஞர் மாநாட்டின் வெற்றி தடுத்துவிடும் என்பது, முன்னணிக்கு இருக்கின்ற நியாயமான பயம்.

விக்னேஸ்வரனை கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுத் தலைமையாக முன்னிறுத்தும் தரப்புகளைப் பொறுத்தளவில், முன்னணியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குறித்தும் பெரும் பயமும் பதற்றமும் உண்டு.

அவ்வாறான நிலையில், ஆசனப்பங்கீடுகளின் போது, அவர்களுக்கு வழங்கப்படும் அதி முக்கியத்துவம், தங்களைப் பிரச்சினைகளுக்குள் உள்ளாக்கும் என்றும் கருதுகிறார்கள். இதனாலும், இளைஞர் படையணியொன்றை விக்னேஸ்வரனுக்குப் பின்னால் திரட்டுதல் என்பது, அவசியமாகியிருக்கின்றது.

இனி வரப்போகும் காலம், மீண்டும் தேர்தல் பரபரப்புகளை உருவாக்கப்போகின்றது. குறிப்பாக, வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்பது, கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் தலைமையிலான அணி மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (டக்ளஸ் தேவானந்தாவும், முருகேசு சந்திரகுமாரும் இணைந்த அணி) ஆகிய மும்முனைப் போட்டிகளைக் கொண்டதாக அமையப் போகின்றது.

அதில், கூட்டமைப்பும் விக்னேஸ்வரன் தலைமையிலான அணியும் முதலாவது இடத்துக்கான போட்டியில் இருக்கின்றன. அந்தப் போட்டிக்கான வெற்றிகரமான ஆரம்பத்தை, இளைஞர் மாநாட்டின் வெற்றியிலிருந்து ஆரம்பிக்கவே விக்னேஸ்வரனும் பேரவைக்காரர்களும் நினைக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐஸ் ஆப்பிள் சாப்பிடலாமா?!(மருத்துவம்)
Next post கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா?(அவ்வப்போது கிளாமர்)