அவசர வாழ்வுக்கு அவசியமான கலை!(மருத்துவம்)

Read Time:4 Minute, 57 Second

உலகம் முழுவதும் ஆண்டுதோறும்ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. யோகாவின் அவசியத்தையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்வதோடு, அதன் பலன்களையும் பெற வேண்டும் என்பதே இந்த சர்வதேச யோகா தினத்தை அனுசரிப்பதற்கான முக்கிய நோக்கமாக உள்ளது. யோகா மற்றும் இயற்கை மருத்துவரான தீபாவிடம் யோகாவின் வரலாறு அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமாகக் கேட்டோம்…யோகா தினத்தின் கதை யோகா மிகவும் பழமை வாய்ந்த ஒரு கலை.

அதன் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா தினமாக ஜூன் 21-ம் நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டுமென, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தியிருந்தார். ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி, அதற்கான தீர்மானத்தை ஐ.நா. சபையில் முன்மொழிந்தார். 2014 டிசம்பர் 11 அன்று 193 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பொதுச் சபை அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதற்கு அமெரிக்கா, கனடா, சீனா உட்பட 177 நாடுகளின் ஆதரவு கிடைத்தது.

இதுவரை எந்த ஐ.நா. தீர்மானத்துக்கும் இவ்வளவு அதிக நாடுகள் ஆதரவு தெரிவித்தது இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே, அந்தத் தீர்மானம் அமோக ஆதரவுடன் ஐ.நா. சபையில் நிறைவேறியது. ஜூன் 21-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படும் என்று ஐ.நா. சபை அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, இதுகுறித்து பேசிய அப்போதைய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், ‘நோய்கள் வராமல் தடுக்க, மன அழுத்தத்தைக் குறைக்க மற்றும் மனதுக்கு அமைதியைக் கொடுப்பதிலும் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது’ என்று தெரிவித்திருந்தார்.

அவசர வாழ்வுக்கு அவசியமான கலை சாதி, மதம், இனம், மொழி, நாடு போன்ற பல்வேறு வேறுபாடுகளைக் கடந்து அனைவருக்கும் பொதுவானதாக, உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருப்பதே யோகா. இது ஓர் உள்ளார்ந்த அறிவியலை தன்னூடே கொண்டுள்ளது. இதன் மூலம் தன்னைத்தானே புரிந்துகொள்ளக்கூடிய, சுயம் உணர்தல் என்ற நிலையை எளிதாக அடையலாம். யோகா ஆன்மாவிற்கு அத்தியாவசியமான ஒன்று. அது ஆன்மாவின் கருவிகளான உடல் மற்றும் மனதை ஒருங்கிணைக்கிறது.

யோகாவானது அறிவியலையும் ஆச்சரியப்பட வைக்கும் நுண்ணறிவு கொண்டதாக உள்ளது. யோகிகளின் பார்வைப்படி யோகா பயிற்சியானது ஜீவாத்மாவை அண்டம் முழுவதும் பரவியிருக்கும் ஆற்றலான பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்கச் செய்யும் கருவியாக அமைந்துள்ளது. உடலுக்கும் உள்ளத்துக்கும் யோகாவானது ஒருவரின் உடல், மனம், உணர்ச்சி, ஆற்றல் அல்லது சக்தி போன்ற அடிப்படை விஷயங்கள் அனைத்திலும் ஆரோக்கியமான வகையில் தன் ஆதிக்கத்தை செலுத்துகிறது.

கர்மயோகா உடல் அளவிலும், ஞான யோகா மனம், அறிவு தொடர்பாகவும், பக்தியோகா உணர்ச்சிகளின் நிலையிலும், கிரியாயோகா ஆற்றல் அல்லது சக்தி நிலையிலும் நின்று தன் ஆதிக்கத்தை திறம்பட செலுத்துகிறது. மேலும் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளையும், அறநெறிகளையும் முறையே இயமம், நியமம் என்பதன் மூலம் நமக்கு தெளிவாக விவரிக்கிறது. இதன்படி இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கைக்கான நெறிமுறைகளை சரியாகக் கடைபிடித்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நோய்கள் குணமாகும்!!(மருத்துவம்)
Next post நர்சரி ஆரம்பிப்பது எப்படி?(மகளிர் பக்கம்)