By 26 June 2018 0 Comments

மாகாணசபைத் தேர்தல்: புதிய அரசியல் தடத்தைப் பதியுமா?(கட்டுரை)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தாக்கத்தில் இருந்து, மீள்வதற்குள்ளாகவே மாகாணசபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்குள் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கில், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாகத் தம்மைக் கருதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், பின்னடைவைச் சந்தித்தமையை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதற்கான காரணங்களைத் தேடிய அலைச்சலை, முடிவுக்குக் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை.

கொழும்பில் நடைபெற்று முடிந்த, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

பங்காளிக் கட்சிகளான புளொட், டெலோ ஆகியன, சுமந்திரனின் தேர்தல் காலப் பேச்சுகளே, மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியதாகப் பகிரங்கமாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தன.

இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த தமிழரசுக் கட்சி, நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல், கடந்த அனைத்துத் தேர்தல்களை விடவும் வித்தியாசமானது எனவும், புதிய அரசமைப்பு உருவாகும் வரையில், தாம் பலருடனும் சேர்ந்தியங்க வேண்டிய நிலை உள்ளதெனவும், தமது செயற்பாடுகள் வெளியில் தெரியாததாலேயே இந்நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.

இதுதான், யதார்த்தமாக இருக்குமானால், தமது கட்சியின் செயற்பாட்டை வெளிப்படுத்த வேண்டியது, சம்பந்தப்பட்ட கட்சியின் பொறுப்பல்லவா? இதற்கும் அப்பால், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் , அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் போனோர் விவகாரம் என நீண்டு செல்லும் தமிழர் போராட்டத்துக்கு ஏதுவான நிலைப்பாடுகள், குறித்த கட்சியால் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பான மீள் பரிசீலனைகளும் தேவைப்படுகின்றன.

இந்நிலையில், தமிழர் அரசியல் தளத்தில், மற்றுமோர் அரசியல் தளமாக, ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து, பலராலும் உற்று நோக்கப்படுகிறது. மாகாணசபைத் தேர்தலில் இம்முறை, முதலமைச்சர் வேட்பாளராகத் தான் போட்டியிடப் போவதாகக் கருத்தொன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

டக்ளஸ் தேவானந்தாவையும் அவரது கட்சியையும் பொறுத்தவரையில், தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம் என்ற தளத்துக்குள் கட்டுண்டு இருக்காமல், ‘அபிவிருத்தி ஊடான உரிமை மீட்பு’ என்ற கொள்கையில் அரசியல் பயணத்தை நகர்த்தி வருகின்றது. இந்நிலையில், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்றியுள்ளதுடன் சில சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்குப் பிரதான பங்கையும் ஆற்றியுள்ளது.

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில், டக்ளஸின் முதலமைச்சர் வேட்பாளர் பிரவேசம், வடக்கு அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

‘தமிழர் விரோதப் போக்காளர்’ எனத் தமிழ்த்தேசிய அரசியல் களத்துக்குள் நிற்போரால் விமர்சிக்கப்படும் டக்ளஸ், அண்மைய அரசியல் போக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டையும் மிஞ்சும் வண்ணம் காய்களை நகர்த்தியுள்ளார். அவர், புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் வாழ்வாதாரம், யுத்தப் பாதிப்புக்குள்ளான மக்களின் மீள் கட்டுமானம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அண்மைக்காலமாகக் குரல் எழுப்பி வருகின்றமை இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கது.

இத்தகைய அரசியல் போக்கின், புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தில், தாம்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற முத்திரையில் இருந்து விலகிவிடாது இருப்பதற்கான பிரயத்தனங்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

இதன் ஒரு கட்டமாகவே தமிழரசுக் கட்சி, வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குத் தூது அனுப்பும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது என்று நம்பகமாக அறியமுடிகிறது. கடந்து போன நாட்களில், முதலமைச்சரை ஒரு பொருட்டாகவே கருத்தில் எடுக்காத நிலைமையில், இம்முயற்சி அரங்கேற்றப்படுகிறது.

அரசாங்கத்தின் நல்ல முகங்களைத் தமிழர்களுக்கு காட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்படும்போதெல்லாம், அதன் எதிர்மறைத்தாக்கத்தையும் அரசியலின்பால் தமிழர்களுக்கு எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலை பற்றியும் வெளிச்சம் போட்டுக்காட்டும் முதலமைச்சரின் செயற்பாடுகள், கூட்டமைப்புக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி வருவது உண்மையே.

இந்நிலையிலேயே, மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பான, நாடிப்பிடிப்புகளை முதலமைச்சர் மேற்கொண்டு வருகின்றார் என்பதும் கவனிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

கூட்டமைப்பின் மீது, மக்கள் மத்தியில் அதிகரித்துச் செல்லும் அதிருப்தியின் வெளிப்பாடுகள், முதலமைச்சரின் தனித்த தேர்தல் குதிப்பு, அவரைப் பலப்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் பிளவை ஏற்படுத்தி விடும் அபாயமும் உள்ளது.

தமிழ் மக்கள் பேரவை என்ற கிணற்றுக்குள் உள்ள சில தவளைகள், வெளியுலக நடப்புகள் தெரியாது என்றபோதிலும், வெளியுலகையும் யாழ்ப்பாணம் என்ற வட்டத்துக்குள் பார்ப்பது ஆரோக்கியமான கண்ணோட்டம் கிடையாது.

யாழ்ப்பாண மாவட்டத்துக்குள் மாத்திரம் தமிழ் மக்கள் பேரவை, தனது செயற்பாட்டை நகர்த்தும் நிலையில், வன்னிப் பிரதேசத்தில், தமிழ் மக்கள் பேரவை என்பதை, ஒரு பேசு பொருளாகக் கூடத் தமிழ் மக்கள் கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.

இவ்வாறான நிலையில், முதலமைச்சரை நோக்கிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூது பலப்படும் பட்சத்தில், அது சாத்தியமாகி, கூட்டமைப்பின் ஊடாக, விக்னேஸ்வரன் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் பலிதமாகி உள்ளது என்ற சூழல் வாய்க்கப் பெற்றால், ஆசிரியருக்கும் மாணவனுக்குமான போராக, விக்னேஸ்வரன் -சுமந்திரன் பிரச்சினை, தமிழரசுக் கட்சிக்குள் விரிசலை எற்படுத்தும் வாய்ப்புள்ளது.

எனவே, இதன் அனுகூலம், பிரதிகூலங்களை ஆராயாமல், விக்னேஸ்வரனை மீளவும் வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக வலிந்து இழுத்துவர, தமிழரசுக் கட்சி முனையாது. ஆகவே, இதன் பின்புலத்தில் ஏதோ ஒரு சக்தி இயக்குவதையும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டியுள்ளது.

இந்தியத் துணைத்தூதராக, யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிச் சென்றுள்ள நடராஜன், தான் இடமாற்றம் பெற்றுச்செல்லும் காலத்துக்கு அண்மைய காலங்களில், விக்னேஸ்வரனை முதன்மையாகக் கொண்ட பல நிகழ்வுகளை நடத்தியிருந்தமை, உள்ளூர பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தன.

வெறுமனே தமிழர்களின் அரசியல், வடக்கு, கிழக்கில் மாத்திரம் தீர்மானிக்கப்படுகின்றது என்ற பகல் கனவைக் கண்டுகொண்டு, தமிழர்கள் இருந்துவிடக்கூடாது.

ஆகவே, வரவுள்ள மாகாணசபைத் தேர்தல் என்பது, வடக்கு, கிழக்கு தமிழர் அரசியல் தளத்தில், பெரும் மாற்றங்களையும் ஏமாற்றங்களையும் தந்துவிடவல்லது என்பதற்கும் அப்பால், புதிய அரசியல் தடத்தையும் பதிவு செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

உள்ளூராட்சி மன்றங்களில் இரண்டு சபைகள் தவிர்ந்த ஏனைய சபைகளில், எவ்வாறு ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற்று, ஆட்சி அமைக்கப்பட்டதோ, அதுபோன்றதான நிலையை, தமிழ் அரசியலாளர்கள் மத்தியில் உள்ள பிளவுகள், வௌிச்சக்திகளின் ஆதிக்கங்கள் என்பவை, மாகாணசபையிலும் ஏற்படுத்திவிடும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. தமிழ் தலைமைகள் நீயா, நானா போட்டியில் முட்டி மோதி, கோட்டையை விட்டுவிட்டு, கோபுரம் கட்டும் எண்ணத்தை வளர்ப்பதால் ஏதுவான வழிவகைகள் அமையாது.

எனவே, வடக்கிலும் கிழக்கிலும் மாகாணசபை ஆட்சியைத் தனித்துக் கைப்பற்ற, தமிழ்த் தலைமைகள் விட்டுக்கொடுப்புகளுக்கு மத்தியில் ஒன்றிணைந்து செயலாற்றி, தேர்தலுக்கு முகம்கொடுக்க வேண்டும்.
எனவே மக்களின் ஆதங்கங்களுக்கு தீர்வு காண்பதைத் தவிர்க்கும் தமிழ் அரசியலாளர்கள், சிந்தித்து செயற்படவேண்டிய தருணம் தற்போது கனிந்துள்ளது என்பதே நிதர்சனமாகியுள்ளது.

வடக்கு மாகாணசபை ஓகஸ்ட் மாதம் கலைக்கப்பட்டதன் பின்னர், நீண்ட கால இடைவௌி ஒன்று, அடுத்த தேர்தல் வரை இருக்கும் பட்சத்தில், விக்னேஸ்வரன் தேர்தலில் களம் இறக்கவேண்டுமா என்ற எண்ணப்பாடு மீள உருவாகும்.

ஆகவே, மக்கள் மத்தியில் விக்னேஸ்வரனின் செல்வாக்கும் அவர் நாமமும் மங்கிப்போகும் தருணத்துக்காகக் கூட்டமைப்புக் காத்திருந்து காய் நகர்த்தவும் வாய்ப்புள்ளது. எனவே, மாகாணசபை தேர்தல் என்பது, சூடாறாத ‘தோசைக் கல்’லாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.Post a Comment

Protected by WP Anti Spam