By 2 July 2018 0 Comments

காஷ்மிர் அஸ்திரங்கள்: தேர்தல் களத்துக்குத் தயாராகிறார் மோடி!!(கட்டுரை)

பிரதமர் நரேந்திர மோடி, 2019 ஆம் ஆண்டுக்கான தேர்தல் யுக்தியை வகுத்து விட்டார் என்றே தோன்றுகிறது.

ஆட்சிக்கு வந்த பிறகு, வெளிப்படையாகத் தனது கூட்டணிக் கட்சியுடன் உள்ள உறவை, காஷ்மிர் மாநிலத்தில் முறித்துக் கொண்டிருக்கிறார்.

காஷ்மிர் மாநில அரசியலில் மஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி சேர்ந்து ஆட்சி நடத்தி வந்தன.

அங்கு ஏற்பட்டுள்ள ஆயுததாரிகள் தொடர்பான நெருக்கடி, இராணுவ வீரர்கள் கொல்லப்படும் நிகழ்வுகள் ஆகியவற்றால், இனியும் மக்கள் ஜனநாயகக் கட்சியுடனான கூட்டணியைத் தொடர்வது பா.ஜ.கவின் 2019 தேர்தல் களத்துக்கு உதவாது என்ற முடிவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமல்ல, பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் கருதுவதாகத்தான், இந்தக் காஷ்மிர் அஸ்திரம் அமைந்துள்ளது.

இந்த அஸ்திரம், ஏதோ காஷ்மிர் மாநிலத்தில் உள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மட்டுமல்ல, அகில இந்தியாவுக்கும் பா.ஜ.கவின் பாதை, மஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக் கூட்டணியுடன் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி, நாட்டின் பாதுகாப்புக் காரணம் கருதிய நிலையில், அவருடன் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது.

ஒவ்வொரு முறையும் காஷ்மிரில் எடுக்கப்படும் முடிவு, இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி வரை எதிரொலிக்கும் என்பது, என்னவோ உண்மைதான்.

காஷ்மிரில், மக்கள் ஜனநாயகக் கட்சி – பா.ஜ.க கூட்டணி ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டவுடன், அங்குள்ள ஆளுநருக்குப் பாதுகாப்பு ஆலோசகராக, தமிழ்நாட்டிலிருந்து முன்னாள் டி.ஜி.பி விஜயகுமார் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சந்தனக்கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றதில் பெயர் பெற்ற விஜயகுமார், ஏற்கெனவே எல்லைப் பாதுகாப்புப் படையில் இருந்தபோது, காஷ்மிர் நுணுக்கங்களை நன்கு உணர்ந்தவர் என்ற முறையில், அவருக்கு இப்போது மத்திய அரசா‍ங்கத்தால், இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற பிறகு, ஏற்கெனவே நக்ஸலைட் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில், குறிப்பாக ஆலோசகராக இருந்த அவர், தற்போது காஷ்மிரில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது இப்படியிருக்க, காஷ்மிர் அணுகுமுறை என்பது, பா.ஜ.க விரும்பி உருவாக்கிய அணுகுமுறையாகவே அமைந்துள்ளது. ஏனென்றால், முரண்டு பிடித்த தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவைக் கடைசி வரை கூட்டணியில் வைத்துக் கொள்ளவே, பா.ஜ.க முயற்சி செய்தது.

ஆனால், ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்தை வலியுறுத்தி, அவரே பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறினார். இன்றுவரை, எதிர்கட்சிகளுடன் சேர்ந்து அவர், எத்தனையோ பேட்டிகளை, பா.ஜ.க தலைமைக்கு எதிராகக் கொடுத்து வருகிறார்.

ஆனால், பா.ஜ.க தலைவர்கள் அதுபற்றி, ஏட்டிக்குப்போட்டி அறிக்கைகளையோ பேட்டிகளையோ விடுவதற்கு தயாராக இல்லை. ஏனென்றால், வெளியேறி விட்ட தெலுங்கு தேசம் கட்சியைக் கூட, அறவே இனி அவருடன் கூட்டணி இல்லை என்ற முடிவுக்கு பா.ஜ.க வரவில்லை.

அடுத்தது, மஹாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகை மூலம், தினமும் பேட்டிகள் ஊடாகத் தலைவலியையும் திருகுவலியையும் பா.ஜ.கவுக்கும், பா.ஜ.க தலைமைக்கும் கொடுக்கப்படுகிறது. ஏறக்குறைய, தேசப்பற்றில் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில், பா.ஜ.க தலைமைக்கு சவால் விட்டுப் பேசிவருகிறார், அக்கட்சியின் தலைவர் ராஜ்தாக்ரே. ஏன், பா.ஜ.கவின் உள்கட்சி விவகாரத்துக்குள் கூட புகுந்து, கருத்துச் சொல்லி, பா.ஜ.க தலைமையைக் கதிகலக்கி வருகிறார்.
சிவசேனா என்றாலே பா.ஜ.கவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. ஆனால், சமீபத்தில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா நேராகச் சென்று, சிவசேனா தலைவர் ராஜ் தாக்கரேயை சந்தித்திருந்தார். அதன்போது, “2019 நாடாளுமன்றத் தேர்தலில், நாமெல்லாம் ஒரே அணியில் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். சிவசேனாவைக் கூட்டணியிலிருந்து விரட்டி விடவேண்டும் என்றோ, 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அந்தக் கட்சி வேண்டாம் என்றோ, பா.ஜ.க தலைமை இந்த திகதி வரை கருதவில்லை.Post a Comment

Protected by WP Anti Spam