DIABESITY நீரிழிவால் வரும் புதிய பிரச்னை!!(மருத்துவம்)

Read Time:15 Minute, 14 Second

கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவத்துறையில் புதிதாக முளைத்திருக்கும் ஒரு பிரச்னை டைபசிட்டி. Diabetes + Obesity என்ற இரண்டு வார்த்தைகளிலிருந்து உருவான ஒரு சொல்தான் Diabesity. அதாவது, நீரிழிவால் ஏற்படும் உடல்பருமனையே டையபசிட்டி என்கிறார்கள்.

டயாபட்டீஸ் இப்போது ஆக்டோபஸைப் போல ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை தன் பிடிக்குள் கொண்டு வந்துள்ளது. இதன் எதிரொலியாக டையபசிட்டியின் விகிதமும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்படலாம் என்பதையும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

ஒருவருடைய உடல்பருமன் நீரிழிவுடன் தொடர்புடையதாக இருக்கும்போது, நீரிழிவு ஆபத்து மேலும் அதிகரிக்கிறது. இன்னொரு கோணத்தில் பார்த்தால் 80 சதவீதம் நீரிழிவு நோய்க்கு உடல் பருமனே காரணமாகிறது.

மருத்துவரீதியாக டையபசிட்டி என்பது ஆரம்பநிலை ரத்த சர்க்கரை ஏற்றத்தாழ்வுகளிலிருந்து, டைப் 2 நீரிழிவு வரை நீடிக்கும் வளர்சிதைமாற்ற செயலிழப்பு என வரையறுக்கப்படுகிறது. ரத்த ஓட்டத்தில் இருந்து சர்க்கரையைக் கொண்டு வருவதற்கு இன்சுலின் பயன்படுத்தக்கூடிய செல்கள் குறைவாக செயல்படுவதால் இன்சுலின் தடுப்பு(Insulin Resistance) என்ற நிலை ஏற்படலாம். ஒருவருக்கு இன்சுலின் தடுப்பு இருக்குமானால், அவரது எடையை குறைப்பது சற்று கடினமான செயல்தான்.

நீரிழிவு கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றால் அதன் பின்விளைவாக உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூளை பக்கவாதம், குருட்டுத்தன்மை, சிறுநீரக செயலிழப்பு மற்றும் நரம்பு சேதங்கள் ஆகிய கடுமையான சிக்கல்கள் உருவாகிறது. நீரிழிவு, இதய நோய் மற்றும் உடல்பருமன் ஆகியவற்றின் குடும்ப வரலாற்றைக் கொண்டவர்கள் நீரிழிவு நோயின் பிடியில் இருக்க வாய்ப்புகள் அதிகம். இவர்கள் உரிய பரிசோதனைகளை வரும்முன்னரே செய்துகொள்வது நல்லது.

இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. எடைக்கேற்ற உயர அளவை பி.எம்.ஐ-ஆக கணக்கிட்ட காலம் போய்விட்டது. இப்போது ஒருவரின் இடுப்பு அளவுதான் உடல்பருமனை நிர்ணயிக்கிறது. பெண்களைப் பொறுத்தவரை இடுப்பளவு 35 அங்குலமும், ஆண்களுக்கு 40-க்கும் அதிகமான அங்குலமும் இருந்தால் இவர்கள் டையபசிட்டிக்கான உரிய பரிசோதனை செய்வது நல்லது.

இந்த பரிசோதனையில் ஒருவர் நீரிழிவு நோயின் ஆரம்பக்கட்டத்தில் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் நீரிழிவுக்கான அதே சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த நோயின் ஆரம்ப நிலையில் உள்ளவருக்கு, நோயால் முழுமையால் பாதிக்கப்பட்டவருக்கான சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் ஒற்றுமை காரணமாகவே, அதை விவரிக்க டாக்டர் பிரான்சி காஃப்மான் என்பவர் ‘டையபசிட்டி’ (நீரிழிவு + உடல்பருமன்) என்ற இந்த வார்த்தையை உருவாக்கினார். டையபசிட்டி என்பது ஒரு Metabolic Dysfunction என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டையபசிட்டி கீழே கூறியுள்ள அறிகுறிகளை கொண்டது.

*வயிற்றின் சுற்றளவு பெண்களுக்கு 80 செ.மீக்கு மேலும், ஆண்களுக்கு 90 செ.மீக்கு மேலும் இருந்தால்…
*குறைந்த HDL, உயர் LDL மற்றும் Triglycerides இருந்தால்…
*உயர் ரத்த அழுத்தம் இருந்தால்…
*உயர் ரத்த சர்க்கரை 100 மி.லி./டி.எல்.லிற்கு மேல் (fasting) HBAIC – 5.5 மேல் இருந்தால்…

டையபசிட்டிக்கு வழிவகுக்கும் உணவு மாற்றங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.நாம் அனைத்து வடிவங்களிலும் சர்க்கரை உள்ள உணவுகளையே எடுத்துக் கொள்கிறோம். முன்பு மனிதன் ஒரு வருடத்துக்கு 22 தேக்கரண்டி சர்க்கரை அளவு மட்டுமே சாப்பிடும் வழக்கம் உடையவனாக இருந்திருக்கிறான். ஆனால், இன்றோ ஒரு வருடத்துக்கு 150-180 பவுண்டுகள் வரை சர்க்கரையை ஒரு தனிமனிதன் எடுத்துக் கொள்கிறான்.

இது பெரும்பாலும் சோடா, குளிர்பானங்கள் மற்றும் இனிப்பு பானங்கள் ஆகியவற்றிலிருந்து திரவ கலோரிகளின் வடிவத்தில் வருகிறது. ஹார்வர்ட் பள்ளி பொது சுகாதார மையத்தின் மருத்துவர் வால்டர் வில்லட், சமீபத்திய வெள்ளை மாளிகையின் கூட்டத்தில் பேசுகையில், ‘இனிப்பு பானங்கள் மற்றும் தொலைக்காட்சி நேரங்களின் எண்ணிக்கை என்ற இந்த இரண்டு காரணிகள்தான் நம் உடல்பருமனை நிர்ணயிக்கிறது’ என கூறுகிறார். இந்த ஆராய்ச்சி மற்ற காரணிகளை விட உடல்பருமன் மேலும் அதிக தொடர்பை உறுதி செய்கிறது. நாம் உண்ணும் உணவு மற்றும் பானங்களில் உள்ள சர்க்கரையை நிறுத்த வேண்டும்.

* நார்ச்சத்து நம் உணவுகளில் குறைந்து விட்டது.நம்முடைய உணவில் சர்க்கரை எடுக்கும் அளவு அதிகரித்ததால், நார்ச்சத்து எடுக்கும் அளவு குறைந்துவிட்டது. நாம் இப்பொழுது ஒரு நாளைக்கு 8 கிராமுக்கு குறைவாகவே நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுகிறோம். நமது மூதாதையர் நாளொன்றுக்கு 100 கிராம் நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட்டனர். இது, நம் மரபணுக்களுக்கு இசைவாக நாம் சாப்பிடுவதில்லை என்பதற்கான மற்றொரு அறிகுறியாகும்.

நார்ச்சத்து உடலின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம், ஏனெனில், சர்க்கரையை நார்ச்சத்து உறிஞ்சிவிடுவதால் கொழுப்பு குறைகிறது. இந்த நார்ச்சத்து பெரும்பாலும் பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றிலிருந்து கிடைக்கிறது.ஒரு சுத்திகரிக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்பவர்களுக்கு பெட்டிகள், பேக்கேஜ்கள் அல்லது கேன்கள் ஆகியவற்றிலிருந்து வரும் உணவு, முழு உணவை சாப்பிடுபவர்களை விட குறைவான நார்ச்சத்தே கிடைக்கும்.

நமது உணவில் நார்ச்சத்து இல்லாதிருப்பது நமது ஆரோக்கியத்துக்கான பாரம்பரிய தாக்கங்களைக் கொண்டுள்ளது. இதய நோய், நீரிழிவு, உடல்பருமன், புற்று நோய்கள் மற்றும் பல நாள்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன.

* ஊட்டச்சத்து குறைபாடுகள்

டையபசிட்டியைத் தடுக்க மற்றும் சிகிச்கைக்கு குறிப்பாக பல ஊட்டச்சத்துக்கள் முக்கியம். வைட்டமின் D, குரோமியம், மெக்னீசியம், Zinc, Biotin, ஒமேகா-3 கொழுப்புகள் மற்றும் ஆல்பா லிபாயிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இன்சுலின் மற்றும் ரத்த சர்க்கரை முறையான கட்டுப்பாடு மற்றும் சமநிலைக்கு அவசியம்.

இவை குறைவாக இருக்கும்போது, நமது உடல், உயிர் வேதியியல் இயந்திரம் மெதுவாக வீழ்ச்சியடைகிறது. நம்மில் பெரும்பாலானவர்கள் ஊட்டச்சத்து குறைவாக இருப்பதற்கு இதுவே காரணம்.

தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் விதை எண்ணெய்கள்சமீபகாலமாக சோளம், பருத்தி விதை, சோயா பீன்ஸ், சூரியகாந்தி முதலியவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் நமது மனித உணவுகளில் ஒரு பகுதியாக மாறிவிட்டன. இதயநோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் என அனைவரும் சேர்ந்து Saturated Fat-களுக்கு மாற்றாக இந்த எண்ணெய் வகைகளை தயாரிக்க ஆரம்பித்தார்கள். இது கொழுப்பு மற்றும் இதய நிலைமைகளுக்கு ஏற்புடையதாக இருப்பதாக நாம் நினைக்கிறோம். இந்த எண்ணத்தினால், கடந்த 50 ஆண்டுகளில் இந்த விதை எண்ணெய்களின் நுகர்வு இரு மடங்கானதில் ஆச்சரியம் இல்லை.

இந்த எண்ணெய் வகைகள், ஒமேகா 6 அதிகமாகவும், ஒமேகா 3 குறைவாகவும் மற்றும் இன்றைய உடல்பருமன் அதிகரிப்பதில் கணிசமான பங்கையும் அதிகரிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இது மட்டுமில்லாமல் வீக்கத்துக்கு வழிவகுக்கும் (Inflammation) இன்சுலின் எதிர்ப்பு மற்றும் குறைபாடு லெப்டின் சிக்னலிங் (நேரடியாக நீரிழிவு பங்களிப்பு) தைராய்டு ஹார்மோனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தைராய்டு செயல்பாட்டினை தடுக்கிறது. இது அதிகமான கொழுப்பு சேதத்தை அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது.

சரி, டையபசிட்டியிலிருந்து மீள வழிமுறைகள் இருக்கிறதா?

நிச்சயம் இருக்கிறது. சில எளிய வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் டைபசிட்டியை சரி செய்ய முடியும்.சரியான ரத்த பரிசோதனைகள் பெரும்பாலான மருத்துவர்கள் ரத்த சர்க்கரை அளவின் மீது கவனம் செலுத்துகின்றனர்.

இது உண்மையில் நீரிழிவின் நிலையைத் துல்லியமாக வெளிக்காட்டுவதில்லை. மாறாக, இன்சுலின் அளவை பரிசோதிப்பதே நீரிழிவை கண்டுகொள்ள ஒரு சிறந்த வழியாகும். இன்சுலின் அளவை உணவுக்கு முன்னர் மற்றும் குளுக்கோஸ் குடித்த 1 மணி நேரத்துக்குப் பின்னர் சோதனை செய்து கொள்வது நன்று.

சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

* லீன் புரதம் (கோழி அல்லது மீன்)

* காய்கறிகள், கொட்டைகள், விதைகள், பீன்ஸ் மற்றும் முழு தானியங்கள்

* ALA (Alpha Linoleic Acid) சத்துக்கள் நிறைந்த கீரை, ப்ரோக்கோலி, தக்காளி, பட்டாணி, சிறிய முட்டைக்கோஸ்(Brussel sprouts), அரிசி மற்றும் தவிட்டிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்.

* Chromium Piccolonate சத்துக்கள் நிறைந்த முழு தானியங்கள், புருவரின் ஈஸ்ட்(Brewer’s yeast), ஆரஞ்சு பழச்சாறு, ரோமீன் லெட்டியூஸ், வெங்காயம், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கருப்பு மிளகு, திராட்சைச்சாறு.

* Biotin சத்துக்கள் நிறைந்த டுனா, காளான்கள், வான்கோழி, வெண்ணெய், முட்டை, வேர்க்கடலை, வெண்ணெய், சீஸ் மற்றும் பெர்ரி.
மேற்கூறிய உணவுப்பொருட்களுடன் பட்டை(Cinnamon), கிரீன் டீ போன்றவற்றையும் உங்கள் உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
முக்கியமாக, டையபசிட்டியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை அகற்றுதல் அவசியம்.
இவற்றுடன் சில வாழ்வியல் முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது.

மன அழுத்தம்

இன்சுலின் எதிர்ப்பு மற்றும் ரத்த சர்க்கரை ஏற்றத்தாழ்வின் பெரிய பங்களிப்பாளராக மன அழுத்தம் உள்ளது. ஆழ்ந்த சுவாசம், காட்சிப்படுத்தல், யோகா போன்றவற்றின் மூலம் இந்த மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

உடற்பயிற்சி

டையபசிட்டிக்கு உடற்பயிற்சி ஒரு சிறந்த மருந்தாகும். குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஒவ்வொரு நாளும் நடக்க வேண்டும். சிலருக்கு 30 – 60 நிமிடங்கள் நடையும், அதிக ஆற்றல் வாய்ந்த ஏரோபிக் உடற்பயிற்சிகள் வாரம் 4-6 முறை தேவைப்படலாம். சமீபத்திய ஆய்வுகளின்படி 70 சதவீதம் டைப் – 2 நீரிழிவு மற்றும் உடல்பருமன் மரபணு சார்ந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்திய உணவு மாற்றங்களும் மற்றும் இதர வாழ்க்கை மாற்றங்களும் புதிய நோய்கள் உருவாவதற்கு காரணமாக அமைகிறது. நன்கு புரிந்துகொண்டு உணவுகளை தேர்ந்தெடுக்கும்போது Diab(etes+obe)sity யிலிருந்து நாம் மீண்டுவர முடியும். அது மட்டுமில்லாமல் வரும் முன் தடுக்கவும் முடியும்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேற்குலகின் மையம்!!(மகளிர் பக்கம்)
Next post உனக்கே எங்கே ரூல்ஸ் ன்னு தெரியல டோல் கேட் குண்டர்களுக்கு டாக்டரின் சாட்டையடி!!(வீடியோ )