By 13 July 2018 0 Comments

எல்லை மீள்நிர்ணயத்தைத் திருத்தியமைக்க சரியான தருணம்!!(கட்டுரை)

அடுத்துவரும் தேர்தல்களைப் புதிய கலப்பு முறையிலா அல்லது பழைய விகிதாசார முறையிலா, நடத்துவது என்ற கருத்து வேறுபாடுகளுக்கு இடையில், மாகாண எல்லை மீள்நிர்ணய அறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வறிக்கை மீதான விவாதம், இன்று ஆறாம் திகதி நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, இலங்கை முஸ்லிம்கள் தாங்கள் வாழ்கின்ற மாகாணங்களின் எல்லைகள், தேர்தல் தொகுதிகளின் எல்லைக்கோடுகளைச் சரியாக நிர்ணயித்துக் கொள்வதற்கான தருணமாக இதைக் கருதமுடியும்.

ஏற்கெனவே, காணிப் பற்றாக்குறை, அரசியல் அபிலாஷைகளைத் தீர்ப்பதில் உள்ள சிக்கல் உள்ளடங்கலாக, ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு முஸ்லிம்கள் முகம்கொடுத்துள்ளார்கள். இந்நிலையில், தங்களது எல்லைக்கோடுகளைச் சுருக்கிக் கொண்டு, தமது அரசியல் பிரதிநிதித்துவத்தையும் குறைத்துக் கொள்வதா என்பதைச் சிந்தித்தே, எல்லை மீள்நிர்ணய அறிக்கையை ஆதரிப்பதா என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.

கடந்த பல வருடங்களாக நாட்டில் சட்டமூலங்கள், சட்டத் திருத்தங்கள், முறைமை மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட வேளையில், முஸ்லிம் மக்கள் அவற்றுக்கு ‘ஆதரவளிக்க வேண்டாம்’ என்று மன்றாட்டமாகக் கேட்டுக் கொண்ட போதிலும் கூட, எல்லாம் தெரிந்தவர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களும் எம்.பிக்களும் ஒரேயொரு சட்ட ஏற்பாட்டைத் தவிர, மற்றெல்லாவற்றுக்கும் ஆதரவளித்தனர்.

மேலோட்டமாகப் பார்க்கின்ற பொதுமகனுக்கு, ‘பிழை’ என விளங்கிய பல விவகாரங்களை, விளங்கியோ விளங்காத காரணத்தாலோ அல்லது அரசாங்கத்துக்குக் கூஜா தூக்க வேண்டுமென்ற உள்நோக்கத்தாலோ, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை அங்கத்தவர்கள் ஆதரவளித்த வரலாறு முஸ்லிம்களுக்கு இருக்கின்றது.

இவ்வாறு ஆதரவளிக்கும் வேளையில், அந்தச் சட்டமூலங்களில் ‘சரி’ காண்பவர்களாக இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள், ஓரிரு மாதங்களுக்குள்ளேயே தமது நிலைப்பாட்டை மாற்றி, அந்தச் சட்டமூலம் அல்லது திருத்தம் முஸ்லிம்களுக்குப் பாதகமானது என்று கூறுவதை, வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த முட்டாள்தனமான அரசியல் போக்கை, புதிய தேர்தல் முறைமை விடயத்திலும் காண முடிகின்றது. முஸ்லிம் அரசியல்வாதிகள் வழக்கம்போல, தூக்கம் கலைத்து, துள்ளி எழுந்திருக்கின்றார்கள்.

இப்போது வகுக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் முறைமையின் கீழ், மாகாண சபைத் தேர்தலை நடாத்துவது, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் என, மறுதலையாகப் பேசத் தொடங்கி இருக்கின்றனர்.

நிலைமை இவ்வாறிருக்கும் போது, மாகாணங்களுக்குள் உள்ளடங்கும் தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை, மீள்வரையறை செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையில், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் விதத்திலான மீள்நிர்ணயமோ அல்லது ஏற்பாடோ இல்லை என்பது, எதிர்கால முஸ்லிம் அரசியலுக்கு மிகவும் ஆபத்தானதும் பாரதூரமானதும் ஆகும்.

1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தின் 3ஏ(11)பிரிவைத் திருத்திய 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கத் திருத்தச் சட்டத்துக்கு அமைவாக, நியமிக்கப்பட்ட எல்லை மீள்நிர்ணயக் குழு, தனது இறுதி அறிக்கையை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளித்திருந்தது.

இந்த அறிக்கையில், உள்ளடக்கப்பட்டுள்ள சிபாரிசுகளின் அடிப்படையில் வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழ்கின்ற முஸ்லிம்களும் மலையகத் தமிழர்களும் கடுமையான பிரதிநிதித்துவ இழப்பைச் சந்திக்க நேரிடும் எனக் கூறப்படுகின்றது.

எதிர்வரும் டிசம்பரிலோ, அதற்குப் பிறகோ, புதிய கலப்பு முறையில், முதன்முதலாக மாகாண சபைத் தேர்தல் நடைபெறுகின்றது என்று எடுத்துக் கொள்வோம். இங்கு 50 சதவிகித உறுப்பினர்கள் தொகுதிவாரியாகவும் 50 சதவிகிதமானோர் விகிதாசாரப் பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்யப்படுவார்கள். அதன்பிறகு, வேறு விகித சமன் சூத்திரத்தின் பிரகாரம், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலும் நடைபெறலாம்.

எனவே, இலங்கைச் சமூகங்கள் இனரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ள யதார்த்த அரசியல் சூழலில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஒரு தொகுதியிலேயே, முஸ்லிம் பிரதிநிதித்துவம் நிச்சயிக்கப்பட்டதாக இருக்கும் என்பது வெளிப்படையானது.

தமிழர்களோ, சிங்களவர்களோ பெரும்பான்மையாகவும் முஸ்லிம்கள் சிறு அளவிலும் வாழ்கின்ற தொகுதிகளில் அவ்வாறான சாத்தியங்கள் இல்லை.

இதேவேளை, வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் பெரும்பான்மையாக அதிகமாக வாழும் ஒரு தொகுதியில் சிறுபான்மையின முஸ்லிம்களுக்காக விகிதாசாரப் பட்டியலில் இடம்கிடைப்பது ‘முடவனுக்கு கொம்புத்தேன் ஆசை’ போலவே வந்து முடியும்.

எனவேதான், இன்றுள்ள முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்கள் இழக்கப்படாத விதத்தில், தேர்தல் முடிவுகள் அமைய வேண்டுமென்றால், எல்லை நிர்ணயம் அதற்கு இடமளிப்பதாக இருக்க வேண்டும்.

அந்தவகையில், தொகுதி மற்றும் மாகாண எல்லை மீள்நிர்ணயத்தில் இரண்டு முன்மொழிவுகளைச் செய்வதன் மூலம், அதைச் சாத்தியமாக்க முடியும் என்று துறைசார்ந்தவர்கள் கூறுகின்றனர்.

1. முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகளை நாட்டில் பரவலாக (குறிப்பாக வடக்கு, கிழக்குக்கு வெளியே) உருவாக்குதல்

2. பல இனங்களைச் சேர்ந்த மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக, பல்லங்கத்தவர் தொகுதிகளைப் பரிந்துரைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

ஆனால், தற்போது தயாரிக்கப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்டுள்ள எல்லை மீள் நிர்ணய அறிக்கையானது, மேற்சொன்ன அடிப்படையில் அமையவில்லை என்பதே முஸ்லிம்களின் கவனிப்பைப் பெற்றுள்ளது. எனவே, பிரதானமாக வடக்கு, கிழக்குக்கு வெளியில் உள்ள (சிங்கள, தமிழ் பெரும்பான்மை) தொகுதிகளில், முஸ்லிம் பிரதிநிதித்துவம் எட்டாக்கனியாக இருக்கும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் அழுத்தமாகச் சொல்லி வருகின்றனர்.

மாகாணங்களின் எல்லை மீள்நிர்ணயக் குழுவில், ஐந்து பேர் உள்ளடங்கியிருந்தனர். சமூகச் செயற்பாட்டாளரும் புவியியல் பேராசிரியருமான எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் மட்டும், முஸ்லிம்கள் சார்பாக நியமிக்கப்பட்டார்.

இது ஓரளவுக்கு ஆறுதலான செய்திதான் என்றபோதிலும், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு அவர் எடுத்த முயற்சிகள் கணக்கிலெடுக்கப்படவில்லை என்ற செய்தி கிடைத்ததும், அந்த ஆறுதல் கவலையாக மாறிவிட்டது.

பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வால் முன்வைக்கப்பட்ட சில பரிந்துரைகள், பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு தட்டிக் கழிக்கப்பட்டன. இதனால் பல தடவைகள், இக்குழுவில் இருந்து விலகிக்கொள்ள முயன்றதும், நாடறிந்த இரகசியங்கள்தான்.

அதுமட்டுமல்லாமல், கடைசி அறிக்கையில், தமது பரிந்துரைகள் முழுமையாக உள்ளடக்கப்படவில்லை என்ற விடயம் தெரியவந்ததும், உடனடியாகத் தன்பங்குக்குத் தனியாக ஓர் அறிக்கைகையைச் சமர்ப்பித்து, முஸ்லிம் சமூகம், அவர் மீது சுமத்திய பொறுப்பை, ஹஸ்புல்லாஹ் நிறைவேற்றியிருக்கிறரார் என்றே கூற வேண்டும்.

தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்ற இழுபறி ஒருபுறமிருக்க, எல்லை நிர்ணயக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகள் தொடர்பாகவும், பல தரப்பிலும் அதிருப்தி நிலவுகின்றது.

இப்பின்னணில், நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. ஆனால், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளோ அன்றேல் பல்லங்கத்தவர் தொகுதிகளோ முன்மொழியப்படாத பட்சத்தில், வேறு என்ன திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும் முஸ்லிம்கள் திருப்தியடைய முடியாது என்பதே இங்கு முக்கியமாகின்றது.

கிடைக்கப் பெறுகின்ற தகவல்களின் பிரகாரம், எல்லை நிர்ணய அறிக்கையில் மொத்தமாக 222 தொகுதிகளை உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 13 தொகுதிகளே பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, கொழும்பு, புத்தளம், கண்டி, களுத்துறை மாவட்டங்களில் இத்தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் ஏனைய 18 மாவட்டங்களிலும் பரவலாக வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தப் பொறிமுறை எதுவும் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அதாவது, இலங்கையில் 78.8 சதவீதமாக வாழ்கின்ற சிங்கள மக்களுக்கு 74.9 சதவீதமான உறுப்புரிமையும்,11.26 சதவீதமான தமிழர்களுக்கு 11.1 சதவீதமான உறுப்புரிமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், 9.7 சதவீதமாக வாழும் இரண்டாவது சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு 6 சதவீதமான உறுப்புரிமை கூட முன்மொழியப்படவில்லை என்பது சாதாரண தவறல்ல.

இந்தத் தவறு, திருத்தியமைக்கப்படாமல், மேற்படி அறிக்கையில் பெரிய மாற்றங்கள் இன்றி, சட்டவலுப் பெறுமாக இருந்தால், விகிதாசார முறைப்படி அல்லாமல், தொகுதிவாரி முறையில் அல்லது கலப்பு முறையில் தேர்தல் ஒன்று நடைபெற்றால், 13 மாகாண சபை உறுப்பினர்களையே நிச்சயமாக முஸ்லிம்களால் பெறக்கூடியதாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலிலும் இதன் பாதிப்பு நிச்சயமாக இருக்குமெனக் கூறலாம்.

எனவே, முன்னைய காலங்களில் சட்டமூலங்களை ‘ஏதோ’ காரணங்களுக்காக ஆதரித்தது போல அல்லது எதுவும் பேசாமல் வாய்மூடி இருந்தது போல, எல்லை மீள்நிர்ணய விடயத்திலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் பொடுபோக்காக இருக்கக் கூடாது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், பிரதமர் தலைமையிலான குழுவின் ஒப்புதலுடன் இது நிறைவேற்றப்படலாம் என்பதை முன்னுணர்ந்து, முஸ்லிம் எம்.பிக்கள் மூலோபாய ரீதியாகத் தமது ‘பிடியை’ இறுக்க வேண்டும்.

நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ள எல்லை மீள்நிர்ணயக் குழுவின் இறுதி அறிக்கைக்கான விவாதம் நடைபெறுகின்ற போது, கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உள்ளடங்கலான முஸ்லிம் எம்.பிக்கள் 21 பேரும் தங்களது வாயைத் திறந்து அதிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி, அதைத் திருத்துவதற்கும்… அவ்வாறில்லாத பட்சத்தில் அதனை தோற்கடிப்பதற்கும் தயங்கக் கூடாது.

இந்தத் தருணத்தைத் தவறவிட்டால், மிகப் பெரிய ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்தவர்களாக, முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இன்றிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரலாற்றில் முத்திரை குத்தப்படுவார்கள்.

விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களின் பூர்வீக மண்ணான வடமாகாணம் உள்ளடங்கலாக, ஐந்து மாகாணங்களிலும், சுமார் 18 மாவட்டங்களிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இழக்கப்படுவதற்கு வித்திட்ட துரோகிகளாக, அந்த அரசியல்வாதிகளை இனி வருங்கால சமூகம் நோக்கும்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள தொகுதி எல்லை மீள்நிர்ணயத்தின் படி, தேர்தல் நடைபெறுமானால் வடக்கு, கிழக்கில் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியுமாக இருந்தாலும், அதற்கு வெளியில் சிதறி வாழ்கின்ற கிட்டத்தட்ட 70 சதவீதமான முஸ்லிம்கள், ஆறுக்கும் உட்பட்ட மாகாண சபை உறுப்பினர்களையே பெறும் வாய்ப்பிருக்கின்றது என்பதையும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அரைவாசியால் குறையும் என்பதையும் மனதில் கொண்டு செயலாற்ற வேண்டும்.

‘ஒன்றுக்கும் பயனற்றவர்கள்’ என்ற விமர்சனங்கள் காணப்பட்டாலும், இன்று நாடாளுமன்றத்தில் 21 முஸ்லிம் உறுப்பினர்களும், காலம் முடிந்த மற்றும் காலாவதியாகவுள்ள மாகாண சபைகளில் கணிசமான முஸ்லிம் உறுப்பினர்களும் இருக்கின்றார்கள்.

இவ்வளவு பேர் இருந்தும் முஸ்லிம்களுக்கு இத்தனை அநியாயங்கள் நடக்கின்றன என்றால், பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் அதனூடாக அரசியல் அதிகாரமும் குறையும் என்றால்…. முஸ்லிம்களின் நிலை என்னவாகும் என்று சிந்தித்துச் செயற்படுவது நல்லது.

புதிய தேர்தல் முறைக்கு கையுயர்த்தியது போல, கூட்டத்தோடு சேர்ந்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் கையுயர்த்தாமல், எல்லை மீள்நிர்ணயத்தில் திருத்தங்களை உட்சேர்க்க நாடாளுமன்றத்தில் கிடைத்திருக்கின்ற வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

ஒன்றில், முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் ஊடாகவோ அன்றேல் பல்லங்கத்தவர் தொகுதிகளை நிர்ணயிப்பதன் ஊடாகவோ அல்லது வேறு ஏதாவது அடிப்படையிலேனும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தியாக வேண்டும்.

திருத்துவதற்கான வாய்ப்பைத் தவறவிட்டு, இன்னுமொரு பிழையைச் செய்துவிடவோ, பிழையைப் பிழையாகத் திருத்தி விடவோ கூடாது.Post a Comment

Protected by WP Anti Spam