By 14 July 2018 0 Comments

‘கிழட்டு நரி’ தந்திரம்!!(கட்டுரை)

“மெத்தப் பழையதோர் இல்லம்,
நீ நுழைந்ததும் தரை மட்டமானது.
உந்தன் நரித்தந்திரம் கொண்டு
பல நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டாய்.
பலநூறு பொறிகளிலுமிருந்தும்
நீ தப்பித்துக் கொண்டாய்,
ஒரு கிழட்டு நரியைப் போல!”

செய்யத் அஹ்மட் அதிப் பிஷாவாரி என்ற கவிஞன், பாரசீக மொழியில், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தைச் சுட்டி எழுதிய கவிதை இது. இன்றும் ஈரானியர்கள், பிரித்தானியாவைக் ‘கிழட்டு நரி’ என்று வர்ணிக்கிறார்கள்.

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவையும் ‘கிழட்டு நரி’ என்று, பொதுவௌியில் பலரும் விளித்திருக்கிறார்கள். சிலர் ‘ஆசியாவின் நரி’ என்றும், சிலர் ‘இருபதாம் நூற்றாண்டின் நரி’ என்றும் விளித்திருக்கிறார்கள். ‘நரி’ என்பதன் முன்னுள்ள அடைமொழி மாறுபட்டாலும், ‘நரி’ என்பது மட்டும் ஜே.ஆரோடு தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருந்தது.

இந்தச் சொற்பயன்பாடானது, வௌிப்பார்வையில் எதிர்மறையான தோற்றத்தைக் கொடுப்பினும், அதிகார அரசியல் பார்வையில், இதை மிகப்பெரியதொரு புகழாரமாகவே கொள்ளலாம்.

‘சிங்கத்தால் தன்னைப் பொறிகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியாது. நரியால், ஓநாயிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. ஆகவே ஒருவன் பொறிகளை அடையாளம் காண நரியாகவும், ஓநாய்களைப் பயமுறுத்த, சிங்கமாகவும் இருக்க வேண்டும்’ என்று, தனது ‘இளவரசன்’ என்ற நூலில், நிக்கோலோ மக்கியாவலி எழுதுகிறார்.

1970ஆம் ஆண்டுத் தேர்தலில், டட்லி சேனாநாயக்கவின் தலைமையின் கீழ், வெறும் 17 ஆசனங்களை மட்டுமே பெற்றுப் படுதோல்வி அடைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியை, 1977 தேர்தலில் 5/6 என்ற வரலாறு காணாத, பெரும்பான்மைப் பலத்தை வென்றெடுக்கச் செய்ததில், ஜே.ஆரின் பங்கு மறுக்கப்பட முடியாதது.

அதேபோல, இரண்டாவது குடியரசு அரசமைப்பின் அறிமுகமாகட்டும், அதனூடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் அறிமுகமாகட்டும், மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாது, சர்வஜன வாக்கெடுப்பினூடாக 5/6 பெரும்பான்மைப் பலத்தை கொண்டிருந்த நாடாளுமன்றத்தின் ஆயுளை நீடித்ததாகட்டும், இனப்பிரச்சினை விவகாரத்தில் நடந்துகொண்ட விதமாகட்டும், தன் முன்னாலிருந்த பொறிகளை ஜே.ஆர், இதுவரை நேர்வழியிலோ, சூழ்ச்சியாலோ வெற்றிகரமாகக் கடந்துகொண்டிருந்தார்.

ஆனால், இதுவரை அவரால் தாண்ட முடியாத பொறியாக இருந்தது இந்திராவும் இந்தியாவும். இந்திரா காந்தியின் அகால மரணம், அந்தப் பொறியைத் தகர்த்திருந்தது. இப்போது, ஜே.ஆருக்கு முன்பிருந்தது அரியதொரு வாய்ப்பு.

அரசியலில் முதிர்ந்த அனுபவம் கொண்டிருந்த இந்திரா காந்தியின் இடத்தில், இப்போது அரசியல் குழந்தையான ராஜீவ் காந்தி. இது, ஜே.ஆருக்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம். அவர் அதை, இந்தப் பொழுதில் சிறப்பாகவே கையாண்டிருந்தார் எனலாம்.

இறுதிச் சடங்கில் புதியதோர் ஆரம்பம்

இந்திரா காந்தியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக, இந்தியா சென்றிருந்த ஜே.ஆர், புதிய பிரதமராகப் பதவியேற்றிருந்த ராஜீவ் காந்தியுடன் மிகச் சுருக்கமான சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

குறித்த சந்திப்புப் பற்றிய, பல பதிவுகளையும் பார்க்கும் போது, தானறிந்த அரசியல் கலையின் அனைத்து உத்திகளையும் ஜே.ஆர் பயன்படுத்தினார் என்றே கூறலாம்.

தன்னை, இந்தியாவினதும் நேரு குடும்பத்தினதும் நண்பனாக ராஜீவிடம் அறிமுகப்படுத்திய ஜே.ஆர், தன்னை ஒரு கருணைமிக்க, சிறந்த பௌத்தன் என்றும் காட்டிக்கொள்ளத் தவறவில்லை. மகாத்மா காந்தியையும் நேருவையும் புகழ்ந்த ஜே.ஆர், 1940களில் இந்திய காங்கிரஸ் நடாத்திய மாநாடொன்றில் தான் கலந்துகொண்டதையும் குறிப்பிட்டிருந்ததுடன், ஜவஹர்லால் நேருவுடன், தான் தொடர்ந்து தொடர்புகளைப் பேணியதையும் ராஜீவிடம் எடுத்துரைத்தார்.

இந்த ஆலாபனைகளில், இந்திரா காந்தியுடனான உறவு பற்றிக் குறிப்பிடுவதை ஜே.ஆர், இலாவகமாகத் தவிர்த்துவிட்டார் என்று தோன்றுகிறது.

ஆலாபனைகளைத் தொடர்ந்து, முக்கிய விடயத்துக்குள் நுழைந்த ஜே.ஆர், தான் இலங்கைத் தமிழ் மக்களுக்கு, நியாயத்தை வழங்கவே விரும்புவதாகவும், ஆனால் தன்னைச் சூழ, சிங்களத் தீவிரப்போக்குடைய அமைச்சர்கள் இருப்பதால், தன்னால் அதைச் செய்யமுடியவில்லை என்று குறிப்பிட்டதுடன், தமிழ் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள், தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் அதிகமாகப் பாதிப்பதாகவும் தெரிவித்தார்.

ஆகவே, தன்னுடைய நிலைப்பாட்டை ஸ்திரப்படுத்த இந்தியா உதவ வேண்டும் என்று வேண்டினார்.

அதாவது, தான் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கவே விரும்புகி‌றார். ஆனால், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், வன்முறையை முன்னெடுக்கும் போது, தன்னால் அரசியல் தீர்வொன்றை எட்ட முடியாது. ஆகவே, அரசியல் தீர்வை எட்டுவதற்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்த, இந்தியா உதவவேண்டும். அதாவது இந்தியா, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும் என்பதுதான், ஜே.ஆர் சொன்னதற்குள் பொதிந்திருந்த உட்பொருள் ஆகும்.

அடுத்ததாக, இந்திரா காந்தியின் நிலைப்பாடு பற்றிக் கருத்துரைத்த ஜே.ஆர், இந்திரா காந்தியைத் தமிழ்த் தீவிரப் போக்காளர்கள் சூழ்ந்திருந்தனர். அவர்களே இந்திரா காந்தியைப் பக்கச்சார்புடன் நடந்துகொள்ளத் தூண்டியதாகவும், அதில் கோபால்சாமி பார்த்தசாரதியின் பங்கு முக்கியமானது என்றும், சிங்கள மக்கள், கோபால்சாமி பார்த்தசாரதி மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றும் தெரிவித்ததுடன், வேறோர் இந்திய அதிகாரியை நியமித்தால், சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடும் என்றும் தெரிவித்தார்.

அதாவது, இந்திரா காந்தியின் மகனிடம், தாயாரைப் பற்றிக் குறை கூற முடியாது; ஆகவே, இந்திரா காந்தியைச் சூழ்ந்தவர்கள் தான் தவறானவர்கள் என்று ஜே.ஆர், இந்திரா காந்தியை நேரடியாகக் குறைசொல்லாது தவிர்த்ததுடன், சர்வ கட்சி மாநாடு, வெற்றி அளிக்காததற்கான பழியை, இலாவகமாக கோபால்சாமி பார்த்தசாரதி மீது திருப்பி விட்டிருந்தார்.

அதாவது, பார்த்தசாரதி ஒரு தமிழர் என்பதால், அவர் தமிழர்களுக்குச் சார்பாகச் செயற்படுகிறார் என்று சிங்கள மக்கள் நினைக்கிறார்கள்; ஆகவே, அவருடைய மத்தியஸ்தத்தைச் சிங்கள மக்கள் ஏற்கத் தயாரில்லை என்றும், ஆளை மாற்றினால், இந்த முயற்சி வெற்றியளிக்கும் என்றும் கருத்துரைக்கிறார்.

இறுதியாக ஜே.ஆர், இந்தியா இராணுவ ரீதியாகத் தலையீடு செய்யுமோ என்ற அச்சம், இந்திய மத்தியஸ்தத்தின் நிமித்தம், இலங்கை மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று, தன்னுடைய நீண்டநாள் அச்சத்தை ராஜீவிடமும் பதிவுசெய்தார்.

அதாவது, இந்தியா இராணுவ ரீதியில் தலையிடாது என்ற உறுதிமொழியை, இந்திரா காந்தியிடம் பெற்றுக்கொண்டதைப் போல, ராஜீவிடமும் பெற்றுக்கொள்ள, ஜே.ஆர் விரும்பினார். சுருக்கமாக, புதியதோர் ஆரம்பத்தை ஜே.ஆர், ராஜீவிடம் வேண்டி நின்றார்.

வென்றது தந்திரம்

ஜே.ஆரின் ‘கிழட்டு நரி’த் தந்திரம், அரசியல் குழந்தையான ராஜீவ் காந்தியிடம், இந்தச் சந்தர்ப்பத்தில் வெற்றிபெற்றது என்றே கூறலாம். இதற்குச் சில அரசியல் விமர்சகர்கள், இராஜதந்திரம், சர்வதேச, பூகோள அரசியல் தொடர்பிலான ராஜீவ் காந்தியின் அனுபவக் குறைவே காரணம் என்கிறார்கள்.

மறுபுறத்தில் சில விமர்சகர்கள், இந்திரா காந்தியின் மறைவைத் தொடர்ந்து, பிரதமரான ராஜீவ் காந்தியின் முன், இலங்கை விவகாரத்தை விட முக்கியமான பல காரியங்கள் இருந்ததால், அவர் இலங்கை விவகாரத்தில், அப்போது பெரும் சிரத்தை கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.

எவ்வாறிருப்பினும், ஜே.ஆரின் வேண்டுகோள்களுக்குச் செவிசாய்த்த ராஜீவ் காந்தி, சில உறுதிமொழிகளை ஜே.ஆருக்கு வழங்கினார்.

இலங்கை மீது, ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இந்தியா முன்னெடுக்காது; இலங்கையின் ஒற்றுமையும் ஆட்புல ஒருமைப்பாடும் பாதுகாக்கப்படும்; இலங்கை விவகாரத்தில் இந்தியா சார்பில் மத்தியஸ்தராகச் செயற்படும் கோபால்சாமி பார்த்தசாரதிக்குப் பதிலாக, வேறொரு நபரை நியமித்தல் ஆகிய உறுதிமொழிகளை வழங்கியதுடன், புதியதோர் ஆரம்பத்துக்கும் இணக்கம் தெரிவித்திருந்தார்.

ஆனால், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் அடிப்படையில், அரசியல் தீர்வு அமையவேண்டும் என்றும், அது அவ்வாறு நடக்காவிட்டால், நீளும் முரண்பாடு இலங்கையைப் பிளவடையச் செய்யும் என்றும் ராஜீவ் குறிப்பிட்டிருந்தார்.

தன்னுடைய விருப்பம் நிறைவேறியதில் மகிழ்ச்சி கொண்ட ஜே.ஆர், ராஜீவுக்கு வாழ்த்துரைத்து விடைபெற்றார்.

கொழும்பு திரும்பிய ஜே.ஆர், ஊடகங்களை உற்சாகத்தோடு எதிர்கொண்டார்.

இந்தியாவின் இளைய பிரதமர், இலங்கை விவகாரம் தொடர்பில் புதியதோர் ஆரம்பத்துக்குச் சம்மதித்துள்ளார் என்று ஊடகங்களுக்கு மகிழ்ச்சியுடன் சொன்ன ஜே.ஆர், இலங்கையின் பிரிவினையை ஒருபோதும் இந்தியா ஆதரிக்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

ராஜீவ் காந்தியுடனான சந்திப்பைச் சாதகமான மாற்றமாகவே ஜே.ஆர் பார்த்தாரெனச் சில ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள்.

ராஜீவ் காந்தியைத் தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்று, ஜே.ஆர் நம்பியதாகவும் சிலர் கருத்துரைக்கிறார்கள். குறிப்பாக, ராஜீவ் காந்தியினதும், அவரது வௌிவிவகார அமைச்சரான றொமேஷ் பண்டாரியினதும் அரசியல் அனுபவக் குறைவை, தனக்குச் சாதமானதாக ஜே.ஆர் கருதியிருந்தார்.

மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது சர்வகட்சி மாநாடு

மறுபுறுத்தில், ராஜீவ் காந்திக்கு இலங்கையை பற்றி யோசிக்கும் அவகாசம் இருக்கவில்லை. இந்திரா காந்தியின் மறைவைத் தொடர்ந்து, அவர் இந்தியாவின் பிரதமராகவும், ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவியேற்றிருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து, தன்னுடையை அரசியல் நிலையைப் பலப்படுத்தவே அவர் விரும்பினார்.

1984 டிசெம்பர் மாதத்தின் இறுதியில், இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், ராஜீவின் கவனம் முழுவதும் அதிலேயே இருந்தது.

இது, ஜே.ஆருக்குத் தேவையான இடைவௌியை வழங்கியது. இந்த இடைவௌியின் முழுப் பயனையும் பெற்றுக் கொள்ள விரும்பிய ஜே.ஆர், 1984 நவம்பர் 14ஆம் திகதி, மீளத் தொடரவிருந்த சர்வகட்சி மாநாட்டை, ஒரு மாதகாலம், அதாவது டிசெம்பர் 14ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

இதற்கு அவர் சொன்ன காரணம், “அரசாங்கக் கட்டமைப்பு பற்றி, சட்டமூல முன்மொழிவுகள் தயாராகவில்லை” என்பதுதான்.

மறுபுறத்தில், பாதுகாப்புக் கெடுபிடிகளை ஜே.ஆர் அரசாங்கம் பலப்படுத்திக் கொண்டிருந்தது. குறிப்பாக, 1984 நவம்பரில், இலங்கையின் வடக்கு, வடமேற்குக் கடற்பரப்பில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது.

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தமிழ்நாட்டுடனான கடற்போக்குவரத்து, ஆயுதக் கடத்தலைத் தடுக்கும் வகையில் இது முன்னெடுக்கப்பட்டது.

ஆயினும், இக்காலப்பகுதியில் இச்செயற்பாடு, வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படவில்லை என்று, கே.எம்.டி சில்வா குறிப்பிடுகிறார்.

அதற்கு, இலங்கைக் கடற்படையின் வளக்குறைபாடு, ஒரு காரணமாக இருக்கலாம்.

இப்போது, 1984 டிசெம்பர் 14ஆம் திகதி, ஜே.ஆர் சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிக்கவிருந்த அரசாங்கக் கட்டமைப்பு முறை தொடர்பிலான சட்ட முன்வரைவு மட்டும்தான், தமிழர்களுக்கு ஜனநாயக அரசியல் பாதையின் தொலைவில் தெரிந்த, மெல்லிய ஒளியாக இருந்தது.Post a Comment

Protected by WP Anti Spam